ஆவணி மாதம் பிறந்துவிட்டாலே “மக்ளே எட்டரை காருக்கு நாரம்மன் கோயிலுக்குப் போலாமா?” என்ற ஆச்சியின் குரல் கேட்பதற்காகக் காத்துக் கிடக்கும் உள்ளம். ஆவணி மாதத்து ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருக்கும் நாகரம்மன் / நாகராசா கோவிலுக்குப் போவதென்பது குமரி மக்களின் நெடுநாளைய வழக்கம்.
தூக்கு வாளியில் அல்லது குப்பிகளில் பாலைச் சுமந்து சென்று அங்கே இருக்கும் நூற்றுக்கணக்கான நாகச் சிலைகளின் மீது ஊற்றி வழிபடுவதும், உள்ளே கருவறையில் தரப்படுகிற ஈரமண்ணை நெற்றியில் இட்டுக்கொள்வதும், விளாங்காய், பேரிக்காய், பப்ளிமாசு போன்றவற்றை வாங்கிச் சுவைப்பதும் என சிறுவயது ஆவணி ஞாயிற்றுக்கிழமைகள் மகிழ்ச்சி நிறைந்தவை.