பாடல் - 2 விளக்கம்
நாஞ்சி நாட்டின் சிறப்புகளில் முகாமையானது மழை. இரண்டு பருவ மழைக் காலங்களிலும் மழைபெறும் நிலம் அது. “சித்திரைப் பத்தாம் உதயம்” வேளாண்மைக்கு உகந்த நாள். அன்றே பொன்னேர் பூட்டல் நடக்கும். நாஞ்சிநாட்டு வடமீதி மக்களுக்கு இந்நாள் குறித்த செய்தி தவறாது தெரிவிக்கப்படவேன்டும் என பண்டைய மன்னர்கள் எண்ணினார்கள். காரணம், அன்றிலிருந்து மழைப்பொழிவு தொடங்கும். உழுது, மரமடித்து, பொடியுணக்கி விதைக்க, விளைச்சல் சிறக்கும்.
நாஞ்சிநாடு பண்டைய பகுப்புமுறையில் பன்னிரெண்டு பிடாகைகளாகப் பகுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பிடாகையும் தனியாக இயங்கும் நிர்வாக அமைப்பு முறையைக் கொண்டவை. ஒரு பிடாகையில் பல சிற்றூர்கள் இணைக்கப்பட்டிருக்கும். இவையே வேளாண்மைக்கான நீர்ப்பங்கீடு, குளங்கள் பராமரிப்பு போன்றவற்றைக் கையாண்டன. அப்படியான பிடாகைகளில் “தாழக்குடிப் பிடாகையும்” ஒன்று. அதனால் இங்கே கட்டப்பட்ட கோயில் பண்டை நாட்களில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
இந்தக் கோயிலின் கட்டிட அமைப்பு, சித்திரை பத்தாம் நாள் கதிரவன் உதிக்கும் நேரம்; சிவலிங்கத்தின் நெற்றிப்பகுதியில் நேராக கதிரவனுடைய ஒளி விழுமாறு அமைக்கப்பட்டிருக்கிறது. மற்ற நாட்களில் அது நேராக விழுவதில்லை. சுவர்களின் அமைப்பும், வாயிலும் அவ்வாறு கட்டப்பட்டிருக்கின்றன. அன்றைய நாட்களில் கோயில்களே நிர்வாக அறிவிப்புகளைச் செய்யும் இடமாக இருந்தன போலும்.
வேளாண்மை அறிவுசார்ந்த தொழில். அதில் காலம் குறித்த கணக்குகள் மிகத்தேவையானவை. அதை அறிந்து பயன்படுத்துவது தனித் திறமை. அதிலும் அத்திறனைப் பொதுப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்து காலகாலத்துக்கும் நிற்கச் செய்தல் மிகப்பெரிய வேலை. அப்படியான வேலையைச் செய்த பாண்டியன் செழியன் சேந்தனுக்கும், அவரைத் தொடர்ந்து திருப்பணிகள் செய்த மன்னருக்கும் நம் வணக்கங்களைச் செலுத்துவோம்.
சொற்பொருள்:
பத்து - எண், வயல்
செத்தலை - உழவுக் கணக்கு
வித்தகம் - அறிவு
சித்துரு - அறிவு வடிவமான கடவுள்
நெத்தி - நெற்றி
புத்தொளி - கதிரவன் ஒளி
பித்திகை - சுவர்
வத்தனை - ஆக்கம், வளமை
பாடல்: இன்னிசை வெண்பா
சித்திரைப் பத்தினில் பத்தினில் வித்திடும்/
செத்தலை வித்தகம் சித்துரு நெத்தியில்/
புத்தொளி முத்திரை வைத்திடும் பித்திகை/
வத்தனை மொத்தமும் காண்./
========================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
09-01-2022
========================
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்