படம் தொடங்கும் இருளுக்குள், வானமலைத் தொடரின் கொடைமலைக் குறிஞ்சிக் காடு ஒன்றின் மஞ்சு கவிந்திருக்கும் ஏரி நீர்ப்பரப்பின் மேலே தொடங்கி நம் உள்ளத்தின் அடியாழம் நோக்கிப் பாய்கிறது ஒரு குரல். "ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் நீங்கள்".
உண்மையிலேயே நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்தானா?
இயற்கையை எந்த மறுதலிப்புமின்றி ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொண்டால் அது உண்மைதான் என்பது படம் முடியும் போது புரிகிறது. ஆனால், நம்மை நோக்கிய கேள்விகள் ஏதுமின்றியே படம் தன்போக்கில் நகர்கிறது. பேரன்பின் முழுமைத்தன்மை அளவுகோலற்றது. "வீட்டுக்கு வந்துட்டியா" என கைப்பேசியில் ஒலிக்கும் அமுதவனின் மனைவியின் குரல், பதின்மூன்று ஆண்டுகாலம் பாதுகாத்து; கற்றுக்கொடுத்த ஒரு உள்ளத்தின் கடைசி உறுதிக் குரல், ஒப்படைத்துவிட்ட கடமை முடிந்த நிலையில் துண்டிக்கப்படுகிறது.