உணர்வு நீர்ச்சுருளை
முகந்த மேகங்களாயின
என் கவிதைகள்.
சில வேளைகளில்
சிந்தும் துளியால்
உங்கள் உள்ளம் நனைக்கலாம்.
பல வேளைகளில்
மழையைச் சொரியாமல்
கடந்து மறையலாம்.
வெயிலை மறைத்து
வேனல் குறைக்கலாம்.
யாரும் நடந்திராத
பாலையில் பொழியலாம்.
அலைகளில் வீழ்ந்து
ஆழ்கடல் கலக்கலாம்.
மலைகளில் கசிந்து
மரங்களைக் கூடலாம்.
ஒவ்வோர் உள்ளத்திலும்
வெவ்வேறு
உருவங்கள் காட்டலாம்.
என்னைப் படிக்க
புத்தகம் தேடாதீர்.
உங்கள்
கால்விரல் தழுவும்
புற்களின் நுனியில்
துளியாய் நிற்கிறேன்.
பூக்களின் மடியில்
பரவித் திரளும்
தேனாய்க் கிடக்கிறேன்.
ஆர்ப்பரித்து ஒழுகும்
அருவியின் ஓசையில்
கலந்து உறைகிறேன்.
ஆழ்கடல் இருளில்
சிப்பியின் உள்ளே
முத்தாய்ப் பிறக்கிறேன்.
பாலையில் நெளியும்
பாம்பின் பற்களில்
விடமாய் விளைகிறேன்.
அண்ணாந்து பாருங்கள்
ஆகாய வெளியில்
மேகமாய் நகர்கிறேன்.
உற்று நோக்குவீர்
உங்களின் உள்ளே
நீங்களாய் நிறைகிறேன்.
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்