இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கழுவப்படாத பானை - 1 ன் தொடர்ச்சி:
பிட்டங்கொற்றனின் குதிரைமலையில் புன்கம் உண்டுவிட்டு காலாற நடந்து தென்குமரியின் அருகே தாடகைமலை அடிவாரத்தை அடைவதற்குள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டன. பண்பாட்டின் பெரும்பயணம் அது. வேர்கள் எவை என முழுவதுமாக அறிந்துவிட முடியவில்லை எனினும், விழுதுகளை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. வேர்கள் ஏதேனும் மலைமுகட்டில் இருக்கலாமென்றே தோன்றுகிறது.
"கல் தோன்றி
மண் தோன்றா காலத்தே
வாளொடு
முன்தோன்றி மூத்த குடி" யல்லவா.
மருதம் தோன்றா காலத்தே குறிஞ்சியிலும், முல்லையிலும் வாளொடு, இரும்பொடு அல்லது பிட்டங்கொற்றனின் "வடிநவில்" அம்பொடு வாழ்ந்த பழங்குடி அல்லவா. வானமலையின் முகடுகளில் எங்கேனும் புன்கத்தின் வேர்கள் இருக்கலாம். அல்லது தேவனேயப் பாவாணரும், கா.அப்பாத்துரையாரும் சொன்னது போல தென்கடலுக்குள் மூழ்கியிருக்கிற "குமரிக் கோடு" மலையின் முகடொன்றில் இருக்கலாம். ஆதிச்சநல்லூர் அரிசியே பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள். எனவே வேர்களைத் தேடுவது பெரிய வேலையே. ஆனால் விழுதுகளைக் கண்டறிவது நம்மால் இயலுகிற ஒன்றே. விழுதுகளைப் பிடித்து மேலேறினால் அவை கிளைகளை அடையும். கிளைகளில் தொடர்ந்தால், எல்லாக் கிளையும் ஒரு மரத்தினது என்பதறிவோம். எனவே விழுதுகளைத் தேடினேன்.