மெல்ல உருப்பெற்ற குமுகத்தில், இருபுறமும் தோல் இழைத்து உருவாக்கப்பட்ட பறையாக தக்கை பிறந்திருத்தல் வேண்டும். இன்றைய "தவிலுக்கு்" தாத்தா போன்ற தோற்றம். இதன் இசை நடையும் ஒத்திசைவும் பறையைப் போலவே இருக்கிறது. பறையொலிகேட்டால் எப்படி உள்ளூர மனம் ஆடுமோ அதுபோலவே இந்த “தக்கையும்” நம் மெய்ப்பாடுகளில் மாற்றம் செய்கிறது.
இது அகப்புறமுழவு (தண்மை, தக்கை, தகுனிச்சம்); மூன்றனுள் ஒன்றாகிய ஒருவகைப் பறை. அகப்புற முழவு என்றால், புற வெளிகளிலும் கட்டிடங்களின் உள்ளும் இசைக்கத் தகுந்தவை. ஏழிசையில் இது “உழை” எனும் அளவொலியாகும். எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் ‘இதன் ஓசை நடுத்தரமானது’, அவ்வளவே.
ஊடலிசைக்கருவி என்றும் இது அழைக்கப்பட்டிருக்கிறது.
========================
"யாழும் குழலும் சீரும் மிடறும்
தாழ்குரல் தண்ணுமை ஆடலொடிவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து
வரிக்கும் ஆடற்கம் உரிப்பொருள் இயக்கி" (சிலப் 3; 26-29)
என்ற சிலம்பின் வரிகளுக்கான அடியார்க்கு நல்லார் உரையில் தக்கை குறிப்பிடப்படுகிறது.
தக்கைதண்ணுமை தாளம்வீணை தகுணிச்சங்கிணை சல்லரி
கொக்கரைகுட முழவினோடிசை கூடிப்பாடிநின் றாடுவீர்
பக்கமேகுயில் பாடுஞ்சோலைப்பைஞ் ஞீலியேனென நிற்றிரால்
அக்கும்ஆமையும் பூண்டிரோசொல்லும் ஆரணீய விடங்கரே. (திருமுறை 7.36.9)
கத்திரிகை துத்திரிக றங்குதுடி தக்கையொ டிடக்கைபடகம்
எத்தனையு லப்பில்கரு வித்திரள லம்பஇமை யோர்கள்பரச
ஒத்தற மிதித்துநட மிட்டவொரு வர்க்கிடம தென்பருலகில்
மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்துகளும் வேதவனமே.
(திருமுறை 3.76.5)
===============================
அங்கொன்றும் இங்கொன்றுமாய் கேட்கும் “தக்கை” என்னும் பறையின் ஓசை எல்லாவிடத்தும் நின்று சிறந்து, பண்டைய இசைக்கும் நமக்குமான ஊடலைத் தீர்த்துவைக்கட்டும்.
===================
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்