Thursday, 7 January 2021

ஔவை எனும் பெண்


 

அசைவுடை நெஞ்சத்து உயவுத் திரள் நீடிய
இசையாக் காதல் இசைத்துப் பாடிய
இளந்தலை ஔவை.


பேஎய் கண்ட கனவென
உள்ளம் உருக்கும்
நுண்ணிய காதலைப்
பண்ணாய் இசைத்தாள்
பழந்தமிழ் ஔவை.


என்னிடம் இருந்து அவன்,
உடம்பில் உடம்பு  உட்புகுந்தன்ன
கைகவர் முயக்கம் பெற்றிருப்பான்
என்றுரைத்த,

மண்ணின் பெரும்பெண்
தண்டமிழ் ஔவை.


புலவு நாறிய தன் தலை,
தடவிச் சிரித்தப்
பொன்மகன் அதியன்
பொலங்கலம் நிறைத்த தேறல் மாந்தி,

பண் இசைத்த
பாடினி ஔவை.


பெரு நகை கேளாய் தோழி, காதலர்
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம் என
பெண்மனம் பாடிய
பெருமடந்தை ஔவை.

பெரும் பலா சிறக்கும்
மலைவள நாட்டின்
நாஞ்சில் பொருநனை மடவனென்று

 நறுந்தமிழால் மொழிந்தாள்.
மகிழ்ந்தவனோ மங்கைக்கு
யானையைப் பரிசளித்தான்.

மெய்ம் மலி காமத்து தொழுது ஒழிந்து,
தாடகை மலையின் தரைப்பரப்பில்
இன் நகை மேவி ஆடிய பொழிலில்
காதலைப் பாடி, தமிழைச் சூடிய
ஔவையும் நின்று நிலைத்தாளோ.


ஆடியில் மகளிர் பேரன்போடு
கூடியே நன்றியைக்

குரவையில் இசைக்க,

கூழும் கட்டியும் பலியெனக் கொண்டு

ஊழிகள் தாண்டியும் உருக்கொண்டாளே.

வாழிய நீயே! வாழிய நீயே!

வண்டமிழ் ஔவையே.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்