Wednesday, 17 January 2018

அழகான பெருந்தவறு... அருவி.


எல்லோரும் கொண்டாடி முடித்த பின் இதை எழுதுகிறேன். காரணம் கேட்டால் சொல்லலாம், சொல்ல முடியாமலும் போகலாம் அருவியைப் போல.

தமிழின் ஆகச்சிறந்தத் திரைப்படம் என்று அருவியைக் கொண்டாடுபவர்களைப் பார்க்கையில் ஒருவிதமான அலுப்பே மிஞ்சுகிறது.  சிறந்த படம் என்பது ஒப்புக்கொள்ளக் கூடியதே. ஆகச்சிறந்ததா என்கிறபோது நிறையக் கேள்விகள் வருகின்றன.

 ஒரு படைப்பாளிக்கு அவர் படைப்பின் மீதான வானளாவியத் தன்னுரிமை இருக்கிறது. அதில் எவரும் தலையிட முடியாது. அவர் எந்தக் கருத்தியலை, எந்தக் கதைக்களத்தை, எந்தச் சமூகச்சிக்கலை வேண்டுமானாலும் கையாளலாம். பாத்திரங்களை எப்படி வேண்டுமானாலும் படைத்து உலவ விடலாம்.   ஆனால் பாத்திரங்களின் மீதான தனது உருவகத்தைச் சிதைக்காமல் கதையை நகர்த்துவதும், பாத்திரம் சிதைவதே கதையெனில் அதற்கான சூழலைச் செம்மையாகக் காட்டுவதும் ஒரு சிறந்த படைப்பாளியின் திறன். இந்த நோக்கில் தான் அருவி எனும் அந்தப் படைப்பு மிகப்பெருஞ் சறுக்கலைச் சந்திக்கிறது.
.