ஒரு வாழ்க்கை முழுவதையும் சிந்தித்தால் ஏராளமான வேடிக்கைகள் காணக் கிடைக்கின்றன. குடிசைகள் அடுக்ககங்களாவதும், கோபுரங்கள் வசூல் வேட்டைக்கான இடமாவதும், தவிர்க்க முடியாத நிகழ்வுகள் போலே நடத்திக் காட்டப்படுகின்றன. இன்றைய காலத்தில் குப்பை என ஒதுக்கப்படும் நெகிழிகள் ஒரு தலைமுறையினரின் இளவயது பொக்கிசங்களாக இருந்ததை இந்த தலைமுறை அறியுமா?
அது எழுபதுகளின் பிற்பகுதி. வழக்கமாக ஊர்ப்பக்கங்களில் ஆறு குளங்களுக்குக் குளிக்கச் செல்லும் ஆண்களும் பெண்களும் துணிகளைத் தோளில் இட்டுச் செல்வார்கள். துவைத்து முடித்து குளித்துத் திரும்புகையில் மீண்டும் தோளில் இட்டுக்கொண்டே நடப்பார்கள். அப்பொழுது ஒரு சலவைத்தூள் நிறுவனம் ஒரு கிலோ தூளுடன் பச்சைநிற நெகிழி வாளி ஒன்றைக் கொடுத்தது. அதை வாங்கியிருந்த சில வீட்டுப் பெண்கள் அந்த வாளி நிறையத் துணிகளை எடுத்துக் கொண்டு செல்கையில் தெருவிலும் ஆற்றங்கரையிலும் வாளியைத் தொட்டுப்பார்த்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. அது போல எங்கள் வீட்டிலும் ஒன்று இருந்தது. அதனுள் லிட்டர் அளவுக்குறிகள் இருக்கும். ஒரு ஏழாம் வகுப்பு மாணவனுக்குப் பெருமை கொள்ள அது ஒன்றே போதுமானதாக இருந்தது. அதைப்பெரிய கணித, அறிவியல் நுணுக்கமாக எண்ணியிருந்தேன். பிற்காலத்தில், உழக்கு நாழி, மரக்கால்கள் போன்றவற்றை அறிந்துகொண்ட போது எனக்குள்ளே சிரித்திருக்கிறேன்.
ஒன்பதாம் வகுப்பில் படித்த ஐயப்பனையும், சிவதாணுவையும் மறக்கவே முடியாது. இன்றும் கூட திரைப்படத் திறனாய்வுகள் எழுதும் போது அவர்கள் என் அருகில் இருப்பதாகவே உணர்கிறேன். ஆமாம், இருவரும் திரைப்படக் கதை சொல்வதில் கில்லாடிகள்.
"மக்ளே.. எழுத்து முடிஞ்ச ஒடனே மொத கட்டம் .... பெரிய மலங்காடு. நாலஞ்சு மொண்ண மரம். கொஞ்சந்தள்ளி சரேர்னு தண்ணி பாயி.... அங்ங்ங்...க.. தள்ளி குதிர வாற சத்தங்கேக்கு. மொத முன்னங்காலு. டக்குன்னு நாலு காலையும் காட்டுகான். வெள்ள குதிர. கொஞ்சங் கொஞ்சமா மேல காட்டுகான். காப்பித்தூள் கலர்ல ஒரு ராஜா செருப்பு. மின்ன கொக்கி மாரி வளஞ்சிருக்கு. குதிரைக்கு வயத்துல லேசா குத்துகான். குதிர ஒற்றே சாட்டம். தயளி பாறைக்கு அந்தபொறம் பொயிற்று." இப்படி ஐயப்பன் கதை சொல்வதை நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். நானும் அந்தப் படத்தைப் பார்த்திருப்பேன். ஆனாலும் அவன் சொல்லும் அந்த சின்ன விசயம் என் கண்ணில் படாமல் போயிருக்கும். மீண்டும் அதைப் பார்க்கவேண்டும் என்றால், அத்தனை எளிதல்ல அது 1979 ல்.
என்றாவது அரிசிமில் வெட்டையிலோ, கோயில் திரு விழாவிலோ பார்த்தால் தான் உண்டு. புது படம் என்றால் அதுவும் முடியாது. இப்பொழுது .. காலம் எங்கேயோ வந்துவிட்டது. சிவதாணுவோ ஐயப்பனோ கதை சொல்லும் போது ஜியொமெட்ரி பெட்டியில் ஒரு ரப்பர் வளையத்தை மாட்டி தந்தி மீட்டி இசை வேறு கொடுப்போம். விசயம் அதுவல்ல. அந்த ரப்பர் வளையம்! யாராவது வெளியூரிலிருந்து வரும்போது பேக்கரியில் இருந்து ஏதாவது பண்டம் வாங்கி வந்தால் அதில் மாட்டியிருக்கும் இந்த ரப்பர் வளையம் பெரிய பொக்கிசம் எங்களுக்கு. அம்மா எனக்கு வேண்டும் என்பார். தங்கை தலையில் மாட்டக் கேட்பாள். அண்ணனுக்கு ஈர்க்கு வில்லில் நாணேற்ற. எனக்கு இசைத் தந்தியாக. யார் கையில் கிடைக்கிறதோ அந்த உருவெடுக்கும் அது. இனி இன்னொருமுறை வரும் போது இன்னொருவருக்கு.
பொட்டலம் மடித்து வரும் நெகிழிக்கூடுகள் அன்று விலை மதிப்பில்லாதவை. மேலப்பத்து கடைசி வயலில் வரப்பு வெட்டும் இசக்கி முத்தண்ணனுக்கு மழையிலிருந்து பீடியை, தீப்பெட்டியைக் காக்கும் பாதுகாப்புப் பெட்டகமாய், பேச்சியம்மை அக்காளின் வெற்றிலைப் பெட்டியாய், ஔவையாரம்மன் கோயிலுக்கு நடந்து போகும் சொள்ளையாண்டி அண்ணனுக்கு அந்த மூன்று ஒரு ருபாய்த் தாளை நனையாமல் பாது காக்கும் பணப்பெட்டியாய் இப்படிப் பல பிறப்பெடுக்கும் நெகிழிப் பைகள். ஆனால், இன்று அவை உலகையே அச்சுறுத்தும் பெருங் குப்பைகள்.
அறிவார்ந்த ஒரு சமூகத்தில் இது ஏற்றுக்கொள்வதாயில்லை என்றாலும், கற்றலும் கற்பித்தலும் பாடங்களும் சுருங்கிப்போன சமூகம் இந்த இடர்பாடுகளில் மாட்டிக்கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. பயன்படு பொருட்கள் மண்ணைத் தாக்குவதையும், கேளிக்கைப் பொருட்கள் பண்பாட்டைத் தாக்குவதையும் காலம் கடந்து உணர்வதில் பயனேதும் இல்லை. இன்றைய குப்பைகள் நேற்றைய பொக்கிசங்கள். எனில், இன்றைய பொக்கிசங்கள் நாளை??? விழித்திருப்போம்.
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்