Monday, 21 February 2022

ஆடையணிந்த கும்கிகள்



ஊரில் திருக்கல்யாணத் திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடக்கும். அதற்கு யானை ஒன்றை அழைத்து வருவார்கள். மாலையில் தான் விழா என்பதால் பள்ளிக்கூடம் மதிய வேளைக்குமேல் நடக்காது. உள்ளூர் விடுமுறையாம்.

மணியடித்தவுடன் ஒரே ஓட்டமாகக் கோவிலுக்குத்தான் ஓடுவோம். யானை கம்பிப் பாலத்தருகே குளிப்பாட்டப்பட்டு தென்னை ஓலைகளைத் தும்பிக்கையில் சுமந்துகொண்டு வருவதைப் பார்க்க எல்லோரும் கூடியிருப்போம். பின்னர் கோவில் கிணற்றருகே ஒரு தென்னை மரத்தில் கட்டப்பட்டு, ஆடிக்கொண்டே ஓலைகளைப் பிய்த்து காலில் தட்டித் தட்டி உண்ணும் அந்த யானை.

யாராவது வீட்டிலிருந்து தேங்காய்களை, வாழைப் பழங்களைக் கொண்டு கொடுப்பார்கள், பெருமையாக. தேங்காயைக் காலில் இட்டு நசுக்கி எடுத்து உண்ணும். பழங்களை பாகன் வாயினுள் போடுவார். அதைத் தாடை அசைய உள்வாங்கிக் கொள்ளும் அழகைப் பார்த்துக் கொண்டிருப்போம். 


மாலையில் அழகாக ஒப்பனை செய்யப்பட்டு தெருவில் ஊர்வலம் வரும் யானையின் மீது வெண்குடை அல்லது சிவப்புக் குடை பிடித்தபடி சேந்தண்ணன் இருப்பார். பொறாமையாக இருக்கும். நாமும் இப்படி ஒருநாள் யானை மீது ஏறி இருக்கவேண்டும் என்ற எண்னம் தோன்றும். அதன் பெரிய கரிய உருவம் மெல்லிய அச்சத்தைக் கொடுத்தாலும் அதைக் கானுயிர் என்று எண்ணியதேயில்லை. ஒரு காட்சிப்பொருளாகவே காலம் கழிந்தது.

பின்னாட்களில் கல்லூரி நூலகத்தில் "சீனப்பயணிகள் சோழ மண்டலக் கரையிலிருந்த போர் யானைகளைக் குறிப்பிடும் போது, "அரசாங்கத்திடம் அறுபதாயிரம் போர் யானைகள் இருக்கின்றன. அவற்றின் உயரம் ஏழு அல்லது எட்டு அடி இருக்கும். ஒவ்வொரு யானையின் மீதும் ஓர் அம்பாரி உண்டு. அதில் வீரர் பலர் இருந்து கொண்டே நீண்ட தொலைவு வரையிலும் அம்புகளை எய்வர்; பகைவரை நெருங்கியவுடன் ஈட்டிகளை எறிவர். போரில் வெற்றி பெற்றால், யானைகளுக்குச் சிறப்புப் பெயர் இடப்படும்" என்கிறார்" என்றும்

"ஜார்டன்ஸ் எனும் அயல் நாட்டவர், "ஒரு யானை முப்பது வீரர்களைச் சுமந்து செல்கிறது. ஒரு போர் யானை ஏறத்தாழ 1500 மனிதர்களுக்குச் சமமென்று சொல்லலாம். யானைகளின் தந்தங்களில் கூர்மையான போர்க் கருவிகள் கட்டப்படும். யானைகள் அவற்றைப் பகைவர் மீது பாய்ச்சிப் பெருங் குழப்பத்தை உருவாக்குவர்" என்று குறிப்பிட்டுள்ளார்" என்றும் படித்தபோது மெல்லமெல்ல யானைகளின்  மீதான எண்ணம் மாறியது.

களவழி நாற்பது எனும் இலக்கியத்தின்

"நிரை கதிர் நீள் எஃகம் நீட்டி, வயவர்
வரை புரை யானக் கை நூற, வரை மேல்
உரும் எறி பாம்பின் புரளும்"
 
"கவளம் கொள் யானையின் கைகள் துணிக்க,
பவளம் சொரிதரு பை போல், திவள் ஒளிய
ஒண் செங் குருதி உமிழும்" 

என்ற வரிகள் அவற்றின் மீதான காதலைக் கூராக்கியது. ஆனாலும் அது ஒருதலைக் காதலாகவே இன்று வரை தொடர்கிறது. காட்டுக்குள் நேராகக் கண்டு இன்புறும் வாய்ப்பு கிட்டவில்லை. ஆனால் அது அத்தனை எளிதானதில்லை என்பதை உணர்த்தியது புத்தகம் ஒன்று.

இன்று உச்சி வேளையில் சென்னைப் புத்தகத் திருவிழா 45 லிருந்து "பொம்மராயன்" கும்கிகளின் கதை, எனும் நூல் கிட்டியது. திரு ஜார்ஜ் அந்தோணிசாமி எழுதிய நூல் இது. கும்கி யானைகள் குறித்தானது. அவரது ஒரு காணொளியை நான் முன்பு பார்த்திருக்கிறேன். எனவே உடனே படித்துவிட வேண்டுமென்ற ஆவல் பிறக்க.. முடித்துவிட்டேன்.

ஒரு கலவையான உணர்வு தோன்ற சிறிது நேரம் சிந்தித்தபடி அமர்ந்திருந்தேன். என்ன எழுதுவது. மதிப்புரையா? அறிமுகமா? பாராட்டுரையா?

காலம் கடத்தாமல் இப்பொழுது எனது உள்ளத்தில் தோன்றிய உணர்வைப் பதிவிடுகிறேன். இவை என்னுடையது மட்டுமே. நீங்கள் அந்த நூலைப் படிக்கும் போது இன்னும் மிகலாம், குறையலாம். ஆனால் படியுங்கள் என்பது மட்டும் என் வேண்டுகோளாய் இருக்கிறது.

யானை, நிலத்தில் வாழும் உயிர்களில் பேருயிர். அவற்றின் இயல் வாழ்க்கை குறித்தான பல்வேறு காணொலிகள் இணையத்தில் இறைந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் பார்த்த நினைவுகளோடுதான் நூலைப் புரட்டுகிறேன்.

ஆனால், நூல் வேறு பாதையில் என்னை அழைத்துச் சென்றது. கானுயிர் ஒன்று காட்டை மறந்த கதை, இன்னொன்று கண்ணீரை மறைத்த கதை, கண்ணை இழந்த கதை என உணர்வுகளின் கலவையாய், காட்டைவிட அடர்வாய் விரிந்தது. மெல்ல நடக்கிறேன். அடர்ந்த புதர்களுக்கு இடையே, மரங்களுக்குப் பின்னே, ஆற்றின் மறுகரையில் என அங்கொன்றும் இங்கொன்றுமாய் எங்குமே யானைகள். 

மகிழ்ச்சியோடு நடந்து கொண்டிருக்கையில்  "மாவூத்தின் குச்சிக்கு அடிபணியும் போது கும்கியாகிறது கொம்பன்" எனும் தலைப்பில் கால் இடற பெரும் பள்ளத்தில் விழுந்தேன். என் அருகே மூர்த்தி மயங்கிக் கிடக்கிறான். கிருமாறன் வரும் வரையில் இருவரும் எழவில்லை.

யானைகளும் மனிதர்களும் ஏறத்தாழ ஒரே மாதிரியான வாழ்க்கை முறை கொண்டவர்களோ என்ற எண்ணம் நூலின் பக்கங்களிலெங்கும் சிந்திக் கிடக்கிறது. யானைகளும் உணர்வுகளின் கூட்டுக் கலவைதான். செருக்கடைகின்றன, மகிழ்கின்றன, சினம் கொள்கின்றன, முரண்படுகின்றன, முரண்டு பிடிக்கின்றன. இவ்வளவு ஏன்?, மனதுக்குள் கருவிக் கொள்கின்றன, கொலை செய்கின்றன. பாவம் சில வேளைகளில் நம்மைப் போல எல்லாவற்றையும்  மறந்து போகின்றன.

கரும்பைக் காட்டி அந்தப் பெருமலையைச் சாய்க்கிற மனிதன்?

இன்னும் தாய்வழிச் சமூகமாகவே இருக்கிற யானைகளில் ஆண் கொஞ்சம் சிக்கலானவன் தான் போலும். எதற்கும் துணிந்தே அவன் காடு மலை என எங்கும் அலைகிறான். ஆனாலும் மனித வாசனையடிக்கும் ஒரு யானைக் குட்டியை பெண் யானையோ ஆண் யானையோ தங்களோடு சேர்த்துக் கொள்வதில்லை. அம்மாவே பிள்ளையைத் தள்ளி வைத்து விடுகிற கதை.. கண்களில் ஈரம்.

இப்படி பேருயிராகக் காட்டை வலம்வரும் யானையைச் சின்னக் குச்சியினால் மண்டியிட வைக்கிற பயிற்சிதான் முதலில் எனும் போது உள்ளம் வலித்தது. 

மாவூத்துகளுக்கும் யானைகளுக்குமான பிணைப்பு, அன்பு நிகழ்வுகள் என தன் எழுத்தால் வரிகளைச் செம்மைப் படுத்தியிருக்கிறார் ஆசிரியர். சிறப்பான நடை. 

"இயல்பைக் கொல்லத் தேவைப்படும் நாட்கள் 48"

"மசினி யானை தன்னுடைய வாழ்வின் மோசமான ஒரு நாளைக் கடந்துசெல்ல வேண்டியிருந்தது."

"காலம் எப்போதும் இப்படித்தான். சம்பந்தப்பட்ட இருவரைக் காயப்படுத்தி வேடிக்கை பார்க்கும்".

உணர்வுகளை இறைத்துக் கொண்டே மெல்ல நடக்கிறது அவரது எழுத்து. ஆனால் நான் விரைகிறேன்.

"நினைவில் முகாம் உள்ள குழந்தை" என்ற சொற்கட்டில் நான் மூழ்குகிறேன். பொம்மன் ஆரத்தழுவிய மசினி யானை, நானாக உணர்கிறேன். உங்களில் சிலருக்கும் அந்த உணர்வு வரலாம்.

"நினைவில் காடுள்ள மிருகத்திற்குப் பார்வை போனதை எப்படி விவரிப்பது?" என்ற அவரது கேள்வியில் நானும் தேங்குகிறேன். 

"மகராசனைப் பிடித்து ஒரு பூச்சியைப் போல வழி நடத்தினார்கள்" என்ற எழுத்துகளின் இடையே நானும் விக்கித்துத் தடுமாறுகிறேன்.

மனிதர்கள் இத்தனை மோசமானவர்களா?"

கழிப்பறையில் விழுந்த பல்லியை இரண்டு வாளி நீர் ஊற்றி கோப்பையில் மூழ்கடித்த பிறகே, கழிக்க அமருகிறவனுக்கு காடுகளில் அலைந்து எழுதுபவரது உழைப்பு எத்தனை உயர்வானது. அதிலும் என் ஒருதலைக் காதலுக்குக் கவிதை எழுதிய கைகள் இன்னும் சிறப்பானவைதான். ஏராளமான இடங்களில், "கேரளத்தில் இருக்கும் மாவூத்துகள் தான் யானைகளைச் சிறப்பாக இயக்கும் வாய்ப்புப் பெற்றவர்கள்" என்பன போன்ற எனது கற்பிதங்களின் மீது கல்லெறிந்து விட்டுப் போகிறது அவரது பட்டறிவு. அயற் சொற்களை இன்னும் தவிர்க்கலாம். இதுபோன்ற நூற்களுக்கு பழஞ்சொற்கள் சிறப்புச் சேர்க்கும் என்பது என் எண்ணம்.

நூலெங்கும் நான் அறிந்த, அறிந்திராத செய்திகள் ஏராளம் காணக் கிடைக்கின்றன. இப்பொழுது காலம் விரைந்து கொண்டிருக்கிறது. மாவூத்துகளின் பிள்ளைகள் படிக்கிறார்கள். வேறு வேலைக்குப் போய்விடுவார்கள், அது காலத்தின் கட்டாயம். தவிர்க்க இயலாதது.

ஆனால், பல்கலைக் கழகங்களால் மாவூத்தை உற்பத்தி செய்ய இயலாது. நாமோ காட்டைச் சிதைப்பதை நிறுத்துவதாயில்லை. அதனால் சுள்ளிக் கொம்பன்கள் ஏராளம் வெளியேறுவார்கள். மாவூத்துகள் இல்லாத போது மயக்க ஊசிகள் பெரிதாகி விடுமா? அல்லது ??.  கேள்விகள் எழுவதைத் தடுக்க இயலவில்லை.

பல உயிர்களின் உணர்வுக் கலவையாக எழுதப்பெற்ற நூலுக்கு அட்டைப்படம் வடிவமைத்தல் சவாலான ஒன்று. அதைத் திறம்படச் செய்திருக்கிறார் திரு சூரியராஜ். நூலின் ஒவ்வொரு வரியிலும் ஏதோ ஒன்று இருப்பதுபோல அடைப்படமும் பெருங்கலவை.

நூலின் இறுதிப் பத்தி துயரத்தின் சாறு. அதிலும் அந்த இறுதி வரி... 

நம்முடைய தற்கால நிலையும் மனதில் வந்துபோனது. 

"ஆடையணிந்த கும்கிகள்தானே நாம்."


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்