Monday, 6 November 2017

மழித்துவிடு என்னை..,

      "இந்தப் புகைப்படம் Ibrahim Jadayanu என்னும் நைஜீரிய நண்பரின் முகநூலிலிருந்து நகலெடுக்கப்பட்டது. இதுவரையில் `நாம் என்ன செய்து கிழித்துவிட்டோம்` என்னும் குற்ற உணர்ச்சியை இப்படம் என்னுள் ஏற்படுத்தியிருக்கிறது. நம்மால் முடிந்ததை இன்னும் வேகத்தோடு செய்யவேண்டுமென்ற உத்வேகத்தைத் தூண்டுகிறது."
         என்று அண்ணன் Arumughom Pillai அவர்கள் முகநூலில் இன்று தெரிவித்திருந்தார். அந்தப் படம் என்னுள் எற்படுத்திய தாக்கம் இதோ ....


Wednesday, 1 November 2017

1947 க்கு பின் ஒரு விடுதலைப் போராட்டம்...



       
       15/08/1947  க்குப் பின் 1956 நவம்பர் வரை ஏறத்தாழ பத்தாண்டுகள் போராடிய வரலாறு கொண்டது குமரி. இன்று தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு என்ற நான்கு வட்டங்களைக்கொண்ட குமரி 1956 க்கு முன் கேரளாவோடு இணைந்திருந்தது என்பது பற்றி இன்றைய தலைமுறை எவ்வளவு அறிந்திருக்கும் என்று தெரியவில்லை.



           குமரியின் பகுதியெங்கும் எல்லாக் காலகட்டத்திலும் தமிழே பேசப்பட்டு வந்தது. திருவிதாங்கூர் அரசு 1941 ல் வெளியிட்ட Topographical List Of Inscriptions இன் படி திருவிதாங்கூரில் 1100 கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் 823 கல்வெட்டுகள் தமிழில் அமைந்தவை. இவை ஏறத்தாழ கி.பி.900 க்கு முற்பட்டவை. இன்றும் திருவனந்தபுரம் ஓலைச்சுவடிக் காப்பகத்தில் உள்ள குமரிமாவட்டம் தொடர்பான 16, 17, 18 ம் நூற்றாண்டுச் சுவடிகளனைத்தும் தமிழிலேயே உள்ளன.
             இந்தக் குமரியைத்தான் தங்களோடு வைத்துக்கொள்ள மலையாளப் பிரதேச காங்கிரசு, மலபார் மாகாண காங்கிரசு கமிட்டி, கொச்சி பிரசா மண்டல், திருவிதாங்கூர் சமத்தான காங்கிரசு என மூன்று பிரிவாகச் செயல்பட்ட மலையாளப் பிரதேச காங்கிரசு தலைவர்கள் ஒன்று கூடி 'காசர்கோடு முதல் குமரி வரையுள்ள பகுதிகளைக் கேரள மாநிலமாக ஆக்க வேண்டும்' என்று தீர்மானம் செய்தனர்.  இதை பி.எஸ். மணி கடுமையாக எதிர்த்தார். "நாஞ்சில் நாட்டையும் சேர்த்து கேரள மாநிலம் அமைக்க காங்கிரஸ் திட்டமிடுவது தமிழர்களுக்குச் செய்யும் துரோகம் ஆகும். திருவாங்கூரில் உள்ள தமிழ்ப் பகுதிகள் தமிழ்நாட்டோடுதான் இணைக்கப்பட வேண்டும்" என்று அவர் குரல் கொடுத்தார். இருப்பினும், மாநிலப் பிரிவினையின்போது, தமிழகத்தின் தெற்கு எல்லையான நாஞ்சில் நாடு கேரள மாநிலத்துடன் சேர்க்கப்பட்டு விட்டது.

         பிரித்தானிய இந்தியாவில் குமரி மாவட்டத் தமிழர்களின் மொழியுணர்வு 19 ம் நூற்றாண்டின் இறுதியில்தான் மேலெழுந்தது.
         மனோன்மணியம் நாடகம் மூலம் சுந்தரம்பிள்ளையும், கவிதைகள் வாயிலாக கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையும், வஞ்சிகேசரி இதழ் மூலம் கே.என்.சிவராசபிள்ளையும், தமிழன் பத்திரிகை வழியே பி.சிதம்பரம்பிள்ளையும் தமிழுணர்வை பொறியளவு பற்றவைத்தார்கள்.

         1945 நவம்பர் 18 ம் தேதி கேரள சமத்தானக் காங்கிரசு உடைந்தது. அகில திருவிதாங்கூர் தமிழர் காங்கிரசு பிறந்தது. முதல் கூட்டம் 1945 டிசம்பர் 16 ம் தேதி நத்தானியல் தலைமையில் நடந்தது. அ.தி.த.கா உறுப்பினர்கள் திரு தமிழக நிலப்பரப்பைத் தாயகத்துடன் இணைத்தல், தமிழ் மொழி வளர்ச்சி, இந்திய விடுதலைக்குப் பாடுபடுதல், சிறுபான்மைத் தமிழருக்குப் பாதுகாப்பு என்ற குறிக்கோள்கள் அச்சிடப்பட்டத் துண்டறிக்கைகளை குமரியெங்கும் கொடுத்தார்கள். இது சென்னைக்கும் பரவியது. 1946 சனவரி 24 ல் நத்தானியல் தலைமையில் பி.எஸ். மணி, இரா.வேலாயுதப்பெருமாள், சிரீ.வி.தாசு ஆகியோர் சென்னை சென்று காமராசர், பக்தவச்சலம், ஜீவா, ஏ.என்.சிவராமன், கலைவாணர், டி.கே.எஸ் ஆகியோரைச் சந்தித்தனர்.
      சமத்தான காங்கிரசு தமிழர் தேசிய காங்கிரசு என்று ஒரு சங்கத்தை நிறுவி பரப்புரை செய்து அ.தி.த.கா வை ஒடுக்க முயற்சி செய்தது.
     தமிழன் பத்திரிகையில் பி.சிதம்பரம்பிள்ளை தமிழ் மாகாணம் அமைக்க வேண்டிய காரணத்தை எழுதியதைப் படித்த நத்தானியல் அவருடன் விவாதித்தார். அதன் பலனாக திருவிதாங்கூரில் தமிழ் மாகாணம் ஒன்று அமையவேண்டும் என்றும் நாடு விடுதலை பெற்றதும் அம்மாகாணம் அப்படியே தமிழகத்துடன் சேர்ந்து கொள்ளலாம் என்றும் கருத்து மலர்ந்தது. அதனால் அ.தி.த.கா என்ற பெயர் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு என்று பெயர் மாற்றப்பட்டது.
 
        கேரளத்தில் காங்கிரசு தலைவர் கேளப்பன், பட்டம் தாணுப்பிள்ளை, கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் ஏ.கே. கோபாலன் ஆகியோர் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு நின்றனர். டில்லியில் பிரதமர் நேருவின் நண்பர் வி.கே. கிருஷ்ணன் மேனன், வெளி உறவுத் துறைச் செயலாளராக இருந்த கே.பி.எஸ். மேனன், உள்துறைச் செயலாளராக இருந்த வி.பி. மேனன், துணை அமைச்சராக இருந்த லட்சுமி மேனன் மற்றும் டில்லியில் மலையாள அதிகாரிகளும், உயர் அதிகாரிகளும் கேரள மாநிலத்தை உருவாக்குவதிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பகுதிகளைக் கைப்பற்றுவதிலும் தீவிரமாக பணிபுரிந்தனர்.
 
    குமரி மாவட்டம், செங்கோட்டை வட்டம் ஆகிய பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தை வழி நடத்தியவர் பி.எஸ். மணி ஆவார். நத்தானியல், நேசமணி போன்ற போர்க்குணம் கொண்டோரின் தலைமையில் இக்கோரிக்கை உருப்பெற்று, வலு அடைந்தது. நேசமணியின் வருகைக்குப் பின்னரே இது மக்கள் இயக்கமாக மாறியது.
 
      1948ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்கும் குஜராத்துக்கும் ஏற்பட்ட எல்லைச் சிக்கலில், சிமோதி பகுதியை குஜராத்துக்கு அன்றைய துணைப் பிரதமர் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் படேல் மாற்றம் செய்ததை 'தினமணி' கார்ட்டூன் படமாக வெளியிட்டது. அந்தக் கார்ட்டூனை 1000 தாள்களில் அச்சிட்டு , அதேபோல் திருவிதாங்கூரை தமிழகத்தில் சேர்க்கவேண்டும் என்று பரப்புரை செய்தார் பி.எஸ்.மணி. 

     1950இல் கன்னியாகுமரி எல்லைப் போராட்டம் மிகவும் வேகம் அடைந்தது. இதுகுறித்து கொச்சி முதல் அமைச்சரும், அன்றைய தமிழக அமைச்சர் பக்தவத்சலமும் பாளையங்கோட்டையில் சந்தித்துப் பேசினர். ஆனால், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை பி.எஸ்.மணி ஏற்றுக் கொள்ளாமல், கேரளத்துடன் குமரி மக்கள் இருக்க முடியாது என்பதையும், எந்த சமரசத் திட்டத்திற்குத் தயார் இல்லை என்றும் தெரிவித்தார். குஞ்சன் நாடார் போன்ற பல்வேறு போராட்டத் தளபதிகள் இப்பிரச்சினையில் அணிவகுத்தனர். அரசு அலுவலகங்களுக்கு முன்னால் மறியல், பொதுக்கூட்டங்கள் நாள்தோறும் குமரி மாவட்டத்தில் நெடைபெற்றன. 1954 ஆகஸ்ட் 11 அன்று பதினாறு தமிழர்கள் போலிசாரால் சுடப்பட்டு மாண்டனர்.
                 1954ஆம் ஆண்டில் தேவிகுளம் - பீர்மேடு பகுதியில் திட்டமிட்டு மக்களை வெளியேற்றும் நிலைமையை ஆராய நேசமணி தலைமையில் மூவர் குழு சென்றது. அங்கு அவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். ம.பொ.சி. அச்சமயத்தில் மூணாறு சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டார். நேசமணி கைதைக் கண்டித்தும் குரல் கொடுத்தார். திருவிதாங்கூரில் கல்குளத்தில் நேசமணி கைதைக் கண்டித்து மக்கள் பேரணி நடத்தினர். இதனைத் தொடர்ந்து பெரும் போராட்டங்கள் நடந்த. குஞ்சன் நாடார் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் சிறைப்பட்டனர். கேரள அரசு கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டது.
           குமரி பகுதிகளில் 11.8.1954 அன்று தமிழர் விடுதலை நாளாகக் கொண்டாடப்பட்டது. அன்று தமிழர் பகுதிகளில் முழு கடை அடைப்பு நடத்தப்பட்டது. தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். அரசு அலுவலங்களின் முன்னால் மறில் போராட்டம் தொடர்ந்தது.
         புதுக்கடையில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது, கலைந்து ஓடிய மக்களை வழிமறித்துக் காவல் துறையினர் வெறிகொண்டு தாக்கினர். போராட்டத் தளபதியான குஞ்சன் நாடார் சிறைப்பிடிக்கப்பட்டு காவல் நிலையத்தில் வைத்து கடுமையாகத் துன்புறுத்தப்பட்டார். அதனாலேயே அவர் உயிர் துறக்கும் நிலை ஏற்பட்டது.
        நேசமணியின் தொடர் போராட்டம் நிறுத்தப்பட்ட பின்பும், போராட்டத் தளபதிகள் போலிஸாரின் குண்டாந்தடியால் அடித்து உதைக்கப்பட்டனர். அச்சமயம் தலைமறைவாக இருந்து போராட்டத்தை நடத்தி வந்த பி.எஸ். மணியை திருநெல்வேலி மாவட்டத்தில் கேரள போலிஸார் கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் அடைத்தனர். இதுபோன்று செங்கோட்டையிலும் போராட்டடங்கள் நடத்திய கரையாளர் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். 
       தேவிகுளம், பீர்மேடு ஆகிய தமிழ்ப் பகுதிகளைத் திரும்பவும் தமிழகத்தில் சேர்க்க அனைத்துக் கட்சி ஊர்வலம் சென்னையில் நடைபெற்றது. முதல் நாள் ஜீவா கைது செய்யப்பட்டார். சென்னையில் காவல் துறை கண்ணீர் புகை வீச்சு, கல் வீச்சு என்று பதட்ட நிலையில் சென்னைக் கடற்கரைக்கு மக்கள் பேரணி சென்றதும் பி.டி.ராஜன் தலைமை தாங்கினார். அண்ணா கலந்து கொண்டார்.
      பல படி பேச்சுவார்த்தைகளுக்குப் பின் 1/11/1956ல் குமரி தமிழகத்தோடு இணைந்தது.
     இருப்பினும், தமிழர்களின் வரலாற்று வழி வந்த கோலார், கொள்ளேகால், நெடுமாங்காடு, நெய்யாற்றங்கரை, உடுமஞ்சோலை, செங்கோட்டை வனப்பகுதி, கண்ணகி கோயில், தேவி குளம், பீர்மேடு, திருப்பதி. சித்தூர், புத்தூர், நகரி, ஏகாம்பரம் குப்பம், ஆகிய பகுதிகளை தமிழகம் இழந்ததால் காவிரி நீருக்கும், முல்லைப் பெரியாற்று நீருக்கும், பாலாறு நீருக்கும் அண்டை மாநிலங்களிடம் கையேந்தும் நிலை வந்து விட்டது. மாறுமோ?

 -----------------------------------------------------------------------------------------------------------------------------









-தென்குமரியின் சரித்திரம் -
அ.க.பெருமாள்

மற்றும் 
வலைப் பதிவுகள்

படங்கள் - இணையம்.

Saturday, 21 October 2017

இருட்டறைக்குள் பாயும் கீழடி வெளிச்சம்


இலக்கியத் தேடல்கள் வரலாற்றை நோக்கியும், வரலாற்றுத் தேடல்கள் இலக்கியங்களை நோக்கியும் திருப்பும் இயல்பு கொண்டவை. அந்த இயல்பை மறுதலித்தே இங்கு நீண்ட காலமாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.  இரண்டையும் இணைத்துக் கொண்டவை மிகச்சிலவே. இந்த இரண்டுக்குமான இடைவெளியை அகழ்வாய்விலும் தொல்பொருள் ஆய்விலும் கிடைக்கும் தரவுகளின் துணைகொண்டு சரிசெய்து கொண்டே வரவேண்டும். இதன் மூலமாகத்தான் இரண்டிலும் இருக்கும் குறைகளைக் களையமுடியும்.

நான் தமிழாசிரியராக, வரலாற்று ஆசிரியராக, தொல்பொருள் ஆய்வாளராகப் பணியாற்றுவதற்கான படிப்பெதுவும் படித்தவனில்லை. ஆனாலும் தேடல்கள் இருந்துகொண்டேயிருக்கின்றன. அந்தத் தேடலின் போது கீழடி அகழ்வாய்வு வரலாற்றின்  மீதும், இலக்கியங்களின் மீதும் புத்தொளி பாய்ச்சியிருப்பதை உணரமுடிகிறது.

Wednesday, 13 September 2017

குமரி.



                குமரி தமிழ்நாட்டின் தென்னெல்லையாய்த் தண்ணென்றப் பெருங்கடலாய் விரிந்துகிடக்கிறாள். அவள் மடியில் எம்மினத்தின் தொன்மங்கள் இறைந்து கிடக்கின்றன.


     
           சங்க இலக்கியம், சமய இலக்கியம் தொடங்கி அண்மைக்காலம் வரை "குமரி" என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறாள். ஆங்கிலேயர்களும் "குமரி முனை" எனும் பொருள்தரும் Cape Comorin என்ற சொல்லாலேயே அழைத்தார்கள். அவள் எப்படி கன்னியாகுமரி ஆனாள் என்று எனக்கு இன்று வரை விளங்கவில்லை.




     மொழிநிலைத் தொல்லியல் (Linguistic Palaeontology) எனும் ஆய்வுத்துறை மொழிகளின் பரவல் பற்றி ஆய்வு செய்கிறது. இதில் பேரறிஞர்கள் பலர் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். சிந்து மொழி, சுமேரிய மொழி, ஏலமைட் மொழி, உலுப் மொழி போன்ற மொழிகளில் நிகழ்த்தப்பட்ட மொழித்தொல்லியல் ஆய்வுகள், ஆய்வாளர்களை இந்தக் குமரியை நோக்கி நகர்த்துகின்றன.





                        குமரி என்ர இந்தச் சொல் "குமர்" என்ற அடிச்சொல்லிலிருந்து பிறக்கின்றது. இதற்கான வேர்ச்சொல் "கும்" என்பது. "கும்" அல்லது "கொம்" என்பது வளமை, செழுமை என்ற அடிப்பொருள் உடையது.

                   "கும்முன்னு" இருக்கு என்றச் சொற்றொடரின் பயன்பாட்டை நினைவில் கொள்ளுங்கள். அண்மையில் "சிமிக்கிக் கம்மல்" பாட்டுப் பரவலானது எதனால்? கும்மென்றச் சேரநன்னாட்டு இளம்பெண்களும் "கும்"பலாய் அவர்கள் ஆடிய நடனமுந்தான். அன்றி பாட்டின் பொருள் பற்றியல்ல. பாட்டின் பொருளும் அத்தனை எளிதாய் இந்த மண்ணில் பொருந்துவதாயும் இல்லை.
                     பல்லாயிரம் ஆண்டுகள் தாண்டியும் "கும்" என்ற வேர்ச்சொல் சிமிக்கிக் கம்மல் பாடல் வரை நீள்கிறது.

                   கும்முன்னு, கும்பல், கும்பளங்காய் போன்றவை "கும்" என்ற வேர்ச்சொல்லில் பிறந்தவை.

                  கும் - அர் விகுதி சேர்ந்து "குமர்" அல்லது "கொமர்" என்றாகும்.
இன்றும் கூட குமரி மாவட்டப் பேச்சுவழக்கில்" கொமர்" எனும் இந்தப் பழஞ்சொல் பயன்பாட்டில் இருக்கிறது.  மணமாகாத இளம்பெண்களை அப்படிச் சொல்வது வழக்கம்.

    "வீட்ல ரெண்டு கொமரு இருக்குடே... எப்பிடி கரயேத்துவானோ?"

              ஒரே கருத்து ஆண், பெண் பாலால் குறிக்கப் பெறுவது   பழந்தமிழ் மரபு. குமர் பொதுச்சொல்.

       கும் - அன் விகுதி சேரும்போது குமரன்
       கும் - இ விகுதி சேரும்போது குமரி

                      
எடு: மாரி பொதுச் சொல். மழையக்குறிக்கும்.
        மாரியப்பன், மாரியம்மாள் என்று இருபால் தாங்கும். தமிழ்நாட்டை ஆறாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் அறிமுகம் செய்தது "முத்து". இதுவும் இணையும்.
          
           முத்துக்குமரன், முத்துமாரியப்பன், மாரிமுத்து, குமரிமுத்து, சுடலைமுத்து.

        இப்படி எம் மொழியின், இனத்தின் வரலாற்றைச் சுமந்து கொண்டு நீருக்கு அடியில் "குமரி" இருக்கிறாள். இன்றையத் தென் எல்லைக் குமரி தொல்தமிழரின் குறியீடு.

பாவாணர் அடியொற்றி:
 

Thursday, 7 September 2017

யாரிடம் கேட்பது.




         துக்கம் நெஞ்சை அடைத்துக் கொண்டிருக்கும் போதும் உற்றார் ஒருவரின் சொற்கள் இன்பத்தைக் கொண்டு சேர்க்கும். நீண்ட நாட்களுக்குப்(1984) பிறகு அப்படி ஒரு சொல்கண்டு பாறைகளுக்கிடையே சிறு ஊற்றெனப் பிறந்தது இக்கவிதை. எல்லோருக்குமானதா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் உங்கள் உள்ளத்தையும் ஒரு வேளைக் கீறிவிடக் கூடும்.

      33 வருடங்களாய் என் கவிதை (?) ஒன்றைச் சுமந்த அன்பு அண்ணன் Muthuperumal Boothalingam Pillai க்காக மீட்டெடுக்க முடியாதக் காலத்தைப் பாட்டில் வடிக்கப் பார்க்கிறேன்.
_________________________________

யாரிடம் கேட்பது?
_______________________






Tuesday, 5 September 2017

அம்மணமாய் இரு.




வ.உ.சி - வாராது வந்த மாமணி




1872-09-05                       1936-11-18
இன்று பிறந்தநாள்
                                                     

            காலம் மறக்கமுடியாத தலைவர்களில் ஒருவர் வ.உ.சி. இன்றைய காலக்கட்டத்தில் அவருடைய சில முக்கியமான நடவடிக்கைகள் மற்றும் சமூகப்பார்வைகளை மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது. வெறும் கப்பலோட்டியத் தமிழனாகவே அவரை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்வதை விடுத்து இன்றைய காலத்தேவையோடு அவர் எவ்வளவு நெருக்கமாக இருந்தார் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது. ஏனென்றால் இந்த நாடு சரிசெய்யப்படாத முரண்களோடு நூறு ஆண்டுகளுக்கும் மேலாய் பயணித்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை அவர்கள் வ.உ.சி யின் வழியாகவும் அறிந்து கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் வ,உ,சி யையும் அவர்கள் அறிந்து கொள்வார்கள். "நீட்"டி முழக்காமல் குறிப்புகளாகத் தொகுக்கிறேன் "நீட்"டைப் போல.

      வ.உ.சி இந்த நாட்டின் போக்கையும் அதன் கோர முகத்தையும் உணர்ந்தவர் என்பதை அவருடைய நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.

        சாதியக் கொடுமையச் சாடிய வ.உ.சி 1927 சனவரி 19 ல் நடந்த திராவிடர் கழகத்தின் 18 வது ஆண்டுவிழாவில் அந்தக் கொடுமைகள் களைய "நம்மவர் கடமை" என்றத் தலைப்பில் பேருரையாற்றினார்.

         இன்றளவும் பல்வேறு இயக்கங்கள் அகற்றிட விரும்பிப் பாடாற்றிவரும் ஒரு நிலைப்பாட்டிற்கான விதையை வ.உ.சி விதைத்திருக்கிறார். அன்றைய காங்கிரசுப் பேரியக்கத்தின் சிறப்புக் கூட்டமொன்று கோவையில் 1927 சூலைத் திங்கள் 2 மற்றும் 3 தேதிகளில் நடைபெற்றது. அதில் "பிராமணர் அல்லாதோர் கைகளுக்குக் காங்கிரசுப் பேரியக்கம் வரவேண்டும்" என்று முழங்கினார்.

       அதே ஆண்டு நவம்பர் மாதம் சேலத்தில் மாவட்டக் காங்கிரசு மாநாடு நடைபெற்றது. மாநாட்டுத் தலைவராக வ.உ.சி இருந்தார். தலைமையுரையில் "சூத்திரன்" என்ற பதம் பொது ஆவணங்களிலிருந்து கண்டிப்பாக நீக்கப்பட வேண்டும் என்று கூறினார்.




        இள வயதில் துறவியாக விரும்பி தலை மழித்து மதுரை வரை நடந்து சென்று அதன் பிறகு அந்த ஆசையைத் துறந்தவர் வ.உ.சி. இதை அவரே சுயசரிதையில் குறிப்பிடுகிறார். அன்றையச் சமூகச் சூழல் அவரிடம் அந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். அவருடைய பேச்சுக்கள் அன்றைய சமூகநிலையை நமக்குக் காட்டுகின்றன.

      1920 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் தேதி காங்கிரசின் 26 வது மாநில மாநாடு நடைபெற்றது. அதில் வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு தீர்மானங்களை வ.உ.சி கொண்டுவந்தார்.


1. நாடு முழுவதும் தொழிற்சங்கங்களைத் தோற்றுவித்து குறைந்தபட்ச ஊதியம், அளவான பணிநேரம், நிறைவான கண்ணியமானக் குடியிருப்பு, முழுமையான தடையற்றச் சங்கம் அமைக்கும் உரிமை.
        இந்தத் தீர்மானம் நிறைவேற அவர் நிறைய வாதிட வேண்டியிருந்தது. அடுத்த தீர்மானம் இட ஒதுக்கீடு பற்றியது.

2. பொதுத்துறையில் பணியாட்களைத் தேர்ந்தெடுக்கும் போது பிராமணர் அல்லாதாருக்குப் போதுமான அளவு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.

         அடிப்படையில் இந்த நாட்டின் பிரச்சனை என்ன என்பதை அறிந்து அதற்கான எதிர்வினைகளையும் ஆற்றியிருக்கிறார் வ.உ.சி.

         நேர்மையான தொழிற்சங்கவாதி.

         பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என முழங்கியிருக்கிறார்.

        1928 சனவரித் திங்கள் தேவக்கோட்டை மாணவர் சங்க ஆண்டுவிழாச் சொற்பொழிவில்
       "பிறப்பினால் உயர்வு தாழ்வு நமது நாட்டு வழக்கமன்று. ஆரியர் நூல்கள் தமிழில் கலந்த பின்னரே பிறப்பினால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்றக் கோட்பாடு வந்தது. ஒருவன் நம்மைப் பார்த்து தாழ்ந்தவன் என்று கூறினால், அவ்வாறு கூறாதே என்று நாம் சொல்லலாம். கேட்கவில்லையென்றால் சட்டபூர்வமாகவோ, அசட்டபூர்வமாகவோ அவன் சொல்லாதிருக்கும்படிச் செய்யலாம். பார்ப்பனரல்லாதாருடைய பணங்கள் பார்ப்பனர்களால் கவரப்படும் போது அதனை ஒழிக்கச் செய்யும் முயற்சிகளுக்குக் குறுக்கே நிற்கும் எதனையும் ஒதுக்கித்தள்ளுமாறு மனம் தூண்டுகிறது. பிதுர் கடன், சிரார்த்தம் போன்ற பெயர்களில் நடத்தப்படும் வைதீகச் சடங்குகள் பொய்யே ஆகும். நமக்குக் கடவுள் பகுத்தறிவைக் கொடுத்திருக்கிறார். அதனைக் கொண்டு ஆராய்வோம். இதில் ஈடுபடலாகாது, விழிப்புடன் இருக்கவேண்டும். என்றெல்லாம் உரையாற்றினார்.

    நேர்மை எதுவென்று தோன்றுகிறதோ அதை நேரடியாகப் பேசும் பேராண்மை வ.உ.சி க்கு இருந்தது. காந்தியை மதித்தார். ஆனால் அவரது ஒத்துழையாமை இயக்கத்தை வெறுத்து ஒதுக்கினார். ஒத்துழையாமை இயக்கம் தமிழர்களிடம் கோழைத்தன்மையை உருவாக்கிவிடும் என்று தீர்க்கமாக முழங்கியவர்.

     பெண்களுக்குக் கல்வி வேண்டும் என முழங்கியவர்.

  அவர் அமைத்தக்  கப்பல் கம்பெனி 1882 கம்பெனிகள் சட்டப்படிதான் அமைக்கப்பட்டது. 10 லட்ச ருபா முதலீடு. ரு 25 வீதம் 40000 பங்குகள். ஆசியாவைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் பங்குகளை வாங்கலாம். ( இது அறியாமல் நிறைய முகநூல் பதிவுகளில் வ.உ.சி க்கு அவர் உதவினார், இவர் உதவினார் என்று நிறையச் செய்திகள்).

          கம்பெனியில் முக்கிய பொறுப்புகளை பிறருக்குக் கொடுத்துவிட்டு உதவிச் செயலாளர் பொறுப்பை வ.உ.சி எடுத்துக் கொண்டார்.

         ஆனால்..... கம்பெனியின் நட்டம், சிறை, கொடுமைகள் அனைத்தையும் அவர் ஒருவரே ஏற்றுக்கொண்டார் செம்மல் வ.உ.சி.

     
  
     அவர் காலத்தில் ஊடாடிக்கொண்டிருந்த பிரச்சனைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை என்பதை உணர்கிறோம். காரணத்தையும் கருவிகளையும் தந்துவிட்டுப் போயிருக்கிறார் செம்மல் வ.உ.சி, தொடர்வோமா?
    
       

Tuesday, 29 August 2017

ஆனைக்கா- பாடல் விளக்கம்.


ஆனைக்கா பேரறிவின் சின்னம். தொடர்ச்சி.

                 காவிரி பொன்படுநெடுவரையில் (குடகு) தொடங்கி கானலம் பெருந்துறையை (புகார்) அடைந்து கடல் தழுவுகிறது. தன் முழுப்பயணத்தில் மாயனூரிலிருந்து அகன்றக் காவிரியாய் விரிகிறது. கல்லணையின் கீழே ஒரு பரந்துவிரிந்த மருதநிலப்பரப்பை வளமாக்கி உலகில் செழிப்புற்ற இடங்களில் ஒன்றாய் மாற்றுகிறது. மாயனூர் தொடங்கிக் கல்லணை வரை காவிரி இந்த மண்ணை ஆரத்தழுவிச் செல்வதைக் காணலாம்.
       இன்றைய முக்கொம்பில் பிரியும் காவிரியும் கொள்ளிடமும் பெருவெள்ளச் சமநிலைக்கான ஏற்பாடுகளே. இந்தச் சமநிலையைக் கண்காணிக்கும் இடமாக ஆனைக்கா தேர்வுசெய்யப் பட்டிருக்கலாம். முக்கொம்பிலிருந்து கல்லணை ஏறத்தாழ 24 கி.மீ (நேர் அளவு) ல் இருக்கிறது. ஆனைக்கா இந்த இரண்டிற்கும் நடுவில், அதாவது 12 கி.மீ (நேர் அளவு)ல் அமைந்திருக்கிறது. மேலும் காவிரியாற்றின் நடுப்பகுதியிலிருந்து கொள்ளிடம் ஆற்றின் நடுப்பகுதி வரை ஏறத்தாழ 3.5 கி.மீ (நேர் அளவு) இருக்கிறது. ஆனைக்கா கோயில் இந்த இரண்டுக்கும் நடுவில் ஏறத்தாழ் 1.65 கி.மீ (நேர் அளவு) ல் இருக்கிறது. நீர்மட்டக் கணக்கீட்டிற்கு ஆனைக்கா கோயில் மிகச் சரியான இடமாகத் தேர்வு செய்யப்பட்டு அதில் ஒரு கோயில் கட்டப்பட்டிருக்கிறது. கோயில் என்பது மன்னன் வாழும் அரசு செய்யும் இடம். அதற்கு ஏராளமானச் சான்றுகள் நாடெங்கும் உள்ளன. ஆனைக்கா கோயிலிலும் இருக்கிறது. பிராகாரத்தின் கிழக்குப் பகுதியில் குறத்தி மண்டபம் எனப்படும் 'குறை தீர்த்த மண்டபம்' உள்ளது. வசந்த மண்டபம் என்றும் சொல்வர். அரசர்கள் இந்த மண்டபத்தில் அமர்ந்தே மக்களது குறைகளைக் கேட்டறிவார்களாம்.
         சிராப்பள்ளி மலைக்கோட்டையிலும் தர்பார் மண்டபம் உள்ளது. "குறை தீர்த்த மண்டபம்" குறத்தி மண்டபமானதும், தர்பார் மண்டபமானதும் காலத்தின் கோலம்.
     மன்னன் இருந்த இடத்தில் காவிரியாற்றின் நீர்மட்டத்தை அன்றாடம் கவனித்துத் தெரியப்படுத்தி அதற்கேற்றவாறு கொள்ளிடத்தில் நீர்பிரிக்க ஆனைக்காவில் கட்டப்பட்டநீர் கண்காணிப்பு அமைப்பே இந்தக் கோயில். பெருவெள்ளம் மற்றும் போர்க்காலங்களில் ஊர் மக்கள் அனைவரும் தங்கிக் கொள்ள கோயிலுக்குள் எல்லா வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. நெற்குதிர், குடிநீர்க் கிணறுகள், குளிப்பதற்கான குளங்கள், விறகுக்கான மரங்கள், தென்னை மரங்கள் என்று எல்லாமும் இருந்தன. அதற்குச் சான்றாய் இன்றும் இருக்கிறது தோப்புக்காரத் தெரு.

      உள்ளத்தில் கேள்விகளோடு நீங்கள் படிப்பது புரிகிறது.

  கி.மு. 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த மாவீரன் அலெக்சாந்தரின் ஆசிரியர் அரிஸ்டாட்டில் மற்றும் அதற்கு முன்பு இருந்த தேல்ஸ் ஆகிய கிரேக்க அறிஞர்கள் நீரியல் சுழற்சி பற்றிய தெளிவற்ற சிந்தனைப் போக்கைக் கொண்டிருந்தனர்.


‘கடலின் அடித்தளத்தில் நீர் உற்பத்தியாகிறது. கடலில் உள்ள நீர் மண்ணால் உறிஞ்சப்பட்டு பின் அது மலைகளில் இருந்து ஆறாக வெளிப்படுகிறது’. என்கிறார் தேல்ஸ்.

 ‘குளிர்ச்சியான காலநிலைகளில் காற்று உறைந்து மழையாகப் பெய்கிறது’. என்கிறார் அரிஸ்டாட்டில்.
     
     ஆனால் தமிழ்நாட்டில் அந்தக் காலகட்டத்திற்கு முன்பே நீரியல் பற்றிய வளமான அறிவு எல்லோரிடமும் இருந்தது. 

“வான்முகந்த நீர் மழை பொழியவும்
மழைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல்
நீரின்றும் நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்
அளந்து அறியாப் பல பண்டம்.”   -(பட்டினப்பாலை, 126-131.)

என்று மழைப் பொழிவும்,

வருவிசைப் புனலைக் கற்சிறை போல :- (தொல்காப்பியம்-பொருள்-65)

  என்று நீரைக் கல்லால் அணைகட்டித் தடுப்பதும் முன்னோர்களால் சொல்லப்பட்டிருக்கின்றன.
 

      இத்தனைப் பேரறிவு நிறைந்த நிலத்தில் ஆனைக்கா போன்றதொரு நீர்க் கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது இயல்பே. இங்கே அறிவு தலைமுறைத் தலைமுறையாகக் கடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் நமக்கு மட்டும் அது வந்து சேரவில்லையோ என்ற எண்ணந்தான் என்னை ஒரு பாடல் எழுதத் தூண்டியது.



அள்ளக் குறையா ஆனைக்காச் சிவனைச்
சொல்லக் குறையாச் சோணாட் டோம்பலைச்
செல்வங் குறையாச் செய்திட்டக் கோயிலில்
வல்லம் போல்வளைந்து காண்.
 
பாடல் விளக்கம்
 
அள்ளக் குறையா ஆனைக்காச் சிவனை:-
           அள்ள அள்ளக் குறையாத பெருநீர் பெருக்கி ஓடியவள் காவிரி. அவள் தான் இங்கே சிவம். மண்ணோடும் மக்களோடும் இரண்டறக் கலந்தவள். தன் பெருங்கை விரித்துக் கரை தொட்டு நடப்பாள். மருதநிலம் செழிக்கச் செய்வாள், புனலாடும் மாந்தர் ஆடை அவிழ்த்துக் களிநடம் புரிவாள். அவள்தான்  இங்கே எல்லாமுமாக  இருக்கிறாள். அவளை இழந்து இந்தமண் அடையப்போவது எதுவுமில்லை. அவளே சிவம். 
 
 
அப்படியொரு ஆற்றின் பயன்பாட்டைப், பாதுகாப்பை உறுதிசெய்யத்தான் இந்தக்கோயில். இந்த அறிவும் எம் மக்களின் மரபறிவே.
 

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே:
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே:
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே:- (புறநானூறு-18)
 
 
      உடலுக்கு உணவு கொடுத்தவர்கள் தான் உயிர் கொடுத்தவர்கள். உடல் இருக்க உணவே காரணம். உணவு என்பது நீரும் நிலமும் சேருவதால் உருவாக்கப்படுவது. ஆகவே நீரையும் நிலத்தையும் சேர்த்தவர்களே உடம்பையும் உயிரையும் படைத்தவர்கள் என்கிறது இந்தப் புறப்பாட்டு. நீரும் நிலமும் இன்றியமையாதது என்ற அறிவின் வெளிப்பாடு இது.
 
அறையும் பொறையும் மணந்த தலைய
எண்நாள் திங்கள் அனைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ
கூர்வேல் குவைஇய மொய்ம்பின்
தேர்வண் பாரி தண்பறம்பு நாடே:- (புறநானூறு-118)

      கூரிய வேலையும் திரண்டதோளையும் உடைய பாரியின் பறம்பு மலையில் உள்ள எட்டாம் நாள் பிறையை ஒத்த வளைந்த கரைகளையும் தெளிந்த நீரையும் உடைய சிறுகுளம் பாதுகாப்பார் இல்லாமையால் பாழ்படுகிறதே’ என்று பாரியின் மறைவுக்குப் பின் கபிலர் துயரத்தோடு பாடுகிறார். பாரியின் மறைவைவிட சிறு குளத்தின் அழிவு அறிஞர்களால் கூர்ந்து நோகப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை நீர்மேலாண்மை குறித்த ஒரு பேரறிவின் பார்வையாகவே நான் காண்கிறேன். காவிரிதான் ஆனைக்கா சிவன் என்று நான் பொருள்கோடக் காரணம் எம் முன்னோர் அறிவே. இங்கு அவளே சிவன்.
 
 சொல்லக் குறையாச் சோணாட் டோம்பலைச்
 
       சோழநாட்டின் விருந்தோம்பல் உலகம் அறிந்ததே. சோழநாடு சோறுடைத்து. எல்லா நாளும் வருபவர்களுக்கெல்லாம் அள்ளிவழங்கும் அளவுக்கு விளைச்சல் அதிகமான பகுதி இந்தப் புனல்நாடு.
 
அறம் நிலைஇய, அகன் அட்டில்
சோறு வாக்கிய கொழுங் கஞ்சி,
யாறு போலப் பரந்து ஒழுகி, 
ஏறு பொரச் சேறு ஆகி,
தேர் ஓடத் துகள் கெழுமி
நீறு ஆடிய களிறு போல,
வேறு பட்ட வினை ஓவத்து
வெண் கோயில் மாசு ஊட்டு ;- (பட்டினப்பாலை)
 
        அறம் நிலைபெற்ற, பெரிய சமையல் அறைகளில் ஆக்கிய கொழுமையான கஞ்சி, ஆற்றினைப் போலப் பரந்து தெருவில் ஓடி, அங்கு காளைகள் போரிடுவதால் சேறு ஆகிற்று. தேர் ஓடிக் கிளப்பிய தூசியில் விளையாடிய ஆண் யானையைப் போன்று, ஓவியம் வரையப்பட்ட அரண்மனையில் தூசிப் படிந்தது. ஆறு போல் கஞ்சி ஓட வேண்டுமானால் எவ்வளவு சோறு ஆக்கப் பட்டிருக்கவேண்டும். ஓடியதும் கொழுங்கஞ்சியாம். கஞ்சியை அறியாத "குக்கர்" தலைமுறை கொழுங்கஞ்சியை எப்படிப் புரிந்து கொள்ளும் என்று தெரியவில்லை. உலகியலில், சிறப்புடையவையெல்லாம் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் போதோ உணரப்படும் போதோ அந்தச் சிறப்பின் அளவில் குறைந்தே தோற்றமளிக்கத் தொடங்கும். ஆனால் பட்டினப்பாலையின் பெருவியப்பை நான் இன்றளவும் சோணாட்டில் கண்டும், உணர்ந்தும், பருகியுமிருக்கிறேன் .மணலை அள்ளி, நீரைத் தடுத்து என்னென்னவோ செய்து அவளைப் பாழ் படுத்திய பின்னும், குடிநீரைத் தந்து உயிர் காக்கிறாள். கொழுங்கஞ்சி ஆறாக ஓட, ஆறாக ஓடும் காவிரியே காரணம். இங்கு  அவளே சிவன். 
 
செல்வங் குறையாச் செய்திட்டக் கோயிலில்
 
        ஆனைக்கா அழகும் அறிவும் இணைந்து நிற்கும் பெருங்கோயில். இத்தனை வேலைப்பாடுகள் நிறைந்தக் கோயிலைக் கட்ட பேரறிவு வேண்டும். வள்ளுவப் பேராசான் சொன்னச் செவிச்செல்வம் பெற்ற எத்தனையோ தச்சர்கள் இங்கே பணிசெய்திருப்பார்கள். அவர்களுக்கு உதவியவர்கள், கல் சுமந்தவர்கள், மண்வெட்டியவர்கள் என்று எத்தனையோ மனிதர்களின் பேருழைப்பு இந்தக் கற்றளியெங்கும் நிறைந்து நிற்கிறது. முன்பே குறிப்பிட்டது போல ஒரு சரியான நீர் கண்காணிப்பு மற்றும் கணக்கீடு நிலையமாக எழுப்புவதற்கு எவ்வளவு அறிவுச்செல்வம் எவ்வளவு பொருட்செல்வம் தேவைப்பட்டிருக்கும்.
 
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப  நாட்டிவ் வைந்து :- (குறள்)
 
       இந்தக் குறளின் நோக்கில் சிறந்த நாடாக சோணாடு விளங்கியதால் இத்தனைப் பெரிய அறிவுக்கோயில் இங்கே எழுந்திருக்கிறது. இத்தனையும் கொடுத்தவள் காவிரி. இங்கு அவளே சிவன்.
 
 
வல்லம் போல்வளைந்து காண்
 
    இத்தனைச் சிறப்புமிக்க கோயிலில் எப்படிக் காவிரிக்கு வணக்கம் சொல்வது. கருவறைச் சுவற்றில் ஓட்டைகள் இடப்பட்டிருக்கின்றன. எத்தனைப் பெரிய காவிரி எனினும் அளவறிந்து பயன்படுத்தவேண்டும். இல்லையெனின் அது கேட்டை வரவழைக்கும். அதன் குறியீடகவே சுவற்றில் துளைகள் இடப்பட்டிருக்கின்றன. 
       இயற்கையோடு வாழ்ந்து வாழ்வியலின் உச்சம் தொட்டப் பேரறிவின் நீட்சியே ஆனைக்கா கோயில். எம் முன்னோர் நிறைவாகச் செய்தக் கோயிலில் உள்ள நிறைவுடன் வணங்குதலே நம் முன்னோருக்கும் காவிரிக்கும் நாம் செய்யும் மரியாதை. வாழை மரம் வளர்ந்து குலை தள்ளும் போது ஒரு மனிதன் தலை தாழ்த்திக் கை கூப்புவது போலிருக்கும். குலையின் கீழே பூ கூப்பிய கை போன்ற தோற்றம் தரும். அப்படி வணங்கும் ஒருவரை தள்ளி நின்று பார்த்தீர்களானால் குலைதள்ளிய வாழை போலிருக்கும். குலைதள்ளிய வாழை மனநிறைவின் குறியீடு. வல்லம் என்றால் வாழை.முன்னோர் அறிவை உணருங்கள். வாழை போல்  மனநிறைவோடு காவிரியை கைகூப்பி வணங்குங்கள். இங்கு அவளே சிவன்.

        காவிரியைக் காப்போம். தமிழர்தம் பேரறிவைத் தெரிந்து கொள்வோம். புரிந்து பயன்படுத்துவோம். அல்லன களைவோம். இந்தப் பேரறிவு முழுமையும் தமிழில் விளைந்ததே என்பதை அறிவோம். தமிழைப் போற்றி வணங்குவோம். அதுவே எல்லாமும் என்று தெளிவோம்.


ஆனைக்கா பேரறிவின் சின்னம்.

என்றென்றும் அன்புடன்,
சிராப்பள்ளி மாதேவன்.