Tuesday, 15 November 2022

நூல் மதிப்புரை - வே.சுப்ரமணியசிவா



சென்னை புத்தகக் கண்காட்சியில் பாவாணந்தம் வெளியீட்டகத்தை கடக்கும் போது ஐயா திருச்சி மாதேவன் அவர்களையும் தோழர் முத்துக்குமாரசாமி அவர்களையும் பார்த்த உடனே அவ்வரங்கில் நுழைந்தோம். நலம் விசாரிப்போடு திருச்சிராப்பள்ளி ப. மாதேவன் ஐயா எழுதிய நூல்களை பற்றிய அறிமுகத்தையும் விளக்கத்தையும் அளித்தார் தோழர் முத்துக்குமாரசாமி அவர்கள். சிறப்பு விலையில் தொகுப்பு நூல்களையும் விற்பனைக்கு வைத்திருந்தனர்.

நூல்களை பார்த்து விட்டு பிறகு ”வந்து வாங்கி கொள்கிறேன் தோழர்” என்றேன். உடன் வந்திருந்த தோழர் வேல்முருகன் அவர்கள் ”என்னிடம் இருக்கும் பணத்தில் வாங்கி கொள்ளுங்கள்” என்றார். இருந்தாலும் மனம் கொள்ளவில்லை. முத்துக்குமாரசாமி தோழரிடம் "வந்து வாங்கி கொள்கிறேன்" என்று மன சங்கடத்துடனே அரங்கிலிருந்து வெளியே வந்தோம்.
முகம் தெரியாதவர்களின் புத்தக அரங்கில் புத்தகம் வாங்க வில்லை என்றால் அது பெரியதாக தெரிந்திருக்காது. நம் தோழர்களின் புத்தக அரங்கில் பார்த்து விட்டு வாங்காதது பெரும் குறையாகவே பட்டது.
காரணம் எனது ஆய்விற்கான நூல்களை வாங்குவதற்காக பணம் மட்டுமே என்னிடம் இருந்தது. அப்பணத்தில் பிற நூல்கள் வாங்கி விட்டால் ஆய்விற்காக நூல்களை வாங்க இயலாமல் போகுமோ என்ற அச்சம் தான். ஆய்விற்கு நூல்களை வாங்கி விட்ட பின் பணம் மீதி இருந்தால் பிற நூல்கள் வாங்கலாம் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் கடைசில பணம் மீதி இல்லை அதிகமானது தான் மிச்சம் ( அது வேற கத).
புத்தகம் வாங்காத குறை மனதில் இருந்து கொண்டே தான் இருந்தது. சமீபத்தில் ”தெய்வ தமிழ்ப் பேரவை” ஆன்மிக அமைப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக தேனி குச்சனூருக்கு போயிருந்தோம்.
அங்கு முத்துக்குமாரசாமி தோழர் நூல்களோடு வந்திருந்தார். அங்கு நூல்களும் விற்பனைக்கு இருந்தது. அதில் ஐயா திருச்சி மாதேவன் அவர்களின் நூல்களும் இருந்தது. உடனே “மணற்கேணி” என்ற நூலை மட்டும் வாங்கினேன். புத்தகம் வாங்க வில்லை என்ற குறை நீக்கியதாக மனம் உணர்ந்தது. சென்னையில் ஏற்பட்ட குறை தேனியில் தீர்ந்தது.
மகிழுந்து புறப்பட்டது. நூலை படிக்க துவங்கினேன். கசடற, பொய்யாமை என்னும் அறம், பிறப்பொக்கும், வல்வரவு, வடு, தோன்றாமை நன்று, நெடுங்கடல் நீர்மை, மணற்கேணி, காமத்துப்பால், யார்வாய் கேட்பினும் என்ற திருக்குறளில் வாசகங்களிலேயே பத்து தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றிருந்தது.
திருக்குறளை மையப்படுத்தி எழுதப்படும் இக்கட்டுரைகள் பொருளுரை போல் தான் இருக்கும் என்ற மன நிலையில் தான் படிக்க தொடங்கினேன். உண்மையில் அப்படி இல்லை. புதிய விளக்கமாகவும் எளிமையாகவும் இருந்தது. படிப்பது போல தெரியவில்லை உரையாடல் போல இருந்தது.
ஒவ்வொரு தலைப்பிலும் ஒரு குறள் தான் பேசப்படுகிறது. சங்க கால பாடல்கள், வரலாறு தகவல்கள், அறிவியல் செய்திகள் போன்றவற்றை கொண்டு திருக்குறளை மாறுப்பட்ட கோணத்தில் விளக்கி இருப்பது சிறப்பு.
மேலும் குறளை படிக்கும் முறைகளும் அதில் இடம் பெற்றிருந்தது. எல்லோரும் படிக்க வேண்டிய நூல் தான் என்றாலும் குறிப்பாக ஆசிரியர்கள் இந்நூலை அவசியம் படிக்க வேண்டும். எளிமையான எடுத்துக்காட்டுகளுடன் பொது செய்திகளோடு மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க மிக எளிமையானதாகவும் பயனாகவும் இருக்கும்.
இவ்வளவு செய்திகளையும் உள்ளடக்கி படிப்பவரை சோர்வில்லாமல் படிக்க செய்திருக்கும் ஐயா திருச்சி மாதேவன் அவர்களின் எழுத்து வடிவம் சிறப்பு.
மிகச் சிறப்பான நூல் இது. இக்காலக் கட்டத்தில் உள்ளவர்கள் திருக்குறளை மிக எளிமையாக அறிந்து கொள்ளுவதற்கான நூலாக ”மணற்கேணி” நூல் இருக்கும். சொல்வதற்கு நிறைய இருக்கு, அதை படிக்கும் போது நீங்களே அறிவீர்கள்.
’மணற்கேணி’ என்ற நூலை மிக சிறப்பாக படைத்திருக்கும் ஐயா திருச்சிராப்பள்ளி மாதேவன் அவர்களுக்கு எனது அன்பும் வாழ்த்தும்..!
நீங்களும் படிக்க விரும்பினால் பாவாணந்தம் வெளியீட்டகத்தை தொடர்பு கொள்ளுங்கள்.
பேச: 94428 01889



தோழமையுடன்
வே.சுப்ரமணியசிவா
27-03-2021

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்