ஒர் அடைமழைக்காலப்
பெருமழையாக
அழுது தீர்ந்தது
அன்றைய இரவு.
ஆனாலும்,
நம்பிக்கை நரைத்துவிடவில்லை.
எட்டுதிக்கும் எமன் திக்காக,
கூற்று நுழைந்துக் கூறுசெய்யக்
கொட்டிய குருதி
ஆறுபோல் ஓடி
எதிர்ப்பட்ட எல்லாம் கரைத்தது.
ஆனாலும்,
நம்பிக்கை கரைந்துவிடவில்லை.
உலக உருண்டையில்
உரிமைப்பட்ட இடம்
கால்களுக்குக் கீழே
கூடிவரும் நிலையில்,
கரையான் புற்றுகூடத்
தமக்கில்லையென்று
தரையிழந்து போனார்.
ஆனாலும்,
நம்பிக்கை நகர்ந்துவிடவில்லை.
கைதொழ ஒரு கல்லிருந்தால்
மீண்டெழும் இனமென
அஞ்சிச் செத்தோர்,
எம்நிலந்தனை மண்மேடாகக்
கூடித் தகர்த்தார்.
ஆனாலும்,
நம்பிக்கை புதைந்துவிடவில்லை.
வற்றாப் பழையோள்
கொற்றவை குமரன்
வேலெறிந்தக் கைகளுக்கு
ஆணிசுமக்கவும்
ஆற்றல் இல்லையெனத் தம்
அச்சம் மறைத்து அவர்
உச்சரித்து நின்றபோதும்;
ஆழ்மனதின் நீர்ச்சுருளில்
அலையாடும் நினைவுகளில்
கூர்ந்தோசைக் கேட்குங்கால்;
பாராண்ட மன்னர் சொன்னார்,
பால் மறந்தபோதும் தம்
தாய் மறவாப் பிள்ளைகள் போல்,
கந்தகம் சிதறிக்
கரித்துகள் மூடிய மண்ணில்,
வெடியுப்பைத் தின்றுச் செரித்து
என்றேனும் வீறு கொண்டெழும்;
பண்டைய விடுதலையைத்
தேடுமொரு செங்காந்தள்.
போய்ப்பார்,
புரியும் உனக்கு;
அங்கே எரியும் விளக்கின்
சுடராடும் ஊமைக் கூத்தில்,
பொருள் பொதிந்த எம் சொல்.
சிராப்பள்ளி ப.மாதேவன்
17-05-2020