Wednesday, 8 April 2020

இப்பொழுதேனும் சொல்லிவிடு கண்ணே



"இன்னும் சில நிமிடங்களில் கிளம்பிவிடப் போகிறேன் கண்ணே. இப்போதேனும் சொல்லிவிட மாட்டாயா?" முருகனின் மனதுக்குள் ஏக்கம் மிகுந்து..  பொற்கொடியைப் பார்த்தான்.

வண்டிச் சாவியையும், தலைக் கவசத்தையும் கையில் எடுத்துக் கொண்டான்.  அவன் இப்பொழுது கிளம்பிவிடுவான் என்பது பொற்கொடிக்கும் தெரியும். அவனது பார்வையில் இருக்கும் "அந்த" ஏக்கமும் அவளுடைய பதிலை எதிர்பார்த்துத் தத்தளிக்கும் அவனது உள்ளமும் அவளுக்குப் புரியாமல் இல்லை. ஆனால் என்ன செய்வாள். அப்பாவை நினைத்தால் பயமாக இருக்கிறது. அம்மாவுக்கும் உடல் நிலை அத்தனைச் சரியாக இல்லை. அப்பாவிடம் சொன்னால் கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டார். அம்மா... கேட்கவே வேண்டாம்.


அவனுக்கு அவளைவிட நான்கு வயது அதிகம். இருவருக்கும் பொதுவான விருப்பங்கள் பலவுண்டு. அது போல வேறுபாடானவையும் சில உண்டு. முரண்பாடுகள் இருந்தாலே வாழ்கை இனிக்கும். அதை அவளைப் பார்க்கிற ஒவ்வொரு நொடியும் அவன் உணர்ந்திருக்கிறான். எல்லாம் சரிதான். இதில் மாறுபட்டால் எப்படி?

முருகன் மனதில் தோன்றிய உணர்வை அவளிடம் கொட்டித் தீர்த்து இன்றோடு நான்கு நாள்கள் ஆகிவிட்டது. அவள் தான் இன்னும் பதிலேதும் சொல்லவில்லை. ஏதாவது ஒரு பதில் சொல்ல வேண்டாமோ? ஒன்றுமே சொல்லாமல் இருந்தால் எப்படி. பெண்களே இப்படித்தானோ? வேறு வழியில்லை. விதி இப்படித்தான் என்றால் என்ன செய்வது?

 "சரி... அப்ப நான் கெளம்பட்டுமா?"

"ம்..." என்ற பொற்கொடியின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. அப்பா என்றால் அவளுக்கு உயிர். மனதுக்குள் இருந்த உணர்வை அவளும் மறைத்துக் கொண்டுதான் நின்றாள். 

கிளம்ப மனமின்றிக் கிளப்பியதில் வண்டியின் சத்தம் கொஞ்சம் அதிகமாகக் கேட்பது போல் இருந்தது முருகனுக்கு. கிளட்சைப் பிடித்துக் கொண்டு கியர் இடுவதற்கு காலை அழுத்த முயன்ற நொடியில்....

"ஒரு நிமிசம் இருங்க... முக்கியமான ஒண்ணு .." என்று சொன்ன படி வீட்டுக்குள் போனவள் சில நொடிகளில் திரும்பி வந்தாள்

"இந்தாங்க.. முதல்ல இந்த முகமூடிய மாட்டுங்க. அப்புறம் இன்னும் ரெண்டு முகமூடி இந்தப் பையில இருக்கு. அப்பாவையும் அம்மாவையும் ஒண்ணாக் கூட்டிக்கிட்டு வர முடியுமான்னு தெரியல. வயசானவங்க. எங்கிட்டாவது விழுந்துரப் போறாங்க. அதனால அம்மாவ மொதல்ல கூட்டிட்டு வாங்க. அப்புறம் அப்பாவ கூட்டிட்டு வாங்க."

"ம்...ம்.." என்றபடி முருகன் வண்டியைக் கிளப்பிக் கொண்டு போனான்.

"என்ன பண்றது. கொரொனா பயம் எல்லாருக்கும் தான் இருக்கு. போலீசு வேற சும்மா அலையிறவங்கள தொரத்துதாம். அம்மாவால இப்ப சமைக்க முடியாது. என்ன பண்ணுவாங்க. அதான், மதுரைல இருக்கிறவங்கள விருதுநகருக்கு எப்படியாவது கூட்டிட்டு வாங்கன்னு அவருகிட்ட சொன்னேன். மனுசன் யோசிச்சாரு. வேற எதாச்சும் ஏற்பாடு பண்ணலாம்னு பாத்தாரு. நான் வேண்டாம்னு சொல்லுவேன்னு நெனச்சிருப்பாரு போல. ஏக்கமா பாத்துக்கிட்டெ இருந்தாரு மூணு நாளா. ஒண்ணும் வசப்படல.. சரின்னு மனசில்லாம கெளம்பிப் போயிட்டிருக்காரு. எனக்கும் அவர அனுப்புறதுல சங்கடந்தான், என்ன செய்ய எல்லா உசுரும் ஒன்னுதானே."

"ஆமா... நீங்க என்ன நெனச்சீங்க?"

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்