Friday, 21 September 2018

இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கழுவப்படாத பானை - 2



இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கழுவப்படாத பானை - 1 ன் தொடர்ச்சி:

பிட்டங்கொற்றனின் குதிரைமலையில் புன்கம் உண்டுவிட்டு காலாற நடந்து தென்குமரியின் அருகே தாடகைமலை அடிவாரத்தை அடைவதற்குள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டன. பண்பாட்டின் பெரும்பயணம் அது. வேர்கள் எவை என முழுவதுமாக அறிந்துவிட முடியவில்லை எனினும், விழுதுகளை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. வேர்கள் ஏதேனும் மலைமுகட்டில் இருக்கலாமென்றே தோன்றுகிறது.

"கல் தோன்றி
மண் தோன்றா காலத்தே
வாளொடு
முன்தோன்றி மூத்த குடி" யல்லவா. 

மருதம் தோன்றா காலத்தே குறிஞ்சியிலும், முல்லையிலும் வாளொடு, இரும்பொடு அல்லது பிட்டங்கொற்றனின் "வடிநவில்" அம்பொடு வாழ்ந்த பழங்குடி அல்லவா. வானமலையின் முகடுகளில் எங்கேனும் புன்கத்தின் வேர்கள் இருக்கலாம். அல்லது தேவனேயப் பாவாணரும், கா.அப்பாத்துரையாரும் சொன்னது போல தென்கடலுக்குள் மூழ்கியிருக்கிற "குமரிக் கோடு" மலையின் முகடொன்றில் இருக்கலாம். ஆதிச்சநல்லூர் அரிசியே பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள். எனவே வேர்களைத் தேடுவது பெரிய வேலையே. ஆனால் விழுதுகளைக் கண்டறிவது நம்மால் இயலுகிற ஒன்றே. விழுதுகளைப் பிடித்து மேலேறினால் அவை கிளைகளை அடையும். கிளைகளில் தொடர்ந்தால், எல்லாக் கிளையும் ஒரு மரத்தினது என்பதறிவோம். எனவே விழுதுகளைத் தேடினேன்.


நான் தொழில்முறை ஆய்வாளன் இல்லையெனினும் இந்த நோக்கில் நண்பர்களிடமும், உறவுகளிடமும் கேட்டேன். முகநூல் வழியாகவும் வேண்டுகோள் விடுத்தேன். கிடைத்தவை "அறிவும்", "வியப்பும்". அவற்றை அப்படியே தருகிறேன்.  தகவல் சொன்ன அனைவருக்கும் நன்றி.

புலவர் வல்வில் ஓரி : ஐயா, வணக்கம்! எனது ஊர் ஆயக்காரன்புலம். தற்போதய நாகப்பட்டினம் மாவட்டம் தென் பகுதியில் வேதாரண்யம் ஒன்றியத்தில் கடற்கரை ஊராகும். ஒன்றியத்தின் பெரும்பகுதியில் காவிரி பாசனம் கிடையாது. ஏனெனில் இது மேடான பகுதி. வடகிழக்கு பருவமழையின்போதுஆவணி புரட்டாசி மாதங்களில் முற்காலத்தில் பள்ளமாக செய்கால் செய்யப்பட்ட வயல்களில் நேரடி விதைப்பு செய்து பருவமழையை எதிர்பார்ப்பர். நெல் விளைந்த காலத்தில் பொங்கலுக்குப் பிறகு "இன்று 9 மணிக்குமேல் 10 மணிக்குள் புதிர் எடுக்க நாள் உத்தமம்" என அந்த ஊர் ஐயர் அல்லது குருக்கள் வீடுவீடாக சென்று ஒரு தாக்கீது கொடுத்துச் செல்வார். அவருக்கு தட்சிணை உண்டு. குறிப்பிட்ட நாளில் வயலுக்குச்சென்று பாதி அல்லது முக்கால்வாசி முற்றிய கதிர்களை சேகரித்து வந்து அரிசி எடுத்து, பழைய பச்சரிசியுடன் சேர்த்து சர்க்கரைப்பொங்கல் செய்து வீட்டிலேயே குலதெய்வங்களுக்கு படையல் செய்வார்கள்! இவ்வழக்கம் 1975, 1980 வரையில் பெரும்பாலும் இருந்தது. தற்போது குறைவாக நடக்கிறது.

ராஜபாண்டியன்: நெல்லை- பாலாமடை.: நான் தேவேந்திர குலத்தில் வீரவளநாட்டார் பிரிவை சேர்ந்தவன். எங்கள் குடும்பத்தில் அவ்வழக்கம் உண்டு. முதலாவது தேவேந்திரனுக்கு படையல் இட்டு குடும்பத்தில் மூத்தவனுக்கு குடும்பர் பட்டம் கட்டுவார்கள். படையலில் முக்கனிகள் இடம் பெற வேண்டும். நெல் , மஞ்சள் , வாழை , பனை அவசியம் இருத்தல் வேண்டும். தலைவாழை இலையில் படையலிட்டு ஒர் குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் மட்டும் அமர்ந்து சாப்பிடுவோம். ஆனால் தற்காலத்தில் அப்பழக்கம் மறைந்து வருகிறது.

ஈழவன் இநேசன்: நான் இலங்கை .யாழ்பாணத்தின் தெற்கிலுள்ள ஒரு சிறிய கிராமம்.எனக்கு நினைவு தெரிந்து ஒரு 10 ஆண்டுகள்தான் அங்கு வாழ்ந்தேன். அந்தக்காலத்தில், நெற்கதிர்கள் முற்றி எந்த நேரமும் அறுவடை செய்யலாம் என்ற நிலையை அடையும் போது நல்ல நாள்பார்த்து ஒரு நாள் எனது தந்தையார் ஒரு பிடி அளவு நெல்லை அறுத்து வந்து வீட்டிலுள்ள சாமிகள் வைத்திருக்கும் மாடத்தில் பூசைப்பொருட்களுடன் வைத்துவிடுவார். இதனை "புதிர்"எடுத்தல் என்போம்.அதன்பின் எந்த நாளும் பாராமல் நாம் அறுவடையை ஆரம்பிக்கலாம் .அறுத்து எடுத்துவந்த நெல்லை மீண்டும் ஒருநாள் எடுத்து உரலில் இட்டு உமி நீக்கி புதுச்சோறு சமைத்துண்போம்.உறவுகளுடன் சேர்ந்து.

ரமேஷ்: நெல்லை நன்னகரத்தை சார்ந்த பள்ளர்குலத்தவரான சுடலைமாடன் குடும்பத்தார் ஆண்டுதோறும் தென்காசி கோயிலுக்கு நாள்கதிர் கொண்டு செல்லும் வழமை இன்றுவரை நடப்பிலிருந்து வருகிறது.

கீர்த்தீசு கூடலூர்: கூடலூரின் பணியர் இன பழங்குடிமக்கள் "பூ புத்தரி" அறுவடைத் திருவிழா கொண்டாடுகிறார்கள். வயலில் குலச்சாமிக்கு விளக்கேற்றி, பத்து நாட்கள் நோன்பிருந்த இளைஞர்கள் கதிர் அறுத்துக் கோயிலுக்கு எடுத்துச் செல்கிறார்கள். நம்பாலக்கொட்டை "வேட்டைக் கொருமகன்" கோயிலில் படையலாக வைத்து வழிபட்டு பின் வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள். பின் வயல், வீடு, நெல் உலர்த்தும் களம் ஆகிய இடங்களில் கதிர் கட்டுகிறார்கள். இதில் முள்ளுக் குரும்பர், ஊராளிக் குரும்பர் இன மக்களும் கலந்து கொள்கிறார்கள்.

முத்துக்குமாரசாமி: சமயபுரம் பகுதியில் முதல் கதிர் அறுவடையின் ஒரு பகுதியை பள்ளத்தம்மன் கோயிலுக்குக் கொடுத்துவிடுவார்கள். 

பொன்னண்ணா ஜோயப்பா: குடகில் ஆண்களும், பெண்களும் இணைந்து "பட்டேதாரா" வின் (குடும்பத் தலைவர்) தலைமையில் வயலுக்குச் சென்று கதிரறுத்து மாவிலையால் கட்டி "கத்" (கட்டு) செய்கிறார்கள். அதை "அயின் மனே" (பரம்பரை வீடு) க்கு எடுத்துச் சென்று "பொலி பொலியே பா பா" என்று ஓங்கிக் குரலெழுப்புகிறார்கள். சிறுவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். அன்று மதிய உணவு சிறப்பானது. பன்றி இறைச்சி, கொழுக்கட்டை, அரிசிச்சேவை, பழமும் சருக்கரையும் கலவை, மீன் கறி முதலியவை முகாமையானது. கொடவா, அம்மா கொடவா, கௌடா, கன்னடிகா, துளுவா என எல்லா இனத்தவரும் குடகில் "புத்தரி" கொண்டாடுகிறார்கள்.குடகின் நாடாளுமன்ற உறுப்பினர் இதற்கு வாழ்த்து தெரிவிக்கிறார்.

அணுராதா நாராயணசாமி, மலேசியா: நாகப்பட்டினம், புதுச்சேரி பக்கம் எடுக்கப்பட்ட "புத்தரிசி" படையல் தொடர்பான ஒளிப்படம்.
புத்தரிசி - நாகப்பட்டினம், புதுச்சேரி படம்: அணுராதா நாராயணசாமி

நெல்லை, குமரி மாவட்டக் கோயில்கள் பெரும்பாலானவற்றிலும், கேரளக் கோயில்களிலும் "நிறை நாள்" நடைபெறுகிறது. இலங்கையில் அரசே இந்த விழாவைக் கொண்டாடுகிறது.

தஞ்சை, திருச்சி, மதுரை, கோவை பகுதிகளின் செய்திகள் அதிகமாய்க் கிடைக்கப்பெறவில்லை. அதனால் குறையொன்றுமில்லை. அத்தனைக்கு  இது பேராய்வும் இல்லை. ஒரு தொடக்கமே. சரி, கிடைத்தச் செய்திகளின் ஊடே ஒரு நடை வருவோம்.

நாஞ்சில் நாட்டிலும், நெல்லையின் சில பகுதிகளிலும், ஈழத்திலும் நாள்கதிரும், புத்தரிசியும் வேறு வேறு நாட்களில் நடக்கின்றன. நாகை, கூடலூர், குடகு இங்கெல்லாம் இரண்டும் ஒரே நாளில் நடக்கின்றன.

குடகில் குடும்பத் தலைவரோடு (பட்டேதார) ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் வயலுக்குச் செல்வர். கூடலூரில் நோன்பிருந்த இளைஞர்களோடு மற்ற அனைவரும் வயலுக்குச் செல்கிறார்கள். நாஞ்சில் நாட்டில் குடும்பத்தலைவரோடு ஆண்களும், குழந்தைகளும் வயலுக்குச் செல்கிறார்கள். நாகை, நெல்லை, ஈழம் போன்றவிடங்களில் குடும்பத் தலைவர் மட்டுமே வயலுக்குச் செல்கிறார்.

குடகு, கூடலூர், நாஞ்சில்நாடு பகுதிகளில் களம், நெல்சேமிக்கும் இடம், குலச்சாமி கோயில் மற்றும் வீட்டிலும் கதிர்காப்பு கட்டுகிறார்கள். மற்றவிடங்களில் வீட்டில் மட்டுமே.

நாகையிலும், ஈழத்திலும் "புதிர் எடுத்தல்" எனும் பெயரிலும் நெல்லை, குமரி பகுதிகளில் "நாள் கதிர்" எனவும் முதல் அறுவடை நாள் குறிக்கப் பெறுகிறது.

குடகு, கூடலூர், நாகைப் பகுதிகளில் ஊருக்குப் பறையறைந்தோ, வீட்டுக்கு வீடு சென்று சொல்லியோ நாள் அறிவிக்கும் முறை இருக்கிறது. நாஞ்சில்நாடு கேரளத்துடன் இணைந்திருந்தக் காலம்வரையில் விதைப்புக்கான நாளறிவித்தல் முரசறைந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. கதிர் அறுக்கும் நாள் பற்றிய முரசறைதல் குறித்து செய்தியொன்றும் கிடைக்கவில்லை.

நெல்லை பாலாமடைப் பகுதியில் "குடும்பர்" என்றும், குடகில் "பட்டேதாரெ" என்றும் குடும்பத்தலைவர் அழைக்கப்படுகிறார். திருச்சிராப்பள்ளி பகுதியில் இந்த "பட்டய தாரர்" என்ற சொல் வழக்கத்திலிருக்கிறது. "ஊர்க்குடும்பு" என்ற சொல் உத்திரமேரூர் கல்வெட்டில் ஊர்ப்பிரிவைக் குறிக்கிறது.

பிட்டங்கொற்றனின் தினை புன்கமும், நாகையின் புதுச்சோறும், நாஞ்சிலின் புத்தரிசியும் ஏறத்தாழ ஒரே கால அளவில், கார்காலத்தில் நடக்கின்றன. கூடலூர் குடகு பகுதிகளில் கூதிர்காலத்தில் நடக்கின்றன. குடகில் மட்டும் இது ஒரு சடங்காக மாற்றமடைந்திருக்கிறது.

தலைவாழை இலையும், புன்கம் எனும் பொங்கலும் எல்லாவிடத்தும் இருக்கிறது. புத்தரி, புத்தரிசி, புதுச்சோறு என பெயரும் ஒன்றாகவே இருக்கிறது.

வேறுபாடுகளும், ஒற்றுமைகளும் பண்பாட்டு நீட்சியில் புதியவையல்ல. ஆனால், சில ஒற்றுமைகள் வியப்பளிக்கின்றன. 

நாஞ்சில் நாட்டில் ஒரே சமூகத்தின் சில குடும்பங்களில் புத்தரிசி அன்று புலால் சமைப்பதில்லை. எங்கள் வீட்டிலும் இல்லை. ஆனால் எங்கள் வீட்டிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அத்தை வீட்டில் மீன், இறைச்சி என சமைப்பார்கள். இது குடகை ஒத்திருக்கும். அங்கும் மீன் மற்றும் புலால் சமைக்கப்படுகிறது. குடகின் புத்தரியின் முகாமையான உணவு அவலும், சருக்கரையும், மலைப்பழமும், தேங்காயும் சேர்த்து செய்யப்பட்ட "தம்புட்டு". எங்கள் ஊரிலும் "சருக்கரையும், தேங்காயும், அவலும்" சேர்த்து செய்யப்படும் இனிப்பு "நாள் கதிர்" அன்று கோயிலில் வழங்கப்படும். பக்கத்தில் கடுக்கரை போன்ற ஊர்களில் காலை உணவே "சருக்கரை அவல்" தான்.

வானமலையின் கடைக்கோடியில் "தாடகை மலை" யின் அருகிலும் அங்கிருந்து ஏறத்தாழ எழுநூறு கி.மீ க்கு அப்பால் வடக்கில் இருக்கிற குதிரைமலை அருகிலும் ஒரே உணவு, அதுவும் மிக நீண்ட காலமாக என்பது பெருவியப்பே. குதிரைமலையிலிருந்து அறுநூறு கி.மீ. தென்கிழக்கில் இருக்கிற நாகப்பட்டினத்திலும் ஒரே மாதிரியாக ஊருக்கு அறிவித்து "கதிரறுத்தல் மற்றும் புத்தரியை" ஒரே நாளில் கொண்டாடுவதும் வியப்பே. ஏனெனில் இது பண்டிகையல்ல.

தானாக விளைந்த காய், கனி மற்றும் வேட்டையாடிய விலங்குகள் என உண்டு திரிந்த மாந்தன், விதைத்து, விளைத்து உண்ட போது உழைப்பின் பலனை மகிழ்வோடு தொடங்கியிருக்கலாம். மருத நிலத்தில் உழவு பற்றிய அறிவு இருந்த காலத்தில் தான் "கதப்பிள்ளைச் சாத்தனார்" பிட்டங்கொற்றனைச் சந்திக்கிறார். அதனால் தான்

"கடுங்கட் கேழ லுழுத பூழி 
நன்னாள் வருபத நோக்கிக் குறவர் 
உழாஅது வித்திய "  
 
என்றெல்லாம் பாடுகிறார். உழுது விதைப்பதை அறிந்தவரே உழாது விதைத்த என்று பாட இயலும். எப்படிப் பார்த்தாலும் ஒரு புது விளைச்சலின் புதுவரவை மூத்த தமிழ்க்குடி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது. இதை "வையக வரைப்பிற் றமிழகங் கேட்ப" என்று குதிரைமலையில் பாடியதிலிருந்து அன்றைய தமிழக எல்லையையும் அறிய முடிகிறது.

மொழி, அரசியல் மாற்றங்கள் காலப்போக்கில் எல்லைகளை மாற்றி இருக்கின்றன. குழுக்களுக்குப் பெயரிட்டிருக்கின்றன. ஆனால், பண்பாட்டுக் கூறுகள் மட்டும் "இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கழுவப்படாத பானை"யாக எல்லோர் வீட்டுப் பரண்களிலும் கிடக்கிறது.

ஏதோ ஒரு விழுதிலிருந்து.....                       
என்றென்றும் அன்புடன்,
சிராப்பள்ளி மாதேவன்.
21/09/2018 
-------------------------------------------------------------------
உங்களிடம் இதுபற்றிய ஏதேனும் செய்தி இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள். நன்றி.

-------------------------------------------------------------------
உதவிய நூற்கள்.
1. சேர மன்னர் வரலாறு, ஔவை. சு.துரைசாமி பிள்ளை
2. தொல்குடி வேளிர் வேந்தர், ர.பூங்குன்றன்.
3. பண்பாட்டு அசைவுகள், தொ.பரமசிவன்.
4. மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள், ம.இராசேந்திரன்.
 மற்றும் 
 தமிழ் இணையக் கல்விக்கழகம்   

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்