Sunday, 2 April 2017

தஞ்சைக்கு வா... தமிழினமே



வணக்கம்.

    நேற்றுத் “தஞ்சைக்கு வா…. தமிழினமே” எனுந் தலைப்பில் எழுதியப் பாடலுக்குப் பொருள் விளக்கம் கொடுத்தால் சிறப்பாக இருக்குமென்று நண்பர்கள் சொன்னார்கள். அதனால் தான் இந்தப் பதிவு.

     எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ள முடியாதப் பாடல் எழுதவேண்டுமென்று எண்ணி இதை நான் எழுதவில்லை. இந்த இனத்திற்கென்று ஒரு அறம் இருக்கிறது. அந்த அறத்தின் வழி இந்தத் தமிழினம் இயங்கும். “அறம் கூற்றாகும்”. இதுபோன்றச் சொல்லாடல்களை நாம் அடிக்கடி கேட்கிறோம்.

 அது என்ன “அறம்”.

     முதலில் தோன்றிய இந்தத் தமிழினம் இயற்கையிலிருந்தே தன் மொழியையும், பண்பாட்டையும் கற்றுக்கொண்டிருக்கிறது. இவ்விரண்டையும் வளர்க்க அந்த இயற்கை இயங்கும் முறையறிந்து அதன் வழி ஒழுகுவதை “அறம்” என்று போற்றியிருக்கிறது. இதை முழுமையாகப் பேசவேண்டுமெனில் விரியும். ஒன்றை மட்டும் பார்த்துவிட்டுப் பாட்டின் பொருளுக்கு நகர்கிறேன்.

      “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” ஒரு அறக்கோட்பாடு. பல்லுயிர்ப் பெருக்கமே இயற்கைச் சுழற்சியின் வளர்ச்சிதை மாற்றத்தில் சமநிலையைப் பேணும் ஒரு அடிப்படைக் கூறாக இருக்கிறது. இதைச் சிதைக்காமல் இருப்பது என்பதைவிட, அந்தச் சமநிலையைப் பேணும் பங்கு எல்லா உயிர்களையும் போல் மனிதனுக்கும் இருக்கிறது. ஏனைய உயிர்கள் ஆறாம் அறிவு பெறாத காரணத்தால் சமநிலையைச் சிதைப்பதில்லை. அதைக் கண்டுணர்ந்த நம் முன்னோர்கள்

பல்லுயிர் ஓம்புதலை ஆறறிவுக்கு “அறம்” என்று அறிவுறுத்தினார்கள். அந்த அறத்தினின்று பிழைத்ததால் எத்தனை அல்லலுறுகிறோம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

       “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” என்ற தொடரில் “பகு’ “பல்” என்ற இரு வேர்ச்சொற்கள் இருக்கின்றன. அவற்றின் வயது பாவாணர் கூற்றுப்படி ஐம்பதினாயிரம் ஆண்டுகள். (ஆட்டை என்று சொன்னால் சிறப்பு என்பார் தென்னன் மெய்ம்மன்). இந்தச் சொற்களின் வலுவும் பழமையும் அந்த அறத்தைச் சிறப்பாக வலியுறுத்துகின்றன.

       அப்படியொரு அறத்தைச் சொல்ல நினைத்ததால் ஆட்டகைள் பதினாயிரம் தாண்டியச் சொற்களைப் பயன்படுத்தினேன். அந்தப் பாடலில் சொல்லப்பட்டிருப்பது காவிரிக்கான அறம். அது இயற்கையின்பாற்பட்டது.

  பாடல் பகுதி: 1

வானமலை பிறந்து வங்கக்கடல் புகுவாள்

பொன்படு நெடுவரையின் பொன்னி மகள்

குடகினடித் திரைக் குத்திழிய நுரைகிளப்பிக்

கருநாடுந் தகடூர்ப் பெருநாடுங் கானநிறை

மேநிலமுங் கொங்கும் மேலான வளநாடும்

ஊன்குருதி என்புநாடி ஊடாடும் உயிருகுத்து

வானிருக்கும் நாள்வரைக்கும் வாருதலே அறமாகும்.

     வானமலை என்பது இன்றைய மேற்குத்தொடர்ச்சி மலை. மேற்குத்தொடர்ச்சி மலை என்பது வெளிநாட்டினர் அழைத்த Western Ghats என்பதன் மொழிபெயர்ப்பே அன்றி அம்மலை பழந்தமிழ் இலக்கியங்களில் இப்படி அழைக்கப்படவில்லை. வானமலை பிறந்து வங்கக்கடல் புகும் ஆறுகள் என்பது பொது. அந்த ஆறுகளில் எது என்பதைக் குறிக்கவே “பொன்படு நெடுவரையின் பொன்னிமகள்” என்ற சொற்றொடர். அது குடகு மலையைக் குறிக்கும். பொன் தானாகவே கண்படும் நெடிய மலை. அதில் பிறந்ததால்தான் அவள் பொன்னி எனப்பட்டாள். அந்தப் பொன்னிக்கு ஒரு இயற்கை அறம் இருக்கிறது.

              குடகினடித் திரைக் குத்திழிய நுரைகிளப்பிக்

      பொன்னி ஒடிவரும் போது குடகுமலையின் அடிப்பகுதியைத் தன்னுடையத் திரையெழும்பும் நீரால் குத்துவாள். உடனே மலை உடைந்து வழிவிடுமா? இல்லை அது இயற்கையின் அறத்திலில்லை. மலை “இழியும்”. குமரிமாவட்டப் பகுதிகளில் இந்தச் சொல் இன்னும் பழக்கத்தில் இருக்கிறது. வேறு பகுதிகளிலும் இருக்கக் கூடும். கருப்பட்டியின் இயற்கைச் சிதைவை “இழுகுதல்” என்று சொல்லும் வழக்கம் இருக்கிறது.

      தண்ணீர்த் திரை அடித்துக் மெதுவாக பாறைகளில் வழி பிறக்கும். அப்படி ஒரு வழிதான் “ஆடு தாண்டுக் காவிரி” என்று அழைக்கப்பட்ட “மேகே தாட்டு” என்னும் பகுதி. அங்கே இன்றும்கூடப் பொன்னி நுரை பொங்கப் பாய்கிறாள்.  

             கருநாடுந் தகடூர்ப் பெருநாடுங் கானநிறை

                   மேநிலமுங் கொங்கும் மேலான வளநாடும்

      அங்கிருந்துக் கருநாடகத்திலும் பின் தகடூர் பெருநாடாகிய இன்றையத் தருமபுரி மற்றும் கிருட்டினகிரி மாவட்டப் பகுதிகளில் பாய்கிறாள். இங்கே ஆற்றின் நீள விகிதத்தைக் குறிக்கவே “கருநாடு” தனிச்சொல்லாகவும், “தகடூர்” அளவைக் குறிக்கப் “பெருநாடு’ என்றும் எடுத்தாளப் பட்டது. அதன்பின் காடுகள் நிறைந்த மேல் நிலங்களின் வழி மேட்டூரை அடைகிறாள். பின்பு கொங்கு நாடு கடந்து வளநாட்டில் நடக்கிறாள்.

 இங்கெல்லாம் அவளுக்குப் பணி என்ன?

                 ஊன்குருதி என்புநாடி ஊடாடும் உயிருகுத்து

                         வானிருக்கும் நாள்வரைக்கும் வாருதலே

       ஊன், குருதி, எலும்பு, நாடிகளோடும் நரம்பு, இவற்றின் ஊடே ஆடும் உயிர் என இவை ஐந்தும் இணைந்துதான் எல்லா உயிர்களும் பிறக்கின்றன. வளரும் போது இந்த ஐந்திற்குமான உணவும் நீரும் தேவைப்படுகின்றன. இந்த ஐந்தையும் “உகுத்தல்” அதாவது இந்த ஐந்தையும் சொரிதல் அவள் பணி. சொரிதல் எனில் கேட்காமல் அதிகமாகக் கொடுப்பது. அதையும் வானம் இருக்கும் நாள்வரையிலும் “வாருதல்” அதாவது யாழ் நரம்பைத் தடவுவது போல மெதுவாய் தொடர்ந்து வருடிக் கொடுப்பது.

         வரும் வழியெங்கும் இந்த வேலையை வானிருக்கும் காலம்வரைச் செய்யவேண்டும் என்பதே அவளுக்கான அறம்.              
          
பாடல் பகுதி:2

மேதினியில் ஈதழிப்பார் மேலோரே என்றாலும்

தூதழித்து ஆயத்தீர்ப் பெதிர்த்து நின்றாலும்

வாய்மூடிக் கிடக்காது ஏர்பிடித்த உழவரினம்

கார்கொண்டுத் தஞ்சையிலே வீறுடனெ ழுந்துநின்று

போரொன்று நடக்குதுபார் சீர்கொண்டத் தமிழினமே
 
           உலகத்தில், இந்த அறத்தை அழிப்பவர் இறைவனே என்றாலும், மன்னர்கள் அறம் காக்க முனையும் தூது மற்றும் பேச்சுவார்த்தைகளை அழித்தாலும், சான்றோர் தீர்ப்புகளை அமைச்சர்கள் எதித்து நின்றாலும், உழவரினம் வாய்மூடி நிற்காது. நீண்டநாள் ஏமாற்றப் பட்டதில் “கார்கொண்டு” அதாவது நெஞ்சில் வெஞ்சினம் தேக்கி வீறுடன் போருக்கு நிற்கிறது.

பாடல் பகுதி:3
     
குடித்த மார்பறுத்துக் குருதியில் கைநனைக்கும்

தடித்த மனதுடையோர் தன்நெஞ்சந் தெறித்திடவே

நடக்க முடியாது நற்கால்கள் பூட்டிநிற்கும்

இடங்கண்ணி யறுத்து எந்தாய் மீட்டிடவே

விரைந்திடுகத் தஞ்சைக்கு வீரரென.

          இடங்கண்ணி – சங்கிலி விலங்கு

         ஏற்கனவே பாடலைப் புரிந்து கொண்டவர்களுக்கு நன்றி. இப்பொழுது படித்தவர்களுக்கு
மிக்க நன்றி.
        பத்து உருவா தொலைந்து போனால் விட்டுவிடுகிறோம். நூறு உருவா தொலைந்து போனால் புலம்புகிறோம். பதினாயிரம் உருவா தொலைந்து போனால் பைத்தியமே பிடித்து விடுகிறது. செலவு செய்ய முடியாமல் அடுத்தவரைப் பார்த்து மனதுக்குள் ஏங்குகிறோம். ஆனால், இருபதினாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணிலடங்காச் சொற்செல்வம் இருந்தும் பயன் படுத்தாமல் இருக்கிறோமே என்ற எண்ணம் வர வேண்டும் என்ற நோக்கில் பாருங்களேன்.

   எம்மினத்தின் ஏற்றம் தமிழில் இருக்கிறது.
   இது வெறும் மொழியில்லை
   வாள்.
                               

02/04/2017                                                         என்றென்றும் அன்புடன்,
                                                                    ப.மாதேவன்
                                                                    திருச்சிராப்பள்ளி





No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்