தலைநீர் நாட்டின் அழகிய நகரம். செறிவுடைய முற்றம் ஒன்றில் நிற்கிறாள் ஔவை. தோழியரோடு சேர்ந்து செல்கையில் மன்னன் நாஞ்சில் பொருனனையே “கொடை மடயனே” என்று சொல்லிய ஔவை. கையில் இருக்கும் தடாரியின் துணிவிலக்கி அந்தக் கரிய மலையே அதிரும் வண்ணம் ஓங்கி இசைக்கிறாள். இரண்டு மூன்று பாடல்கள் பாடியிருப்பாள். அதற்குள்ளாக வெளியே வந்தான் மன்னன் அதியமான் நெடுமானஞ்சி. ஔவயின் தடாரி இசையில், பாட்டில், அழகில் இசைந்த அதியமான் தன்னோடு அரண்மனைக்குள் அழைத்துச் செல்கிறான்.
அந் நிகழ்வை, பல நாள்கள் அல்ல ஒருநாள் தடாரி அறைந்து பாடியதற்கே அதியன் என்னை அழைத்துக் கொண்டான் என்று மகிழ்ந்து பாடுகிறாள் ஔவை.
"கடவிலும் குறுகாக் கடியுடை வியன்நகர்,
மலைக்கணத்து அன்ன மாடம் சிலம்ப, வென்
அரிக்குரல் தடாரி இரிய ஒற்றிப்
பாடி நின்ற பன்னாள் அன்றியும்,
சென்ற ஞான்றைச் சென்றுபடர் இரவின் " (புறம் 390 - ஔவையார்).
காவிரிக்கரையின் ஒரு கருக்கல் காலை. வெள்ளி இன்னும் இறங்கவில்லை. பெருங் கோட்டை ஒன்றின் வாயிலில் நின்ற அவள் தன்னுடைய தடாரியை எடுக்கிறாள். அதன் கண்ணில், அடித்து இசையெழுப்பியதால் உண்டான அழுக்குத் தடங்கள் இருக்கின்றன. அந்தத் தடாரியில் இரு சீர் தாளத்தை அடித்துக்கொண்டே; விடியலின் உணர்வில் ஒன்றிப் பாடுகிறாள். சட்டென மாமன்னன் கரிகாலன் அவள் முன்னே வந்து நிற்கிறான். எவ்வளவு நாளாயிற்று உன்னைப் பார்த்து என்று கூறும் உறவினர் போல அன்பொழுகக் கூறி அவள் துன்பம் களைகிறான்.
இப்படி, தான் தடாரி அறைந்து பாடுகையில், அந்தக் காலையிருளில் கூட சட்டெனக் கரிகாலன் எழுந்து வந்த நிகழ்வை பொருநராற்றுப்படையில் விரிக்கிறார் தாமக்கண்ணி என்னும் முடத்தாமக்கண்ணியார்.
"பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப
கை கசடு இருந்த என் கண் அகன் தடாரி 70
இரு சீர் பாணிக்கு ஏற்ப விரி கதிர்
வெள்ளி முளைத்த நள் இருள் விடியல்
ஒன்று யான் பெட்டா அளவையின் ஒன்றிய
கேளிர் போல கேள் கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்ப கூறி 75
கண்ணில் காண நண்ணு வழி இரீஇ
பருகு அன்ன அருகா நோக்கமோடு
உருகுபவை போல் என்பு குளிர் கொளீஇ"
(பொருநராற்றுப்படை – முடத்தாமக்கண்ணியார்)
பெரும் போர்க்களம். வைகைக்கரைப் பெரு வேந்தன் தலையாலங்காலத்துச் செருவென்ற பாண்டியன் போர்முடித்த வெற்றிக் களிப்பில், செருக்கில் அமர்ந்திருக்கின்றான். அவனைக் கண்டு பகைவர் எல்லாம் நடுங்கிக் கொண்டிருக்க, குருதியும் சதையும் சிதறிக்கிடந்த அந்த இடத்தில் தடாரி அறைந்து பாடும் ஒலி கேட்கிறது. பாண்டியன் அத்திசை நோக்கினான். பொருநன் ஒருவன் வந்து கொண்டிருந்தான். எல்லோரும் நெருங்க அஞ்சும் பாண்டியனை நெருங்கி “என் தடாரியை அடித்துக் கொண்டு நான் எதற்கு வந்தேன் தெரியுமா மன்னா, உன் கழுத்தில் நிலவுபோல் மின்னும் அந்த பொன்னாரத்தை வங்கிக் கொண்டு போகலாம் என்றே வந்தேன்” என்று அச்சமின்றி எளிதாகக் கூறுகிறான்.
“விசி பிணித் தடாரி விம்மென ஒற்றி,
ஏத்தி வந்தது எல்லாம் முழுத்த
……… ……… …………… ………… ……… ……..
……… ………… …………
புலவுக் களம் பொலிய வேட்டோய்! நின்
நிலவுத் திகழ் ஆரம் முகக்குவம் எனவே.”
(புறம் 372 – மாங்குடிக் கிழார்)
தக்கையின் சிறு வடிவத்தில் தடாரி இருந்திருக்கக் கூடும். சிலர் கிணையும் தடாரியும் ஒன்றுதான் என்கின்றனர்.
பொருநராற்றுப்படையின் நோக்கில் தடாரி அடிகோல் இல்லாது விரல்களால் அடித்து இசைக்கப்பெறும் கருவி எனக் கொள்ளலாம். தோளில் மாட்டிக்கொண்டு எவ்விடத்தும் செல்லும் அளவுக்கு, தக்கையை விட சிறியதாக இருந்திருக்கலாம். பெண்களும் இதைச் சிறப்பாக இசைத்திருக்கின்றனர்.
செவ்விலக்கியங்களில் இன்னும் ஏராளமான இடங்களில் தடாரியின் ஓசை கேட்கிறது. வானமலை எங்கும் அதன் எதிரொலி இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. காவிரியின் சலசலப்புக்கிடையே தடாரியின் இருசீர் தாளமும் இழையோடிக்கொண்டுதான் இருக்கிறது.
நாம் தான் அதன் வடிவத்தை கூட மறந்துபோனோமோ என்று தோன்றுகிறது.
மாமன்னர்களின் உள்ளம் தொட்ட அந்த இசை மீண்டும் ஒலிக்குமா?
==============================
விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர்
அச்சா ரணர்அரக்க ரோடசுரர் - எச்சார்வும்
சல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம்
கல்லலகு கல்ல வடம்மொந்தை - நல்லிலயத்
தட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை
கட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும்
குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்
இடமாந் தடாரி படகம் - இடவிய
மத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால்
எத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே
மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்
கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத்,
(பதினொன்றாம் திருமுறை – சேரமான் பெருமான் நாயனார் – திருக்கயிலாய உலா)
===================
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்