Sunday, 9 January 2022

திருமுன் தமிழ் - தாழைப்பத்து 1

 


தஞ்சைப் பெருவுடையார் குடமுழுக்கு 05-02-2020ல் நடந்ததை ஒட்டி; அது தமிழில் நடைபெற்றதன் அடையாளமாகவும், தமிழில் நடைபெறவேண்டிய காரணம் குறித்தும் பத்து வெண்பாக்களை அப்பொழுது எழுதினேன். 
 
பொதுத் தலைப்பாகத் "திருமுன் தமிழ்" என்னும் பெயர் தாங்க, பெருவுடையார் கோயிலில் ஒருநாள் காலைப் பொழுது நடவடிக்கைகளும், ஆடல் நடைபெறுவதும், மக்கள் தொழுதலும், பெருவுடையாருக்கு அமுது படைத்தலும் "தஞ்சைப்பத்து" எனும் பெயரில் வெண்பாக்களாக இயற்றப்பட்டன.
 
தொடர்ந்து; நான்பிறந்த ஊரின் கோயில் குறித்து பத்துப்பாக்கள் எழுதுகிறேன். தொடர்ந்து வெவ்வேறு ஊர்களின் கோயில்களைக் குறித்தும்"பத்து"ப் பாக்களாகப் பதிவிட விழைகிறேன். பாடல்கள் வரலாற்றை முதன்மைப் படுத்துவதாகவே அமையும்.
 
தமிழின் செழுமையே அதன் பாடல் முறைதான். அதனாலேயே இவற்றை வெண்பாக்களாக எழுத முனைகிறேன். அதற்கான விளக்கத்தையும் பாடலுடன் இணைத்துப் பதிவிடுகிறேன். விளக்கம், சொற்பொருள், பாடல் என்ற வரிசையில் அமையும். 
 
இறைவனைத் தமிழில் பாடுவீர்.
 
அன்புடன்,
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்,
 
சென்னை.
08-01-2022
 
. ======================
. திருமுன் தமிழ் - தாழைப்பத்து
. ======================
 
பாடல் : 1 விளக்கம்

தெற்கே குமரிப்பகுதியில் இருக்கிறது தாடகை(தடாதகை) மலை, புவியில் காணப்பெறும் பழமலைகளில் ஒன்று. கரும்பாறையால் ஆன தேறிய, திண்ணம் மிகு மலை. அதை ஒட்டி வளையவரும் பழையாற்றால் வேளாண்மை சிறக்க, வளங்கொழித்துச் சிறந்த தாழக்குடிப் பேரூர். அந்த மண்ணிலே சேந்தன் செழியன் எனும் பாண்டியமன்னனால், சிவனுக்கு எடுப்பிக்கப்பட்டக் கற்றளி இது. நுண்ணிய வேலைப்படுகள் அமைந்த கோயில். 
 
சொற்பொருள்

தேறுகொள் - திண்மை மிகுந்த
பன்னி - நெருங்கி
தண்ணாறு - குளிர்ந்த ஆறு
மாறுகால் - இயல்புக் கூத்தின் கால்வகை
 
பாடல்: இன்னிசை வெண்பா

தென்குமரி வன்மலை தேறுகொள் தாடகை/
பன்னிவருந் தண்ணாற்றுப் பேறுவளர் தாழைநகர்/
மண்ணிலே சேந்தனவன் மாறுகா லீசர்க்கு/
பண்ணிய நுண்கோயில் பார்/
 
======================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
08-01-2022
======================

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்