Friday, 31 December 2021

ஆவணியா? தையா? சித்திரையா?

 



திசம்பர் / மார்கழி மாதம் வந்துவிட்டாலே பனி விழத்தொடங்கும். கூடவேதையாசித்திரையா என்ற பேச்சுக்களும் எழத்தொடங்கும். புத்தாண்டு எதுவென்பதில் சிக்கல் இன்னும் தீர்ந்தபாடில்லை.

பாட்டி இருந்தவரை எங்கள் வீட்டில்ஆவணி முதல் ஞாயிறன்றுதைப்பொங்கல் போலவேபொங்கல்இட்டு கதிரவனை வழிபடும் முறையும் இருந்தது. அன்று பச்சரிசியில் செய்யப்படும் தோசைதான் காலை உணவு. ( அன்றைய காலத்தில் நாள் தோறும் தோசை, இட்டலி உண்ணும் வழக்கம் இல்லை. தோசை ஒரு விழாக்கால அல்லது விருந்துணவு ) இன்னும் சில வீடுகளில் இந்தப் பழக்கம் இருக்கிறது. அப்படியானால் எங்களுக்கு தையா? சித்திரையா? ஆவணியா? என மூன்று சிக்கல்கள் இருக்கிறது.

ஆனால், எல்லோர் வீடுகளிலும், மளிகைக்கடை அண்ணாச்சி தொடங்கி மலபார் கோல்டு வரைக்கும் கேட்டு வாங்கிய நாள்காட்டிகள் ஆடிக்கொண்டிருக்கின்றன. அவை எல்லாமே சனவரி 1 புத்தாண்டு என்கின்றன. கூடவேஆப்பி நியூ இயர் அண்ணாச்சிஎன்ற குரலும்ஆப்பி நியூ இயர் சார்என்ற மலையாளச் சேட்டனின் குரலும்.

இப்படிச் சொன்னால் நண்பர்கள்தமிழ்ப் புத்தாண்டுஎதுவென்பதுதான் சிக்கலே தவிர ஆங்கிலப் புத்தாண்டுக்கு இல்லை என்கிறார்கள். சரி ஆண்டு நமக்கு எதற்கென்று கேட்டால் ஒரு நிமிடம் யோசனை செய்கிறார்கள்.

நம்முடைய பிறப்புச் சான்றிதழ் ஆங்கில ஆண்டுக் கணக்கில்தான் வழங்கப்பெறுகிறது. நம்மை பள்ளியில் சேர்த்ததும் அதனடிப்படையில் தான். பணியில் சேர்ந்தது, சம்பளம் பெற்றது, அகவிலைப்படி உயர்வு அரியர்சு கிடைத்தது, ஓய்வு பெறுவது, ஓய்வூதியம் பெறுவது அத்தனையும் அதன் அடிப்படையில்தான்.

எல்ஐசி பிரிமியம் செலுத்துவதும் முதிர்வுத்தொகை கிடைத்ததும், வீட்டுக்கடன் பெற்றதும், திரும்பக்கட்டுவதும், மருத்துவமனைக் கட்டணமும், மருத்துவரிடம் செல்லவேண்டிய நாள்களும்இன்னும் என்னவெல்லாம் உண்டோ அத்தனையும் அந்த பிறப்புச் சான்றிதழ் அடிப்படையில்தான்.

திடீரென ஒருநாள் முளைத்த, விழி, விரல் என அத்தனைத் தகவல்களையும் தன்னுள்ளே வைத்திருக்கிற ஆதார் கார்டு தொலைந்துபோனால்ஐப்பசி 12” என்று தேட முடியாது, “அக்டோபர் 28” என்றுதான் தேட இயலும்.

நம் பிள்ளைகள்  நம் இறப்புச் சான்றிதழையும், வாரிசுச் சான்றிதழையும் கூட ஆங்கில ஆண்டு தேதியிட்டுத்தான் வாங்கப்போகிறார்கள்.  இதில் எங்கே வருகிறது தமிழாண்டு.

இதனோடு பேராசிரியர் இராமசுப்பிரமணியன் சொல்வதுபோல

//தை 1-ஐ தமிழ் ஆண்டுப்பிறப்பாக ஏற்க மறுக்கும் இந்த மத அடிப்படைவாதிகள், ஆங்கில, கிருத்துவ ஆண்டுப்பிறப்பான ஜனவரி முதல் நாளை எவ்விதத் தயக்கமும் (வெட்கமும்) இன்றி கொண்டாடுகிறார்கள் என்பதுதான். டிசம்பர் 31 நள்ளிரவு வழிபாடுகள் கிருத்துவத் தேவாலயங்களில் மட்டுமே நிகழ்ந்த காலம்போய், இந்துப் பெருந்தெய்வ வழிபாடாக மாறியிருக்கிறது என்பதையும் நாம் பார்க்கவேண்டியிருக்கிறது.// என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. திருச்சிராப்பள்ளி ஐயப்பன் கோயிலில் ஒரு கி.மீ. க்கு வரிசைகட்டி நின்ற மக்களைப் பார்த்திருக்கிறேன். வடபழனி முருகன் கோயிலிலும் அதே நிலைதான். குளித்து புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன் வருபவர்களை ஏராளம் பார்க்கமுடியும்.

உள்ளத்தளவில் சனவரி முதல்நாளை புத்தாண்டாக ஏற்றுக்கொண்டு, கொண்டாட்ட மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டதையே இது காட்டுகிறது. காரணம் கட்டுரையின் மேலே சொன்னவற்றின் தாக்கமாக இருக்கலாம். வாழ்வின் எல்லா இடங்களிலும் ஆளும் அரசு (மக்களாட்சி/மன்னராட்சி) பயன்படுத்தும் ஆண்டு முறையே ஆதிக்கம் செலுத்துகிறது. மற்றவை வெறும் சடங்குகளாக மாற்றம் பெற்றுவிடுகின்றன. அப்படியெனில்ஆண்டுஎன்பது அரசியல் காரணங்களுக்காக ஆள்பவர்களால் தீர்மானிக்கப்படுகிறது என்பது உறுதியாகிறது.

அதனால்தான் தமிழ்ப்புத்தாண்டு என்று வரும்போது தையா சித்திரையா என்ற சிக்கல் வருகிறது. மறந்துவிடாதீர்கள் எங்கள் பகுதியில் ஆவணியும் அந்தப் பட்டியலில் இணைந்துகொள்ளும். பண்டைய சேரநாட்டின் நீட்சியாக இன்றைய கேரளமும் ஆவணியை முதன்மைப் படுத்துகிறது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.

சேரநாட்டுத் தமிழில் (சமற்கிருதம் கலந்த மலையாளம்) அண்டு அல்லது ஆண்டு என்ற சொல் மூங்கிலைக் குறிக்கும். மூங்கில் அருகருகே முளைக்கும் தன்மையுடையது. அதுவே அண்டு முளை எனப்பட்டது  (சொற்பிறப்பியல் பேரகரமுதலி). குமரித் தமிழில் "என்னடே அம்மைக்க அண்டையிலேயே இருக்க, அடக்கோழி போல" என்றெல்லாம் கேட்கலாம். சென்னைத் தமிழில் 'கோயிலாண்ட" "வீட்டாண்ட" என்றெல்லாம் கேட்கலாம். வியப்பான செய்தி என்னவென்றால் மூங்கில் கார்காலத்தில் ஆண்டுக்கு ஒருமுறை முளைக்கும் தன்மை கொண்டது. மூங்கிலைக் குறிக்கும் அந்த "அண்டு' "ஆண்டு" என்ற சொல்லே சேரர் காலத்தில் ஆண்டைக் குறிக்கும் சொல்லாகவும் மாறியிருக்கலாம். ஆவணியில் முளைக்கும் அண்டு, ஆண்டாக மாறி சேரமண்ணில் ஆண்டுப்பிறப்பாக நடந்தேறி இருக்கலாம். இன்று கர்நாடகத்தில் இருக்கும் குதிரைமலையில் இருந்து கன்னியாகுமரி வரை ஆவணியில் பொங்கல் ஆண்டாண்டுகளாய் இருந்திருக்கலாம்.

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்

மாயோன் மேய ஓண நல் நாள்

(மதுரைக்காஞ்சி: 590-591)

சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்

கடுங் களிறு ஓட்டலின், காணுநர் இட்ட

(மதுரைக்காஞ்சி 596-597)

இவ்விரண்டு வரிகளும் பாண்டிநாட்டில் ஆவணி மாத ஓணம் (புத்தாண்டை வரவேற்கும் பண்டிகையாக இருக்கலாம்) கொண்டாடப்பட்டதைக் குறிக்கிறது. ஓண நாளில், உயர்ந்த சுவர்கள் போன்ற தடுப்புகளின் மேல் நின்று மக்கள் கண்டுகளிக்க, கீழே யானைகளை ஓடவிட்டு போர் விளையாட்டு நடைபெற்றதும் குறிக்கப்பெறுகிறது.

காலம் செல்லச்செல்ல மாந்தனின் அறிவு விரிவடைய, கணக்கீடுகள் அதிகரித்திருக்கும். தொடர்ச்சியாக மருதநில பேரரசுகளின் வளர்ச்சி, பொருள், வணிகம் இவற்றின் தலையீடு, ஆதிக்கம் போன்றவை இணைந்து இயற்கையின் காட்சித் தெரிவிலிருந்து வானியல் கணக்குகளின் ஊடாக ஆண்டுஎன்பது மறு உருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

பத்தாண்டுகளுக்கும் மேலாக, தமிழ்ப்புத்தாண்டு குறித்தான ஆய்வுகளை நிழல்கணிதத்தின் வழியாக நடத்திவரும் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்என்ற ஆய்வமைப்பிலிருந்து பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் ஐயா பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

பகலில் நிழலைக் கொண்டும் இரவில் விண்மீன்களின் நிலையைக் கண்டும் கிழமையைக் குறித்தவன் தமிழன். தை முதல் நாள் எதுவென கணியர்கள் கணித்துச் சொல்ல, அதை மக்களுக்கு பறையறைந்து அறிவித்தார்கள் மூவேந்தர்கள்.

மார்கழி மாத உவா நாள்... அதாவது அமாவாசை... அது முடிந்து வானில் தெற்கு முகமாய் மூன்றாம் பிறை தெரியும் நாளே தை முதல் நாள். பிறை தெரியும் முன்பே, பகலில் நிழல் விழும் திசை அடிப்படையில் இந்நாளை அறிய முடியும். பிறை பார்ப்பது சாமானியருக்கும் எளிது.

பிறை கண்ட நாள் முதல், பௌர்ணமி வரை அடுத்த 12 நாட்களுமே நாம் புத்தாண்டைக் கொண்டாடலாம். இந்தக் கணக்கின்படி எல்லா பூரணை... அதாவது எல்லா பௌர்ணமிகளும் செவ்வாய்க்கிழமைகளில் வரும். எல்லா உவா நாட்களும் வெள்ளிக்கிழமைகளில் வரும். இதனால்தான் நாம் மரபுப் பழக்கமாகவே வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் விளக்கேற்றுகிறோம். உலகம் முழுதும் பயன்பாட்டில் இருக்கும் எந்த நாள்காட்டியும் இப்படியொரு கணிதத் துல்லியத்தை தந்ததில்லை.

இந்த மண்ணில் சோழன் வீர ராஜேந்திரன் காலம் வரை இந்த நாள்காட்டி பயன்பாட்டில் இருந்தது! தஞ்சை பெரிய கோயிலில் இறைவனுக்கு வாழைப்பழம் படைக்க செலவுக்கு தினம் ஒரு காசு வீதம் ஆண்டுக்கு 360 காசுகள் கொடுத்ததாகக் கல்வெட்டு கூட இருக்கிறது!’’ என்கிறார் அவர். இதுவரைமரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்ஆண்டு குறித்தான 101 பதிவுகளை வெளியிட்டிருக்கிறது.

பேரரசுக்காலத்தில் பாண்டியர்களும் சோழர்களும் ஆட்டை(ஆண்டு) அறிவித்தலை பறையறைந்து விழாவாகவே நடத்தியிருக்கிறார்கள். தை மாதமே முதன்மையாக வைக்கப்பட்டிருக்கிறது. அதனுடைய தாக்கம் சேரமண்ணில்ஆவணிதன் மதிப்பை மெல்ல இழந்திருக்கலாம். கூடவே நம்பூதிரிப் பிராமணர்களின் வருகையும், சேர குறுநில மன்னரிடையே அவர்கள் பெற்ற செல்வாக்கும் சேர மண்ணின் புத்தாண்டை ஆவணியிலிருந்து மெல்ல புரட்டாசிக்கு நகர்த்தியது என்பதை வரலாறு காட்டுகிறது. ஆனால் கி.பி. 824 ல் கணியர்களால் பரிந்துரைக்கப்பட்டு உதயமார்த்தாண்டவர்மா என்னும் மன்னரால் நடைமுறைப்படுத்தப்பட்ட கொல்லம் ஆண்டுஆவணிமாதத்தில்தான் தொடங்குகிறது. அதுவே மலையாள ஆண்டாக இன்றளவும் கொள்ளப்படுகிறது.

தமிழ் நாட்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின் மெல்ல சித்திரையை நோக்கி புத்தாண்டு நகர்த்தப்பட்டிருக்கலாம். சித்திரை முதல் மாதமாகத் தமிழர் கொண்டிருந்தனர் என்ற செய்தியை நெடுநல்வாடையின் நச்சினார்க்கினியர்உரையிலிருந்து பலர் எடுத்தாள்கிறார்கள்.

அந்த வரிகள்:

புதுவது இயன்ற மெழுகுசெய் படமிசைத்

திண்நிலை மருப்பின் ஆடுதலை யாக

விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து

முரண்மிகு சிறப்பின் செல்வனோடு நிலைஇய

உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிரா (நெடுநல்வாடை. 159 - 163)

இந்த வரிகள் சொல்லும் செய்தி, வானியல் அடிப்படையில் இருப்பதாகக் கொண்டு மேழம் முதல் ஆண்டுத் தொடக்கம் என்கிறார்கள். (மேழம் என்ற சொல்லே பாடலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது) அடிப்படையில் பாண்டியர்கள்சந்திர வமிசத்தார்என்ற செய்தியை அவர்களது மெய்கீர்த்திகள் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது. நிலவை முகாமையானதாகக் கொண்டவர்கள் என்பது பொருளாகிறது. இந்தப் பாடலும் அப்படியான ஒரு செய்தியைத்தான் கூறுகிறது.

கொம்புகள் கொண்ட ஆடு தலையாகக் கொண்டு கதிரவன் சுற்றிவரும் நீண்ட பாதையினின்று மாறுபட்ட மிக்கச் சிறப்பையுடைய செல்வனாகிய நிலவோடு நிலைத்திருக்கிற உரோகிணிஎன்பதால் மேலே மெழுகால் வரையப்பட்டிருந்தது நிலவு உரோகிணியோடு சேர்ந்திருந்ததைக் குறித்த ஓவியமே என்பது புலனாகிறது. வானியல் அடிப்படையில் நோக்கினால் அது கார்த்திகை மாத முழு நிலவைக் குறிக்கும் ஓவியம். அதாவது திருக்கார்த்திகை குறித்த ஓவியம். பாண்டியர்களுக்கு நிலவும் கார்த்திகை மாதமும் பெருமைக்குரியதாய் இருந்ததைக் கூட இந்த வரிகள் கூறுவதாக எடுத்துக்கொள்ளலாம். “கார்த்திகை விளக்கீடு”, “திருக்கார்த்திகை  தமிழர்களின் முகாமையான பண்டிகை என்பதும் பல்வேறு இலக்கியப் பாடல்களில் குறிக்கப்பெறுகிறது என்பதையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்வோம்.

எது எப்படியாயினும் ஆவணி, தை, சித்திரை மாதங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் சிறப்புற்றிருந்தன என்பதை அறிய முடிகிறது. இப்பொழுது சனவரி.

இங்குதான் புத்தாண்டுக்கான சிக்கல்களும் தொடங்குகின்றன. யாருடைய ஆட்சிக்காலத்தின் வழிமுறையை சடங்காகக் கொள்வது என்பதிலேதான் குழப்பம்.

கணக்கு என்று வந்துவிட்டால் ஆங்கில ஆண்டுமுறையே குழப்பம் நிறைந்ததுதான். சில மாதங்களுக்கு முப்பது நாட்கள், சில மாதங்களுக்கு முப்பத்தொரு நாட்கள். ஒரு மாதத்திற்கு இருபத்தியேழு நாட்கள். திடீரென இருபத்தியெட்டு நாட்கள். (இதையே தென்னன்மெய்ம்மன் குறைத்தால் நமக்கு ஒப்புக்கொள்ள மனமில்லை). இந்த ஆண்டுமுறை 1582 அக்டோபர் 4 ஆம் தியதி யிலிருந்து பத்து நாட்கள் தள்ளி வைக்கப்பட்டது. ஆம் 1582 அக்டோபர் 5ஆம் தியதி 15 ஆம் தியதி என்று அறிவிக்கப்பட்டது. இல்லையென்றால் தை முதல் நாளும், சனவரி முதல் நாளும் ஏறத்தாழ ஒரே நாட்களாகத்தான் வந்திருக்கும். ஏன் பத்து நாட்கள் தள்ளினார்கள் என்றால் அதுதான்ஆண்டுஎன்பதன் அரசியல்.  அறிவியல்படி பூமி கதிரவனைச் சுற்றிவர 365.25 நாட்கள் ஆகிறது. அதனால் தான்என்று பின்னூட்டம் இட்டுவிடாதீர்கள். பதிவு ஆண்டுப் பிறப்புகுறித்தானது.

அமெரிக்காவில் ஏற்கனவேமெட்ரிக் வாரம்என்ற கருத்தாக்கம் பிறந்துவிட்டது. வருங்காலங்களில்ஆண்டுஎன்ற ஒன்று தேவையில்லாமல் கூட போய்விட வாய்ப்பிருக்கிறது. (ஏற்கனவே நம் ஊர் தொலைபேசி நிறுவனங்களில் மாதம் என்ற ஒன்று இல்லை. 28 நாட்கள், 56 நாட்கள், 84 நாட்கள் என்று நாள் கணக்குக்கு வந்துவிட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.). வணிகம் நாளை ஆண்டு என்பதை இல்லாதாக்கிவிடலாம்.

தமிழகத்தில் பண்டைய முறையில் இருந்த ஆண்டுப்பிறப்பைக் கணக்கீடுகளின் படி கொண்டாட விரும்பினால், “தைமாதத்தைத் தேர்வு செய்வதுதான் எளிமையானது. தையும் சித்திரையும் கதிரவனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்படுகிறது. இந்தக் கணக்கீடுகளின் தொடக்கம் கூட தை மாதத்திலேயே இருந்திருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.

அண்டு (மூங்கில்) முளைத்த இயற்கையிலிருந்து, கணக்கீடுகளுக்குள் வர முனைந்த மாந்தனுக்கு இயல்பான எளிமையான வழிகளே முதலில் தோன்றியிருக்கும் என்பதே அடிப்படை மாந்தவியல் கூற்று. தெற்கும் வடக்குமாக நரும் கதிரவனின் நகர்வை தொடர்ந்து கண்காணித்து நினைவுப் பதிவாகச் செய்து வைக்க விரும்பிய முதல் மாந்தனிடம் பெரிதாகக் கருவிகள் ஏதும் இருந்திருக்காது. இயற்கையில் நடைபெறும் சில நிகழ்வுகளையும் (மூங்கில் முளைத்தல், நாணல் பூத்தல், கூதாளம் பூத்தல்) கதிரவனது நகர்வையும் இணைத்து நினைவில் நிறுத்தியிருப்பான். அதன் பின்னரே கணிக்கும் முறைகள், கருவிகள், விண்மீன் ஒப்பீடு ஆகியன பிறந்திருக்கும்.

நீங்கள் ஒரு மட்டைப்பந்து மைதானத்தில் பார்வையாளராக இருக்கிறீர்கள். உங்கள் பார்வையில் இருக்கும் பரப்பின் நடுப்பகுதியை கருவிகள் அல்லது குறியீடுகளின்றி சரியாக அறிய இயலாது. ஆனால் உங்கள் பார்வையில் படும் மைதானத்தின் வலப்புற, இடப்புற முனைகளை நீங்கள் எளிதாக அறிந்துவிட இயலும். ஓடிக்கொண்டிருக்கும் விளையாட்டு வீரர் நடுவில் இருக்கிறார் என்பதை விட முனைகளுக்குச் சென்றுவிட்டார் என்பதை நீங்கள் துல்லியமாக உணர இயலும்.

தெற்கும் வடக்குமாக மிக நீண்ட தொலைவுக்கு கதிரவன் நகர்கிறது. அதில் நடுப்பகுதியைவிட முனைகளை எளிதாக அறிந்துகொள்ள முடியும். அதிலும் தென் புலத்தில் வாழ்ந்த தமிழர்களால் கதிரவன் தென்முனையைத் தொடுவதை துல்லியமாக அறிந்துவிட இயலும். குறிப்பாகக் கடலோடிகள் நிறைந்திருந்த இந்த மண்ணுக்கு இது இயல்பாக நிகழ்ந்திருக்கக் கூடியதே. மார்கழி மாதம் பதினைந்தாவது நாள் தொடங்கி உங்கள் வீட்டு நிலைப்படியில் காலையில் விழும் வெயிலையும் நிழலையும் கவனித்து வந்தாலே கதிரவன் தெற்கைத்தொட்டு வடக்கே திரும்பும் நிகழ்வை தெரிந்துகொள்ளலாம். அத்தனை எளிது அது. வெட்டவெளியில்கூட ஒருமரம் இருந்தால் போதும்.

ஆனால் இதுபோல் நடுப்பகுதியை அறிய விரும்பினால்நீங்கள் நிறைய வேலைகள் செய்யவேண்டியிருக்கும். எளிதானது அற்றத்தை அறிவது, அதிலும் தமிழருக்கு எளிதானது தெற்கற்றத்தை அறிவது. தெற்கிலிருந்து சென்று மீண்டும் தெற்கைத் தொடுவது ஒரு சுற்று. தையில் தொடங்கும் சுற்று. கணக்கீடுகள் அதிகம் இல்லாதபோதும் ஒப்பீடுகளின் வழியாக பண்டைய மாந்தன் இதை அறிந்திருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். இதுவே தமிழகத்தில் மூங்கிலில் பிறந்த ஆண்டு, வானியலுக்கு மாறிய முதல் வழியாக இருக்கலாம். அதுவே தை முதல் நாள் பிறக்கும் ஆண்டு.

எளிதானவற்றிலிருந்து கடினமானவற்றை அணுகுவதே மாந்த இயல்பு. நிழல் கணிதம் வளர்ந்து கணக்கீடுகள் தொகுக்கப் பெற்று அதிலிருந்து பஞ்சாங்கம் பிறந்திருக்கலாம். அந்த நிலையில்கூட தையிலிருந்து சித்திரைக்கு மாற்ற வேண்டிய தேவை வந்திருக்காது.

முதலில் கூறியது போல ஆண்டு என்பது ஆட்சியாளர்கள் தொடர்புடையது. அதனால் தான் ஆட்சி மாற்றங்களின் போது சித்திரைத் தொடக்கமும் அதன் பின்னால் சனவரித் தொடக்கமும் வந்துவிட்டது. நாளை உலகமெங்கும் சீனா ஆளத்தொடங்கினால் புத்தாண்டு நாள் மாறிப்போகும்.

இப்பொழுது நீங்கள் கொண்டாட விரும்பும் புத்தாண்டு நீங்கள் யார் என்பதைச் சொல்லும் அவ்வளவுதான். வேறெதுவும் மாறிவிடப்போவதில்லை. நீங்களும் மாறப்போவதில்லை. ஏனென்றால் நம் வாழ்க்கைச் சுழலிலிருந்து தற்பொழுது சனவரியைப் பிரித்துவிட இயலாது.

நிழல்கணிதத்தின் படி தை முதல்நாளை சரியாகச் சொல்லிவிட்டாலும் கூட ஆண்டுக் கணக்கு சனவரியிலேயேதான் இருக்கும்.

தை முதல்நாளை பஞ்சாங்கத்தில் பார்த்துவிடலாம் என்றால் சிறீரங்கம் பஞ்சாங்கம் 2022 சனவரி 14 ல் கதிரவன் மகரத்தில் நுழைகிறான் என்கிறது. அகோபில மடம் பஞ்சாங்கம் 2022 சனவரி 15 ல் கதிரவன் மகரத்தில் நுழைகிறான் என்கிறது.  மேலும் 2022 சனவரி 13 ல் வைகுண்ட ஏகாதசி என்கிறது. ஆனால் சிறீரங்கம் பஞ்சாங்கத்தின் படி சொர்க்கவாசல்  14 திசம்பர் 2021 லேயே திறந்துவிட்டது. கடந்த ஆண்டின் பிள்ளையார் சதுர்த்தி போன்ற பண்டிகைகளுக்கும் பஞ்சாங்கங்களில் ஒருமித்த நேரம் காணப்பெறவில்லை.

பஞ்சாங்கங்கள் வானியலின் அடிப்படையில் அமைக்கப்பட்டது என்றால் அவை வானியல் நோக்கில் புவியின் தலையாட்டத்தைக் (சாய்மானத்தைக்) கணக்கில்கொண்டு  தொடர்ந்து சீரமைக்கப் படவேண்டும். அது நடைபெறவில்லை என்பதாலேயே அவை தங்களுக்குள் மாறுபாடு அடைகின்றன. அதை சரி செய்யாமல் பேசுவதில் பயனில்லை.

மார்கழி இறுதிநாள் சம்பளம், தை 1 புத்தாண்டு என்று சொல்ல இயலாதவரை இங்கு புத்தாண்டு என்பது சனவரி 1 ஆகவே இருக்கும்.

                                                            ==========

படம்: மறைமலைவேலனார்

துணை செய்த பதிவுகள்:

1. https://www.chirappallimathevan.com/2019/08/blog-post_18.html

 2. https://www.chirappallimathevan.com/2020/01/blog-post_11.html

3. https://www.chirappallimathevan.com/2018/09/1.html

4. https://www.chirappallimathevan.com/2018/09/2.html

5. https://www.facebook.com/ramasubramanian.subbiah/posts/1782498528611277

6. https://www.facebook.com/ramasubramanian.subbiah/posts/1782304791963984

 

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்