Wednesday, 21 August 2019

சங்க காலக் குழம்பைச் செய்து உண்ண வேண்டுமா?

ஓவியம் : மறைமலை வேலனார்

 
சுருள்கோடு அடிவாரம். பெருமழை ஓய்ந்து, தூவானம் அடித்துக் கொண்டிருந்த  ஒரு மாலை நேரம். ஓலைக்குடையைப் பிடித்தபடி செல்லியம்மை நடக்கிறாள். மழைவெள்ளம் சேர்ந்து செந்நிறத்தில் சலசலத்து ஓடிக்கொண்டிருக்கிறது கோட்டாறு. ஆடுகள் குளிரெடுக்க கொன்றைமர மூடுகளில் அசையாமல் நின்றுகொண்டிருக்கின்றன.  செல்லமாக வளர்ந்த பெரிய வீட்டுப் பெண் காதலித்தவனை மணந்துகொண்டு வாழ்ந்து வருவதைப் பார்க்கும் ஆவலில் செம்மண் வழுக்கிவிடாமல் கவனமாக நடக்கிறாள்.


அதோ அந்த மேட்டில் இருக்கும் வீடுதான். நெருங்கிவிட்டாள். மழையில் நனைந்திருந்த கூரையின் இடுக்குகள் வழியே மெல்லிய வெண்புகை சுருண்டு சுருண்டு மேலேறிக்கொண்டிருந்தது. நெருங்குகையில் உள்ளே பெரிதாக ஓசை ஏதும் கேட்கவில்லை. தென் புறத்தில் இருந்த சாளரத்தின் வழியே மெல்ல உள்ளே பார்த்தாள். அங்கே கண்ட காட்சி அவளுக்குப் பெருவியப்பைத் தந்தது. 

குயிலி அடுப்பங்கரையில் நின்று கொண்டிருக்கிறாள். அசைவுகளில் சிறு பதற்றம். முரியடுப்பில் இருக்கும் சட்டியில் இருந்துதான் வெண்புகை வருகிறது. கூடவே தாளிக்கும் மணமும் வருகிறது. விறகை கொஞ்சம் வெளியே இழுத்து தீயைக் குறைத்துவிட்டாள். மண்சட்டியொன்றில் இருந்த கட்டித் தயிரை நன்றாகப் பிசைந்து அடுப்பில் இருந்த சட்டியில் ஊற்றினாள். தயிரில் நனைந்த கையை தான் உடுத்தியிருந்த சீலையில் துடைத்தாள். அகப்பையால் சட்டியில் இருந்த குழம்பைக் கிளறிவிட்டாள். செல்லியம்மைக்கு வியப்பு அடங்கவில்லை. வீட்டில் இருக்கும் வரை சமையல் ஏதும் அறியாதவள் இன்று சமைக்கிறாளே என்று. ஆனாலும், பாவம் "புளிப்பாகன்' செய்ய முனைந்திருக்கிறாள், பழக்கமில்லாததால் தாளிக்க ஊற்றிய எண்ணெய் நல்ல சூடேறும் வரை விட்டுவிட்டாள் போலும். அரைப்பை ஊற்றும் போது அதன் நீர் தன்மை பட்டவுடன் வெண்புகை மிகுதியாய்க் கிளம்புகிறது. மையிட்ட அவள் கண்களில் நீரேற்றுகிறது.

அட பேதைப் பெண்ணே 'தயிரை மத்தால் ஒரு சுற்று சுற்றினால் போதுமே" 
"அது தெரியாமல் உன் அழகிய விரல்களால் பிசைந்ததுவிட்டாய்... சரி, தயிர் பட்ட விரல்களை தண்ணீரில் கழுவினால் போதுமே,  அதற்குள் உடுதுணியில் துடைத்துக்கொள்ள என்ன அவதி" என்று எண்ணிக்கொண்டே சுற்றிலும் பார்க்கிறாள். கீழே வேலப்பன் இருக்கிறான். பார்த்தால் பெரும்பசியோடு இருப்பதாய்த் தோன்றிற்று. அவனுக்குப் பசியாற்றத்தான்  இத்தனை முடுக்கமா? பரவாயில்லை... நம் பெண். நல்ல உடுத்தி, கண்ணெழுதி செழுமையாக வாழ்ந்திருந்தாலும் உணவு தேவை எனும் போது தான் அறிந்த வரையில் "புளிப்பாகன்" செய்கிறாளே. அதைஉண்டபின் வேலப்பன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம் என்று நினைத்தவளாய் சாளரத்தின் முற்றிய மூங்கிலைப் பிடித்துக் கொண்டு நின்றாள்.

வேலப்பன் முன்னே போட்டு வைத்திருந்த தேக்கிலையில்; செந்நெல் அரிசிச் சோற்றை இட்டு அதன் மேல் "புளிப்பாகனை" ஊற்றினாள். பசியோடு இருந்த அவனும் அதைப் பிசைந்து முதல் கவளம் உண்டான். 

"புளிப்பாகன்" மெல்லிய புளிப்பும் இனிப்பும் கலந்த சுவைகொண்ட குழம்பு. முற்றிய ஆனால் நல்ல புளிக்காத தயிரில் செய்யப்படுவது. அதிலும் இப்பொழுது குயிலி செய்த புளிப்பாகன் காதலையும் சேர்த்து செய்தது. அது வேலப்பனுக்கு இன்னும் சுவை கூட்டியது. "இனிது, இனிது' என்று சொல்லியவாறே விரைந்து உண்ணத் தொடங்கினான். தாளிப்பின் புகைகொண்டு மெலிதாகக் கலங்கிய குயிலியின் குவளைக் கண்கள் மலர்ந்தன, நெற்றியில் நிறைந்தன மகிழ்ச்சியின் நுண்ணிய அலைகள். இதையெல்லாம் பார்த்த செல்லியம்மைக்கு மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. குயிலியின் தாயிடம் இந்தச் செய்தியைச் சொல்ல விரைந்து நடக்கத் தொடங்கினாள்.

பாவின் சுவையும், நாவின் சுவையும் ஒருசேர இப்படியொரு காட்சி குறுந்தொகையில் கூடலூர் கிழார் எழுத நம் கண்முன்னே விரிகிறது.

முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,
கழுவுறு கலிங்கம், கழாஅது, உடீஇ,
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
'இனிது' எனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே."  (குறுந்தொகை 167)
:- கூடலூர் கிழார்


இப்படி, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் இந்தப் "புளிப்பாகன்" இன்னும் சில பகுதிகளில் சமைக்கப்படுகிறது. எங்கள் பகுதியில் "பெரளன்" என்று பெயர் இருக்கிறது. இந்தப் பெயர் திரிபு எப்படி என்று சொல்லாய்வு அறிஞர்கள் தான் சொல்லவேண்டும். இலேசான இனிப்பும், இலேசான புளிப்பும் கொண்ட குழம்பு இது. சோற்றிலிட்டுப் பிசைந்தால் ஒரு பிடி பிடிக்கத் தோன்றும் என்பதில் ஐயம் இல்லை.

இந்தச் சங்க காலக் குழம்பைச் செய்து உண்ண வேண்டுமா? வாருங்கள் கீழே உள்ள  இணைப்பில் இருக்கிறது அதன் செய்முறை. செய்து உண்டு மகிழுங்கள்.

பெரளன் - புளிப்பாகர் செய்முறை

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்