Saturday, 11 September 2021

பாரதி 2021

 


. ===========
. பாரதி
. ===========

கள்ளிப்பழம் உன்கவிதை யாவர்க்கும்
உள்ளித்தின்ன பெருஞ்சுவை நாவிலோர்
முள்ளுந் தைக்கலாம் ஆதலின்
உள்ளம் நள்ளுமே உன்னை.

========================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
11-09-2021
========================

Monday, 6 September 2021

வ.உ.சி பாடற்றிரட்டு விளக்கம் 1

 

செழுமையான இலக்கணத்தோடு இயற்றப்பெற்ற வெண்பாக்களும், ஆசிரியப்பாக்களும், கட்டளைக் கலித்துறைகளும் கொண்ட நூல் பெரியவர் வ.உ.சிதம்பரனார் எழுதிய “பாடற்றிரட்டு”. அது குறித்து பெரியவர் வாய்மொழியாகவே பார்ப்போம்.

 எனது தனிப்பாடல்களில் முந்நூற்றைம்பது வெண்பாக்களும், ஒருதாலாட்டும், மூன்று விருத்தங்களும், பதினைந்து கட்டளைக் கலித்துறைகளும், நானூற்று நாற்பத்துமூன்று வரிகள்கொண்ட பதினொரு நிலமண்டல ஆசிரியப்பாக்களும் இப்புத்தகத்தில் அடங்கியிருக்கின்றன. யான் இராஜநிந்தனைக் குற்றத்திற்காகச் சிறைக்கு அனுப்பப் பட்டதற்குமுன் யான் பாடிய பாக்களில் தொண்ணூற்றேழு இதன் முதற் பாகமாகவும் யான் சிறையிலிருந்த காலத்தில் பாடிய பாக்களில் இருநூற்றெண்பத்துநான்கு இதன் இரண்டாம் பாகமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கண இலக்கியப் பயிற்சி இல்லாதாரும் எனது பாக்களின் பொருள்களை இனிது உணருமாறு எனது பாக்களில் ஆங்காங்குக் காணப்படுகிற அரும்பதங்களுக்கு உரைகள் எழுதி இதன் முடிவில் சேர்த்துள்ளேன்.

Sunday, 5 September 2021

பெருந்தமிழர் வ.உ.சி 150 - 7

 

எத்தனை எழுதினாலும் என்நெஞ் சாறாதே
அத்தனேயெம் ஐயனே அரும்பேர் வித்தனே
பித்தனாய்ச் சொத்தினை விட்டனை எனவிருந்தேன்
அத்தனை ஆசையெம் விடுதலை மேலென
கத்தனும் உமக்கு கற்செக் கீந்ததில்
மொத்தமும் உணர்ந்தேன் நெஞ்செலாம் பலப்பல
குத்துவாள் கொண்ட பொத்தலாய் உடைந்தேன்
பத்தாயத்தடி சிதறும் பண்டமாய்ச் சிதறினேன்
மெத்தைமேல் நடந்தவன் சித்தனாய் ஆயினை
முத்தங்கி யணிந்தவன் முள்ளுடை உடுத்தனை
மைத்துனன் அலைந்ததும் மனையாள் நலிந்ததும்
தைத்ததெம் நெஞ்சை தம்மெழுத்தா லறிகையில்
நைத்ததெலாம் காலத்தின் நலமென்ற  தெய்வே
கைத்துதித் தேத்துவம் காலமெல் லாமுமையே

 

பெருந்தமிழர் வ.உ.சி. 150 - 6

 

உனைநினை யாநாளும் பாழெனவு ணர்ந்தொன்
றிணைவாரே நற்றமிழர்; அந்நாளில் சேனைத்
துணையாகும் நின்பரந்த  நற்பெரு  வாழ்வின்
இணையற்ற ஈகந்தொ டர்ந்து.


பெருந்தமிழர் வ.உ.சி 150 - 5

 


தோன்றிற் புகழொடு தோன்றுவ தெங்கனம்?

சாற்றிற் சிதம்பர னார்வர லாறறிய;

வள்ளுவ னார்நெறி நின்று சிறப்புடனே

வாழ்ந்திட உள்ளுவமே நாம்.

பெருந்தமிழர் வ.உ.சி 150 - 4

 

மாங்கனி பிசைந்த கையால் வரகு

மாவினைப் பிசைந்த போதும் நறுந்

தேனினைச் சுவைத்த நாவால் புளித்த

கூழினை சுவைத்த போதும் மலர்

கொக்கரை மறுத்த கையால் மரச்

செக்கினை இழுத்த போதும் யார்க்கும்

பணியாது வாழ்ந்த வாழ்வே

அணியாகும் ஐயா சிதம்பர னார்க்கே!

 

(மலர் கொக்கரை - காய்ந்த இளம் தாழம்பூ)

பெருந்தமிழர் வ.உ.சி 150 - 3

 

வாழ்ந்து நடந்த வரலாறு வஉசி

தாழ்பணிந் தேத்தச் சிறப்பு

Saturday, 4 September 2021

மெல்லக் கொல்லும் நஞ்சு

உள்ளம் ஆரியம்
உதடு திராவிடம்;
கள்ளத்தனம் கலந்த
கவிதை நீ!

தமிழ் மொழியாம்
திராவிடம் இனமாம்
இலக்கணம் பிழைத்த
கவிதை நீ!

கால இடைவெளி
படையெடுப்பென்று
கால்கள் பிடிக்கும்
கவிதை நீ!

இன்னும் முன்னோர் 
யாரென அறியா
இருநூறு ருவா
கவிதை நீ!

========================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
04-09-2021
========================

Friday, 3 September 2021

பெருந்தமிழர் வ.உ.சி 150 - 2

 

 

 
. ========================
. பெருந்தமிழர் வ.உ.சி 150 - 2
. ========================

தொடர் வண்டிச் சாளரத்தில் தொலைவில்/
கடந்துபோகும் மரங்களை மறந்தது போல்/
மறந்து போனோம் உங்களையும் பாவியேம்/
அறனிடறி வாழும் எம்மாவி கொள்ளும்/
உயிர் மூச்சில் உம் வாழ்வுண்ட/
உயிர் வளியும் உண்டென்று அறியாதே!

========================
வணக்கத்துடன்,
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
03-09-2021
========================


Wednesday, 1 September 2021

மெய் ஒன்றுதான்



சில செய்திகளை பகிர்ந்துகொள்வோம்.

1. தன்னேரில்லாத தமிழின் செவ்விலக்கியங்கள் (சங்ககால இலக்கியங்கள்) 2010 ஆம் ஆண்டு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் ஒரே தொகுதியாக வெளியிடப்பட்டது. "செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள்" எனப் பெயரிடப்பெற்ற, 1565 பக்கங்கள் கொண்ட இந்த அழகிய நூல் 300 ருபாய் விலை வைக்கப்பெற்று கழிவு போக 270 ருபாய்க்குக் கிடைக்கிறது.

2. இதனுள் 41 செவ்விலக்கியங்கள்  அடங்கி இருக்கின்றன.

3. அனைத்துப் பாக்களும் சந்தி பிரிக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன.

இருப்பதையே இன்னொரு (இல்லாத) பெயரில்  புதியது போல் வெளியிடுதல்.... ஐயப்பாட்டைத் தோற்றுவிக்கின்றது. திராவிடம் என்றொரு மொழியே இல்லாதபோது அதற்கேது களஞ்சியம்.

=================================

 சந்தி பிரிப்பதால் மூத்த தமிழ் மொழியின் பாடல்கள் உண்மை உரு இழக்கும். படிக்க எளிது என்று சொல்வதை ஏறுக்கொள்வது என்பது தமிழைக் கொல்வதற்கான ஒப்புதல் அன்றி வேறில்லை என்றே கருதுகிறேன்.

 ஏற்கனவே கவிதைகள் என்ற பெயரில் மொழியின் மூச்சுக்குழாயை நசுக்கி இருக்கிறோம். ஓசைக்காகவோ அல்லது சொல் அறியாததாலோ பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தி தமிழின் நுரையீரலுக்குள் புற்று வளர்த்திருக்கிறோம். திரைப்படப் பாடலாசிரியர்களும், பாவகை அறியாத பாவலர்களும் செவ்விலக்கணத்தைப் புறந்தள்ளி செழுமையில்லாத படைப்புகளைக் குவித்து வைத்திருக்கிறார்கள். அதிலிருந்து பிழைக்கவே அன்னை கதறுகிறாள்.

இந்நிலையில், இலக்கண அமைதியுடன் செறிந்துகிடக்கிற செவ்விலக்கியத்தைச் சீர் பிரித்தால் பலவேளைகளில் சீர் கெடும், தளை தட்டும், மொழி கெட்டு அழகிழக்கும், பொருள் திரியும். மெல்ல மெல்ல பல்லாயிரமாண்டு பழமை கொண்ட இலக்கியங்கள் அழியும்.மெல்ல மெல்லத் தமிழும்.

படிக்கும் காலத்தில் மாணவன், பாவகை அறிந்து பழம்பாடல் ஒன்றைத் தேடி, சந்தி பிரித்த பாடலைக் காணும்போது பெரும்பாலும் குழப்பமடைவது தடுக்க இயலாததாகிவிடும்.

காட்டு:- அதிகாரம்:பொருள்செயல்வகை குறள் எண்:759

1. செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கு
    மெஃகதனிற் கூரிய தில்

2. செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும்
    எஃகுஅதனின் கூரியது இல்


 ஒன்றாவது இருப்பது குறள் வெண்பா. இரண்டாவது இருப்பதை குறள்வெண்பா என்றால், தொல்காப்பியன் சினந்து கடிந்துகொள்வார்.

பெருந்தகை பாவாணர் இல்லையே,  பாவலரேறு பெருஞ்சித்திரனார் இல்லையே... அரற்றுகிறாள் தமிழன்னை.

அன்புக்குரிய தமிழ்ப் பேராசிரியர்களே, தமிழாசிரியர்களே, தமிழறிஞர்களே வாய் திறந்து பேசுங்கள். தமிழன்னைக்கு நீங்கள் செய்யவேண்டிய கடமை இதுவென எண்ணிக் குரல்கொடுங்கள்.

வேண்டாம் திராவிடக் களஞ்சியம்.