Sunday, 28 June 2020

பட்டினப்பாலை – சிறப்புப் பாயிரம்




பொய்யாக் காவிரிப் புகுவாய் நின்று
எய்ப்புநீக் குறந்தை யொய்யெனச் சேர,
தையலாள் இழையொழிய, தனியிருத்தித் தான்
வெய்கானம் கடக்க விழையா அறிவன்,
மெய்யுரை சொன்ன கடியலூர்க் கண்ணன்,      - 5

வற்றா நீரும், வளநாட்டுச் சிறப்பும்,
பட்டினப் பெருமையும், பகல்விளை யாட்டும்,
கட்டாண் மாக்கள் களரியில் பொருதலும்,
நட்டணை யிலார் நள்ளிரவுத் துஞ்சலும்,
கொட்டகா ரத்து ஏற்றமும் இறக்கமும்,          -10

செவ்வேள் வெறியாடுஞ் சீர்மிகுந் தெருக்களும்,
வெவ்வேறு வணிகர்தம் வெளிப்படு கொடிகளும்,
வெவ்வினை பயிலா வேளாண் வாழ்க்கையும்,
அவ்வழி நின்றநல் லறவணிக நேர்மையும்,
செவ்வனம் பன்மொழி செப்பு மொக்கலும்,       -15

அண்டர்க் கொடுஞ்சிறை வண்மதி லேறி,
பண்டுடைத் தாயம் பழுதின்றிப் பெற்று,
முண்டுபகை வேந்தர் முடிகீழ டக்கி,
பண்கெழு நாட்டின் பல்வளம் பெருக்கி,
எண்திசைப் பேரெழ எழுந்த மாவளவன்,         -20

கோயில் சிறப்பும், குடும்பம் நிறுத்தலும்,
வாயில், முற்றம், வயவர் காத்தலும்,
ஏயின் கேட்க ஏறுபோல் மன்னரும்,
காயல் சிறப்பும், கவினுறு பட்டினமும்,
தாயோ லையென வெழுதித் தந்தநல்           -25

பட்டினப் பாலை, படித்து வுணர்ந்து,
கொட்டிக் கிடக்கும் குடியுயர் வாழ்க்கை,
முட்டாச் சிறப்பின் முன்னோர் வணிகம்,
தட்டாச் செய்யுள், தண்டமிழ் யாப்பு,
அட்டியின் சுவையென் ருந்திச் சுவைப்பீரே.   -30

(நிலைமண்டில ஆசிரியப்பா)

28-06-2020

Sunday, 21 June 2020

ஊராற்றுப்படை


அடையாற்றுக் கரையினிலே அமர்ந்திருந்த
தாழைச் சேந்தனிடம்,
பெயரில் ஊர்சுமக்கும் பெரியவரே
உமது ஊர்போகும் வழியமக்கு
உரைப்பீரோ, என்றொருவன் கேட்டான்.

மேலும் கீழும் பார்த்து,
யாரும் கேட்டதில்லை
எவரிடமும் சொன்னதில்லை
ஏனென்றும் தெரியவில்லை
ஊர்விட்டு ஊர்வந்து நாளாச்சு
ஓர்மையும் குறைந்து போச்சு
என்றாலும் சொல்வேன் கேள்.

உலகறியும் குமரிநிலம்,
அதன்
தலைநகராம் நாகர் நகர்:
அதனருகே உள்ளதையா,
நான் பிஞ்சுக் கால்வதிய
நடந்த நிலம் - நல்ல
பேர்கொண்ட மருதநிலம்.

கிழக்கிருந்து வருகையிலே;
வேணாட்டின் கீழெல்லை
ஆரைவாய்வழி நுழைந்து,
பண்டு போர் முரசொலித்தக்
கதை மறந்து
இன்று பிச்சிப் பூச்சிரிக்கும்
தோவாளையின்
மேற்காய் ஊர்ந்துவந்தால்
நிலம் கிழித்தோடும்
ஆறொன்று வழிமறிக்கும்.
 
அங்கே,
தீச்சுடலைப் பெருங்காவல்
சுடலைமாடன்,
வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும்
வல்லணங்கு இசக்கியவள்
கடுங்காவல் தாண்டிவந்தால்,
பல்லாயிரமாண்டாய்த் தமிழர்கொண்ட
பானைசெய்யும் பழந்தொழிலின்
களி தெறித்த
ஓவியங்கள் வரவேற்கும்.

மேற்குவழி வரநினைத்தால்,
மேலமலைக் கீழிருக்கும்
பேரேரி தனைக் கடக்க,
நல்லதோர் பேரகரமுதலி
தொகுத்தப் பேராசிரியர்
மு.சண்முகனார்
வளர்ந்த புத்தேரிச்
சிற்றூரின் பெரும்புற்றைத்
தாண்டி;

தரை நிறைந்தக்
கருவண்டுக் கூட்டமென
நாவல்பழம் சிதறிவீழும்
இறச்சகுளம் வழிமடங்கி,
பேரெழுத்தோன் நாஞ்சில்நாடன்
பிறந்து வளர்ந்தெழுந்த,
பழையாற்றங் கரையிருக்கும்
வீரநாராயணமங்கலம் விடைகொடுக்க,
மயங்கா மருதநிலம் தாண்டிவந்தால்,
தாடகையின் தலைதெரிய, எம்மூர்
அதன்
காலடியில் கிடக்குமையா.

தெற்கிருந்து வர நினைத்தால்
தெளிவான வழிகள் இரண்டு.
நாகர்கோயில் நகரிருந்து
வருகையிலே,
நம்மாழ்வார் பிறந்துயர்ந்த நல்லமண்
திருவெண்பரிசாரம் தனைக்கடந்து,
தேரூர்க்கால் கரைதொட்டு
நேர்நடந்து வலந்திரிந்து
கற்பாலம் தாண்டினால்
கண்படுமே எம்மூர்.

அன்றியும்,
திருநெல்லைச் சாலை விலக்கி,
 
தமிழர்தம் வரலாறும்
தன்னேரில்லாத் தமிழும்
உலகறிய உரை செய்த
தலைவணங்கா தமிழறிஞர்
கெ. என். சிவராசர்,
பிறப்பால் சிறக்குமந்த
வீமனசேரி தொட்டு;
படப்பைகள் பலதாண்ட
புதுக்குளக் கரைவிரியும் - அங்கே
தென்னம்பாளை சிரிக்க
அதனூடே தெரியும்
நான் படித்த நற்பள்ளியே
எம்மூரின் தெற்கெல்லை.

வடக்கிருந்து தெற்கேகி
வரும் வழிகேட்டால்,
தோவாளை வட்டத்தின் தலையூர்,
பேராசான் சீவானந்தம்
பிறந்தவூர், தொல்லூர்,
பூதப்பாண்டி யடைந்து,
பழையாற்றின் பசுஞ்சோலை
மெல்லத் தாண்டி,
புத்தனாற்றுக் கரையடைந்து,
கண்ணெட்டும் தொலைவுவரை,
பச்சைக் கம்பளியாய் விரிந்திருக்கும்
மருதம் மகிழ்ந்து,
எண்ணம் மறந்து எட்டிநடந்து,
விரிந்துகிடக்குமந்த வீரகேரளப்பன்
பேரேரிக் கரையடைந்தால்,
தொலைவில் தெரியுமொரு தொல்கோயில்,
வல்லாண்மை கொண்டு மூத்தோள்
வடக்குநோக்கி அமர்ந்த
எல்லைக் கோயில்.

அங்கிருந்து தொடங்குமையா
பல்குடியும் சேர்ந்திருக்கும் தொல்குடி,
பழந்தமிழால், பண்ணால்,
எண்ணால், எழுத்தால்
வளங்கொழிக்கும் மண்ணால்,
நனிசிறந்த தாழக்குடி.

தாடகையின் தலையேறித்
தாழப்பார்த்தால்,
தரைப்பரப்பில் விரிந்திருக்கும்,
ஔவையின் காலடியில்
ஒருநாளுந் தாழாப் பெருங்குடியே.

Thursday, 18 June 2020

பெற்றவளுக்குப் பிறந்தநாள் 18-06-2020


உடலால் ஒருமுறையும்
உள்ளத்தால் பலமுறையும்
பிறந்தவள் நீ.

எங்களைப்
பெற்றெடுத்த போதெல்லாம்
நீயும் பிறந்தாய்.

நாங்கள்
நோயுற்ற போதெல்லாம்
செவிலியாய்ப் பிறந்தாய்.

சேர்ந்து
விளையாடிய போதெல்லாம்
தோழியாய்ப் பிறந்தாய்.

பள்ளிப் புத்தகத்தின்
முகப்பில் எங்கள்
பெயரெழுதிய போதெல்லாம்
மாணவியாய் மறுபிறப்பெடுத்தாய்.

எங்கள்
வெற்றிகளிலும்
தோல்விகளிலும்
வேறு வேறு பிறப்பெடுத்தாய்.

பாடகியாய், நடிகனாய்
குயவனாய், தச்சனாய் ..
இப்படி,
எத்தனையோ பிறப்பெடுத்து
வியப்பில் ஆழ்த்தினாய்.

ஏனோ,
உன் பிறந்தநாளில் மட்டும்
நீ பிறந்ததேயில்லை.

திருமணம்;
பிறந்தவீட்டோடு
பிறந்தநாளையும் மறக்கடித்த
காலத்தின் வளர்ப்பு நீ.

யார் மறந்தபோதும்
நிலா உனக்கு
ஆயிரம் பிறை காட்டிச்
சிரித்திருக்கிறது.
வாழி நீ வாழியென.

Monday, 8 June 2020

துளி


வரலாற்றின் பக்கங்களெங்கும்,
முடித்துவைக்கும்
முற்றுப்புள்ளிகளாய்ச்
சிதறிக் கிடக்கின்றன
கண்ணீர்த் துளிகள்.