ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் சொந்த மண்ணில் வாழ்ந்தாயிற்று. தென்கோடியில் தாடகை மலை அடிவாரத்தில் விரிந்து கிடக்கும் தாழக்குடியும் அதைச் சுற்றி இருக்கிற ஊர்களும் எப்பொழுதும் உள்ளத்தில் உரிமையோடு கதை சொல்லிக்கொண்டே இருக்கின்றன. மிகக் கூர்மையாக எதையாவது சிந்திக்க நேர்ந்தால், குறிப்புகளுக்காகவும் செய்திகளுக்காகவும் சொந்த மண்ணின் பண்பாட்டுக் கூறுகளும், நடந்த நிகழ்வுகளுமே முதல் தரவுகளாய் உள்ளத்தில் தோன்றும். காரணம் அவை முப்பது ஆண்டுகளாக நேரில் கண்டு துய்த்தவை. அதன் பிறகே வேறு இடங்களில் கண்டவையும், கேட்டவையும், படித்தவையும் வரும். அதையும் தாண்டி தேவை ஏற்படுகிற போது களத்தில் தேடல் நிகழும்.
நாகர்கோயிலின் அருகில் இருக்கும் எங்கள் ஊருக்கு வருவதற்கு வயல்காட்டில் நின்றுகொண்டிருக்கும் யாரிடமேனும் வழி கேட்டீர்கள் என்றால், "இப்டியே நேரா வடக்க போயிற்றே இருங்க. கொஞ்ச தூரம் போனதுக்குப் பொறவு, எறச்சகொளத்துல ஒரு பெரிய சாத்தான் செல நிக்க கோயில் ஒண்ணு வரும். அங்ஙன இருந்து ஒரு அம்பதடி போனேயோன்னா கெழக்க ஒரு ரோடு போகும். அதுல போங்க. பொய்யிற்றே இருந்தியோன்னா வீராணமங்கலம் வந்துரும். அங்ஙன ஒரு சொள்ளமாடங் கோயில் அதிலேயிருந்து பழயோடியும் கெழக்க போனா ஒரு பூதத்தாங் கோயில் வரும். அதுல ரெண்டு ரோடு இருக்கும். நீங்க திரும்பாம நேராப் போங்கோ. அடுத்தால ஒரு வேதக்கோயில் வரும். அதான் தாழாடி. அங்ஙனயும் ரெண்டு ரோடு. நீங்க எடதுவசம் உள்ள ரோட்டுல போங்க. கடைத்தெரு வந்துரும்." இப்படித்தான் வழி சொல்லி உங்களை அனுப்பி வைப்பார்கள்.
செவங்கோயில், பெருமா கோயில், பிள்ளையார் கோயில், ஊரம்மங்கோயில், பாறப்பள்ளி, சவேரியார் கோயில் இப்படித்தான் பேச்சு வழக்கு. கிருத்தவத் தேவாலயம் கூட எங்களுக்கு வேதக்கோயில் தான். இந்துக் கோயில் என்பது பேச்சு வழக்கிலோ, எழுத்து வழக்கிலோ இல்லை. (கூகுள் வரைபடத்தில்தான் அப்படிப் போட்டுத் தொலைக்கிறான்.)
சுடலைமாடன் கோயிலுக்கு நேர்ச்சையாக வளர்க்கப்படும் ஆடுகள் கோழிகள் உண்டு. "மக்கா அந்தக் கிடா சொள்ளமாடனுக்கு நேந்ததுடே. அடிக்காத" என்று ஆட்டைப் பற்றிப் பேசும்போது வெறும் "சொள்ளமாடன்"தான். "சொள்ளமாட சாமி" கிடையாது. சாமிக்கும் எங்களுக்கும் அவ்வளவு நெருக்கம்.
இருபத்தெட்டு
ஆண்டுகளுக்கு முன் மதுக்கூரை அடுத்த காசாங்காட்டில் நண்பர் ஒருவரின்
அழைப்பின் பேரில் பொங்கலுக்குச் சென்றிருந்தேன். அங்கெல்லாம்
தைப்பொங்கலுக்கு மூன்றாம் நாள் "முன்னோர் வழிபாடு". புதுச் சீலை, வேட்டி,
துண்டு, வளையல்கள், கறி, கோழி, மீன் என பெரும் படையலிட்டு
வழிபட்டார்கள். நமக்கும் பெருஞ்சோறு அளித்தார்கள்.
காவிரிக்கரையும் இதுபோன்ற உணர்வுகளைத்தான் கொடுத்தது. இருபது ஆண்டுகளுக்கு முன் "ஆயி கும்புடுறோம் வாங்க என்றழைத்த நண்பரிடம் "அப்படீன்னா என்னங்க?" என்று கேட்டேன். "வருடத்துக்கு ஒருமுறை சமயபுரத்தாள நெனச்சு வீட்டுல கும்புடுறதுங்க" என்றார். ஆடு (தலைக்கறி, இரத்தப்பொரியல், குடல்கறி, இறைச்சிக்கறி என வகைவகையாய் சமைத்தது), கோழி, மீன், இளநீர் என எல்லாமும் சேர்ந்த பெரும்படையலிட்டு வழிபட்டு விருந்து படைத்தார்கள். செம விருந்து.
இப்பொழுது சென்னையில் வதிகிறேன். இங்கே, ஆடியில் அம்மனுக்குக் கூழ் ஊற்றும் போது, மீன் முகாமையாக வழங்கப் படுகிறது. கையில் ஒரு குவளையில் கூழும் மீன் துண்டு ஒன்றும் யார் போனாலும் கிடைக்கும். ஆயிரக்கணக்கான் மீன்களும், முட்டையும் அம்மனுக்கு கொடையாக வழங்கப்பெறும்.
இப்படி ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வழக்கம் இருக்கிறது. இந்த வழிபாடுகளைச் செய்வோர் சமூகத்தின் பெரும்பகுதியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூகத்தை ஆக்கிய முகாமையான கூறுகளில் மொழி முதலிடம் பெறுகிறது. குறியீடுகளாக இருந்த பண்பாட்டுக் கூறுகளைச் செம்மைப் படுத்தி; குழு, இனம் என்று இயங்கியல் செழுமையைக் கொடுத்து மனிதனை மனிதனாக்கியது மொழி. அதற்குள் அந்தச் சமூகத்தின் பேச்சு, எழுத்து, வழிபாடு, கலை, வட்டார வழக்கு என அனைத்தும் அடக்கம். மொழிக்குள் அயல் குறுக்கீடுகள் வரும்போதுதான் சிக்கல் எழுகிறது.
அப்படியொரு சிக்கலை பன்னிரெண்டாம் நூற்றாண்டில் தமிழ் சந்தித்த இடந்தான் தமிழில் எழுதப்பெற்ற நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு திருக்குருகைப் பிரான் பிள்ளான் மணிபிரளவ நடையில் எழுதிய "ஆறாயிரப்படி" எனும் உரைநூல். பின்பு "நாலாயிரத் திவ்ய பிரபந்தம் (?)" முழுமைக்கும் இதுபோன்றே மணிப்பவள உரைகள் எழுதப்பெற்றன. பாடல்கள் நல்ல தமிழில் இருக்கையில் உரைகள் மணிப்பவள நடையில் எழுதப்பெற்றதன் காரணம் எல்லோருக்கும் புரியும் என எண்ணுகிறேன்.
அண்டைய கேரளத்தைப் போல தமிழ் மண்ணில் பேச்சுவழக்கில் அயன்மொழி கலந்து முழுவதுமாகச் சிதைத்துவிடவில்லை. ஆனால், இலக்கியங்களில் பன்னிரெண்டாம் நூற்றாண்டு தொடக்கம் மணிப்பவளம் திணிக்கப்பெற்றது. வைணவத்தைத் தொடர்ந்தது சமணம். பெருமளவு இல்லையென்றாலும் சைவத்திலும் இந்த பாதிப்பு இருந்தது. பாடல்களில் வடசொற் கலப்பும், உரைகளில் மணிப்பவள நடையும் பேராதிக்கம் செலுத்தின.
இப்படியான கலப்பில்தான் சேர நாட்டின் மணிப்பவளம் ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் மெல்ல மெல்ல பேச்சுவழக்கைத் தொடங்கியது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஏற்கனவே அங்கொன்றும் இங்கொன்றுமாக வடசொல் கலந்திருந்த மலைநாட்டுத் தமிழில், நம்பூதிரிகள் மணிப்பிரவாளாமே உயர்ந்தது என்று மக்களை நம்பவைத்து எவ்வளவு இயலுமோ அவ்வளவு வடமொழிச் சொற்களைக் கலந்து பேசினார்கள். மெல்ல மெல்ல அதுவே வெகுமக்கள் வழக்காகியது. நான்கைந்து நூற்றாண்டுகளாக சோழ பாண்டிய ஆதிக்கம் குறைந்திருந்த மலைநாட்டில் மலையாளம் பிறப்பெடுத்தது.
மணிப்பிரவாள நடைபயின்ற மலைநாட்டின் ஒரு பகுதி மக்கள் பெருவாரியாக ஈழத்தில் குடியேற்றப்பட்டார்கள். ஈழத்தமிழும் மெல்ல மெல்ல வடசொல் கலந்து பரவத் தொடங்கியது. இன்றும் ஈழத் தமிழைக் கூர்ந்து நோக்கினால் இதை உணரலாம்.
பெருந் தமிழறிஞர்கள் என அறியப்பட்ட மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவருடைய மாணாக்கர் வெ.சாமிநாத ஐயர் போன்றோரும் இதை எதிர்த்தாரில்லை. "போஷித்தே" வந்தார்கள். ஐயா மறைமலையடிகள் போன்றோரே எதிர்வினை ஆற்றினார்கள். தனித்தமிழ் இயக்கம் துளிர்த்தது.
இன்று நாம் படிக்கிற பெரும்பாலான புதினங்கள், கட்டுரைகள், ஆய்வறிக்கை மற்றும் நூற்கள் மணிப்பவளத்தை ஒதுக்கித் தள்ளியவையே. திரைப் பாடல்களில் கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்றோர் மணிப்பவள நடையைப் பயன்படுத்திய போதும் பின் வந்த சில பாடலாசிரியர்கள் நல்ல தமிழில் எழுதினார்கள். எழுதுகிறார்கள்.
அண்மையில் ஒரு திரைப்படப் பாடலைக் கேட்டேன். அந்தப் பாடலாசிரியர் என் மகனின் நெருங்கிய நண்பர். பாடலைக் கேட்டுவிட்டு "வரிகள் மிகச் சிறப்பாக இருக்கிறது. 99/100 மதிப்பெண். நதி மட்டும் வந்திராவிட்டால் 100/100" என்று எழுதினேன். அந்த அளவுக்கு அருமையான தமிழில் எழுதியிருந்தார், 'நதி' என்ற சொல்லைத் தவிர.
"கண்ணதாசன், வைரமுத்து போன்றோர் தொடர்ந்து பயன்படுத்தியதால் 'நதி' தமிழென்று நினைத்துவிட்டேன்" என்று சொன்னார். இதுதான் மொழி ஆளுமைகள் மொழிக்கு இழைக்கிற கேடு.
இந்தக் கேடு அத்தனை வாழ்வியல் கூறுகளிலும் நிகழ்த்தப் பெறும். மொழி, பண்பாடு, மெய்யியல், உணவு, உடுக்கை என எல்லாவற்றிலும் அயலவரின் தாக்கம் கொண்ட சொந்த மக்களாலேயே நிகழ்த்தப் பெறும். அதற்கான காரணிகள் ஏராளம்.
கேடுகளைக் களைய வேண்டும், தடுக்க வேண்டும் மறைமலையடிகள் செய்ததைப் போல.
அன்றி...??
=============
அக்டோபர் 2021 ல் தொடங்கிய கட்டுரை, இன்று 07-04-2020 ல் நிறைவுறுகிறது.
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்