"என்ன கவிஞரே... நலமா?"
பேராசிரியர் க.நெடுஞ்செழியன் ஐயா மறைந்துவிட்டார்.
முந்தாநாளிரவு நண்பர் இராசாரகுநாதன்.நா பதிவில் அவர் உடல் நலமற்றிருப்பதை அறிந்துகொண்டேன். நேற்று மாலை சென்று பார்க்கவேண்டும் என நினைத்திருந்தேன். கடுமையான மழை. (மீறிச் சென்றிருக்க வேண்டும் நான்).
நேற்றிரவு நண்பர் Muthukumarasamy Shanmuguasundaram தொலைபேசியில் "ஐயாவைப் பார்த்தீர்களா?" என்று கேட்டார். நாளை போகிறேன் என்று சொன்னேன். முழுமையாக வாய்ப்பற்றுப் போனது. இயலாமையாக உணர்கிறேன்.
இன்று வைகறையில் அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தியே காணக்கிடைத்தது.
மொழிக்கும், பண்பாட்டிற்கும் பேருழைப்பை நல்கிய பேராசிரியர். நுணுக்கமான பார்வைகொண்டு திருத்தம் சொல்கிற பெரும் பண்பாளர்.
சில கருத்துக்களோடு உடன்பாடில்லை என்றாலும் தமிழுக்கு நல்கிய உங்கள் பேருழைப்பிற்கு தலைதாழ்ந்த வணக்கம் ஐயா.
உமது பாட்டே உமக்குப் படையல்.
========================
"கயல் எழுதி வில் எழுதிக்
கடுஞ்சினத்துப் புலி எழுதி !
புயல் எழுதும் இமயத்துப்
பொற்கோட்டில் தமிழ் ஏற
செயல் எழுதி !
வையத்து திசையெல்லாம்
மானமெனும் உயில் எழுதி
சென்றவர்கள் உன் முன்னோர்! - என்று
அறிவாயா? அறிவாயா?"
=========================
அறியச்செய்தமைக்கு, காலத்துக்கும் கடப்பாடுகொள்ளும் தமிழினம். சென்று வாருங்கள் ஐயா
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்