Thursday, 10 June 2021

கண்ணுக்குத் தெரியாத போதிமரம்

 

ண்டா? இல்லையா? என்ற வினாவின் கருப்பொருளாக, கடவுள் மட்டுமன்றி இந்தக் கொரோனாவும் சேர்ந்துகொண்டதுதான் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் பெருவியப்பு. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் கொண்டு, ஆகக் குழம்பிய நிலைக்கு அறிவியலைத் தள்ளியதும் இதுவே.

சரி. போகட்டும். நான் சொல்ல நினைப்பது அறிவியல் குறித்தல்ல.

ண்பர் ஒருவர் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்ந்திருந்தார். பத்து நாள்களில் தொற்றிலிருந்து விடுபட்டாலும், உயிர்வளி அளவுகள் சரியில்லை என்று மருத்துவமனையிலேயே தொடர்ந்தார்.  அவருடன் அவரது தம்பி ஒருவர் மட்டுமே துணையாக இருந்தார். ஒருநாள் மூச்சு திணறத் தொடங்கியிருக்கிறது. "வலி தாங்க முடியவில்லை" என 

முனகிக்கொண்டே இருந்திருக்கிறார். இருமல் வரும்போதெல்லாம் குருதி வெளிவரத் தொடங்கிவிட்டது. ஒருநாள் மாலை கொஞ்சம் சிக்கலாக இருக்கிறது என்றார்கள். மறுநாள் வைகறைப் பொழுதில் உயிர் பிரிந்தது.

தம்பி, உடலை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தார். முன் அறையில் வைத்துவிட்டு மருத்துவமனை ஊழியர்கள் சென்று விட்டார்கள். கைப்பேசியை எடுத்து உறவுகள் நண்பர்கள் என அனைவரையும் அழைத்து அண்ணன் மறைந்த செய்தியைத் தெரிவித்துக் கொண்டிருந்தார். "பாத்துப்பா கேர்ஃபுல்லா ஃகேண்டில் பண்ணுங்க", "ரெண்டு மாசுக்கு போட்டுக்கோங்க", "கிளவுசு மாட்டிக்கோங்க" போன்ற அறிவுரைகளோடு கைப்பேசிகள் அணைந்து போயின. மெல்ல இருள் கவியத் தொடங்கியது. எழுந்து மின்விளக்குகளை ஒவ்வொன்றாய் எரிய விட்டுக்கொண்டே சமையலறை வரை வந்துவிட்டார். பசி மெல்ல எட்டிப்பார்த்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் இருந்ததில் உடலும் மனமும் அயற்சியில் இருந்தது. சமைக்கத் தோன்றவில்லை. ஆனாலும் உணவு உண்டே ஆகவேண்டும். கதவை மெல்ல இழுத்துச் சாத்திவிட்டு தெருவில் இறங்கி உணவகம் நோக்கி நடக்க ஆரம்பித்தார். நான்கு தம்பிகளுடனும் ஒரு தங்கையுடனும் பிறந்த அண்ணனின் உடல், எல்லோரும் விளையாடி வளர்ந்த அந்தப் பெரிய வீட்டில், ஏராளமான நண்பர்கள் அலுவலக ஊழியர்கள் வந்துபோன வாயிலில் "துணை இயக்குநர் (ஓய்வு)" என்ற பெயர்ப்பலகை மட்டும் துணையாக, தனியாகக் கிடந்தது.

ன்னொரு ஊரில், வீட்டைவிட்டு வெளியே எங்கும் செல்லாத  ஒரு அம்மாவுக்கும் அவரது கணவருக்கும் தொற்று கண்டறியப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். மகன் ஒருவர் உடனிருந்து (அரசு மருத்துவமனையில் இது இயலும்) பார்த்துக்கொண்டார். மணமாகி ஐம்பதாண்டுகளைக் கடந்துவிட்ட இணையர், அருகருகே படுக்கைகளில் படுத்திருந்தார்கள். நாலைந்து நாள்கள் கடந்தபின் ஒருநாள் கணவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, அவசரப் பிரிவுக்கு மாற்றினார்கள். அன்று மாலை ஏழுமணியளவில் மூச்சு திணறாமல் நின்றுவிட்டது. மனைவிக்கு இது தெரியாது. அவருடனிருந்த மகன் அம்மாவை அழைத்துவந்து முப்பதடி தொலைவில் நின்று "அதோ பாரும்மா.. அப்பா போயிட்டாரு" என்று சொல்லிவிட்டு இரண்டு நிமிடங்களில் திரும்ப அழைத்துக்கொண்டு சென்று படுக்கவைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார். அவர் போய்தான் நாளைக்கான வேலைகளைச் செய்யவேண்டும். ஐம்பதாண்டு தாண்டிய மணவாழ்க்கையின் அத்தனை இன்ப துன்பங்களையும் மனதில் எண்ணிக்கொண்டே, அருகருகே யாரென்று அறிந்திராத புது நோயாளிகள் நாற்பது பேர் படுத்திருக்க, அந்த வயதான அம்மா மனதளவில் தனியாகக்கிடக்கிறார்.

மறுநாள் தந்தையின் உடலை அரசின் ஏற்பாட்டின் படி, வீட்டிற்குக் கொண்டு செல்லாமல் நேரடியாகச் சுடுகாட்டிற்கு கொண்டுசென்று அடக்கம் செய்தார் மகன். அன்று மாலை தாயை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். எழுபது வயதை அடைந்திருந்த அம்மா, கணவனில்லாத வீட்டில் நுழைகிறார். ஐம்பது ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்திருந்தாலும், இறந்துகிடந்த கணவனை அவர் பார்த்தது வெறும் இரண்டே நிமிடங்கள்தான். 

காலை பத்து மணி. பரபரப்பான ஒரு நகரத்தின் சுடுகாடு ஒன்றில் அவள் நின்றுகொண்டிருக்கிறாள். அருகே தாயின் உடல் கறுப்பு நெகிழிப்பையில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கிறது. தாயின் பெயர் மறைந்துபோய் "அடுத்தது 4ம் நம்பர்தான்" என்ற அறிவிப்பை மெல்ல இவளிடம் ஒருவர் சொல்லிச் சென்றார். மூன்றுபேர் உடல்முழுவதும் மறைக்கப்பட்ட ஆடையோடு வந்து " நீங்க கொள்ளிவைக்கிறீங்களா வாங்க" என்றனர். இல்லை என்பதுபோல் தலையாட்டினாள். அவர்கள் உடலை எடுத்துக்கொண்டு நடந்தார்கள். இவளுக்கு கண்ணீர் வரவில்லை. நேற்று இதே சுடுகாட்டில் 7 ஆம் எண்ணில் எரிந்துபோன அக்காவுக்காக அழுதே அனைத்தும் தீர்ந்துபோயிருந்தது. மெல்ல தன் இருசக்கர வண்டியை நோக்கி நடந்தாள். சுற்றிலும் உடல்கள் எரிந்து முடிந்த வாடை இருக்கத்தான் செய்தது. இருக்கையை உயர்த்தி உள்ளிருந்து தண்ணீர் குப்பியை எடுத்து குடித்தாள். அயற்சியாக இருந்தது. அப்படியே வண்டியில் உட்கார்ந்துகொண்டு அருகிலிருந்த மரத்தைப் பார்த்தாள். 

கைப்பேசி அதிர்ந்தது. காதில் வைத்தாள். "அப்பாவ மூணு மனிக்கு தந்துருவாங்களாம். கிண்டிக்குத்தான் கொண்டுபோகணுமாம். டோக்கன் நம்பர் என்ன வரும்னு தெரியல". இவ்வளவு பேச்சிற்கும் "ம்..." என்ற ஒற்றை எழுத்தில் விடையிறுத்துவிட்டு வண்டியை உசுப்பி செலுத்தத் தொடங்கினாள். அக்காவின் இறப்பை இருவருமே அறியாது போனார்கள். நேற்று அப்பாவுடன் இருந்திருந்தால், குறைந்தது அம்மா இறந்துபோனாள் என்ற செய்தியையாவது அவரிடம் சொல்லியிருக்கலாம்.  ஒருவர் இறந்தது மற்றவர் அறியாது ஒரே வீட்டில் மூன்று பேர் இறந்துபோனார்கள்.

வீட்டிலிருந்து வேகவேகமாகக் கிளம்பி நியூயார்க் வானூர்தி நிலையத்தை வந்தடைந்து அனுமதிக்குக் காத்திருந்து, எல்லாம் முடிந்து கூட்டமில்லாத வானூர்தியில் ஏறி அமர்ந்தவுடன் 'ஒரு வாரம் முன்னதாகக் கிளம்பியிருந்தால் அம்மாவை உடனிருந்து கவனித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாமோ?' என்ற எண்ணம் அவன் மனதை அரிக்கத் தொடங்கியது. இந்தப் பயணம் அவனுக்கு பெரும் மன வாட்டத்தைத் தரும் என்பதில் அவன் மனைவிக்கு எந்த ஐயமும் இல்லை. அந்த இருபது மணி நேரப் பயணம் கொடுமையானது.

நெடுந்தொலைவு கடந்து வந்து வீட்டை அடைவதற்கும் "மகன் வந்தாச்சு எடுத்துரலாம்" என்ற குரல் கேட்பதற்கும் சரியாக இருந்தது. உள்ளிருந்த அழுகை பீறிட்டுக் கிளம்பியது. அவ்வளவுதான். எல்லாம் முடிந்துபோனது. படிப்பும் அறிவும் பணமும் மீட்டுத்தர இயலாத தொலைவை நோக்கி தாயார் கிளம்பிவிட்டார்.

துரையின் புறநகர் பகுதியொன்றில் இருக்கும் அந்த சிவன் கோயிலுக்கு, கடந்த ஏழு ஆண்டுகளாக சேர்ந்தே செல்லும் வழக்கம் கொண்டவர்கள்; ஐம்பது வயதைக் கடந்த அந்தத் தோழிகள் இருவரும். இருவர் வீடுகளுக்கும் இடையே ஏழெட்டு வீடுகள் இருக்கும். அவ்வளவுதான்.  எல்லாவற்றையும் பங்குபோட்டுக் கொண்ட அவர்களுக்கு ஒருவருக்கு மட்டும் வந்துவிட்ட பெருந்தொற்றை பங்கிட விருப்பமில்லை. மருத்துவமனை, நெகட்டிவ், மூச்சுத்திணறல், ஐ.சி.யூ என எல்லாம் முடிந்து இதோ உயிரற்ற உடல் வீட்டுக்கு வந்துவிட்டது. இறந்துபோனவரின் மகன் தோழி வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டு "ஆண்டி ரெண்டு வெத்திலை பறிச்சுக்கவா, அம்மாவுக்கு தலைமாட்டில் வைக்கணுமாம்" என்று கேட்க, "சரிப்பா" என்று கண்களைத் துடைத்துக்கொண்டு நின்றார் தோழி. உயிரச்சமும் கவலையும் ஒன்றாய்ச் சேர எதுவும் செய்ய இயலாமல் நாற்காலியில் அமர்ந்தார். எதிரே கடிகாரம் ஓடிக்கொண்டேயிருந்தது.

ணவனை ஒரு தனியார் மருத்துவமனையில் படுக்கையில் சேர்த்துவிட்டு நிம்மதியின்றி வீட்டில் தனியாக இருக்கும் மனைவிக்கு மூன்றாம் நாள் கணவனிடமிருந்து கைப்பேசியில் அழைப்பு. "எனக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை. வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போய்விடு". நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான மணவாழ்க்கையில் முதல் முறையாகத் தன்னைப் பிரிந்திருப்பதால் அவர் அப்படிச் சொல்கிறார் என்று மனைவி நினைத்தார். மறுநாள் மாலை மீண்டும் "உடனே வந்து என்னை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டுபோ. நான் உன் மடியில் படுத்து இறக்க விரும்புகிறேன். சீக்கிரம் வா". இம்முறை மனைவிக்கு பதற்றம் வந்தது. கணவரின் ஒன்றுவிட்ட  தம்பி ஒருவருக்குத் தகவல் சொல்லி மருத்துவமனைக்கு வரச் சொல்லிவிட்டு, தேடித்தேடி வண்டி பிடித்து புறப்படத் தொடங்கும்போது.. "அண்ணி அண்ணன் நம்மை விட்டுப் போய்விட்டார்" என்ற செய்தியையே கேட்க முடிந்தது. 

அடுத்தநாள் காலை மின்சாரச் சுடுகாட்டில் ஐந்து நிமிட நேரம், இருபதடி தொலைவில் நின்று, மடியில் உயிர் துறக்க விரும்பிய கணவனைத் தொடக்கூட முடியாது விடைகொடுத்து அனுப்பினார் மனைவி.

திருச்சியின் அந்த மருத்துவமனையில் இன்று செலுத்தும் மூன்று இலட்சம் ரூபாயைச் சேர்த்து இதுவரை செலுத்திய பதினேழு இலட்சம் ரூபாயை வெறும் தாள்களாகக் கூடப் பார்க்க முடியவில்லை அவனால். இவ்வளவு செலவுசெய்தும் தந்தையை வெறும் உடலாகத்தான் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. அப்புறம் இந்தப் பணத்தால் ஆவதென்ன? என்ற கேள்வியோடும், தந்தையை எரித்த சாம்பல் நிறைந்த மண் கலயத்தோடும் அவன் வீடு திரும்பினான்.

ப்படியாக கண்ணுக்குத் தெரியாத ஒன்று, மனிதவாழ்வின் பக்கங்களில் குறிப்பெழுதிச் செல்கிறது. இந்தக் குறிப்புகளை நேரடியாகச் சந்தித்தவர்களும், நம்மைப் போன்று கேட்டுத் தெரிந்து கொள்பவர்களும் தங்கள் மனதுக்குள் சிவற்றை உணர்ந்திருக்கக் கூடும்.  சில கேள்விகளை உள்ளத்துக்குள் சந்தித்திருக்கக் கூடும்.

முதலில் மரணத்தின் மீதான பேரச்சம். ஆனால் அது நமக்கு உதவாது. நோயை வரவழைக்கவும், மருத்துவம் என்னும் பெயரில் பொருளை இழக்கவும் அல்லது நோயால் துன்புறவும் மட்டுமே உதவும். மாறாக பிறப்பு எனும் நிகழ்வு தரும் உறுதியான முதல் செய்தி "இறப்புதான் முடிவு" என்பதை உணர்வோமாயின் பேரச்சம் விலகும் என்பதை,

றப்புக்குப் பிறகான நடவடிக்கைகள் யாவும் நாமாகக் கற்பித்துக் கொண்டவையே என்பதை,

ழைத்துச் சேர்த்து கட்டிய பெரிய வீடுகளில் இறுதியாய்க் கிடத்திவைக்கக் கூட இயலாமல் போகும் காலமும் உண்டு என்பதை,

ணம் பொருள் என்பது உயிர்காக்கும் கருவியல்ல என்பதை,

பேய் பிசாசு குறித்த அச்சம் கற்பிதம் என்பதை,

றந்தவர்களை விடுத்து, வாழ்தலைத் தேடி மற்றவர் உள்ளம் செல்லுதலே இயல்பு என்பதை,

ப்படி, கணியன் பூங்குன்றனார், வள்ளுவர் என பலரும் சொல்லிய செய்திகளை மீண்டும் ஒருமுறை சொல்லிக்கொண்டிருக்கிறது கண்ணுக்குத் தெரியாத அந்த போதிமரம்.

========================================

இவையனைத்தும் எனக்கு நெருக்கமான உற்றாருக்கும் உறவுகளுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் நடந்தவையே. அவர்களது கவலை வளராதிருக்கவேண்டி உணர்வுகளை, நிகழ்வுகளை அப்படியே வைத்துக்கொண்டு சிலவற்றை மாற்றியிருக்கிறேன். 

நன்றி.

திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்

10-06-2021

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்