உள்ளங்கையில் பெய்த மழை
---------------------------------------------------------
"எனக்கென ஒரு வானம்" என்ற என்னுடைய முதல் நூல் பற்றி நான் இப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் முன்பே எழுத ஆரம்பித்து, நூலாக்கி விட வேண்டும் என்ற கனவுகளோடு, கல்லூரியின் திடலில் நின்று கொண்டிருந்த மரங்களோடு உரையாடிக் கொண்டிருந்தவன் தான் நானும்.
ஒரு கட்டத்தில் எழுதுவது நின்று போனது. காலமும், இடமும் மாறிப் போயின. நாஞ்சில் மண்ணின் வளமும், குமரித் தமிழும், தாடிக்குடி கொடுத்த இளவயது நினைவுகளும் காவிரிக்கரையில் உயிர் பெற்று எழ, மறுபடியும் எழுத்துக்களின் ஊடே நடமாட ஆரம்பித்தேன். இணையமும் முக நூலும் எழுதும் தளங்களாாயின.
2018 நவம்பர் 27ம் நாள் எனது முகநூல் பக்கத்தில் " உங்கள் கவிதைகளை நூல் வடிவில் காண ஆசை. உதவி செய்யத் தயார். தொடர்பு கொள்ளுங்கள்" என்ற செய்தி ஒளிர்ந்தது. நாகர்கோயில் தெ.தி.இந்துக்கல்லூரியின் தலைவர் உயர்திரு பெ.ஆறுமுகம் பிள்ளை அவர்கள் தான் அதைப் பதிவிட்டிருந்தார். மகிழ்ச்சியோடும், நன்றியுணர்வோடும் தொடர்பு கொண்டேன். நூல் தொடர்பான அனைத்தையும் கொடுத்தேன். ஒரு வார காலத்திற்குள் 1000 படிகளை, அச்சகத்தில் சொல்லி அச்சிட்டுக் கொடுத்துவிட்டார். அன்புக்குரிய திரு.பெ.ஆறுமுகம் பிள்ளை அவர்களுக்கு உளமார்ந்த நன்றி.
வெளியீடு என்று எதுவும் செய்ய வேண்டுமென்ற எண்ணமின்றி சென்னை திரும்ப இருந்த என்னை, தாழக்குடியின் நண்பர்கள், என்னிலும் இளையோர் சிலர் நூல் வெளியீட்டு விழா நடத்த வேண்டும், நாங்களே நடத்துகிறோம் எனக் கூறி விழா தொடர்பான வேலைகளைத் தொடங்கினார்கள்.
ஒவ்வொன்றாய் நிறைவேற இதோ வருகிற 17-01-2019 வியாழக்கிழமை அன்று "எனக்கென ஒரு வானம்" நூலின் வெளியீட்டு விழா இனிதே நடைபெற இருக்கிறது.
திரு ச.ஆறுமுகம் (வேலூர்) அவர்கள் சொன்னது போல "எனக்கென ஒரு வானம்" எல்லோருக்குமான வானமாகிப் போனதில் எனக்கு பெருமகிழ்ச்சி.
என் கவிதைகளைப் படித்தவர்கள், கருத்துக் கூறியவர்கள், ஊக்குவித்தவர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிிறேன்.
தாழக்குடியில் நடைபெற இருக்கும் வெளியீட்டு விழாவிற்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். அனைவரும் வந்திருந்து விழாவை சிறப்பிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
சிராப்பள்ளி மாதேவன்.
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்