Monday, 24 January 2022

திருமுன் தமிழ் - தாழைப்பத்து 10

 

வயல் நடுவே விண்ணவன் எம்பிரான் கோவில், தாழக்குடி

பாடல் 10 : நிறைவுப் பாடல்

பழைய தாழக்குடிக்கு மேற்கே ஓடிய பழையாற்றின் வெள்ளப் பெருக்கிலிருந்து தப்பிக்க, கிழக்கு நோக்கி நகர்ந்த மக்கள் புதிய ஊரை உருவாக்கிக் கொண்டார்கள். இன்றைய ஊரின் மேற்கெல்லையே பண்டு கீழெல்லையாக இருந்திருக்கிறது. அருகிலிருக்கும் வயல்களில் உழவுக் காலத்தில் பாண்டங்களும், சிறு சிலைகளும் கிடைத்திருக்கின்றன.

வயல்களுக்கு நடுவே “விண்ணவன் எம்பிரான் கோயில்” அங்கே பழைய ஊர் இருந்ததற்கான  அடையாளத்தை நினைவுபடுத்திக்கொண்டு தனியே நிற்கிறது.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் கல்வெட்டு “தாழைக்குடி” “சேந்தபிரான்” என்ற பண்டைய பெயர்களைத் தாங்கிய சான்றாக இருக்கிறது.

இவை மட்டுமின்றி, நான்காவது பாடலில் குறிப்பிடப்படும் “மலையடிக்குறிச்சிக் கல்வெட்டு”, தென்காசிப் பாண்டியர் சின்னம், வேணாட்டரசின் கட்டிட அமைப்பு, “திருவாங்கூர் அரசு ஆவணம்” இவையெல்லாம் கூறும் செய்திகளைக் கொண்டே இந்தத் “தாழைப் பத்து” வரலாற்றுப் பாடல்களாக, வெண்பாக்களாக எழுதப் பெற்றிருக்கிறது.

 சொற்பொருள்:

படிஞாயிறு        - மேற்கு (இந்தச் செந்தமிழ்ச் சொல் இதே பொருளில் கொடு மலையாளமாகவும் இருக்கிறது)

பழையாறு      - கோட்டாறு

நடுப்பத்து        - வயல்நடுவே

விண்ணவன் - திருமால்

பொறிப்பு        - கல்வெட்டு

 

 பாடல் 10 : நிறைவுப் பாடல்

படிஞாயிற் றுப்பழையா றும்நடுப்பத் தில்ஓர்

அடிகாணா விண்ணவனும் நெல்லையப் பர்சேர்

வடிவுடை யாள்திருந டைப்பொறிப் பும்சீர்

அடிகொடுக் கச்சிறந்த பத்து

 =================

இந்தப் பாடலோடு “தாழைப் பத்து” நிறைவுபெறுகிறது.

இதுவரை படித்த, படித்துக் கருத்திட்ட அனைவருக்கும் நன்றியும் வணக்கமும் உரித்தாகட்டும்.

இன்னொரு நாள் “சிவந்தரப் பத்து”ப் பாக்களில் சந்திப்போம்.

பழையாறு

நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி

 

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்