Friday, 19 May 2017

பெரும் பயணம்

குமரியில் தொடங்கி
வானமலை கடந்து
சிந்துவில் விரவி
எரிகடல் நுழைந்து
எல்லம் படைத்து
சுமேரியம் வளர்த்தோம்.

இயற்கையும் செயற்கையும்
துரோகமும்
துடைத்திட முனைகின்றன.

என்பிலதனைக் காயும் வெயில் போல
எம்மீது விழும் கல்விச்சூடு
இருட்டுக்குள் வரையப்பட்ட
கறுப்பு ஓவியமாய் நாங்கள்
வீடுகள் இடித்து ஊர்கள் அழித்த
அடையாளமற்ற ஆறுவழிச்சாலையாய்
எங்கள் வரலாற்றின் பாதை.

திக்கற்ற ஓர்நாளில்
தூரத்தே ஓர் மின்னல்
செவ்விலக்கிய அடர்மேகம்
தனித்தமிழின் மூச்சுக்காற்று
முதல் துளி முகம் தொட்டது
ஓ..
பெய்யட்டும் பேய்மழை
குளிரட்டும் எம்மண்
முளைக்கட்டும் பெருமரங்கள்
அதன்
இலைகளின் கதகதப்பில்
என்பு முளைக்கட்டும்
எழட்டும் எம்மினம்
அன்பிலதனைக் காயட்டும்
அறம். 

படம்: ஜார்ஜ் நியூட்டன்

Thursday, 18 May 2017

சொல்லப்படாத சொற்கள்


ஆரவாரம் நிறைந்த சாலையில்
அந்திமயங்கும் வெளிச்சத்தில்
உன்னைப் பார்க்கிறேன்.
என்
உதடுகள்  தானாகச் சிரிக்கின்றன.
பார்த்து நாளாச்சு என்கிறாய்
நீ
பக்கத்தில் இருப்பது யாரென
சம்பந்தம் இன்றி கேட்கிறேன்
நான்.
சொன்னாய்
விடைபெற்றோம்
நாம்.
விலகி நடக்கையில்
உன்னிடம் சொல்லாத
ஓராயிரம் சொற்களால்
என்
உள்ளம் நிறைகிறது
தோழி.


Saturday, 13 May 2017

பூக்கள்


கடவுள்கள் சூடும் முன்னே
காதலும் வீரமும் சூடியதில்
களித்துக்கிடந்தன
எம் நிலத்தின் பூக்கள்.

ப.மாதேவன்
-----------------------------------


சங்ககால மலர்கள் :

அடும்பு அதிரல் ஆம்பல் அவரை அனிச்சம் ஆத்தி ஆரம் ஆவிரை இருள்நாறி இலவம் ஈங்கை 
உந்தூழ் எருவை எறுழம்

கண்ணி கரந்தை கருவிளை காஞ்சி காந்தள் காயா காழ்வை குடசம் குரலி குரவம் குருக்கத்தி குருகிலை (குருகு இலை) குருந்தம் குவளை குளவி குறிஞ்சி கூவிரம் கூவிளம் கைதை கொகுடி கொன்றை கோங்கம் கோடல்

சண்பகம் சிந்து சுள்ளி சூரல் செங்கோடு செம்மல் செருந்தி செருவிளை சேடல்

ஞாழல்

தணக்கம் தளவம் தாமரை தாழை மலர் தில்லை திலகம் தும்பை துழாஅய் தோன்றி (மலர்)

நந்தி (மலர்) நரந்தம் நறவம் நாகம் நாகம் (புன்னாகம்) நெய்தல்

பகன்றை பசும்பிடி பயினி பலாசம் பாங்கர் பாதிரி பாரம் பாலை பிடவம் பிண்டி பித்திகம் பீரம் புன்னை பூளை போங்கம்

மணிச்சிகை மராஅம் மருதம் மா மாரோடம் முல்லை - கல் இவர் முல்லை முல்லை மௌவல்

வகுளம் வஞ்சி வடவனம் வழை மரம் வள்ளி வாகை, வாரம் வாழை ,வானி ,வெட்சி ,வேங்கை ,வேரல்,வேரி

அதிரல் – ஐங்குறுநூறு 345
எரிக்கொடி – ஐங்குறுநூறு 353
காயா, ஐங்குறுநூறு 412
குரவம் - ஐங்குறுநூறு 357
கொன்றை, ஐங்குறுநூறு 412
கோங்கம் – ஐங்குறுநூறு 343
தளவம் ஐங்குறுநூறு 412
நுணவம் – ஐங்குறுநூறு 342
நெய்தல், ஐங்குறுநூறு 412
பலா – ஐங்குறுநூறு 351
பாதிரி – ஐங்குறுநூறு 346
பிடவு ஐங்குறுநூறு 412
புன்கு – ஐங்குறுநூறு 347
மரவம் - ஐங்குறுநூறு 357
மராஅம் – ஐங்குறுநூறு 348
மா – ஐங்குறுநூறு 349
முல்லை ஐங்குறுநூறு 412
வேம்பு - ஐங்குறுநூறு 350


குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள மலர்கள்
ஓங்கல் மலர், குருகு, கூதாளம், வெண்கூதாளம், பாடலம், மயிலை, மருதம், முசுண்டை, வெதிரம் (விரிமலர்) அதிரல், குடசம், குரவம், கோங்கம், செண்பகம் = சண்பகம், செருந்தி, சேடல், தளவம், திலகம், நாகம், (கொழுங்கொடிப்) பகன்றை, பிடவம், மரவம், வகுளம், வேங்கை
இலவம் - எரிமலர் இலவம், குடசம், குரவம், குருந்து, கொன்றை, சண்பகம் – பெருஞ்சண்பகம், செருந்தி, தளவம், தாழை - முடமுள் தாழை, திலகம், நரந்தம், நாகம், பிடவம், புன்னை - பரந்து அலர் புன்னை, மரவம், வகுளம், வெட்சி - செங்கால் வெட்சி, வேங்கை
----------—----------//////////////------------

Wednesday, 10 May 2017

பயன்பாடு.

   சற்றுமுன் இரவு 8:10 மணி 10/05/2017 முதன்முறையாக காணொளிப் பேச்சு(video calling) ன் மிகப்பெரியப் பயன்பாட்டைப் பார்த்தேன். 
   சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தேன். எதிரில் சற்று தூரத்தில் ஓர் இளைஞர் திறன்பேசியொன்றைக் கையில் பிடித்துக்கொண்டு அதன் திரையைப் பார்த்து கை விரல்களை அசைத்துக்கொண்டிருந்தார். வழக்கம் போல் என் வயதான புத்தி (இளைஞர்களைப் பார்த்தால் வருமே அதுதான்) இவர்களுக்கு என்ன ஆயிற்று, ஒரு நாகரிகம் இல்லாமல் .. என்று எண்ணத்தொடங்கியது.
    அவரை நெருங்கிவிட்டேன். எந்த ஓசையும் கேட்கவில்லை. நான் தான் நாகரிகமற்று மெதுவாக அவரை மெதுவாகப் பார்த்தேன். அப்பொழுது தான் தெரிந்தது அவர் மாற்றுத்திறனாளி என்பது. பேசும் மற்றும் கேட்கும் திறன் இல்லாதவர். அவர்கள் பேசும் சைகை மொழியில் திரையில் எதிரில் இருந்த மற்றொரு மாற்றுத்திறனாளியோடு எளிதாக உரையாடிக்கொண்டிருந்தார். அறிவியலின் இந்தப்பயன்பாடு என்னை வியப்பில் ஆழத்தியது. பேசமுடிந்த கேட்கமுடிந்த எல்லோருக்கும் கிடைத்த வாய்ப்பு இப்பொழுது அவர்களுக்கும். திறன்பேசியில் இந்த செயல் முறையை கண்டுபிடித்து அறிமுகப்படுத்திய அந்த முகம் தெரியா மனிதனை உளமாற வாழத்தினேன். அந்த இளைஞரின் தோளைத் தட்டிவிட்டு நடக்க ஆரம்பித்தேன்.
       இதுபோல் பார்வையற்றோர் பயன் படுத்தும் வகையான உணர் தொடுதிரையொன்றை யாரேனும் கண்டுபிடிக்க வேண்டுமென்ற ஆவலுடன். 
       
      ப.மாதேவன். 

Wednesday, 3 May 2017

அறிவை விரி… அச்சம் தவிர்…



அறிவை விரி… அச்சம் தவிர்…

    அண்மைக் காலமாய் “கீழடி மறைக்கப்படுகிறது” “கீழடியில் ஆரிய நாகரிகத்தை நுழைக்க முயற்சி” என்று பலவாறான பதிவுகளை முகநூலில் பார்க்கிறேன்.
    கீழடியைக் காப்பதற்குப் போராட்டக்களம் புகுந்த அனைவரையும் நன்றிப்பெருக்கோடு வணங்குகிறேன்.
    உலகின் முதல் நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு இந்த அச்சம் வரக் காரணம் என்ன? தமிழர் நாகரிகத்தின் மீது வேறு ஒரு நாகரிகத்தை எப்படி ஏற்றிச் சொல்லிவிட முடியும்? யாரிடம் சொல்லிவிட முடியும்? தமிழர் நாகரிகத்தை மறைப்பதாகவே வைத்துக்கொள்வோம். அதற்கான எதிர்வினை என்ன? அந்த அகழ்வாய்வைத் தொடரச்சொல்லிப் போராடுவது, சரியான ஆய்வாளர்களை பணியில் தொடர அல்லது புதிதாய் அமர்த்தப் போராடுவது.
    சரி. போரட்டங்களைக் கருத்தில்கொண்டு அரசுகள் சரியான வேலையைச் செய்துவிட்டால் இந்த அச்சம் முழுமையாக அகன்றிடுமா? அத்தோடு வேலை முடிந்து போய்விடுமா?
     உள்ளம் சொல்லும் விடை “இல்லை” என்பதுதான். இப்படியொரு அச்சம் ஏற்படக் காரணம் நம்மிடம் பரவலான நேர்வினைகள் எதுவும் இல்லாமல் போனதுதான்.
     இன்று தமிழ், தமிழர் பண்பாடு, தமிழர் வரலாறு என்று அதிகம் பேசுபவர்கள் அல்லது கவலைப் படுபவர்கள் நம் குழந்தைகளை அந்த வழி நோக்கித் திருப்பியிருக்கிறோமா?
      நம் குழந்தைகளில் அதிகம் பேர் தமிழே சொல்லித்தரப்படாத பள்ளிகளிலும் சிலர் மொழியை மட்டும் ஓரளவு சொல்லித்தரும் பள்ளிகளிலும் படிக்கிறார்கள். பள்ளிகளில் நம் வரலாற்றைச் சொல்லித்தரும் பாடத்திட்டங்களே இல்லை. அப்படியெனில் இதை அப்படியே விட்டுவிடுவதா?
      நான் படிக்கிற காலங்களில் வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் “சிந்துச் சமவெளி நாகரிகம்” என்று ஒரு பாடம் இருந்தது. காளை முத்திரையும், ஒரு குளத்தின் படமும் போடப்பட்டிருக்கும். சிந்துவெளி மக்கள் சுட்ட செங்கற்களைப் பயன்படுத்தினார்கள். குளத்தில் நீர் வருவதற்கும் வெளியேறுவதற்கும் வழிகள் அமைக்கபட்டிருந்தன. அவர்கள் குதிரையை அறிந்திருக்கவில்லை. இரும்பை அறிந்திருக்கவில்லை.என்ற சில குறிப்புகளோடு “மொகஞ்சதாரோ” “ஹரப்பா” கதைகள் முடிந்துபோயின.
      பல்லாயிரம் ஆண்டுகால பெரும் வரலாறு இவ்வளவுதானா? என்று நாம் யாரிடமும் கேட்டதில்லை. படித்து முடித்து ஆண்டுகள் தாண்டிய பின்னும் அந்த வரலாற்றுத் தொடர் தேடல்கள் இல்லை. அது எப்படி இல்லாமல் போனது. உலக வரலாற்று ஆசிரியர்கள் உள்ளங்களில் தோன்றிய, இயற்கையாகவே நமக்கு வரவேண்டிய பெருவியப்பு ஏன் நமக்கு வரவில்லை.
      ஒற்றைக் காரணம், நாம் நம் இலக்கியங்களைப் புறக்கணித்ததே. பள்ளியில் சொல்லித் தரவில்லையே. அப்புறம் எப்படிக் கற்றுக் கொள்வது, தெரிந்துகொள்வது என்று கேள்வி வரலாம். நன்றாகச் சிந்த்தித்துப் பாருங்கள், நாம் தெரிந்து வைத்திருக்கும் நிறையச் செய்திகள், கருத்துக்கள், கருத்தியல்கள் யாவும் நமக்குப் பள்ளியில் கற்றுத்தரப்பட்டவை அல்ல. மதக் கருத்தியல்கள், மாற்றுச் சிந்தனைகள், வாழும் முறைகள் இப்படி எல்லாமே நாமே தெரிந்துகொண்டோம்.
      ஆனால் அங்கு சில சிக்கல்கள் நடந்தேறிவிட்டன. கரிகாலனை அறிந்துகொள்ளும் முன்னே அலக்சாந்தரைத் தெரிந்துகொண்டோம். மதுரையை அறியாமல் பாபிலோனியாவைத் தெரிந்துகொண்டோம். கல்லணையை எட்டிக்கூடப் பார்த்திராமல் பக்கராநங்கலின் நீள அகலம் அறிந்துவிட்டோம். வள்ளுவரை அறியுமுன்னே சாக்ரட்டீசையும், காரல் மார்க்சையும் கரைத்துக் குடித்துவிட்டோம். இப்படி நிறைய….
     1920 ல், (சிந்து அகழ்வாய்வு தொடங்கப்படுவதற்கு முன்னால்) சிந்துப் பகுதியில் வாழ்ந்திருந்த பண்டைய மனிதர்கள் தமிழரே என்றும் அது சிறந்த நகர நாகரிகம் என்றும், மிகச் செறிவான, செழிப்பான அறத்துடன் கூடிய வாழ்வியல் முறை அங்கே இருந்ததென்றும் ஈழத்தில் சென்று உரையாற்றிய மறைமலையடிகளின் உரையை நாம் வரலாறாக எடுத்துக்கொண்டோமா? சிந்து ஆய்வுமுடிவுகள் வெளிவந்த போது மறைமலைஅடிகள் சொன்னச் செய்திகள் மண்ணுக்குள்ளே புதைந்திருந்தது கண்டு ஆய்வாளர்கள் வியப்பெய்தி நின்றார்கள். நாமோ அடிகளையும், அரப்பாவையும் ஒருசேர மறந்து போனோம்.
       சொற்களின் வேர்பிடித்து மொழிகளின் மூலம் தேடிப் பயணித்த தேவநேயப்பாவணரின் மொழிவளர்ச்சிக் கோடு மாந்த இனம் நகர்ந்த திசை யெல்லாம் பயணித்தது. ஆதிச்சநல்லூர்,கொடுமணல்,கீழடி என அடுக்கடுக்காய்ச் செய்திகள் வந்துகொண்டிருக்கும் போது அவற்றை ஆய்வு செய்ய பாவணரைப் படித்து நிற்கிற பிள்ளகள் நம்மிடம் எத்தனை பேர் இருக்கிறார்கள்.
     பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாரும், மு.இராசமணிக்கனாரும் போர்களின் தடமறிந்து ஊர்களின் எல்லைகளையும், தூரத்தையும் வகுத்துச் சொன்னார்கள். ஒவ்வொரு முறையும் நாம் இவற்றை ஒப்பிட்டுப் பார்த்தோமா?
    இப்படி எத்தனையோ பேரறிஞர்கள் நம் வரலாற்றின் தடங்களை அறிந்து நமக்கு உரைத்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் நம் இலக்கியங்களை பெருஞ் சான்றாக வைத்துக்கொண்டு ஆய்ந்து இத்தனைப் பேருண்மைகளை எடுத்துச் சொன்னார்கள்.
    இந்த இலக்கியங்களை வெறும் ஓலைக் குவியலாய்ப் பார்த்ததன் விளைவு, கீழடியை மறைத்துவிடுவார்கள் என்று அச்சப்படுகிறோம். நம் பழம் பெரும் இலக்கியங்களை முதலில் அருங்காட்சியகங்களிலிருந்து வீட்டிற்கு எடுத்து வருவோம். எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் நம் வரலாறு சுமக்கும் எழுத்து வடிவங்கள் என்று குழந்தைகளிடம் சொல்வோம். பெட்டிக்குள் பூட்டிவைத்திருக்கும் திருக்குறளை அடுக்களைக்குள் கொண்டு வருவோம். அது பரிமாறப்பட வேண்டியது பதுக்கப்பட வேண்டியதல்ல என்று நம் தலைமுறைக்குச் சொல்வோம்.
    அரப்பாவை மண்ணிலிருந்து அகழ்ந்தெடுக்குமுன் பழம் பாடல்களிலிருந்தும் இருக்கு வேதத்திலிருந்தும் தான் மறைமலையடிகள் தோண்டியெடுத்தார். மணல்மூடி மறைந்து போன கொற்கை சங்க இலக்கியங்களில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அகழப்பட்டது. நம் முன்னோர் படைத்த பாடல்களில் இருந்தே பத்தாயிரம் ஆண்டுப் பழமை எனக் கருதப்படும் “எயிற்பட்டினச் சுவரும்”, பதினோராயிரத்து எண்ணூறு ஆண்டுகள் பழமை எனக் கருதப்படும் பூம்புகாரின் முழுகிய சுவர்களும் கடல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
     இன்றைக்கு நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் “சாலமோன் ஞானி எருசலேமில் கட்டிய கோயிலின் தொடக்க விழாவிற்கு பொனீசியர்கள் கப்பலில் உவரிக்கு(Ophir)) வந்து அகில், மயிலிறகு, ஆட்டுமயிர், குரங்கு, தந்தம் முதலியவற்றை வாங்கிப்போனார்கள்” என்கிறது பைபிள். உவரி பாண்டியர்களின் துறைமுகம். பைபிளில் சொல்லப்பட்ட Ophir உவரிப் பட்டினம் என்கிறார் கால்டுவெல் (1880). உவரிக்கு 4000 வயது என்றால் கீழடிக்கு எவ்வளவு?
    “ Korkai was from the earliest times the maritime Capital of Pandiyan kings and the greatest Emporium of India for more than four thousand years until the Mohamadan invasion of the 14th century” Manual of Tinnevelly – Mr.Stuart.  கொற்கை 4000 ஆண்டு கடந்தது என்றால் கீழடி எத்தனை ஆண்டு?
     “இங்கே குதிரைகள் வளர்க்கப் படுவதில்லை. குதிரைகள் வாங்குவதில் இந்நாட்டின் செல்வத்தின் பெரும்பாகம் செலவாகிறது. இங்கு ஏராளமான குதிரைகள் விலைக்கு வாங்கப்படுகின்றன. இங்குள்ள நான்கு மன்னர்களில் ஒவ்வொருவரும் 2000 குதிரைகளை வாங்கும் தேவை உடையவர்களாய் இருக்கிறார்கள். – மார்க்கோ போலொ.(1254-1324)
      இறுதியாக, வான்மீகி இராமயணம் பாண்டியனின் தலைநகர் “கவாடபுரம்” என்கிறது. அதன் பிறகு எழுதப்பெற்ற மாபாரதம் பாண்டியன் தலைநகர் “மணவூர்” என்கிறது. கடல்கோளையும், தலைநகர் மாற்றங்களையும் ஏற்கனவே இரண்டும் பதிவு செய்துவிட்டன இனி மாற்றமுடியாது. காலத்தை எப்படி மாற்றினாலும் பாண்டியன் தலைநகரின் காலமும் சேர்ந்தே மாறும்.
     எயிற்பட்டினச் சுவரும், புகாரின் மதிலும், கொற்கையும், காயலும், உவரியும், ஆதிச்சநல்லூரும், பொதிய மலைக் குகையும், பரங்குன்றும், நக்கீரரும், மதுரையும், உறையூரும், கொடுமணலும், மோரல் பாறையும், பேலுக்குறிச்சியும், வட்டக்கல் வீடும் அதன் உட்சுவரின் ஓவியங்களும் நம்மைச் சுற்றிக் காவலாய் நிற்கின்றன.  நாம் மொழியைப் படிப்போம், மூலங்களைப் படிப்போம். அறிந்தவர் அடுத்தவருக்கு உரைப்போம். கேட்டுத் தெளிவோம். வரும் தலைமுறையை வரலாறு அறிந்த தலைமுறையாக மாற்றுவோம். வரலாறு தெளிவோம். அறிவை விரிப்போம். அச்சம் தவிர்ப்போம்.