இப்படி நிகழும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. சிறைக்கூடத்தில், தான் அடைபடுவோம் என்று எண்ணிப்பார்த்ததும் இல்லை. ஆனாலும் நிகழ்ந்துவிட்டது. குனிந்து காலில் இடப்பட்டிருந்த விலங்கின் வளையத்தைத் தடவிப் பார்த்தான். சோழனின் கொல்லர்கள் தன்னெறி கொண்டவர்கள் என்று தோன்றிற்று. "விலங்குபூட்டும் வளையம் என்றாலும் உடம்பில் உறுத்தாத வண்ணம் செழுமையாகச் செய்திருக்கிறார்கள்; தொண்டியின் தச்சர்களைப்போல". மன்னர்களின் நோக்கங்கள் வேறு வேறு ஆனாலும், தமிழ் மக்களும் தொழில்குடிகளும் நேர்மையாகவே சிந்திக்கிறார்கள் என்று எண்ணியவாறே பின்புறம் சாய்ந்தான். சில்லென்றிருந்தது நன்றாக இழைக்கப் பட்டிருந்த கல்சுவர். நேர் எதிரே ஆளுயரத்திற்கும் மேலே செவ்வகச் சாளரம். குறுக்கே செருகப்பட்டிருந்த சீரான இரும்புக் கம்பிகள். அதற்கு நேர்கீழே கைத்திரள் அளவுள்ள கம்பிகளால் ஆன கதவு. கற்றளிகள் அமைப்பதில் திறன்பெற்ற சோழர்களின் சிறைக்கூடமும் சிறப்பாகவே இருந்தது. சாளரத்தின் வெளியே காவல் மாறும் ஓசை கேட்டது. மாலை நேரம் ஆகியிருக்கக் கூடும் என்று தோன்றிற்று. அப்பொழுது காவல் வீரனொருவன் கதவருகில் வந்தான்
"மன்னா தங்களுக்கு குடிக்க ஏதேனும் வேண்டுமா?"
"இப்பொழுது எதுவும் வேண்டாம். பிறகு சொல்கிறேன்"
"சரி மன்னா. தேவைப்படும் போது என்னை அழையுங்கள்"
"ம்...".... சரி.. உன் பெயர் என்ன"
"அத்தி.. மன்னா"
"அத்தியா...!!! "
"ஆம் மன்னா" என்றவாறே அந்த காவல்வீரன் சென்று மறைந்தான்.
இந்நேரம் அத்தி, நன்னன், கட்டி மூவரில் யார் ஒருவரேனும் உடன் இருந்திருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. என்ன செய்வது அவர்கள் இப்போது உயிருடன் இல்லை. "நன்னன் அன்று சொன்னதைக் கேட்டிருக்க வேண்டுமோ? அவன் சொன்னது போல புன்றுறையை உடனே அனுப்பியிருக்கலாம். அவனும் பெருந்தலைச் சாத்தனாரை விரைந்து அழைத்து வந்திருப்பான். வேறு காரணம் கருதி நாம்தான் தாமதப்படுத்தி விட்டோமோ? கழுமலம் கோட்டையைக் காவாது விட்டுவிட்டோமோ?. ம்.. எப்படி இருந்த கோட்டை! " பெருமூச்செறிந்து கொண்டான்.
கழுமலம். சேரர்களின் பாதுகாப்புக் கோட்டை. இவனது பாட்டன் குட்டுவன் கோதை காலத்தில் வடக்கே சிவகந்தவர்மனால் தோற்கடிக்கப்பட்ட அரசர் சிலர் தம் படைகளோடு பாலாற்றின் கரைகடந்து தெற்கு நோக்கி நகர்ந்தார்கள். நாள்பட நாள்பட அவர்கள் இன்னும் தெற்கே நகர்ந்து சோணாட்டில் புகுந்து அரசில் குழப்பங்களையும் போரையும் ஏற்படுத்தினார்கள். பின்னர் மதுரைக்குச் சென்றார்கள் என்ற செய்திகளெல்லாம் "அபிதர் மாவவதாரம்" நூலைப் படித்துக்காட்டிய மாடலன் மதுரைக் குமரனார் பாட்டனிடம் சொன்னதை சிறு வயதுப் பிள்ளையாய் இவனும் கேட்டிருக்கிறான். அந்தப் பகைவர்கள் தங்கள் நாட்டிலும் புகுந்துவிடாமல் இருக்க தக்க ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார்கள். சோணாடு, பாண்டிநாடு இவற்றிலிருந்து உள்ளே நுழைய ஏதுவாய் இருக்கும் வானமலையின் பகுதியில் இருந்த கழுமலத்தில் பாதுகாப்பு நிலைப்படை ஒன்றை ஏற்படுத்தத் தொடங்கினர்.
மண்பாறைத்துண்டுகளும் மலைவேம்பு, கடம்பு போன்ற மரங்களும் சேர்த்து வலுவான கோட்டை ஒன்று எழுப்பப் பட்டது. வேகமாய்ப் பொருது பகையழிக்கும் பெருங்களிறுகள் அங்கே கொண்டுவரப்பெற்றன. அவற்றோடு பேசும் மொழியறிந்த சிறந்த பாகன்கள் குடியமர்த்தப் பட்டார்கள். வடிநவில் அம்பு செய்ய தேர்ந்த கொல்லர்கள் வந்தார்கள். வேகமாகச் சுழலும் சக்கரங்கள் கொண்ட தேர்களைச் செய்ய தச்சர்கள் வந்தார்கள். பெருவழிகள் சீர்செய்யப்பட்டன. கழுமலம் மெல்ல மெல்ல பேரூராய் வளர்ந்தது. தொண்டியைத் தலைநகராய்க் கொண்டிருந்த இரும்பொறைகளின் சேர நாட்டில் முகாமையான படைநிலையாய் உருவெடுத்தது. பகைவரின் வானமலை நுழைவைக் காத்து நின்றது.
பாட்டனாரின் மறைவுக்குப் பிறகு இளைஞனாய் போர்முறைகள் கற்றறிந்த பிறகு தந்தை இவனைக் கழுமலத்திற்கு அழைத்துச் சென்றார். தேரில் இருந்து இறங்கி படியேறி உள்ளே நடக்கையில், அந்தக் கோட்டையின் அருமை குறித்தும் அதன் தேவை குறித்தும் அவனோடு பேசிக்கொண்டே வந்தார். இனிமேல் அவன் இங்கேயே தங்கியிருக்க வேண்டுமென்றும் சொன்னார். பேசிக்கொண்டே நீண்டுகிடந்த தாழ்வாரத்தில் நடந்து இடப்புறம் திரும்புகையில் நடுத்தர வயதுள்ள ஒருவர் எதிர்ப்பட்டார்.
"வாழி நீவிர் மன்னா"
"வருக வருக பொய்கையாரே. நலம் தானே. மாந்தைக்குப் போயிருந்தீர்கள் என்று கேள்விப்பட்டேன். எப்பொழுது வந்தீர்கள்"
"நேற்று மாலையே வந்து விட்டேன். தாங்கள் தொண்டிக்கு அழைக்காமல் இங்கு வரச் சொன்னதற்கு காரணம் ஏதும் உண்டா மன்னா?"
"ஆமாம். இதோ கணைக்கால் இரும்பொறை, இளவல்... கழுமலம் கோட்டைக்கு பொறுப்பேற்கும் வேளை வந்து விட்டது. எனக்கும் முதுமை நெருங்கிவிட்டது. அதனால்..."
'சொல்லுங்கள் மன்னா"
"நீரே.. உடனிருந்து கணையனின் வளர்ச்சியை உறுதிப் படுத்தவேண்டும். உமது அறிவும் மொழித்திறனும் சேர நாட்டின் பெறுமதி வாய்ந்த சொத்து. அவை நாட்டிற்காகப் பயன்படட்டும்."
"உத்தரவு மன்னா"
"உத்தரவா..." சிரித்துக்கொண்டே "நீர் தாம் எமக்கு உத்தரவிடவேன்டும். தமிழ்த்தாயின் நன்மகனே... நீர் நண்பனாய் தந்தையாய் இருந்து கணையனைக் கரையேற்ற வேண்டும். இது எமது வேண்டுகோள்"
பொய்கையார் மன்னனின் கையைப் பிடித்துக் கொண்டார். "என் ஊனும் உயிரும் இம் மண்ணிற்காகவே இருக்கும். கவலையேதும் கொள்ளாதீர்."
"எனக்கேதும் தனிப்பட்டக் கவலையில்லை. பாண்டியும், சோழமும் சிக்கல்களில் தவிக்கும் வேளை. நமக்கும் ஏதேனும் நிகழாமல் இருக்க வேண்டுமே என்ற எண்ணமே."
"கவலையகற்றுங்கள். கணையனுக்கு இயல்பிலேயே நெஞ்சுரம் இருக்கிறது. பேர்கொண்ட யானைகளும், குதிரைகளும், பெருந்தேர்களும், வலுகொண்ட வீரர்களும் இருக்கிறார்கள். கழுமலம் இருக்கும் வரை சேர மன்னர் கவலைகொள்ளல் ஆகாது"
"மகிழ்ச்சி.. பொய்கையாரே. பெருமகிழ்ச்சி. அமைதியோடு தொண்டி திரும்புவேன்." என்றவர் கணைக்கால் இரும்பொறையின் பக்கம் திரும்பி
"இன்று முதல் உனக்கு நண்பனும் வளர்ப்புத் தந்தையும் இவரே. சேர மண்ணின் பாதுகாப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன்" - என்று சொல்லிவிட்டு விடைபெற்று தேரேறினார். அது மேற்கே சென்று கீழிறங்கி மறையும் வரை கணைக்கால் இரும்பொறை பார்த்துக் கொண்டு நின்றான்.
அதன் பின் "ஐயா என்னால் தந்தை நினைப்பது போன்று செயல் பட முடியுமா?" என்று புலவரைப் பார்த்துக் கேட்டான்.
"கணை... கண்டிப்பாக உன்னால் முடியும். தொண்டியின் கோட்டைக் கதவில் நீ பதித்து வைத்திருக்கும் அந்த "மனிதப் பற்களை" நானும் பார்த்திருக்கிறேன்... உன்னால் முடியும்"
"ஐயா .. அது..."
தொடரும்...