உலகம் வியந்த
அதியனின் வாயிலில்
ஒருநாள்
இசைத்தாள் அவள் பேரியாழ்
ஓசைகேட்டும் அவன்
வந்தானில்லை.
வாயிலில்
நின்றவன் கேட்டிடச் சொன்னாள்,
தன்னை அறியாதான்
உன் தலைவன்
அன்றியும்
என்னையும் அறியான்
நரம்பில்
விரல்நிறுத்தி நல்லிசை முடிப்பேன்
எவ்விடம்
இசைத்தாலும் எனக்குச் சோறிடுவார்
அன்றி இறந்து
பட்டாலும்
என்பொருட்டு
நில்லாது உலகு
என்றவள் நடந்தாள்; பின்னே,
அவள் பின்னே
நடந்தது
ஆயுள்
முழுவதும் அதியனின் உலகு.
தடாரி அறைந்த
தமிழ்ப்பெண் கைகளில்
தேறலின் குடுவை எடுத்துக்
கொடுத்தான்.
ஊன்துவை அடிசில்
ஊட்டி நின்றான்.
சுற்றம்
மகிழ்ந்திட நெல்லும் பொன்னும்
சுற்றிக் கொள்ளப்
பூவெனத் துணியும்
அள்ளிக் கொடுத்த
அதியனைப் பாடிய
வண்டமிழ் உலகின்
பெண்பேராளுமை
ஔவையின் தமிழ்
கொண்டு
உலக மகளிர் வாழி!
வாழி! என்போமே.
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்