தமிழ் வரிவடிவத்தில் "தம்பிரான் வணக்கம்" அச்சேறியது 1557ல். இவையெல்லாம் சமயம் சார்ந்ததாக இருக்க சென்னையிலிருந்து 1785 ல் வெளிவந்த "மெட்ராசு கூரியர்" என்ற ஆங்கில இதழிலும் தமிழ்ப் பக்கங்கள் அச்சாயிருந்தன என்பர். ஆனால் இதற்குச் சான்றில்லை.
சான்றாகப் திருக்குறள் அச்சுப்படி கிடைத்ததைக் கொண்டு பார்த்தால் சென்னையிலிருந்து 1812 ல் வெளிவந்த "மாசத் தினச் சரிதை" என்ற இதழே தமிழ்நாட்டிற்குள் வெளிவந்த
முதல் இதழ். அதற்கு முன்பே இலங்கையிலிருந்து 1802 முதல் வந்துகொண்டிருந்த "அரசாங்க வர்த்தமானி"யில் தமிழ், சிங்களம் ஆங்கிலம் ஆகிய மொழிகள் இடம் பெற்றிருந்தன.ஆய்வாளர் அ.மா.சாமி அவர்களின் "19 ஆம் நூற்றாண்டு தமிழ் இதழ்கள்" நூலின் படி அப்பொழுது ஏறத்தாழ 570 இதழ்கள் வெளிவந்துகொண்டிருந்தன. இந்த எண்ணிக்கை 2000 வது ஆண்டில் 10000 க்கும் மேலாக உயர்ந்துவிட்டது என்கிறார் இதழ் சேகரிப்பாளர் தி.மா.சரவணன் தனது "தமிழ்ச் சீரிதழ்கள்" எனும் நூலில். அவரது கூற்றின்படி அரசின் வெளியீட்டு மொழிகளான ஆங்கிலம், இந்தி தவிர்த்து தமிழே கூடுதலான இதழ்களைக் கொண்ட இந்திய மொழியாகும்.
வாசகனே படைப்பாளியாகவும், படைப்பாளியே வாசகனாகவும் இருக்க, சமூகத்திற்கு இதைத்தான் தரவேண்டும் என்ற சீரிய நோக்கில், சமூகத்தின் மீதான அக்கறையில் நடத்தப்படுபவை சீரிதழ்கள் (சிற்றிதழ்கள்).
கடந்த இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக சமூகப் பரப்பில் இவை ஒரு தொடர் போராட்டத்தை நடத்துகின்றன. பிடித்ததைத் தருகிறோம் என்கிற பொய்களோடு வலம் வருகிற வணிக இதழ்களுக்கு நேரெதிராக சமூகத்தின் சிந்தனை இருப்பைத் தக்கவைக்கவும், எல்லாத் தளங்களிலும் பரவலாக்கவும் செய்கின்றன.
சமூகத்தின் அறியாமையை / போதாமையை பரவலான உரையாடல்களில் எடுத்து வந்து சீராக்க முனைகிற பல வேளைகளில் வெற்றி பெறுகிற வலு சீரிதழ்களுக்கு உண்டு. வணிக இதழ்களில் மறுக்கப்படுகிற / மறைக்கப்படுகிற கருத்துகளை அலசி ஆய்கிற பண்பும் திறனும் நிறைந்த வாசக படைப்பாளிகளைக் கொண்டவை இவை.
அப்படியான இதழ்களின் பார்வைப் பழுது சமூகத்தின் அழிவுப் பாதைகளைத் திறந்துவிடும் என்பதும் மறுக்கவியலாத ஒன்று. இலக்கியம், கலை, பண்பாடு, அறிவியல்,அரசியல், சமூகவியல், கதை, கவிதை என பல்வேறு தளங்களிலும் வாசகர்களின் பங்களிப்போடு மலரும் இந்த இதழ்களில் மொழி முக்கியத்துவம் பெறுகிறது.
அண்மைக் காலமாக பல சீரிதழ்களில் மொழிக்கூறுகள் கூர்ந்து பார்த்துப் பயன்படுத்தப் படவில்லை என்றே தோன்றுகிறது. மொழி, மேலோட்டமாக அல்லது மேம்போக்காகக் கையாளப்படுகிறதோ என்ற கவலை வருகிறது. வலுவான பல கட்டுரைகளுக்குள்ளே, கவிதை என்ற சில வரிகளுக்குள்ளே, செய்திகளுக்குள்ளே தறிகெட்டோடுகிறது மொழி.
மொழி சீர் கெடும் போதெல்லாம் அதைச் சீர் செய்து தருகிற பெரும் பணியை இவ்விதழ்கள் முகாமையாகக் கொள்ளவேண்டுமென்பது என் அவா. இந்தியாவின் மொழிகளில் ஏராளமான இதழ்களைக் கொண்டு முதலிடத்தில் இருக்கிற தமிழ்ச் சீரிதழ்களின் ஆசிரியர்கள், படைப்பாளிகள், வாசகர்கள் இந்தக் கோரிக்கைக்குச் செவிமடுப்பீர்கள் என்று எண்ணுகிறேன். காரணம் சீரிதழ்கள் (சிற்றிதழ்கள்) இலட்சங்களுக்காக இல்லாமல் இலட்சியங்களுக்காக நடத்தப்படுபவை என்கிற பெருவிருதை, சமூகத்திடமிருந்து பெற்றவை. விருதுகளைத் தொலைத்துவிட வெற்றியாளர்கள் விரும்புவதில்லை என்ற நம்பிக்கை எனக்குண்டு. நன்றி.
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்