ஆவணி மாதம் பிறந்துவிட்டாலே “மக்ளே எட்டரை காருக்கு நாரம்மன் கோயிலுக்குப் போலாமா?” என்ற ஆச்சியின் குரல் கேட்பதற்காகக் காத்துக் கிடக்கும் உள்ளம். ஆவணி மாதத்து ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருக்கும் நாகரம்மன் / நாகராசா கோவிலுக்குப் போவதென்பது குமரி மக்களின் நெடுநாளைய வழக்கம்.
தூக்கு வாளியில் அல்லது குப்பிகளில் பாலைச் சுமந்து சென்று அங்கே இருக்கும் நூற்றுக்கணக்கான நாகச் சிலைகளின் மீது ஊற்றி வழிபடுவதும், உள்ளே கருவறையில் தரப்படுகிற ஈரமண்ணை நெற்றியில் இட்டுக்கொள்வதும், விளாங்காய், பேரிக்காய், பப்ளிமாசு போன்றவற்றை வாங்கிச் சுவைப்பதும் என சிறுவயது ஆவணி ஞாயிற்றுக்கிழமைகள் மகிழ்ச்சி நிறைந்தவை.
சிறுவயது முதலே அங்கு செல்லும்போது மட்டும் பெரிய வேறுபாட்டை உணர்ந்திருக்கின்றேன். மற்றக் கோவில்களைப் போலல்லாது எங்கு நோக்கினும் பாலும் மஞ்சளும் படிந்த பாம்புகளின் வரிசை. ஆலமரத்தடியில், குளக்கரையில், சுற்றுச் சுவர்களில்… அவற்றை எண்ணி மாளாது சிறுவயதில் அயர்ந்திருக்கிறேன்.
இன்றோ, அந்த மரபு வழிப்பட்ட வழிபாட்டு முறைமை குறித்துத் தேடியதில், பல்லாயிரமாண்டுகால பண்பாட்டுத் தொடர்ச்சியைக் கண்டு பெருவியப்புக் கொள்கிறேன்.
மாந்தவினத்தில் மிகப் பெரியவள்/ன் என நான் எண்ணுவது, முதன்முதலில் பேருயிரான யானைமேல் ஏறி ஒலியால் அல்லது சொற்களால் அதைத் தன் போக்கிற்குப் பயன்படுத்திய அந்த முதல் பெண் அல்லது ஆணைத்தான். மனித குலத்தின் போக்கை மாற்றிய அந்தப் பெரு நிகழ்வு வியப்புக்குரியது. அதற்கீடான மற்றொன்று பாம்பு குறித்தான அறிவு.
'யா' என்பது கருமைக் கருத்துவேர் என்கிறது சொற்பிறப்பியல். யா எனுஞ் சொல்லுக்கான பொருள்களில் கருமை, யானை, நாகம், யா மரம், குரங்கு ஆகியன காணக்கிடைக்கின்றன.
யா – யாகு – ஞாகு – நாகு – நாகம்
கருமையாக இருக்கும் பழம் நாகப்பழம் (வழக்கு) – நாவல் பழம்
யா மரம் – ஆமரம் –ஆச்சா மரம் (கருமையான மரம்)
ஆச்சா மரத்தில் செய்யப்படுவதால் “நாகசுரம்”. தமிழ் இசைகருவிகளில் தலை சிறந்தது. நெடுந்தொலைவு கேட்கும் தன்மையுள்ளது. கருமையான துளைக்கருவி. நாகம் – கருமை. சுரம் – உட்டுளை (hallow, horn)
கருமையான நாகங்களின் வளைந்து செல்லும் ஓசையற்ற நகர்வும், அதிர்வுகளை உணருந் திறனும் மாந்தனுக்கு வியப்பை / ஆர்வத்தைத் தூண்டியிருக்கலாம். யானையோடு ஒலிகொண்டு பேசியவன் இதற்கும் ஏதோ வழி கண்டிருப்பான் போலும். மழை குறித்தான தேடலில் யானைகள் மனிதனுக்குப் பேருதவி செய்திருக்கின்றன. அது போலவே இடி, மின்னல், நிலத்தின் அதிர்வுகள் குறித்தான தேடலில் பாம்புகள் மாந்த வாழ்வியலில் ஏதேனும் சிறப்பான பங்களிப்புச் செய்திருக்கலாம். அதன் தொடக்கமே நாக வழிபாடாகவும் பரிணமித்திருக்கலாம்.
ஏறத்தாழ ஏழாயிரமாண்டுகளுக்கு முன்பிருந்து, சிந்துவெளியில் நாகவழிபாடு இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் காணக்கிடைக்கின்றன.
திரு பூர்ணசந்திர ஜீவா அவர்கள் தன்னுடைய வலைப்பதிவில் கீழ்க் காணுமாறு கூறுகிறார்.
“சிந்து முத்திரை : மொகஞ்ச தாரோ : 1623 , 2847. (படம் :2)
ய அ அ அ காவ்வ ஆ லார் ம வய
இரு வ்வ ட்டமயில் கா அய் ன த
ஆ கய் ணா ட்ட ஏழு இரு தவ அ ட்ட அய்
வய = வலிய, ஆற்றல். மலார் = மலைக்குரியவர்.
அஅஅய = 3 அ = மூஅ --- மூஅய = மூவய
மூஅய = மூவய = மூத்த அய்ய.
தன அய் = தனயய் = தனயை. ( யகர உடம்படு மெய் பெற்று வந்தது )
தனயை = மகள், செல்வி.
காட்ட மயில் = காட்டு மயில் ( கொற்றவை )
அவ்வய் = அவ்வை = கொற்றவை
இரு = கரிய, பெரிய. அய்ட்ட அ = அய்யிட்ட அ = அய்யிட்டவை.
தவ = பெரிய தவத்தன்மைய எழுட்ட = எழுத்த = எழுதப்பட்ட, எழுப்பப்பட்ட.
நாகய் = நாகை = நாகம், நாகா.
நாக வழிபாடு சிந்துவில் சிறப்பிடம் பெறுகிறது. அது சிவ வழிபாட்டுடன் தொடர்புடையதாக உள்ளது. மனிதன் மலைகளில், காடுகளில் வாழும் போது பாம்பைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், அவன் மருத வாழ்வில் -- வேளாண் நாகரிக வாழ்வில் பெரிதும் அஞ்சுகிறான். காரணம் அவன் அந்த நாகங்களின் வாழ்விடத்தை அழித்து வீடுகள், கழனிகளையும், நகரங்களையும் உருவாக்குகிறான். நாகங்களின் வாழ்விடத்தை அவன் அழித்துவிட்டான். மகாபாரதத்தில் அர்ஜுனன் அப்படித்தான் தலைநகரான இந்திரப்பிரஸ்தம் என்னும் நகரை உருவாக்க நாகங்களை நாகர்களை அழித்து அவர்களது பகையைத் தேடிக் கொண்டான். எனவே, வேளாண் நாகரிகமான சிந்து நாகரிகத்தில் நாகங்களின் அச்சுறுத்தல் மிகுதியும் இருந்திருக்கும். அஞ்சத்தக்கவற்றை வழிபடு பொருளாக ஏற்றல் இயல்பு தானே. அதுமட்டுமல்ல நாகம் ஒரு இனக்குழு அடையாளம். தமிழினத்தின் அடையாளம். சிந்து முத்திரைகளில் ஓகநிலையில் வீற்றிருக்கும் சிவ வடிவை மனிதர்களோடுகூட நாகங்களும் எழுந்து படமெடுத்த நிலையில் வணங்குவதாகப் பல முத்திரைகள் உள்ளன. இது அந்த மனிதர்கள் நாகர்கள் என்பதன் குறியீடு என்றும் கருதலாம். நாகம் என்பது கொடிய நஞ்சுடைய நாகத்தை மட்டும் அல்ல கருப்பு நிறம் கொண்ட யானை, மலை, வானம், மேகம், நாவல் பழம் போன்ற பலவற்றையும் குறிக்கிறது. ஆகவே. அத்தகைய கருத்த, இருட்டு நிறமுடைய மக்களையும் குறித்திருக்கலாம். ரிக் வேதம் தமது எதிரிகளான கருநிற இருளனைக் கிருஷ்ணன் என்றும், இருளர் மக்களைக் கிருஷ்ணர்கள் என்றும் கூறுவதை ஒப்பு நோக்க வேண்டும். எனவே, சிந்து நாகரிகம் கறுப்பு மக்களையே இருளர், நாகர் என்னும் பெயரில் குறித்தனராதல் வேண்டும். எனவே சிந்துவெளிச் சிவன் தனது மக்களைப் போலவே இருளாக -- கரிய நிறத்தினனாக இருந்ததில் வியப்பில்லை. ஆகவே முத்திரை அவனை இரு அய்ய என்கிறது. இறைவனை ஓரிடத்தில் இருளனைய என்றும், இருட்ட என்று இன்னொரு இடத்திலும்கூட வேறு பல சிந்து முத்திரைகள் குறிப்பிடுகின்றன.” என குறிக்கிறார்.
இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் அவர்களது கட்டுரையொன்றில்,
இலங்கையின் தொல்லியற் திணைக்களப் பணிப்பாளராக இருந்த கலாநிதி சிறான்தெரணியகல இப்பண்பாட்டை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியவர்கள் நாக இன மக்கள் எனக் கூறுகின்றார். இப்பண்பாட்டு மக்கள் தென்தமிழகத்தில் இருந்து இலங்கைக்குப் புலம் பெயர்ந்தவர்கள் எனக் கூறும் பேராசிரியர் கா.இந்திரபாலா இந்த நாக இன மக்களின் ஒரு பிரிவினரே இற்றைக்கு 2500 ஆண்டளவில் தமிழ் மொழி பேசும் மக்களாக மாறினர் எனக் கூறுகின்றார். பூநகரிப் பிராந்தியத்தில் நாகபடுவான் என்ற இடப்பெயரின் பழமை, அதன் பொருள் ஆய்வுக்கு உரியது. படுவம், படுவான் என்பது பழமையான தமிழ்ச்சொல். இப்பெயர்கள் சங்க இலக்கியத்தில் ஆழமான குளம், பெரிய குளம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாககுளம் என்ற பொருளைக் கொண்ட இடப்பெயரே இன்றும் மாற்றம் அடையாது நாகபடுவான் என்ற பண்டைய தமிழ்ச் சொல்லில்; அழைக்கப்படுகிறது எனலாம். கலாநிதி இரகுபதி இவ்விடப்பெயர் ஆதியில் இங்கு நாகத்தைக் குலமரபாகக்க கொண்ட மக்கள் வாழ்ந்ததன் காரணமாகத் தோன்றியது எனக் கூறுகிறார். இவ்விடத்தில் ஆதியிரும்புக்காலப் பண்பாட்டுச் சின்ங்களுடன் அதிக எண்ணிக்கையில் சுடுமண்ணாலான நாகச் சின்னங்கள், பீடத்துடன் கூடிய நாக, நாகினி சிலைகள், சிற்பங்கள், நாக கற்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாதாரங்கள் ஆதியிரும்புக்காலப் பண்டு மக்கள் மதவழிபாட்டில் நாகத்தை தமது குலமரபுச் சின்னமாகக் கொண்டிருந்தனர் என்பதை உறுதிப்படுத்துகின்றன. அவற்றுள் நாகச் சிற்பத்தை பானையில் வைத்து வழிபடப்பட்டதற்கான சான்றுகள் தொல்லியல் அறிஞர்களுக்குப் புதிய அம்சமாகக் காணப்படுகின்றது.” என்கிறார்.
பண்டைய நாட்களில் நகரங்களையும் பெருஞ் செல்வங்களையும் பாம்பு பாதுகாக்கிறது என்ற எண்ணம் உலகம் முழுக்கப் பரவியிருந்திருக்கிறது. வரலாற்றறிஞர் ஹீரோடோட்டஸ், கிரீஸ் நாட்டின் காவல் நகரங்களுள் ஒன்றான ஏதென்ஸ் நகரின் கோட்டையை நாகப் பாம்பு காவல் காக்கிறது என்கிறார். இங்கும் அது போன்ற கதைகள் உண்டு. மதுரையை நாகம் காக்கிறது எனப் பகர்கிறது திருவிளையாடல் புராணம்.
அருகே இருக்கிற கேரளத்தில் இன்றும் நாக வழிபாடு மிகச் சிறப்பாக நடக்கிறது. அங்கு பரவலாக வழிபடப்படும் பகவதி எனுந் தெய்வம் குறித்த பாடல்களில் சில கண்ணகியைக் குறிப்பதுமாகும். நாட்டார் வழக்காற்றியல் அறிஞர் நா.வானமாமலை, “ஒரு வேலனாட்டக்காரன் சொன்ன கதையிலிருந்து, கண்ணகி கதை இருந்தது என்பது தெரிகின்றது. 'பொன் பணிக்காரரை அந்நு நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லா. தன்னைப் பட்டிச்ச (ஏமாற்றிய) நகர வீரிய பெருந்தட்டானோடு வாக்கத்தூரம்மா பறையுன்ன சங்கதியிலிருந்து வியக்தமாகும்' என்று மலையாளத்தில் சொன்னான். கோவலனை ஏமாற்றிய தட்டானை நகர வீரிய தட்டான் என்றும், கண்ணகியை வாக்கத்தூரம்மா என்று சொல்வதும் தெரிகின்றது. கண்ணகி என்ற வாக்கத்தூரம்மா சொல்லும் பாட்டு மலையாளத்தில் பின் வருமாறு கொடுக்கப்படுகின்றது.
எல்லல்லா தெய்வத்தோடு பகவதியோடும்
இடையிலோகி செறுமனுஷரோடு காட்டும் போல
ஈ தெய்வத்தோடு நீதட்டாம்மா காணிக்குமோ? : (மக்களும் மரபுகளும் நூலில் நா.வானமாமலை)
இந்த எல்லல்லா தெய்வங்களில் நாக பகவதியும் ஒன்று. கேரளத்தின் மன்னார்சால நாகராஜா கோவில் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. அங்கு நடைபெறும் ஆயில்ய பூசை விழா சிறப்பு வாய்ந்த்து. வலியம்மா இல்லாமல் அவரது சொல் கேளாமல் விழா தொடங்குவதோ அல்லது நிறைவடைவதோ இல்லை. இதில் முக்கிய நிகழ்வான “சர்பந்துள்ளல் மற்றும் சர்ப்பம் பாட்டு” ஆகியவை நாற்பத்தியோரு ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழ்த்தப் பெறுகின்றன என்பது வியப்பு. பெண்களே அதிக அளவில் பூசைகளும் சர்பந்துள்ளலும் நிகழ்த்துகிறார்கள்.
இதுபோன்ற சடங்குக் கலைகளிலிருந்த பாம்புபோன்று ஆடும் ஆட்டம் மெல்ல மெல்ல பரதம் போன்ற நிகழ்த்துக் கலைகளிலும் இணைந்துகொண்டது நாக வழிபாட்டின் நீட்சியையே உணர்த்துகின்றது.
பண்டைய (கிமு 2000) சுமேரிய வழிபாட்டு முறைகளில் வணங்கப்பட்ட சுமேரிய தெய்வம், நிங்கிஷ்சிடா, இரண்டு க்ரிஃபோன்கள் முசுஸ்ஸுவுடன், நடுவில் ஒரு முளையைச் சுற்றி இரண்டு பாம்புகள் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்த்து. (படம் :
புறத்திணை நன்னாகனார், மருதன் இளநாகனார், முரஞ்சியூர் முடிநாகராயர், வெள்ளைக்குடி நாகனார், சங்கவருணர் என்னும் நாகரியர் எனும் சங்கப் புலவர் பெயர்களும் நாகம் தொடர்புடைய மக்கள் என்பதாகக் காணக்கிடைக்கிறது.
நாகர் கோயில், நாகப்பட்டினம், திருப்பாம்புரம் – ஊர்ப் பெயர்கள்.
நாகங்கள் குறித்த சிற்பங்களில் பெரும்பாலும் அவை நீரைக் குறிப்பதற்காகவே பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்ற கருத்தும் உண்டு. பாம்பு என்பதற்கு பிங்கல நிகண்டு நீர்க்கரை என்று ஒரு பொருள் தருகிறது. பாம்பு என்பது நாகத்துக்கேயுரிய சிறப்புப் பெயர் பரவுதல்-விரிதல் எனப்பொருள்படும் பம்பு (பம்புதல்); என்னுஞ் சொல் பாம்பு எனத் தலைநீண்டு, படம் விரிக்கும் அரவின் பெயராயிற்று, ஆயினும் அப்பெயர் இனம் பற்றி விரியன், சாரை, வழலை, மண்ணுளி, இருதலை மணியன் முதலான எல்லாவற்றுக்கும் பொதுப்பெயராயிற்று ஆனைமையால், படம் விரிப்பதாகிய உண்மையான பாம்பு, நல்ல பாம்பு எனப்பட்டது.
வேட்டைச் சமூகம் தாய்வழிச் சமூகமாக இருந்தவரை செழிப்பாக இருந்த, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதனின் வழிபாட்டுமுறைகளில் இடம்பெற்றிருந்த நாகம் பெரு மதங்களால் மெல்ல மெல்ல கீழிறங்கி சாமானிய மக்களின் வழிபாடாகச் சுருங்கிப் போனது. கேரளத்தில் காணப்படும் புள்ளுவன் பாட்டும் சர்ப்பக்காவுகளும் இதற்குச் சான்றாகின்றன. நாகராஜா கோவில் போன்று தனிக்கடவுளாக இருந்தவை மெல்ல கோவிலின் ஏதோ ஒரு புறத்தில் இடம்பெற்றன (மூதேவியைப் போல). ஏணியும் பாம்பும் விளையாட்டில்கூட பாம்பின் வாயருகே வந்தால் நீங்கள் கீழிறங்கிவிடுவீர்கள். பெருமதங்கள் கட்டமைத்த உளவியல் அது.
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்