Wednesday, 23 February 2022

கே.பி.ஏ.சி.லலிதா - மறைவு


திருமண வீடுகளில் சட்டென்று எதிரில் தென்படும் தெரிந்த முகம் போல, இழவு வீடுகளில் ஒப்பாரி வைக்கும் எதிர் வீட்டு ஆச்சியைப்போல, கோயிலில் வாவென்றழைத்து கையில் சுண்டலைத் திணிக்கிற வயதில் மூத்த அத்தைமகள் போல, மகிழ்ச்சியோடு வீட்டுக்கு வரும் அப்பாவின் உடன்பிறந்தாளைப் போல, சில வேளைகளில் அம்மாவின் அருகில் அமர்ந்திருக்கும் அக்கச்சியைப் போல....

பலமுகம் காட்டிய மலையாள விண்மீனொன்று காண இயலாதவாறு காற்றில் கரைந்து போனது.

வருந்துகிறேன்.

Monday, 21 February 2022

ஆடையணிந்த கும்கிகள்



ஊரில் திருக்கல்யாணத் திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடக்கும். அதற்கு யானை ஒன்றை அழைத்து வருவார்கள். மாலையில் தான் விழா என்பதால் பள்ளிக்கூடம் மதிய வேளைக்குமேல் நடக்காது. உள்ளூர் விடுமுறையாம்.

மணியடித்தவுடன் ஒரே ஓட்டமாகக் கோவிலுக்குத்தான் ஓடுவோம். யானை கம்பிப் பாலத்தருகே குளிப்பாட்டப்பட்டு தென்னை ஓலைகளைத் தும்பிக்கையில் சுமந்துகொண்டு வருவதைப் பார்க்க எல்லோரும் கூடியிருப்போம். பின்னர் கோவில் கிணற்றருகே ஒரு தென்னை மரத்தில் கட்டப்பட்டு, ஆடிக்கொண்டே ஓலைகளைப் பிய்த்து காலில் தட்டித் தட்டி உண்ணும் அந்த யானை.

யாராவது வீட்டிலிருந்து தேங்காய்களை, வாழைப் பழங்களைக் கொண்டு கொடுப்பார்கள், பெருமையாக. தேங்காயைக் காலில் இட்டு நசுக்கி எடுத்து உண்ணும். பழங்களை பாகன் வாயினுள் போடுவார். அதைத் தாடை அசைய உள்வாங்கிக் கொள்ளும் அழகைப் பார்த்துக் கொண்டிருப்போம். 

Monday, 14 February 2022

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான நாடகக் காதல்?!

படம்: மறைமலை வேலனார்
 

தொலைவில் சீராய்ப் பாயும் அருவியின் நீரொழுக்கு தட்டைப் பாறைகளில் தாளமிடும் ஓசைக்கு இசைய தலையசைத்துக் கொண்டே எயினி நடக்கிறாள். இரண்டு நாட்களாக அங்கவையின் முகம் பார்க்காததே மனதுக்குள் மெல்லிய வருத்தத்தைக் கொடுத்தது. அவள் ஏதோ ஒன்றை மனதுக்குள் சுமக்கிறாள் போலும். முகம் அத்தனை மலர்ச்சியாக இல்லை. இன்று கேட்டுவிடவேண்டும்.

புதுப் புற்களால் வேயப்படிருந்த கூரைக்குக் கீழே வேங்கை மரத்தின் பருத்த வேர் மீது அமர்ந்திருக்கும் அங்கவையை இங்கிருந்தே பார்த்துவிட்டாள் எயினி. தன்னைக் கண்டதும் அவள் முகம் துடைப்பதையும் கவனித்துவிட்டாள். நடை சற்றே விரைவானது. அருவியின் தாளம் மறந்துபோயிற்று. எட்டி நடந்து அங்கவையின் அருகில் வந்தாள். 

Saturday, 12 February 2022

எனது கணித ஆசிரியரின் மறைவு

 


பொதுவாக நமக்குக் கல்வியளித்த ஆசிரியர்களை மறக்கவியலாது. குறிப்பாகச் சிலரை வாழ்வின் இறுதித் துளி வரை மறத்தல் இயலாது. அப்படியான ஒரு ஆசிரியர் திரு சங்கரநாராயணபிள்ளை என்ற பழனி சார், நேற்று காலமானார் என்ற செய்தி கவலையில் ஆழ்த்திவிட்டது.

தாழக்குடி அரசுப்பள்ளியில் படித்தக் காலம் இன்னும் பசுமை மாறாமல் அப்படியே நெஞ்சில் இருக்கிறது. எத்தனையோ ஆசிரியர்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியான குணம். பழனிசார் மிகவும் கண்டிப்பானவர். கணித ஆசிரியர். கணித சூத்திரங்களைப் போன்று தீர்க்கமானவர். சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகளை ஒன்றுவிடாது மனதில் இருத்திக் கொள்ளும் வல்லமை கொண்டவர்.

நான் அவரிடம் கணிதம் பயின்றது 1977 மற்றும் 1978ஆம் ஆண்டுகளில். எமது பள்ளியின் நூற்றாண்டுவிழா 2017 ல் நடந்தது. அப்போது வெளியிடப்பட்ட சிறப்புமலரில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதில் அவரைக் குறித்து இப்படி எழுதியிருந்தேன்.

"என் வாழ்க்கையில், ஏன் என்னோடு தொடர்புடைய ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கையிலும் என்றும் கூடச் சொல்லலாம், முகாமையான இடத்தைப் பிடித்துக்கொண்ட ஆசிரியர் ஒருவரை ஏழாம் வகுப்பில்தான் சந்தித்தேன். திரு சங்கரநாராயணபிள்ளை தான் அவர். கணிதம் கற்பித்தார். மிகக் கண்டிப்பானவர். வடிவியல் (Geometry) அவருடைய சிறப்பான கவனம் பெறும் பாடம். மரத்தால் செய்யப்பட்ட பெரிய காம்பஸ், கோணமானி போன்றவற்றைக் கொண்டு கரும்பலகையில் அவர் வரைகிற திருத்தமான வடிவகணிதப் படங்கள் என்னுள் பேரார்வத்தை உண்டாக்கின. உருவகப் படுத்துதல் உந்தித் தள்ள அது ஒரு கலையாகவே என்னுள் மாறிப்போனது. பிற்காலத்தில் என்னிடம் பொறியியல் வடிவமைப்புக் கற்றுக்கொண்ட மாணவர்களில் இரண்டாயிரம் பேருக்கு மேல் இவரையும், இவர் எனக்குக் கற்றுக்கொடுத்த அடிப்படை வடிவகணிதத்தையும் எடுத்துப் போயிருக்கிறார்கள்."

இவ்வளவு சின்ன வரிகளைப் படித்துவிட்டு மகிழ்ந்திருக்கிறார். படிக்கிற காலத்தில் அரிமாவாக எங்களுக்குத் தோன்றிய ஐயா, தமது 88ஆம் வயதில், அந்த மலரை கையில் எடுத்துக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்து அம்மாவிடம்,

"மாதேவன் எப்ப ஊருக்கு வருவான்? நான் அவனைப் பார்க்கணும்" என்று கேட்டிருக்கிறார்.

"அதுக்கு எதுக்கு நீங்க வந்தீங்க? அவன் வந்தா உங்களை வந்து பாக்கச் சொல்றேன்"

"இல்லை இல்ல நான் தான் அவன வந்து பாக்கணும்" என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

அடுத்த முறை ஊருக்குப் போன போது அம்மா கண்ணில் ஈரம் படர இதை என்னிடம் சொன்னார்கள். உடனே அவரது வீட்டிற்குச் சென்றேன். என் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு சிங்கத்தைக் குகையிலேயே சந்தித்தேன்.

"வா... உள்ள வா" என்றவர் இரு கைகளையும் குவித்து "ரெம்ப சந்தோசம். இவ்வளவு காலத்துக்கு அப்புறமும் என்னை, என் குணத்தை நினைவு வைத்திருந்து எழுதியதற்கு மிக்க நன்றி உனக்கு" என்றார். படிக்கும் போது தொடவே அச்சப்பட்ட அந்தக் கைகளை பட்டென்று பிடித்து "இல்லை நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும் " என்றேன்.

காலம்தான் எவ்வளவு மாற்றங்களைச் செய்துவிடுகிறது. செவிப்புலன் கொஞ்சம் குறைந்திருந்த போதும் உற்சாகமாகப் பேசினார். தான் நடைப் பயிற்சி செய்வதை, கடைத்தெருவுக்குப் போவதை சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கு வியப்பாக இருந்தது. அந்தப் பழனிசாரா இவர்?

"அந்த மேசையில புத்தகம் இருக்கு அத எடு" என்றார். பக்க எண் சொன்னார். படி என்றார். படித்தேன். முகம் மலர கேட்டுக் கொண்டிருந்தார். தன் நலம் நோக்காது பணி செய்த ஒரு ஆசிரியருக்கு என்னால் இயன்ற வகையில் நன்றியுரைத்த நிறவோடு விடை பெற்றேன்.

இன்று அவர் இல்லை. என் மாணவர்கள் அவர் பெயரை ஒருவேளை மறந்து போகலாம். ஆனால், பழனிசாரிடம் பெற்று நான் அவர்களுக்குக் கடத்திய எளிமையான வடிவியல் உத்திகளை அவர்கள் பயன் படுத்திக் கொண்டும் தன்னிலும் இளையவர்களுக்குக் கற்றுக் கொடுத்துக்கொண்டும் இருப்பார்கள்.

ஏதோ ஒரு கணிணியின் முன்னால் யாரோ ஒருவர் உங்களுடைய எளிமையான வடிவியல் உத்திகளைப் பயன் படுத்திக்கொண்டே இருப்பார்கள் ஐயா. இயற்கையில் அமைதியாக ஓய்வுறுங்கள்.

வணக்கத்துடன்,
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
12-02-2022

தடம்

 


பிஞ்சுக் கால்கள்

பின்னப் பின்ன

அன்னையின் கைப்பிடித்து

அசைந்து நடந்த

சின்னத் தெருவில்

மண்ணைக் காணவில்லை

 

காங்கிரீட்டுக் கலைவை

கல்லறையின் கீழே,

என்

காலடித் தடங்கள்!!

Wednesday, 9 February 2022

எது சரி?



உலகெங்குமே தனித்தனிக் குழுக்களாக மாந்த இனம் வாழ்ந்துகொண்டிருந்த போது இத்தனை கலகங்கள் இல்லை. வழிபாட்டு முறைகள் எளியதாய் தனித்தனியாகவே இருந்தன. வாழிடங்களும் காடுகளும் வளங்களும் சுரண்டப்படாமல் எளிமையான வாழ்வியலோடு காலம் சென்றுகொண்டிருந்தது.

பொருள் முகாமையான பின்னே வணிகம் தலைதூக்கியது. அது தனது குழந்தைகளாக நிறுவனமயமான மதங்களைப் பெற்றுப் போட்டது. இதில் எந்த மண்ணில் பிறந்த எந்த மதமும் விதிவிலக்கில்லை. ஆசீவகம், சமணம், சைனம், பவுத்தம், கிருத்தவம், இசுலாம் என நிறுவனமயமான எல்லா மதங்களும் வளங்களைச் சுரண்டவே அரசியலாளர்களால் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. 

பண்டைய தமிழகத்தின் வணிகப் பெருவழிகளில் கிளைத்து வளர்க்கப்பட்ட ஆசிவகம், வளங்களைச் சுரண்டுவதற்கு எதிர்ப்பு கிளம்பிய போதெல்லாம் அமைதிப்படுத்தி, மக்களை மழுங்கடிக்கவே பயன்பட்டிருக்கிறது. உடனே அறிவியல், வானவியல் என்றெல்லாம் தூக்கிக் கொண்டு அருள் கூர்ந்து யாரும் வராதீர்கள். இன்றும் அறிவியலின் பெயரைச் சொல்லித்தான் பெருமளவு சுரண்டல் நடைபெறுகிறது. நம்மை மழுங்கடிக்க ஒன்று தேவைப்படுகிறது, அவ்வளவுதான். பண்டைய தமிழகத்தில் நிகழ்ந்த போர்களுக்கான காரணம் தேடுங்கள். அதன் பின்னணியை சிந்தியுங்கள்.

தமக்கு உரிமைப்பட்டது எனக் கருதுகின்ற ஒன்றை (இடம், பொருள்) மற்றொருவர் உரிமை கொள்ள நினைக்கின்ற பொழுது எதிர்த்து நிற்பது, உரிமைக்காகப் போராடுவது, தக்கவைத்துக்கொள்வது என்ற விலங்குப் பண்பு மாந்தனுக்கும் மிகவும் பொருந்தும். இனக்குழு வாழ்க்கையிலிருந்து மெல்ல மெல்ல வேளிர் குலங்களாக வளர்ந்து அரசுகளாக, பேரரசுகளாகப் பரிணமிக்கும் வரை மிகப்பெரும் எதிர்ப்புகளை ஆள நினைப்பவர்கள் சந்தித்திருப்பார்கள். எதிர்த்து ஆள நினைப்பவரை போரில் வீழ்த்தலாம். மக்களை என்ன செய்வது? எதிர்க்காமல் தாமாகவே அடங்கிவிட என்ன செய்வது என்ற சிந்தனையின் வெளிப்பாடுகளே மதங்களை ஆதரிப்பதும் வளர்ப்பதும் ஆள்பவர்களின் வேலையாகிப் போகிறது. 

வரலாற்றில் நிறைய போர்களை நிகழ்த்தியவை கிருத்தவமும் இசுலாமும். பவுத்தத்தின் கோர முகத்தை மியான்மரிலும், ஈழத்திலும் கண்டிருப்பீர்கள். சைவமும், வைணவமும், சமணமும் தங்களுக்குள்ளேயே பெரும் போர் புரிந்தவை. மாந்த இனத்தைச் சுரண்டாத ஒரு மதத்தைக் கூட நாம் அடையாளம் காண இயலாது. காரணம் அவற்றை இயக்கும் பின்னணியில் இருப்பது வணிகம்.

பொதுவாக இயங்கினால் பெரும் பொருள் ஈட்டலாம் என்பதால் வணிகம் எதிரிகளுக்கிடையே, எல்லாத் தரப்பு மக்களிடையே ஒரு பொதுத்தன்மையை உருவாக்க அல்லது இருப்பதை வளர்க்க எத்தனிக்கிறது. அவற்றை நிறுவனமயமாக்குகிறது. தங்களைப் பொதுவானவராகக் காட்ட முனைகிறது. முதலில் எல்லா மொழிகளையும் எல்லா  பண்பாட்டுக் கூறுகளையும் எடுத்தாள்கிறது. ஆனால், மெல்ல மெல்ல ஒரு பொதுத்தன்மை நோக்கி எல்லோரையும் நகர்த்திவிடுகிறது. இதைப் படிப்பதைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியில் நிகழ்ச்சிகளை, விளம்பரங்களைப் பாருங்கள். நான் சொல்வதை நேரடியாக உணர்வீர்கள்.

பின்னாட்களில் சைவம் வைணவம் என இங்கு பிறந்த எல்லாமே அதற்காகவே பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. அன்பானவர்களே வழிபாட்டு முறையையும் மதங்களையும் குழப்பிக் கொள்ளாதீர்கள். இரண்டும் வேறு வேறு. இந்து, கிருத்தவம், இசுலாம், பவுத்தம், சமணம் என எதை எடுத்தாலும் மக்கள் வேறு வேறு வழிபாட்டு முறைகளோடு ஒரே மதத்திற்குள் இருக்கிறார்கள்.

கூர்ந்து நோக்குங்கள் இந்த மதச் சிக்கல்களுக்குள் வராத பழங்குடிகள் தங்கள் வாழிடங்களில் சிக்கல்கள், சுரண்டல்கள் வரும்போது நம்மைப் போன்று மதங்களுக்குள் கட்டுப்பட்டவர்களை விட தீவீரமாக சுரண்டலை எதிர்க்கிறார்கள். உலகெங்கும் மதங்களால் கட்டப்பட்ட அரசுகளை வைத்துக் கொண்டு நாம் தான் அவர்களைச் சட்டரீதியாக இராணுவங்களைக் கொண்டு சிதைக்கிறோம். அதன் பின்னணியில் மதங்களும் வணிகமும். அதற்கான சான்றுகள் ஆயிரக்கணக்கில் உலகெங்கும் காணக் கிடைக்கின்றன.

நாம் மழுங்கடிக்கப் பட்டிருக்கிறோம். உரிமைகள் குறித்துப் பேசும் சிந்தனையிலிருந்து இயலாமைகளை ஏற்றுக்கொள்கிற மனநிலை நோக்கி மழுங்கடிக்கப் பட்டிருக்கிறோம். வணிகத்தின் எண்ணங்களை, ஆள்பவர்களின் அரசியலாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை நோக்கி நகர்த்தப் பட்டிருக்கிறோம்.

கடவுளை ஏற்றுகொண்ட மதங்கள்தான் இப்படி என்றால் கடவுளை ஏற்றுக்கொள்ளாத நிறுவனங்களும் இதையே நெடுங்காலமாகச் செய்து வந்திருக்கின்றன. அவை கடவுளை ஏற்றுக்கொளாத மதங்களாக இயங்கி வந்திருக்கின்றன அவ்வளவே. அவற்றின் வேலையும் வணிகத்திற்கு ஆதரவான, ஆள்பவருக்கு உதவுகிற பொதுத் தன்மை நோக்கி மக்களை நகர்த்துவதே. 

இவை எல்லாமாகச் சேர்ந்து மரபின் வேர்களை அறுத்து நமது உண்மைத் தன்மையிலிருந்து நம்மை மாற்றியிருக்கின்றன. நாற்பது வயதைக் கடந்தவர்கள், சிறுவயதில் ஊர்க் கோயில்களில் சாமி ஆடி வருபவர்களை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். மாடனோ, ஐயனாரோ, முனீசுவரனோ ஆடிக்கொண்டிருக்கும் போதே, யாராவது ஒருவர் வந்து  ஆடுபவரின் இடுப்பில் கைவைத்து வேட்டியை இறுகப் பிடித்தபடி கேள்வி கேட்பார். "என்ன சொள்ளமாடா நீ கேட்டதெல்லாம் செய்தாச்சு. இப்ப சொல்லு எப்ப மழை வரும்?" ஆடுபவர் சொல்வார் அல்லது கையால் சைகை செய்வார். 

"அப்படியா? பவுர்ணமி தாண்டுனா மழ வந்துருமா?"

"ம்... ம்..."

"வரல்லன்னு வச்சுக்கோ இந்த வருசம் உனக்கு கொடை கிடையாது பாத்துக்கோ?" என்று சாமியிடமே தாக்கல் சொல்வார். பௌர்ணமி தாண்டி மழை வராவிட்டாலும் சாமியிடம் போய் அழுது வடிவதில்லை. ஊர் குளத்து நீரை சரியாகப் பாய்ச்சி, கமலை இறைத்து எப்படியோ விளைச்சல் கண்டுவிடுவார்கள். நம்மோடு கூடவே சுடலைமாடன் வேளாண்மை செய்ய வருவார் என்றெல்லாம் அவர்கள் நம்புவதில்லை. வராத மழைக்கு சாமியிடம் வருந்துவதுமில்லை. எல்லாவற்றையும் நாம்தான் செய்தாக வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அத்தனை எளிதாக இருந்த மனிதர்களை நினைவிருக்கிறதா?

அவர்கள் இப்பொழுது விதை நெல் தொடங்கி அறுவடைக்கான இயந்திரம் வரைக்கும் வணிகர்களை எதிர்நோக்கியே இருக்கிறார்கள். தொலைக்காட்சிப் பெட்டியின் உண்மையான(?) நிகழ்ச்சிகளை, விளம்பரங்களை நம்பி, கிடைத்த கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டு "அட்சயத் திரிதியை" யில் ஒரு மலையாளி அல்லது மார்வாடியின் கடை வாயிலில் நின்று கொண்டிருக்கிறார்கள். 

வயல் வேலை செய்துகொண்டு, வாத்தியார் வேலை பார்த்துக்கொண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் "வேதக் கோயிலுக்கு"ப் போய்க்கொண்டு சிக்கலின்றி வாழ்ந்த பண்டைய மனிதர்கள் இப்பொழுது "ஆராதனை செபக் கூட்டங்களிலே" காத்துக் கிடக்கிறார்கள்.

"நாங்கள் இங்கேதான் இருந்து கொண்டிருக்கிறோம். மதங்களே வெளியிலிருந்து எங்களிடம் வந்தன." என்று பழனி பாபா சொன்னது போல எண்ணிப் பாருங்கள்.

"சிறீ ராம்" என்றவர்களும் "அல்லா ஃகூ அக்பர்" என்றவரும் காலகாலமாக இங்கேதான் இருக்கிறார்கள். இந்த இரண்டு சொற்றொடர்களும் வந்து சேர்ந்தவை. அந்த இரண்டில் ஒன்றையே நாமும் சொல்வோமானால்,  அது சரியாக இருக்கவியலாது என்றே எண்ணத் தோன்றுகிறது.

மேகேதாட்டில் அணைகட்டுவதற்கு அனுமதியளிக்கும் நிலையில் ஒன்றிய அரசு வந்துவிட்டது. அதோ உரிமைக்குக் குரல் கொடுக்கும் அந்த இருவரும் இங்கே நீரில்லாமல் வேளாண்மையை இழக்கப்போகிற இந்துவுக்கும் இசுலாமியருக்கும் குரல் எழுப்ப மாட்டார்கள். மாட்டவே மாட்டார்கள். கருநாடகத்தில் தமிழர்கள் குடும்பம் குடும்பமாகத் தாக்கப்பட்டபோது, வெளியேறியபோது இவர்கள் அங்கேதான் இருந்தார்கள். சும்மா இருந்தார்கள்.

இதையெல்லாம் தாண்டி உடை, தனிமனித உரிமை அதனால் தான் நாங்களும் "அல்லா ஃகூ அக்பர்" என்று சொல்லி ஆதரவு கொடுக்கிறோம் என்றால், நிறைய கிருத்தவ கல்வி நிறுவனங்களில் பெண்பிள்ளைகள் பொட்டு வைக்கக் கூடாது, பூ வைக்கக் கூடாது என்ற வரம்பும் நடை முறையும் இருக்கிறதே. அப்பொழுது "சிறீ ராம் என்பதும் சரிதானே?" என்ற அவர்களது கேள்விக்கு உங்கள் விடை என்னவாக இருக்கும்?

மதம் எந்த நிறத்தில் இருந்தாலும் அது வணிகத்தால் இயக்கப்படும்   கைப்பிள்ளையாகவே இருக்கிறது. மாந்தவினத்தின் திறனை மழுங்கடிப்பதாகவே இருக்கிறது. நேரடியாக அல்லது மறைமுகமாக ஆட்சியாளர்களுக்கு உதவுதாகவே இருக்கிறது. இனங்களை அவற்றின் மரபுக்கூறுகளைச் சிதைத்து அவை எழுச்சியுறாமல் பார்த்துக் கொள்கிறது.

இந்த முறையும் அதையே நிகழ்த்தியிருக்கின்றன இரு மதங்களும். நாம் எந்தப் பக்கம் நின்றாலும் வருங்காலத் தலைமுறைக்குத் தீங்கிழைக்கிறோம் என்பதே எனது பார்வையாக இருக்கிறது.

ஒரு பெண்ணைக் கூட்டமாகச் சென்று அச்சுறுத்திய வகையில் அவருக்கு ஆதரவாகப் பேசுவது வரவேற்கத் தக்கதுதான். அதற்காக அதே ஆயுதத்தைத் தூக்குவது...

===================================

திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்

09-02-2022

==================================

Tuesday, 8 February 2022

இன்னொரு பொங்கல்

 


. ==================
. இன்னொரு பொங்கல்
. ==================

காலையில் கடைத்தெருவுக்குச் செல்வதற்காக கீழே இறங்கினேன். கீழ் வீட்டின் முன் ஒரு பண்டிகைக்கான தோற்றம் தென்பட்டது. அவர்கள் குடி வந்து பத்துப் பதினைந்து நாட்களாகின்றன. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். மாக்கோலங்களின் வளைவுகள், ஒரு நீண்ட மரபின் செய்திகளை மொழியின்றி சொல்லிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

பளிச்செனத் துலக்கப்பட்ட ஒரு வெண்கலப்பானையில் சருக்கரைப் பொங்கல். அருகே பலவிதமான பழங்கள். செறிவாகக் காணக்கிடைத்த மலர்கள். வெற்றிலை, பாக்கு. பச்சை மஞ்சள் குலை என தைப்பொங்கலுக்கான எல்லா படையல் பொருள்களோடும் தோற்றமளித்தது அந்த நடை முற்றம்.

அங்கே முகாமையாக வைக்கப் பட்டிருந்த் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி என்னை ஈர்த்தது. அந்த வீட்டுப் பெண்மணி பட்டுப்புடவையுடுத்தி வழிபடுதலுக்கான முனைப்பில் இருந்தார். பேசிப் பழக்கமாகவில்லை என்றாலும் கேட்டாக வேண்டுமே.

"என்ன விசேசமுங்க?"

அவருக்கு தமிழில் சரியாகப் பேச வராது போலும். புரிந்து கொள்ளவதே கடினமாக இருக்கும் என்றும் தோன்றியது. அவர்களது மரபை எப்படி நமக்குக் கடத்துவது என்று எண்ணியிருப்பார் போலும்.

"நீங்க தை மாசம் பொங்கல் வைக்கிறீங்கல்ல அதேதான் இது . நாங்க தை அம்மாவாசை முடிந்து ஏழாவது நாள் பொங்கல் கொண்டாடுவோம்."

"அப்படீங்களா?" கேட்டுவிட்டு படியிறங்கிக் கடைத்தெருவுக்கு வந்துவிட்டேன். திரும்பி வரும்போது, எங்கள் வீட்டு வாயிலில் என் துணைவியாரும் அந்தப் பெண்மணியும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

"ஊர்ல எல்லா வீட்டிலேயும் பிள்ளைங்க, பேரப்பிளைங்கன்னு எல்லோரும் வந்துருவாங்க. எல்லாவீட்டிலும் கூட்டமா இருக்கும். முற்றத்துல அல்லது மொட்டை மாடியில பொங்கல் இடுவோம். காலைல இருந்து சூரியன் உச்சிக்கு வரதுக்கு முன்னாடி விட்டு முடிச்சிரணும்"

"ஓ.. இந்தப் படையல், பழம் எல்லாம்..."

"ஊர்ல நிறைய வச்சிருப்போம். பண்டிகைங்கிறதால எல்லாம் கடைத்தெருவுல கிடைக்கும்."

"அந்தக் கண்ணாடி?"

"அது கண்டிப்பா வைக்கணுமுங்க"

"சரிங்க.. "

எங்கள் அடுக்ககத்தில் தெலுங்கைத் தாய்னொழியாகக் கொண்ட மூன்று குடும்பங்கள் ஏற்கனவே இருக்கின்றன. "உகாதி" கொண்டாடுவார்கள். இத்தனை ஆண்டுகளாக அவர்கள் யாருமே இந்தப் பொங்கலைக் கொண்டாடிப் பார்த்ததில்லை. மனதுக்குள் கேள்வி எழ...

"அம்மா நீங்க எந்த ஊர்?"

"ஆந்ரா"

"ஆந்திராவில் எங்க?"

"அதுவா விசயவாடாவிலிருந்து ரெண்டு மூணுமணிநேரம் போகணும். "

"விசாகப்பட்டினம் பக்கமா?"

"இல்ல.. விஜயவாடாவுக்கு வெஸ்ட்டுல போகணும்"

"சரிங்கம்மா.. நன்றி"

அவர்கள் கொடுத்துவிட்டுப் போன சருக்கரைப் பொங்கலைத் தின்றுகொண்டே கூகுளில் தேடினேன். அவர்கள் சொன்ன பகுதி "தெலுங்கானா" என்றது கூகுள். பொங்கலின் சுவை ஒன்றாக இருந்தாலும் வைக்கப்பெறும் காலமும், வழக்கமும், வேறு வேறு மரபுக் கூறுகளின் தன்மையை உணர்த்துகின்றன. அதனால் தான் மற்ற மூன்று தெலுங்கு பேசும் குடும்பங்களிலும் இந்த வழக்கம் இல்லை போலும்.

"தெலுங்கானா" - தெலுங்கு பேசுபவர் நாடு என்பதற்கான காரணங்கள் அரசியலையும் தாண்டி அதன் மரபுக் கூறுகளுக்குள் கிடக்கின்றன என்றே தோன்றுகிறது.

படம்: இணையத்தில் எடுத்தது
========================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
08-02-2022
========================


Sunday, 6 February 2022

கருப்பு வெளிச்சம்

 


இந்தப் பேரண்டம் காரிருளுக்குள் சுற்றிக்கொண்டிருக்கிறது. இருளே இங்கு நிலையானது. வெளிச்சம் வந்து வந்து போகிறது. இருளே தூய்மையானது. வேறுபாடுகளற்றது.

வெளிச்சத்தில் வேடங்களே காணக்கிடைக்கின்றன. இருளிலே மெய் வெளிப்படுகிறது. உறக்கமற்ற நீண்ட இரவுகளில் நீங்கள் இதை உணர்ந்திருக்கக் கூடும். இமைகள் மூட மறுக்கும். அவை திறந்திருந்தாலும் பயனில்லை. உங்கள் மனதால் அடக்க இயலாத ஐம்புலன்களில் ஒன்றை அடக்கிவிடுகிற திறன் இருளுக்கு இருக்கிறது.

வெளிச்சத்தில் உங்களால் பார்க்கவியலாத உங்களை, உங்களுக்கே அறிமுகம் செய்கிறது இருள். பகலில் கண்களை மூடி தவம் செய்ய இயலாதவர்கள் கூட இருளில் கண்களைத் திறந்துகொண்டே தங்கள் மனதுக்குள்ளே பயணம் செய்கிறார்கள். வினாவெழுப்புகிறார்கள். விடையிறுக்கிறார்கள். எல்லாவற்றையும் விட தமக்குத் தாமே மெய்யாக இருக்கிறார்கள்.

"அப்பாவிடம் அதைச் சொல்லியிருக்கக் கூடாது". "அம்மாவையே அழவைத்து விட்டோம்". "மனைவியிடம் சரி என்று ஒற்றைச் சொல்லில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதை விட்டுவிட்டு சண்டையிட்டுவிட்டோமோ?" "குழந்தையைத் திட்டாமல் இருந்திருக்கலாம்". "மழை தாங்காது அடுக்ககத்தில் ஒதுங்கிய நாயைத் துரத்தியது தவறோ? நம்பித்தானே வந்திருக்கும் அதற்கு ஏதேனும் சாப்பிட வைத்திருக்கலாமோ?" "கடைத்தெருவில் அந்தப் பாட்டி வைத்திருந்த கடைசித் தட்டு மாம்பழங்களை வாங்கியிருக்கலாமோ? பாவம் வயதான காலத்தில் அவளும் நேரத்தோடு வீட்டுக்குப் போயிருப்பாள். கடைசியாய் விற்காத பழங்கள் நன்றாயிருக்காது என்று நகர்ந்துவிட்டது சரியா?" "பேருந்தில் அந்தப் பெண் என்னைப் பார்த்து சிரித்தது போல்தான் தெரிந்தது, பதிலுக்குச் சிரித்திருக்கலாமோ?" "இறங்கி நடந்து வருகையில், மகனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வருகிற அந்தப் பெரியவரோடு கொஞ்ச நேரம் நின்று ஆறுதலாய்ப் பேசியிருக்கலாமோ?"

உறங்காத இரவுகளில் இருளைவிட மிகுதியாக நம்மைச் சூழ்ந்திருப்பது வினாக்கள்தான். சொல்லப்போனால் அவைதான் நம்மிடம் கேட்கப்படவேண்டிய வினாக்கள். சிலவற்றிற்கு நீங்கள் விடையிறுக்கலாம். சிவற்றிற்காக மன்னிப்புக் கோரலாம். வருந்தலாம். மகிழலாம். அழலாம். விடைகள் தேடலாம். கண்டடையலாம். காத்திருக்கலாம்.

இருளுக்கு முகமூடிகள் தேவையில்லை. யாரை வேண்டுமானாலும் திட்டலாம். வாழ்த்தலாம். அன்பு பாராட்டலாம். அணுக்கமாய் எண்ணலாம். தொழலாம். கொண்டாடலாம். இரவுகள் உங்களுக்கானவை. நீங்கள் உங்களைக் காண வெளிச்சம் தேவையில்லை என்பதை உங்கள் உறக்கமற்ற இரவுகள் உணர்த்தும்.

ஆனாலும், உறக்கம் உங்களுக்கு மிக்கத் தேவையானது. நிம்மதியாய் ஆழ்ந்து உறங்குங்கள். காலையில் நமக்கு வேலையிருக்கிறது.

ஆம். வெளிச்சம் வந்துவிட்டால் நாம் வேடம் புனையத் தொடங்குகிறோம்.

Tuesday, 1 February 2022

அருவியிலிருந்து ஒரு துளி

 


யாராலே இந்தத் தமிழுனக்கு வாய்த்ததென

ஊரார் வினவிடினே உள்ளிருந்து செப்பிடுவேன்

தேரூர் கவிமணியின் தேர்ந்தநற் பாடலிலே

நீராட வந்த வினை.