Monday, 31 January 2022

வீடு

 

 

முட்டையில் இருக்கையிலே எனக்கு

ஓட்டின் அளவேதான் உலகம்.

தட்டியுடைத்து வெளிவரவே தாயிறகும்

காய்ந்தபுல்லும், கையளவே உலகம்.

மெல்ல நடந்து மென்சிறகு அசைக்கையிலே

சின்னத் தளிரும் சிறுகிளையும் என்னுலகம்.

பட்டென்று வீழ்ந்தொருநாள்

அச்சத்தில் பறக்கையிலே

நீலவானம் ஆறுகடல்

பாலைவனம் வானமலை

தாங்கி நிற்கும் பேருருண்டை

வீடெனவே புரிந்ததம்மா!!

 


Monday, 24 January 2022

திருமுன் தமிழ் - தாழைப்பத்து 10

 

வயல் நடுவே விண்ணவன் எம்பிரான் கோவில், தாழக்குடி

பாடல் 10 : நிறைவுப் பாடல்

பழைய தாழக்குடிக்கு மேற்கே ஓடிய பழையாற்றின் வெள்ளப் பெருக்கிலிருந்து தப்பிக்க, கிழக்கு நோக்கி நகர்ந்த மக்கள் புதிய ஊரை உருவாக்கிக் கொண்டார்கள். இன்றைய ஊரின் மேற்கெல்லையே பண்டு கீழெல்லையாக இருந்திருக்கிறது. அருகிலிருக்கும் வயல்களில் உழவுக் காலத்தில் பாண்டங்களும், சிறு சிலைகளும் கிடைத்திருக்கின்றன.

வயல்களுக்கு நடுவே “விண்ணவன் எம்பிரான் கோயில்” அங்கே பழைய ஊர் இருந்ததற்கான  அடையாளத்தை நினைவுபடுத்திக்கொண்டு தனியே நிற்கிறது.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் கல்வெட்டு “தாழைக்குடி” “சேந்தபிரான்” என்ற பண்டைய பெயர்களைத் தாங்கிய சான்றாக இருக்கிறது.

இவை மட்டுமின்றி, நான்காவது பாடலில் குறிப்பிடப்படும் “மலையடிக்குறிச்சிக் கல்வெட்டு”, தென்காசிப் பாண்டியர் சின்னம், வேணாட்டரசின் கட்டிட அமைப்பு, “திருவாங்கூர் அரசு ஆவணம்” இவையெல்லாம் கூறும் செய்திகளைக் கொண்டே இந்தத் “தாழைப் பத்து” வரலாற்றுப் பாடல்களாக, வெண்பாக்களாக எழுதப் பெற்றிருக்கிறது.

 சொற்பொருள்:

படிஞாயிறு        - மேற்கு (இந்தச் செந்தமிழ்ச் சொல் இதே பொருளில் கொடு மலையாளமாகவும் இருக்கிறது)

பழையாறு      - கோட்டாறு

நடுப்பத்து        - வயல்நடுவே

விண்ணவன் - திருமால்

பொறிப்பு        - கல்வெட்டு

 

 பாடல் 10 : நிறைவுப் பாடல்

படிஞாயிற் றுப்பழையா றும்நடுப்பத் தில்ஓர்

அடிகாணா விண்ணவனும் நெல்லையப் பர்சேர்

வடிவுடை யாள்திருந டைப்பொறிப் பும்சீர்

அடிகொடுக் கச்சிறந்த பத்து

 =================

இந்தப் பாடலோடு “தாழைப் பத்து” நிறைவுபெறுகிறது.

இதுவரை படித்த, படித்துக் கருத்திட்ட அனைவருக்கும் நன்றியும் வணக்கமும் உரித்தாகட்டும்.

இன்னொரு நாள் “சிவந்தரப் பத்து”ப் பாக்களில் சந்திப்போம்.

பழையாறு

நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி

 

Sunday, 23 January 2022

திருமுன் தமிழ் - தாழைப்பத்து 9

 

திருக்கல்யாணம் : 22-01-2022 சனிக்கிழமை

பாடல் 9 : திருக்கல்யாணம் விளக்கம்

ஏராளமான சிவன்கோயில்களில் திருக்கல்யாண விழா நடைபெறுவதைப் போலவே இங்கும் நடைபெற்று வந்திருக்கிறது. ஆனால், மிகச் சிறிய அளவிலேயே நடைபெற்றிருக்கிறது.

சேந்தநாதன் கோயிலில் தேவரடியாராக இருந்த காளியம்மை என்பார் கி.பி. 1756ல் திருவாங்கூர் மன்னரிடம் தன்னுடைய சொத்துகளிலிருந்து 13 ஏக்கர் நன்செய் நிலத்தை தாழக்குடி சேந்தநாதன் அழகம்மை திருக்கல்யாணத்திற்காக எழுதிக் கொடுத்தார். (காவிரிக்கரை போல் அல்ல, நாஞ்சிநாட்டில் 13 ஏக்கர் என்பது அன்றைய காலகட்டத்தில் பெருஞ்சொத்து.)

அதைத் தொடர்ந்து திருப்பதிசாரம் போற்றிமார் மடப்பாட்டுக் கச்சேரி யிலிருந்து ஆண்டுதோறும் தை மாதத்தில் திருக்கல்யாணம் நடத்தும் ஏற்பாட்டை மன்னர் செய்தார். அதன்படி ஐந்து நாட்கள் திருமண விழா வெகு விமரிசையாக நடந்துவருகிறது. ஊர் முழுக்க வடை பாயாசங்களுடன் சோறிட்டு, அந்தப் பகுதியிலேயே சிறப்பானதொரு திருவிழாவாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் திருக்கல்யாணம் நேற்று 22-01-2022 சனிக்கிழமை, சிறப்பாக நடைபெற்றது.

ஆடலிலும் பாடலிலும் சிறந்த “ராயர்பட்டம் பெற்ற காளியம்மை விட்டுக் கொடுத்த சொத்தின் வருமானத்திலிருந்து அழகம்மை, சேந்தநாதன் திருமணத் திருவிழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தேவரடியார்கள் கோயில்களுக்கு நிவந்தம் கொடுத்த நிகழ்வுகள் பலவுண்டு. தாழக்குடியிலும் அதற்கொரு பெருஞ்சான்று தைமாதம் நடைபெறும் திருக்கல்யாணமும் ஐந்து நாட்கள் பெருவிருந்தும். இதற்கான ஆவணங்கள் உள்ளன.

தாழக்குடி ஊர் உள்ளவரை காளியம்மை பெயர் சிறப்புற விளங்கட்டும்.

 

சொற்பொருள்:

மாதேவன்  - சிவன்

மன்றல்      - திருமணம்

விழவு        - விழா

தன்வழி     - தானே விரும்பி

கொள் புகழ் - கொண்ட புகழ்

 

பாடல் 9 திருக்கல்யாணம்


மன்னும் அழகம்மை மாதேவன் சேந்தநாதன்

மன்றல் விழவிற்கு மாதரசி காளியம்மை

தன்வழி யீந்தநிலம் தாழைநக ருள்ளவரை

பெண்ணவர் கொள்புக ழாம்.

 



அழகம்மைக் கோவில் முன்மண்டபம்

 

Saturday, 22 January 2022

திருமுன் தமிழ் - தாழைப்பத்து 8

 

தேர் நிலைப் படி

பாடல் 8 தேர் - விளக்கம்

சிவன்கோயில் மட்டும் இருந்தபோதே தேர்த் திருவிழா நடந்திருக்கிறது போலும். மிகப்பெரிய தேர் ஒன்று இருந்ததன் அடையாளமாக, கீழத்தெருவும் மாடத்தெருவும் சந்திக்கும் மூலையில் பெரிய கல் நிலைப்படி ஒன்று இன்னும் இருக்கிறது. இந்தப் படியில் ஏறியே பழைய தேரின் தளத்திற்குச் செல்ல முடியும் எனும் போது அந்தத் தேரின் உயரத்தை அறிந்துகொள்ள முடிகிறது.

ஏதோ ஓர் ஆண்டில் ஒரு சிறுவனின் மீதேறி அவனது உயிர் பறித்ததால் தாழக்குடி ஊர் மக்கள் அந்தத் தேரை உடைத்து நந்தவன மடத்திற்குப் பின்புறமுள்ள குளத்தில் புதைத்துவிட்டார்களாம். அதன் பிறகு அவ்வளவு பெரிய தேர் செய்ய முடியாமல், பூதப்பாண்டியிலிருந்து தருவிக்கப்பட்ட சிறிய தேரையே விழாவிற்குப் பயன்படுத்துகிறார்கள். நந்தவனக்குளத்தில் குளிக்கும் வழக்கத்தையும் நிறுத்திவிட்டார்கள் போலிருக்கிறது.

சேந்தநாதன் கோயிலிலிருந்து அழகம்மைக் கோயிலுக்குச் செல்லும் வழியில் இடது புறம் முதல் தூணில் தேரின் சக்கரத்தில் வீழ்ந்துகிடக்கும் சிறுவனும், அதைத் தேரிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் பூசாரியும் கொண்ட சிற்பம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது.

வயதான ஒருவர் தூக்கிட்டுச் செத்ததால், தேரை அழித்ததார்கள் என்ற கதையும் உண்டு.

சொற்பொருள்:

நிலை - தேர் நிறுத்தும் இடம்

மருங்கு - எல்லை

 

பாடல் 8 தேர்

பெருந்தேர் நிலையும் மருங்கி லிருக்க

சிறுவனு யிர்பறித்த சிற்பமும் தூணில்

அருந்தேர் வெறுத்தே அறுத்துப் புதைத்தச்

சிறுகுள மும்கதைச் சான்று

 

தூண் சிற்பம்

இப்பொழுதுள்ள தேர்

Friday, 21 January 2022

திருமுன் தமிழ் - தாழைப்பத்து 7

 


பாடல் 7 அழகம்மைக்கு கோயில் கட்டப்பட்டது

கி.பி. 625-640 சேந்தன் செழியனால் கருவறை கட்டப்பட்டு, கி.பி.1125ல் பெரிய மண்டபங்கள் கட்டப்பட்டும்  பலகாலம், ஏறத்தாழ கி.பி 1325 வரை சிவன் கோயில் மட்டுமே பெரியதாக இருந்திருக்கிறது. அம்மைக்குக் கோவில் இல்லை. அதன்பிறகேஅழகம்மைஅருகில் இருத்தப்பட்டிருக்கிறாள். வீர கேரளன் கட்டிய கோயிலில் இடப்புறம் இடம் இல்லாத காரணத்தால்அழகம்மைவலப்புறம் அமைக்கப்பட்டாள். நிறைய கோயில்களில் இந்த அமைப்பைப் பார்க்கலாம்.

கட்டப்பட்ட காலத்தில் பாண்டியன் வீரபாண்டியனது ஆட்சியில் இந்தப் பகுதி இருந்திருக்கலாம்.

மற்றொன்று;

தென்காசிப் பாண்டியர்களின் சின்னமான கொம்புடைய மகரமீன் முன்பக்க மண்டபத்தில் காணப்படுகிறது. என்றால் சீரமைப்பு கி.பி. 1460 சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் காலமாகவும் இருக்கலாம்.

எப்படியென்றாலும் அழகம்மைக்கான கோவில் பிற்காலத்தையதே என்பது உறுதிப்படுகிறது.

 சொற்பொருள்:

சேந்தன் - சிவன்

தனியனாய் - இலிங்கம் மட்டுமே

ஏந்திழை - இங்கே மலைமகள்

இழைத்தல் - செதுக்கிச் செய்தல்

தளி - கோவில்

பாடல் 7 அழகம்மைக்கு கோயில் கட்டப்பட்டது

சேந்தனாய் செவ்வேள் சிவனாய் தனியனாய்/

மாந்தர்தொ ழும்தாழை யம்பதியு டையாரோ/

டாண்டுப லத்தாண் டியபின் வலப்புறத்தே/

ஏந்திழைக்கி ழைத்தார் தளி./