Wednesday, 30 December 2020

ஆன்றோர் கேட்கை அறிவின் தாக்கோல்

 Image may contain: 2 people

இன்று காலை ஒன்பதரை மணிக்கு கைப்பேசி ஒலித்தது. ஊரிலிருந்து தங்கையின் கணவர் "ஒரு நிமிடம் தாயம்மாள் அறவாணன் உன்னிடம் பேசவேண்டும் என்கிறார். கொடுக்கிறேன்" என்று சொன்னார். 
 
எனக்குள் வியப்பு. இதுவரை அவரிடம் பேசியதில்லை. அறிமுகமும் இல்லை.
 
"நான் தாயம்மாள் அறவாணன், உங்களோடு பேசவேண்டும் என்று விரும்பினேன். பேசலாமா? " என்றார்.
 
"மகிழ்ச்சி அம்மா.."
 
பதினைந்து நிமிடங்களுக்கு நீடித்தது உரையாடல்.   ஐயா க.ப.அறவாணன் குறித்தான நினைவுப் பகிர்தல்கள். அம்மாவின் தற்போதைய எழுத்துவேலைகள். மூப்பின் காரணமாக, தற்போது எழுதிக்கொண்டிருக்கும் நூலோடு தான் எழுத்துப்பணியை நிறைவு செய்யப்போகும் செய்தி.  ஐயாவின் எழுத்தை உலகுக்கு மேன்மேலும் கொண்டுசெல்ல அவர்கள் எடுத்துக்கொண்ட உழைப்பு. என ஏராளமானவற்றைச் சொன்னார்.
 
"அம்மா ஐயாவின் நினைவேந்தலாக தமிழர் கண்ணோட்டம் இதழில் நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்" என்றேன்.
 
"நானும் படித்திருக்கிறேன். நீங்கள் தானா அது. மிக்க மகிழ்ச்சி. மணியரசன் மிகச்சிறந்த மனிதர். அவரை ஆசிரியராகக் கொண்ட பத்திரிக்கையில் நீங்கள் எழுதுவது சிறப்பு வாழ்த்துகள் என்றார். சிராப்பள்ளி என்று பெயரில் சேர்த்திருக்கும் போதே தனிப்பட்ட கொள்கைப் பிடிப்புள்ளவர் என்று எண்ணியிருந்தேன். அப்பொழுதே தொடர்பு கொண்டிருக்கவேண்டும். விட்டுவிட்டேன். உங்கள் முகவரியைத் தாருங்கள் சில நூல்களை அனுப்புகிறேன்" என்று முகவரியும் வாங்கிக் கொண்டார்.
 
"ஐயாவின் திருக்குறள் உரை ஒன்றே காலமெல்லாம் அவரது பெயரைச் சொல்லிக்கொண்டிருக்கும் அம்மா" என்று நான் சொன்னபோது நெகிழ்ந்துவிட்டார். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான அந்த இணையரின் காதல் வாழ்க்கை சில சொற்களில் வெளிப்பட்டது.
 
"சரி நூல்களை அனுப்புகிறேன் பெற்றுக்கொள்ளுங்கள்"
 
"கிடைத்தவுடன் செய்தி சொல்லுகிறேன் அம்மா" என்று கைப்பேசியை அணைத்தேன்.
 
ஐந்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. மீண்டும் அழைத்தார்.
 
"ஐயாவுக்கும் எனக்கும் பிடிக்காத வேலை இங்கே நடந்து கொண்டிருக்கிறது. என்ன செய்வது. உலகமெல்லாம் சுற்றி இத்தனை எழுதி சொந்த மண்ணில், குருதிச் சொந்தங்களிடையே கூட மாற்றம் வரவில்லையே.
என்ன செய்யலாம் சொல்லுங்கள்? " என்றார்.
 
"உங்கள் வேலையில் ஒரு விழுக்காட்டைக் கூட செய்து முடிக்காத எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை அம்மா. இருந்தாலும் முயற்சிக்கிறேன்" 
 
இரு முனைகளிலும் சில நொடிகள் மௌனம்.
 
"சரி தம்பி.. நான் வைக்கிறேன்" கைப்பேசி அணைந்தது.
கனத்துக்கிடக்கிறது மனம்.
===================
சிராப்பள்ளி ப.மாதேவன்
29-11-2020
===================

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்