எந்தவித ஆர்ப்பாட்டங்களும் முன்னறிவிப்பும் இன்றி, நாம் நினைத்துப் பார்த்திராத இடத்தில் தொடங்குகிறது படம்.(மிகக் கண்டிப்பாக படம் தொடங்கும் முன்பே அரங்கிற்குள் சென்று விடுங்கள்). அப்பாவின் இழப்பின் போது மகனின் வேதனையை நேரில் ஒன்றிரண்டுமுறை கண்டிருக்கிறேன். திரைப்படத்தில் இதுவே எனக்கு முதன்முறை. இயக்குனரின் உழைப்பு இங்கிருந்து தொடங்குகிறது. கோலப்பனின் இந்த மன உணர்வை உள்வாங்கிக் கொண்டு படம் பார்க்கவேண்டும். அதைத் தவற விட்டுவிடாதீர்கள்.
அப்பாவின் இறப்பு, ஒருவருக்கு இழப்பு தொடர்பான வேதனை தரலாம் அல்லது அவருடைய கடன் அல்லது பணம் தொடர்பான பிரச்சனைகளைத் தரலாம் அல்லது சொத்து தொடர்பான பிரச்சனைகளைத் தரலாம். ஆனால், கோலப்பனுக்கு அப்பாவை நல்லபடியாக புதைக்க வேண்டுமே என்ற கவலையுடன் கூடிய வேதனையைத் தருகிறது.
எனக்குத் தெரிந்தவரை இப்படியொரு கதைக்களம் தமிழ் திரைப்படத்திற்கு புதிது. ஊடகங்களே ஓரிரு நாட்களில் மறந்துவிடுகிற செய்தியைக் களமாய்த் தெரிவுசெய்த இயக்குனருக்குப் பாராட்டுகள். அதற்குள்ளே ஒரு அருமையான திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. "பஞ்ச் டயலாக்" இல்லை, பாடல் இல்லை, சண்டைக்காட்சி இல்லை, பகட்டு இல்லை, வணிகத் திரைப்படங்களின் போலிகள் இல்லை, ஹெலி கேமில் படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் இல்லை, அரிவாள்கள் இல்லை, குருதி சிந்தவில்லை. இப்படி காலகாலமாக தமிழ் திரைப்படங்களை பீடித்திருக்கும் "சினிமாத்தனம்" எதுவுமின்றி நருகிறது "மனுசங்கடா". ஆனால், நம்மை ஒரு இறுக்கத்துக்குள் இயல்பாகவே கடத்திவிடுகிறது. படம் நகரும் ஒவ்வொரு நொடியும் அரசியலின் இருள் நிறைந்த பக்கங்களை, சமூகத்தின் இயலாமையை, இயல்பை மீறிய காத்திருப்புகளை நம்முள் பதியம் போட்டு விடுகிறது. வணிகச் சேற்றுக்குள் சிக்காமல் படமெடுக்கத் துணிந்த இயக்குனர் அம்சன் குமார் பாராட்டப்பட வேண்டியவர். அதற்காக முதல் காட்சியிலிருந்து கடைசி நொடி வரை கடுமையாக உழைத்திருக்கிறார் அவர்.
திரைப்படம் ஒரு அருமையான மொழி. ஆனால் அதைப் பேசுவது தான் கடினம் என நினைக்கிறேன். நடந்து முடிந்த ஒரு செய்தியை படமாக்குதல் அத்தனை எளிதல்ல. வெறும் செய்திப்படமாக, ஆவணமாகப் போய்விடாமல் அதைப் படைப்பாக செய்துவிடுகிற இயக்குனரின் உழைப்புக்கு தோள் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.எஸ். தரன். படம் பிடிக்கப்பட்டக் காட்சிகளில் கடுமையான உழைப்பு தெரிகிறது . தன் கையில் தூக்கிச் சுமந்த காமிராவில் படத்தின் முழு இறுக்கத்தையும் சுமக்கிறார், எந்தப் பகட்டும் இன்றி. அது கடினமானதும் கூட. கதை சொல்லும் உத்திகளுக்குள் சிக்கிக் கொள்ளாத ஒரு நிகழ்வை, அழகியலாய் மாற்றிவிட முடியாத அவலத்தை காட்சிக் கோணங்களுக்குள் படம் பிடிப்பதில் வெற்றி பெறுகிறார் அவர்.
நடிகர்களும் முடிந்தவரை இயல்பாகவே இருக்கிறார்கள். சிற்றூர்களில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு கோலப்பனின் அம்மா தனியாகத் தெரிய மாட்டார்கள். மிகுதியான ஊர்களின் இயல்பு இதுதான். ஆனால், நகர வாழ்க்கையில் இப்படி ஒரு அம்மா வியப்பைத் தரலாம் அல்லது வேறுபட்டுத் தெரியலாம். கோலப்பனும், நண்பர்களும் கூட அப்படியே. தன் அம்மாவை "அழுகிடும் அதனால உடனே தூக்கிட்டுப் போகணும். இந்தமுறை
இப்படி செய்திருவோம்" என்று சொல்லி தூக்கிச் சென்றதை நினைவுகூறும் நண்பனின் உணர்ச்சி, பிரச்சனையின் கால நீட்சியையும், வாழ்க்கை முழுவதற்கும் அழியாத வடுக்களின் நினைவையும் திரையில் எளிதாக வரைந்து விடுகிறது.
அவர் அப்படி நடித்திருக்கலாம். இவர் இப்படி நடித்திருக்கலாம். என்று சொல்லிப் போகலாம் தான். ஆனால், இப்படி மனிதர்கள் இருக்க மாட்டார்கள் என்ற நம்முடைய முன் முடிவுகளே அதற்குக் காரணமாகிவிடும்.
சிறு சிறு பிழைகளை விடுத்து, ஒன்றரை மணிநேரமே ஓடும் "மனுசங்கடா" திரைப்படம் ஒரு சமகால வரலாற்றுப் பதிவாக ஒரு படைப்பாளியின் கடமையையும், நேர்மையையும் பறைசாற்றி நிற்கிறது. காலங்கள் தாண்டி, இப்படி குருதியும் சதையுமாய் மனிதர்கள் நம்மிடையே வாழ்ந்தார்களா? என்ற கேள்வியை வரும் தலை முறைக்கு விட்டுச் செல்லும் இயல்போடு இருக்கிறது. பொய் உருக்களை உடைத்து, தெளிந்த ஒரு படைப்பாய் நிற்கிறது. ஏனைய தமிழ்த் திரைப்படைப்பாளிகளும் வேர்களை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்தை உணர்த்துகிறது.
கடைசி நொடியில் கோலப்பனின் அந்த அலறல் நம் இரவுகளில், ஏதுமற்ற கருமைக்குள், என்றேனும் ஒருநாள் கேட்கும். நம் உறக்கம் தொலையும். அந்த நாளுக்காகத்தான் கோலப்பன் காத்திருக்கிறான் நம்பிக்கையோடு, இன்னும்.
என்றென்றும் அன்புடன்,
சிராப்பள்ளி மாதேவன்.
13/10/2018.
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்