அது ஒரு அழகிய
காலம்.
பதினாறு வயதின்
பச்சை மீசையும்
இயற்கை உந்திய
இளமை ஆசையும்
இணைந்து வளரத்
தொடங்கிய காலம்.
அந்தப்
அந்தப்
பத்தாம் வகுப்பில்
படித்தவரெல்லாம்
படித்தாரா என்றால்
விடையேதும் இல்லை.
தாடகை மலையின்
தரைப்பரப்பில்
தாழக்குடி எனும்
பேர்கொண்ட
ஊரில் இருந்த ஒற்றைப்
பள்ளியில்
பத்தாவது வரை சென்றவர்
ஆயிரம்;
படித்தவர் சிலரே.
“எண்பதுகளில் படித்தோரெல்லாம்
இணைவோமா?”
கைப்பேசித்திரையில்
மின்னியது
குறுஞ்செய்தித்
துளியொன்று.
விரித்துப் படிக்கையில்
விளக்கங்கள் நூறு
சொன்னது.
சின்னத்திரைவழியே
சிலகாலம்
பின்னே சென்றது.
இப்படி விடையிறுத்தேன்.
“மக்கா.. நம்முடன்
படித்ததில்
ஆணும் பெண்ணுமாய்
ஏழெட்டு நட்புகள்
கற்பனைச் சிற்பிகள்,
என்னையும் சேர்த்து.
வேறு சிலரோ மனமண்
குழைக்கும்
அன்புக் குயவர்கள்,
அறிவேன் நான்.
எண்பதுகளின் அந்த
இறுதிப்
பள்ளிநாளில்
தேர்வுகளெல்லாம்
முடிந்த
கடைசி நேரம்
தேறாத மனங்கள்
விடைகொடுக்க
உள்ளுக்குள்
பாரோமா எனும் வினா
வெழும்பிய
பாவிகள் சிலரை
நானறிவேன்.
படித்த பாடங்களை
விட
பார்த்தவையும்
கேட்டவையும்
உளுவை மீன் போல
உள்ளுக்குள் கிடக்கின்றன.
பள்ளிக்காலத்தில்
அள்ளிப்பருகிய
மகிழ்சியும் துக்கமும்
மனதின் மடிப்புகளில்
உறைந்து கிடக்கின்றன.
காலம் என்னைக்
கவிஞனாக்கியது.
என்ன செய்வது?
எல்லா நாளும் உங்களில்
யாரேனும்
எண்பதுகளின் சிற்பமாய்.
என்னுள்ளே வந்து
போகிறீர்கள்.
அன்று என் சிற்பத்தில்
ஆயிரம் கைகள் இருந்திருக்கலாம்.
உன்னதில் ஐம்பது
தலைகள்
இருந்திருக்கலாம்.
கீழூர்காரன் சிற்பம்
தோப்பூர் மண்ணில்
செய்யப்பட்டிருக்கலாம்.
வீரணமங்கலத்தின்
கால்கள்
வீணே நடந்துபோயிருக்கலாம்.
இன்னும்…
வேண்டாம்… வேண்டாம்…
எல்லோரும் ஒன்றாக
ஒருமுறை
இணையும் நேரத்தில்
ஏதோ ஓர் சிற்பத்தில்
கைகள் உடைந்து
போகலாம்.
ஒன்றில் புதிதாக
விரல்கள் முளைக்கலாம்.
உள்ள மோதல்களில்
ஒன்றின்
மூக்கு உடைந்து
போகலாம்.
எனவே ….
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்