பொதுப்புத்தியில் ஊறிப்போன சில செய்திகள், நாமாகவே கற்பித்துக் கொண்ட சில புலனங்கள், ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் போது நம் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. அப்படி, பொதுப்புத்தியால் அதிகமாகப் பார்க்கப் படாமல் போன ஒரு திரைப்படத்தை ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தேன். "ஒரு நாள் கூத்து". (2016)
வேறு வேறு வாழ்க்கைத் தளங்களில் இருக்கும் மூன்று பெண்களின் திருமணம் குறித்த நிகழ்வுகளைப் படம் பிடித்திருக்கிறார் புதிய இயக்குநர் நெல்சன். இயல்பில் நடக்கும் நிகழ்வுகளின் கோர்வையாகவே நகருகிறது படம். நீண்ட கால சினிமா; பொது இரசனையில் ஏற்றி வைத்திருக்கிற காட்சி அமைப்புகளின் கற்பனையோடு படம் பார்ப்பவர்களுக்கு, இந்தப் படம் ஒரு புதிய அனுபவமாகவே இருக்கும்.
நீண்ட காலமாகவே, சென்னைக்கு வெளியே தொலைவில் இருக்கும் ஒருவருக்குச் சென்னை குறித்தான அறிமுகம் என்பது திரைப்படங்களே. அந்த நோக்கில் அடிப்படை மனம் சில கூறுகளை எழுதி வைத்திருக்கிறது.
1. மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் எல்லோரும் பெரிதாக எதற்கும் கவலைப்படுவதில்லை. ஊர் பக்கத்துப் பெண்கள் அளவுக்கு காதலுக்கோ, கல்யாணத்திற்கோ பெரிதாய் மெனக்கெடுவதில்லை. குடும்பம் உறவுகள் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அப்படி இருந்தால் அந்தப்பெண் வெளியூரிலிருந்து சென்னைக்கு வேலைக்கு வந்தவராய் இருக்க வேண்டும்.
2. அழகாக இருக்கும் பெண்களுக்கு எளிதாகத் திருமணம் நடந்துவிடும், பெரிய தடை ஏதும் இருப்பதில்லை.
3. சென்னையில் இளைஞர்கள் எல்லோரும் அவரவர் இருக்கும் நிலைகளுக்கு ஏற்ப எல்லாவற்றையும் நுகர்ந்து மகிழ்ச்சியின் உச்சத்தில் வாழ்கிறார்கள்.
4. பெண் நட்பு, காதல், காமத் தணிவுகள், உடலுறவு எல்லாமே சென்னையில் மிக எளிதாகக் கிடைக்கிறது.
5. சென்னை போன்ற பெருநகரங்களில் பெண்களுக்கான விடுதலையும் தனித்தியங்கும் வசதியும் முழுமையாக இருக்கிறது.
இதுபோன்ற கற்பனையான முன் முடிவுகளே இந்தப் படத்தைப் பரவலாக மாற்றாமல் போயிருக்கும் என்று எண்ணுகிறேன். மிகச் சிறந்த காட்சியமைப்புகள் படமெங்கும் நிறைந்து கிடக்கின்றன. சொல்லப்போனால் தமிழ்த்திரை இதுவரை அறிமுகம் செய்திராத எதார்த்தக் காட்சிகளும் இதில் அடக்கம்.
ஒரு படைப்பாளிக்கு தனது கதையின் நிகழ்வுகளை எப்படி வேண்டுமானாலும் அமைத்துக்கொள்ள முழு உரிமை இருக்கிறது. அதற்குள் நுழைவது திறனாய்வின் பகுதியல்ல. அந்த நிகழ்வுகள் கதைக்குள் எந்த அளவுக்கு உண்மைத் தன்மையோடு இருக்கின்றன, எந்த அளவுக்கு பாத்திரங்களின் தன்மையோடு ஒத்துப் போகின்றன என்பதே ஒரு படத்தை அறிந்து கொள்ள எடுக்கும் முயற்சியின் முதல் படி. அப்படிப் பார்த்தால் ஒன்றிரண்டு இடங்கள் தவிர, படமெங்கும் பாத்திரங்களின் வீச்சு எல்லை தெளிவாகக் கையாளப் பட்டிருக்கிறது.
நம்மை அழுது வடிய விடாமல் பாத்திரங்களின் மனக்குழப்பத்தை, வலியை, மகிழ்ச்சியை அவர்களுக்கு அருகில் நின்று பார்ப்பது போன்றதொரு உணர்வைத் தருகிறது படம். கற்பனை முன் முடிவுகளைக் கழற்றி வைத்துவிட்டுப் பார்த்தால், அவர்கள் நம் வீட்டிலேயோ, பக்கத்து வீட்டிலோ, நம் தெருவிலோ எங்கேனும் நடமாடிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஜீன்ஸ் அணிந்துகொண்டு மெட்ரோவில் நம்மோடு பயணம் செய்கிற எல்லாப் பெண்களுமே மகிழ்ச்சியாகவோ, கவலைப்பட்டுக் கொண்டோ அல்லது டேக் இட் ஈசி என்றோ இருக்கிறார்களா என்பது நமக்குத் தெரியாது. அது போலவே ஆண்களும். இவரில் சிலரை அவர்களின் இயல்பு மாறாது நமக்கு அறிமுகப் படுத்துகிறது "ஒரு நாள் கூத்து".
"மாப்பிள்ளைய நீ பாத்தியா?"
"இல்ல... ஆனா புடிச்சிருக்கு"
இந்த வரிகளில் உள்ள வலியை எல்லோராலும் உணர முடியாது. ஆமாம், வாழ்க்கை என்பது உங்களுக்கும் எனக்கும் வேறு வேறாகவே இருக்கிறது. உங்கள் வாழ்க்கைக்கு நான் வெறும் பார்வையாளன் மட்டுமே.
மெல்லிய உணர்வுகளைச் சொல்லிய விதத்தில், திரைப்பட விரும்பிகளுக்கான திரைப்படம் "ஒரு நாள் கூத்து".
சிராப்பள்ளி ப.மாதேவன்
18/04/2019
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்