Tuesday, 24 July 2018

நெடுங்கடல் நீர்மை.

வானமலையில் பெருமழை. குடகிலிருந்து குணக்கடல்  நோக்கி ஆர்ப்பரித்து நடக்கிறாள் காவிரி. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருந்துகொள்ள அரசு அறிவுறுத்துகிறது. பல்லுயிர் செழிக்க நடக்கும் அவளைப் பார்த்து உள்ளம் மகிழ்கிறது அவள் போகும் பாதையெங்கும் வாழும் மக்கள் கூட்டம். ஆனால், மற்றொரு கூட்டம் "ஐயோ கடலில் வீணாகக் கலக்கிறதே காவிரி நீர்" என்று கத்துகிறது.



"ஐயனே, எல்லாவற்றையும் நீர் சொல்லி வைத்திருப்பதாய் நினைக்கிறோம். இதற்கென்னதான் தீர்வு? ஏதேனும் சொல்வீரோ?" என்று பேராசானைக் கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே "இயற்கை நிகழ்வுக்குத் தீர்வா? இயலைச் சொல்லியிருக்கிறேன், போய்ப் பாருங்கள்" என்றார். பார்த்தேன். அடடா!!

"நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்."

என்று ஒரு குறளை எழுதி வைத்திருக்கிறார்.  அதற்கு உரைகளும் கண்டிருக்கிறார்கள்.
மணக்குடவர் உரை: நிலமேயன்றி நெடியகடலும் தனது தன்மை குறையும், மின்னி மழையானது பெய்யாவிடின்.
தடிந்தென்பதற்கு, கூறுபடுத்து என்று பொருளுரைப்பாரு முளர். இது நீருள் வாழ்வனவும் படுவனவுங் கெடுமென்றது. இவை நான்கினானும் பொருட்கேடு கூறினார், பொருள்கெட இன்பங்கெடு மென்பதனால் இன்பக்கேடு கூறிற்றிலர்.

பரிமேலழகர் உரை: நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் - அளவில்லாத கடலும் தன் இயல்பு குறையும்; எழிலி தான் தடிந்து நல்காது ஆகி விடின் - மேகம் தான் அதனைக் குறைத்து அதன்கண் பெய்யாது விடுமாயின்.

தொல்லுரையாசிரியர்கள் பலரும் மழை பெய்யாவிடில் கடல் தன் தன்மையில் குறையும் என்று சொல்லியிருக்கிறார்கள். மணக்குடவர் "நிலம் மட்டுமல்ல, கடலும்" என்று மிக அழுத்தமாகச் சொல்கிறார். மணக்குடவர் உரையில் இன்னொரு வியப்பும் காத்திருந்தது எனக்கு. அவர் உரைதான் குறளுக்கு முதல் உரை என்றுதான் படித்திருந்தேன். ஆனா, அவரோ "தடிந்தென்பதற்கு, கூறுபடுத்து என்று பொருளுரைப்பாரு முளர்." என்று கூறுவதன் மூலம் அவருக்கு முன்பே குறளுக்கு உரை இருந்தச் செய்தியைச் சொல்கிறார். 

சரி. தண்ணென்றக் காவிரியோடு விண்தொடும் இந்தக் குறள் சுமந்து நாமும் அவள் போக்கில் நடந்து போவோமா?

"நெடுங்கடலும்"  என்று மிகப்பெரும் சொல்லாட்சியோடு தொடங்குகிறது குறள். கடல் என்றாலே பெரிது தான். ஆனால் இயல்பின் பேருண்மை ஒன்றைச் சொல்ல நினைத்த ஆசான் "நெடுங்கடல்" என்கிறார். அதோடு நிற்காமல் "உம்" விகுதியை வேறு சேர்த்துவிடுகிறார். பெரிய கடல்தானே அதிலே கொஞ்சம் குப்பை  போட்டா என்ன ஆகப்போகிறது? என்பன போன்றக் கேள்விகளுக்கு அன்றே விடையிறுத்திருக்கிறார். எவ்வளவு பெரிய கடலாக இருந்தாலும் தன்மை வேறுபடும் வாய்ப்புகள் உண்டென்பது தமிழர்தம் பல்லாயிரமாண்டுகால மரபறிவு.
  
"தன்னீர்மை" அடுத்த சொல் இன்னும் வியப்பளிக்கும். இன்றைய அறிவியல் செய்தியென நாம் நினைக்கும் ஒன்று பற்றிய அன்றைய அறிவின் வெளிப்பாடு இந்தச் சொல். பொதுவாக நீர்மங்களின் அமில, காரத் தன்மையை இன்று PH என்று அளவிடுகிறோம். நல்ல நீரின் PH 7  என எடுத்துக்கொள்ளப்பட்டு மற்றைய நீர்மங்களின் PH அளவுகள் தீர்மானிக்கப் படுகின்றன. அதன்படி கடல் நீரின்  PH மதிப்பு 7.4 முதல் 8.3 வரை இருக்கும். இது அதிகமானால் கடலுக்கு ஆபத்து. அதாவது கடல்வாழ் உயிர்களின் வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகி அழிந்து மடியும். இந்த மாறுபாடுகள் நிகழ்வது கடலில் ஆறுகளால் கொண்டுவந்து சேர்க்கப்படும் உப்பு மற்றும் தனிமங்களால் தான். அதுமட்டுமா இவ்வளவு உப்புச் சுவைக்குக் காரணம்? இல்லை. வேறு இரண்டு காரணங்கள் கடலில் நிகழ்கின்றன. கடலுக்கு அடியில் உள்ள புவி மேலோட்டிலிருக்கும் வெடிப்புகள் வழியாக உள்ளே செல்லும் கடல் நீர் அங்கே சூடாகி அங்குள்ள தனிமகளைச் சேர்த்துக் கொண்டு மறுபடியும் வெந்நீர் ஊற்றுகள் வழியாக மீண்டும் கடலில் சேருகிறது. இது மட்டுமல்ல கடலுக்குள் இருக்கும் எரிமலைகள் வெளியிடும் சூடான பாறைகளின் வேதிப்பொருட்களும் கடலில் கலக்கின்றன. மேலும் காற்றின் வழியாகவும் நிலத்திலிருந்து துகழ்கள் கடலில் சேருகின்றன. இப்படிச் சேரும் உப்புகள் எங்கே செல்கின்றன? கடல் எப்படி சீராக இருக்கிறது?


பல வகை உப்புகள் கடல்வாழ் உயிரிகளால் உறிஞ்சப்படுகின்றன. காட்டாக, பவழ பாலிப்புகள், மெல்லுடலிகள், ஓட்டுடலிகள் ஆகியவை உப்பிலுள்ள கால்சியத்தை உட்கொள்கின்றன; இதை உபயோகித்து தங்கள் ஓடுகளையும் எலும்புக்கூடுகளையும் அவை உருவாக்குகின்றன. இதுபோலவே மற்றைய உயிர்களும் உப்புகளை எடுத்துக் கொள்கின்றன. இப்படியே ஒரு சுழற்சி நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.  ஆறுகள் நன்னீரைக் கொண்டு கடலில் சேர்க்காவிட்டால் உப்புத்தன்மை அதிகமாகிவிடும். இதுபோலவே அமிலத்தன்மையும். நாம் வளர்ச்சி என்ற பெயரில் வெளியிடும் கரியமிலவளி கடலில் அமிலத்தன்மையை அதிகரித்துகொண்டே போகிறது. இது புவிமேலோட்டு நகர்வுகளை வேகப்படுத்தக் கூடும் என்று இன்றைய அறிவியலாளர்கள் எண்ணுகிறார்கள். இந்நிலையில் வள்ளுவர் காலத்தைவிட இப்பொழுது ஆறுகள் கடலில் கலக்கவேண்டியது இருமடங்கு கட்டாயமாகிறது.

அமிலமா, காரமா என்ற ஐயப்படு இல்லை ஆசானுக்கு. அவர் "தன்னீர்மை" என்றே குறிக்கிறார். நீர்மைதன்மை "குன்றும்" என்கிறார். எப்பொழுது"

"தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்." 

எழிலி என்றால் மேகம். தடித்து என்பதற்கு திரளுதல், மின்னல் என இரு பொருட்களையும் சொல்கிறது செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி. எனில் திரண்டெழுந்த மின்னலடிக்கிற மேகம் என்று பொருளாகிறது. "நல்குதல்" எனில் பெருங்கொடை. "தடிந்தெழிலி" யால் தான் கடலில் நீர்கொண்டு சேர்க்கும் பெருங்கொடையாகியப் பெருமழையைத் தரமுடியும். சிறுமேகங்கள் பொழிந்தால் நிலதோடு மழை நின்றுவிடும்.  நிலத்தின் உப்புகளை கடலில் சேர்க்க இயலாது போகும். "தடிந்தெழிலி தான் நல்குவது" வள்ளுவர் சொல்லாளுமைக்கு இன்னொரு சான்று. 

பெருமழை பெய்து ஆறுகள் வழியாக உப்பும் நீரும் கடலில் கலக்காவிடின் கடலில் நீர்மை குன்றிவிடும்.

அடர்த்தியல்ல நீர்மை குறையும் என்கிறார். நீர்மை குறைந்தால் அடர்வு அதிகமாகும். உயிர்கள் வாழ்வு சிக்கலாகும். இது நீரியல் சுழற்சி பற்றி அறிந்திருந்த அறிவு மரபின் தொடர் வெளிப்பாடே. உலகின் உயிர் சுழற்சிக்கு கடல் முக்கிய பங்காற்றுகிறது. கடலுக்கு மழை நீரையும் உப்பையும் கொண்டு சேர்க்கிற பொறுப்பு ஆறுகளுக்கு இருக்கிறது. ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செங்கடல்* வணிகத்தில் சிறந்திருந்த ஒரு மரபின் தொடர்ச்சியில், பல்லுயிர் ஓம்புதல் அறிந்திருந்த அறிவு மரபில் தோன்றிய வள்ளுவர் இதைச் சொல்லியதில் வியப்பொன்றுமில்லையே.

போய்வா மகளே. கடலில் கலந்து , மழையென குடகில் பிறந்து மறுபடி வா. நிலத்திலும்,கடலிலும் அடுத்த தலைமுறை காத்திருக்கிறது உனக்காக.
-------------------------------------------------------------------------------------------

*செங்கடல் - உப்புத் தன்மை அதிகமான ஒரு கடல். இங்கே தமிழர்கள் கடல் வணிகத்தில் பெருமளவு ஈடுபட்டதை பெரிபுளூசு தன் பயணக் குறிப்புகளில் எழுதியிருக்கிறார். வேறுபட்ட கடல் நீர்மைத் தன்மைகளைத் தமிழர்கள் அறிந்து வைத்திருந்தனர்.







Saturday, 21 July 2018

தோன்றாமை நன்று...

வள்ளுவரின் சில சொல்விளையாட்டுகள் சிறு வயதிலிருந்தே நம்மை ஈர்த்துவிடும் வல்லமை கொண்டவை. சில சொற்கூட்டுகள் மேடைகளிலும், எழுத்திலும் வலிமைகூட்டும் தன்மை கொண்டவை. அப்படி வகுப்பறை காலந்தொட்டு நம்மோடு பயணம் செய்யும் குறள் இது.

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
   


பட்டென்று புரிந்துவிடும் தன்மை கொண்டதே இக்குறள். இருந்தாலும் இக்குறளுக்கான உரைகளைப் பார்ப்போம்.

பரிமேலழகர்- தோன்றின் புகழோடு தோன்றுக-மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க; 'அஃது இலார்' தோன்றலின் தோன்றாமை நன்று-அக்குணமில்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று.

Wednesday, 18 July 2018

விலங்குகளின் கடிதம்.

அன்புள்ள (??) மாந்தருக்கு,

ஐந்தறிவு உயிர்கள் வரையும் மடல். 

நீங்கள் ஒவ்வொருமுறை தவறிழைக்கும் போதும் எங்கள் பெயர் அடிபடுகிறது. நிறுத்துங்கள். இனியேனும் எம் பெயரைப் பயன்படுத்தாதீர்கள். அதற்கு நீங்கள் தகுதியானவர்களல்ல.

எங்களுக்கு அறம் இருக்கிறது. அதன்வழியே பல்லாயிரம் ஆண்டுகளாய் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அந்த அறம் பற்றி எங்களுக்கு எப்போதும் ஐயம் ஏற்பட்டதில்லை. நீங்கள் அறத்தை அறிவோடு இணைத்துக் குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களிடையேயும் சிலர் எங்களை விரும்பி எழுத்துகளாகவும், காட்சிகளாகவும் ஆவணப் படுத்தியிருக்கிறார்கள். எங்களில் ஒரு புலி, நூற்றுக்கணக்கான மான்களைக் கொன்று மரப் பொந்துகளிலோ, குகைகளிலோ சேமித்துவைத்திருக்கிற காட்சி ஒன்றையேனும் நீங்கள் கண்டதுண்டா. பெண்ணின் விருப்பின்றிப் புணர்கிற

Tuesday, 17 July 2018

வலி


எல்லா மொழியிலும் கேட்கிறது
 
பெண்ணின் அலறல்.

 
எல்லா நிலத்திலும் சிந்துகிறது

 
அவள் குருதி.

Monday, 16 July 2018

பேராசை


இறந்தகாலத்தில் ஒரு

நன்னாள் தேடி

பிறந்திடல் இயலுமெனில்,

Saturday, 14 July 2018

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தண்டிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை.



இற்றைக்கு மூவாயிரம் நான்காயிரமாண்டுகளுக்கு முன் இந்தத் தமிழ்க்குடி எப்படி வாழ்ந்திருக்கும் என்பதை அறிவதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் இருக்குமா? அன்றி, வெறும் தொல்பொருள் மற்றும் வரலாற்றுத் தேடலாய், அல்லது காட்டுமிராண்டித்தனமான ஒரு முரட்டு மாந்தக்கூட்டம் கரடுமுரடாய் வரம்பற்று உண்டு, புணர்ந்து, வாழ்ந்து,  மடிந்த வெறும் உயிரியல் கதையாய் இருக்குமா?

இல்லையென்கின்றன சங்க இலக்கியங்கள். இன்னும் சரியான கால வரயறைக்குள் கொண்டுவரப்படாத அல்லது கொண்டுவர விரும்பப்படாத அந்தத்  தமிழ் சொற்பேழைகள், உலக மாந்தனுக்கெல்லாம் வழிகாட்டியாய் தமிழ்நிலம் இருந்தச் செய்திகளைச் சுமந்து நிற்கின்றன.

Thursday, 5 July 2018

பிறப்பொக்கும்.

வள்ளுவர் "உயிர்" என்று இருபத்தியிரண்டு இடங்களிலும், "உயிர்க்கு" என்று எட்டு இடங்களிலும் பயன்படுத்தியிருக்கிறார். இவ்விடங்களில் ஒன்றிரண்டு தவிர ஏனையவை மக்களையே குறிக்கின்றன. ஆனால், அவர் மூன்று இடங்களில் மட்டுமே பயன்படுத்தியிருக்கும் "எல்லா உயிர்க்கும்" என்ற சொல்லாடல் முதன்மையாகக் கவனிக்கத் தக்கது. பயன்படுத்தப் பட்டிருக்கும் அந்த மூன்று இடங்களிலும் அந்தச் சொல்லாடல் அஃறிணை உயிர்களையும் சேர்த்தே குறிப்பிடுவதாய் எண்ணுகிறேன். அவாவறுத்தல், இகல் என்னும்

Sunday, 1 July 2018

எல்லா தவறுகளும் எங்கள் மீதா?



 
அடிக்கடி வரும் சிந்தனை தான். ஆனால் குறள் பற்றிப்பேச ஆரம்பித்ததிலிருந்து ஒரு கேள்வியை அடிக்கடி சந்திக்கிறேன். அதனால் இன்று எப்படியும் எழுதிவிட வேண்டுமென்று தீர்மானித்தேன்.
 
எல்லா தலைமுறை மனிதர்களிடமும் இருந்த ஒரு பொதுப் பண்பு தங்கள் தவறுகளை வரும் தலைமுறையின் மீது ஏற்றிவிடுவது. நாமும் அதற்கு விலக்கல்ல போலும்.
 
மலிவான ரசனையும், வரைமுறையற்ற வாழ்க்கையையும் விரும்பும், புதிய முன்னேற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சமுதாயத்துக்கு, தாய்மொழியையே தேவையில்லை என்று உதறித் தள்ளும் சமுதாயத்துக்கு, திருக்குறள் எல்லாம் எதற்கு? அவர்கள் அதையெல்லாம் எடுத்துக்கொள்ளவா போகிறார்கள்? தொலைபேசிகளில் தொலைந்துகொண்டிருக்கும் அவர்கள், திரையிசையில் மூழ்கிக் கிடக்கும் அவர்கள், உழைத்து சேர்த்த பணத்தை பகட்டு உணவுவிடுதிகளிலும் ஆடம்பரங்களிலும் செலவிடும் அவர்கள் உங்களிடம் நின்று பேசவா போகிறார்கள்? என்பன போன்ற கேள்விகளை நான் எதிர்கொள்கிறேன்.
 
எப்படித் தொடங்குவது?