Friday, 12 March 2021

நன்றி! நன்றி! நன்றி!

   


எப்பொழுதும் புத்தகங்களைத் தேடிப்போன அந்த அரங்கத்திற்கு வாசகர்களைத் தேடிப்போன முதல் பயணம், வாழ்வின் சிறந்த நிமிடங்களை அள்ளி வழங்கியது. முதலில்; பாவாணந்தம் அரங்கைப் பார்வையிட்ட, ஆதரவு நல்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. 

 கொரோனா தடைக்காலத்தில், இணையத்தில் பேசுவதற்காகத் தொடங்கப்பெற்ற “பாவாணந்தம் இலக்கியக் குழுமம்” “பாவாணந்தம் வெளியீட்டகமாக” மாற்றம் பெற்றது குறுகிய கால வரலாறு. தமிழர் திருமணம் குறித்தான “பல்லாயிரங் காலத்துப் பயிர்” என்ற அதன் முதல் வெளியீடும்; நூலின் மீதான மதிப்புரைகளும் பார்வைகளும் அடுத்தடுத்த வேலைகளுக்கான உறுதியைக் கொடுத்தன. மளமளவென வேலைகள் நடந்தன.
 
   பொருநராற்றுப்படை - கதையுரை, மணற்கேணி - வள்ளுவர் சொல்லாடல், முற்றாக் காதல், பல்லாயிரங் காலத்துப் பயிர் மற்றும் எனக்கென ஒரு வானம் நூல்களோடு அரங்கில் புகுந்தோம். புதிய வெளியீட்டகமான எங்களுக்கு வாய்ப்பளித்த பபாசிக்கு (BAPASI) மிக்க நன்றி.
 
    பேரறிஞர்களின் தோள்களில் ஏறி, திருவிழாக் காணும் குழந்தையாக வலம் வந்த என்னை
 
 எளிதில் அடையாளம் கண்டுகொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி.
 
   அரங்கை சிறப்புற அமைத்த தமிழமுதனுக்கும், சந்தோசுக்கும் மிக்க நன்றி.
 
  நாள்தோறும் அரங்கில் நின்று நூல்கள் குறித்து விளக்கமளித்து அறிமுகப்படுத்தும் வேலையை அயராது செய்த திரு முத்துக்குமாரசாமிக்கும், மூன்று நாள்கள் அந்தப் பணியைச் செய்த மகன் சந்தோசுக்கும், என்னருமைத் துணை செயந்திக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
 
  புதிய முகங்களின் வருகையோடு இனிதே தொடங்கியது புத்தகக் காட்சி. நூல்கள் குறித்து அறிந்து கொண்டவுடன் கேட்டவர் முகத்தில் தோன்றிய வியப்புக் குறிகள், கேள்விச் சுருக்கங்கள், மகிழ்ச்சியின் அலைவரிசை, எரிச்சலின் சுழிகள், மெல்லிய சினம், உனக்கெதற்கு என்ற பார்வைகள், நூலைப் படிக்குமுன் என்னைப் படிக்க முயன்ற சிலரின் சொற்கட்டுகள், முற்றாக்காதலின் அட்டைப்படம் காண ஒரு நொடி நின்று சென்ற கண்கள், கரிகாலனின் போர்க்கோலம் கண்டு விரிந்து நோக்கிய விழிகள் என அழகாக நகர்ந்தன நாள்கள்.
 
    ஒருநாள் பாவலர் அறிவுமதி அரங்கினுள் நுழைந்தார். நூல்களைப் பார்த்தார். சிரித்தார். நல்ல முயற்சி என்றார். பொருநராற்றுப்படையின் அட்டையைப் பார்த்ததும், இதை வரைந்த ஓவியரின் தொலைபேசி எண் கொடுங்கள் என்று கேட்டுப் பெற்றுக்கொண்டார். அவருக்கு நன்றி. நூல்கள் குறித்த அவரது கருத்துக்கள் வரும் என்று காத்திருக்கிறேன்,
 
    கைகளைப் பின்புறமாகக் கட்டியபடி அவர் வந்துகொண்டிருந்தார். வழக்கமாக அணியும் தோற்றத்தில் சட்டை. கூரிய பார்வை. அரங்கை நெருங்குகையில் ஐயா உள்ளே வாருங்கள் என்று அழைத்தேன். உடனே உள்ளே வந்து கைகுலுக்கி விட்டு நூல்களைப் பார்க்கத் தொடங்கினார். அவர், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். முற்றாக் காதலின் பக்கங்களில் அவர் முகம் மலரக் கண்டேன். ஐந்து நூல்களையும் கொடுத்தேன். பெற்றுக்கொண்டு விடைபெற்றார். அன்றிலிருந்து இரண்டாவது நாள் மாலை சில வாசகர்கள் சூழ அரங்கிற்கு வந்தார். “மூன்று நூல்களைப் படித்துவிட்டேன். உங்கள் எழுத்து எளிமையாக சிறப்பாக இருக்கிறது. எடுத்துக் கொண்ட தளம் சிறப்பானது. படங்கள் இன்னும் உயர் தரமாக இருந்தால் இன்னும் மதிப்பு கூடும். வாழ்த்துகள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். எல்லோருடைய உள்ளங்களைத் தொட்டுவிடுகிற அவரது எழுத்தைப் போலவே இருந்தது அந்த வாழ்த்தும். அவரது அன்புக்கு நெஞ்சார்ந்த நன்றி.
 
கலகலவென்ற குரல் ஒலிக்க வருகை தந்தார் முனைவர் பர்வீன் சுல்தானா. நூல்களைப் பார்த்தவர் “மணற்கேணி”யைக் கையில் எடுத்து “இதை நேற்றே என் தோழியிடம் சொல்லி வாங்கி விட்டேன். எழுதியது யார்?” என்றார். சொன்னேன். உங்கள் பேச்சினிடையே மேடைகளில் அறிமுகப்படுத்துங்கள் என்றேன். “கண்டிப்பாகப் பேசுகிறேன். ஆனால், முரண்கள் என்றாலும், விமரிசனம் என்றாலும் சொல்லுவேன்” என்றார். அவருக்கும் மிக்க நன்றி.
 
  அடுத்து, ஐயா கி.வெங்கட்ராமன் அவர்கள். தமிழர் கண்ணோட்டம் இதழின் இணையாசிரியர். மிகச் சிறந்த அரசியல் கட்டுரையாளர். முகநூலில் எனது எழுத்துகளைப் படித்துவிட்டு; எப்பொழுதாவது சந்திக்கும் போது மறக்காமல் அது குறித்துப் பேசுகிற பெருந்தகையாளர். “உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்” என்றார். அவருக்கும் மிக்க நன்றி.
 
    தமிழறிஞர் க.ப.அறவாணன் அவர்களது துணைவியார் முனைவர் தாயம்மாள் அறவாணன் அவர்களிடம் நூல்களைக் கொடுப்பதற்காக அவரது அரங்கிற்குச் சென்றோம். நூல்களைக் கையில் வாங்கிப் பார்த்தார். பொருநராற்றுப்படை உரையைக் கண்டதும், கண்கள் விரிய “இதை உங்கள் அரங்கிலேயே பெற்றுக் கொள்வதுதான் சரி. வாருங்கள் போவோம்“ என்று உடனேயே கிளம்பினார். அவரது மூப்பு கருதி “பரவாயில்லை அம்மா. இங்கேயே வாங்கிக் கொள்ளுங்கள்” என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேளாமல், என் கையைப் பிடித்துக்கொண்டு நடக்கத் தொடங்கினார். வழியெங்கும் எதிர்ப்படும் தெரிந்தவர்களிடம் “இவர் பொருநராற்றுப்படைக்கு உரை எழுதியிருக்கிறார். அதை அவர் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். இந்தக் காலத்திலும் இவையெல்லாம் நடக்கிறது” என்று சொல்லிக்கொண்டே வந்தார். அரங்கிற்கு வந்து நெடு நேரம் நின்று வாழ்த்தி விடை பெற்றார். முடத்தாமக் கண்ணியின் பாட்டை முதல் பாட்டாக எடுத்த எனக்கு, இது பெரும் பேறு. அம்மாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
 
    நெடுநாள்களாக தொலைபேசியில் மட்டுமே தொடர்பில் இருந்த காக்கைச் சிறகினிலே இதழின் ஆசிரியர் ஐயா முத்தையா அவர்கள் சட்டென்று ஒருநாள் அரங்கிற்கு வந்தார். நான் எதிர்பாத்திருக்கவில்லை. மட்டற்ற மகிழ்ச்சி. நான்கைந்து நாள்களுக்குப் பிறகு மீண்டும் வந்து தொல்காப்பிய நூல் ஒன்றைத் தந்துவிட்டுப் போனார். ஐயாவுக்கு மிக்க நன்றி.
 
   தமிழர்களின் கடல்சார் தொன்மை, மரபுசார் அறிவியல் ஆய்வாளர் ஐயா உறையூர் பாலு அவர்கள் (ஒரிசா பாலு) வந்திருந்தார். சிறிது நேரம் உரையாடினார். இன்னும் ஓரிரு நாள்களில் குமரிக்கண்ட ஆய்விற்காக குமரிக் கடலுக்குள் செல்ல இருப்பதாகத் தெரிவித்தார். நூல்களைப் பெற்றுக்கொண்டார். அவருக்கு மிக்க நன்றி.
 
    இயக்குநர் திரு மு.களஞ்சியம் அவர்கள் பாவலர் கவி பாசுக்கரோடு வருகை தந்தார். வள்ளுவரின் படம் இருவரையும் பெருமளவுக்கு ஈர்த்துவிட்டது போலும். அவர்களுக்கு மிக்க நன்றி.
 
   மாந்தவியல் எழுத்தாளர் ஐயா பக்தவச்சல பாரதி அவர்கள் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். பொருநராற்றுப்படை கதையுரையை வாங்கிக் கொண்டார். அவருக்கும் நன்றி.
 
   “நீயா நானா” நிகழ்ச்சியின் இயக்குநர் அந்தோணி “பணம் குறைவாக இருப்பவர்களுக்கு கழிவு கொடுங்கள், பணமே இல்லாதவர்க்கு இலவசமாகக் கொடுங்கள். சம்பாதிக்கும் தமிழர்களிடம் முழுப் பணமும் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று சொல்லி நூல்களை வாங்கிக் கொண்டார். அவருக்கு நன்றி.
 
    அடுத்து ஐயா பெ.மணியரசன் அவர்கள் மலர்ந்த முகத்தோடு அரங்கிற்கு வந்தார். இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது அவருடனான முதல் மேடைச் சந்திப்பு. அவர் தலைமையேற்கவிருந்த கருத்தரங்கொன்றில் பாவீச்சு நிகழ்த்தும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், என் முறை வந்த போது ஐயா நிகழ்ச்சிக்கு வந்திருக்கவில்லை, போக்குவரத்து இடையூறு. அதனால் நிகழ்ச்சி முடிந்தவுடன் அந்தப் பாவை அவரிடம் கொடுத்தேன், “ஐயா நீங்கள் வரும் முன் வாசித்துவிட்டேன். இதுதான் அந்தப் பாட்டு” என்று ஐயாவின் கையில் கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். சிற்றுந்தில் போகும்போதே படித்துவிட்டார் போலும். இரவில் அழைத்தார். “பாடல் மிகச் சிறப்பாக இருந்தது. கருத்துச் செறிவோடு இருந்தது” என்று சொல்லிவிட்டு “எத்தனை நூல்கள் வெளியிட்டிருக்கிறீர்கள்” என்று கேட்டார். ”எதுவும் இல்லை ஐயா” என்றேன். “வயது என்ன” என்றார். சொன்னேன். “அடடா இப்பொழுதே இருபத்தைந்து ஆண்டுகள் போய்விட்டனவே” என்றார். இன்று எனக்கு அந்த மனக்குறை ஓரளவு தீர்ந்ததாக உணர்ந்தேன். இரண்டு நாள்கள் சென்றபின் மணற்கேணி குறித்து பேசினார். அவரது கருத்துகளும் அறிவுரையும் மேலும் என் எழுத்துக்கு வலிமை சேர்க்கும். ஐயாவுக்கு நன்றி.
 
    தவத்திரு ஊரன் அடிகளார் அரங்கிற்கு வருகைதந்தார். மணற்கேணியின் ஒரு கட்டுரை முழுவதையும் நாற்காலியில் அமர்ந்து படித்தார். மகிழ்ச்சியோடு வாழ்த்தினார். வணங்கி விடைகொடுத்தோம். 
 
    ஐயா அறிவுறுவோன் அவர்களின் மகள் தன் இணையோடு வந்திருந்தார். எமது ஓவியர் தம்பி மறைமலை வேலனார் அவர்களின் துணைவியார் மகனோடு வந்திருந்தார். எழுத்தாளர் மெர்வின், தோழர் பாட்டாளி, மணிமேகலைப் பிரசுரத்தின் திரு ரவி தமிழ்வாணன், போன்றோரும் வந்திருந்தார்கள்.
 
     தோழர் இலட்சுமி அம்மா ஒருநாள் வந்தார். நூல்களைப் படித்துவிட்டுக் கருத்துக் கூருகிறேன் என்று அன்போடு கூறிவிட்டுச் சென்றார்
.
   நான் இதுவரை அறிந்திராத பலரும் வந்து போனார்கள். கருத்துகள் மீது தருக்கம் புரிந்தார்கள்.
 
    மொத்தத்தில் சென்னைப் புத்தகக் காட்சியில் எமது நூல்களை இருகரம் நீட்டி வரவேற்றிருக்கிறீர்கள். நாங்கள் எண்ணியிருந்ததை விட பல மடங்கு ஆதரவை நல்கியிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து இதே தரத்தோடு எங்கள் பணியைச் செய்வோம். அதற்கான உரத்தை எங்கள் உள்ளங்களில் சேர்த்திருக்கிறீர்கள்.
 
  இத்தனை பெரிய வேலையை எண்ணித் துணிந்த உற்றார் திரு முத்துக்குமாரசாமிக்கு உளமார்ந்த பாராட்டும் நன்றியும்.
 
  சிறப்பான படங்களை வரைந்து நூல்களுக்கு செறிவூட்டிய தம்பி மறைமலைவேலனாருக்கு நன்றி.
 
   சிறப்பாக அச்சாக்கம் செய்த மதுரை, விடியல் கணினி அச்சுக்கூடத்திற்கு நன்றி.
 
  எல்லாக் குழந்தைகளும் எழுந்து நடக்கிற அந்த நொடியை உள்ளம் மகிழக் காணும் தாய்போல, ஒவ்வொரு நூலும் உங்கள் கைகளில் தவழ்கையில் மகிழ்ச்சியில் களிக்கிறேன். உள்ளம் கருக்கொண்ட எண்ணக் குழந்தைகள் உங்கள் வீடுகளில், வரவேற்பறையில், புத்தக அடுக்கில், மேசைப் புறத்தில் எங்கேனும் இருந்தால், அங்கே நான் இருக்கிறேன் மகிழ்வோடு.
 
 
===========================
என்றென்றும் அன்புடன்
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
12-03-2021
===========================
 
 












 

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்