நூல் அறிமுகம்
பொருநராற்றுப்படை - கதையுரை
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
கடந்தசில ஆண்டுகளில் கவிதை, கதை, கட்டுரை என்று நூல்களை அறிமுகம்செய்யும் பல கட்டுரைகளை நான் எழுதியிருக்கிறேன். என்றாலும், சங்க இலக்கிய உரைநூலொன்றை அறிமுகம்செய்து கட்டுரை எழுதுவது இதுவே முதன்முறையாகும்.
உரைநூலுக்கெல்லாம்கூட அறிமுகக்கட்டுரையா என்று சிலர் கேள்வி எழுப்பக்கூடும். அதற்கானப் பதில் இந்தக் கட்டுரையில் உள்ளது.
சங்க இலக்கியங்களுக்கு விரிவான, சுருக்கமான பல உரைகளை நான் வாசித்ததுண்டு. ஏறத்தாழ, அவற்றின் உள்ளடக்கம் ஒருபோலவேதான் இருக்கும். அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதொரு எழுத்து வகைமையை, நூலாசிரியர் மாதேவன் இந்த உரைநூலில் கையாண்டிருக்கிறார். ஆம், அதுதான் கதைசொல்வது போன்று உரைசொல்லல். நூலின் முகப்பிலேயே ‘கதையுரை’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார். நூலை வாசிக்கவாசிக்க அத்தனை எளிதாகவும், இன்பமாகவும் உள்ளது.
பத்துப்பாட்டு நூல்களில், பொருநராற்றுப்படையும் ஒன்று. 248 அடிகளைக்கொண்டது. முடத்தாமக்கண்ணியார் என்னும் பெண்பாற்புலவரால் பாடப்பட்டது. பசிப்பிணியால் வாடும் பொருநனும் அவனது துணைவியான பாடினியும் அவர்களது கூட்டத்தினரும், இலைகள் உதிர்ந்த ஒரு மரத்தடியில் சோர்வுடன் இருப்பதை முடத்தாமக்கண்ணியார் பார்க்கிறார். அவர்களை நெருங்கி, அவர்களிடம் கரிகால்சோழனின் விருந்தோம்பும் பண்பினை விதந்தோதிச்சொல்லி, கரிகால்சோழனிடம் செல்லுமாறு ஆற்றுப்படுத்துகிறார்.
மற்ற ஆற்றுப்படை நூல்களைப்போல், இங்கே வழிசொல்லவில்லை. அதற்கு அவசியமும் இல்லை என்று புரிகிறது. காரணம், அவர்கள் தங்கியிருக்கும் இடம், கரிகால்சோழனின் அரண்மனைக்கு அருகிலேயே இருந்திருக்கவேண்டும் மற்ற ஆற்றுப்படை நூல்களைப்போலவே, இங்கும் சீறியாழ்பற்றிய விவரணைகள் உள்ளன. அதற்குக் கையாளப்பட்டிருக்கும் உவமைகள் மிகச்சிறப்பு.
“எய்யா இளஞ்சூல் செய்யோள் அவ்வயிற்று
ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல”
சிவந்த மேனியைக்கொண்ட இளம்பெண் கருவுற்றிருக்கிறாள். பார்ப்பவர் கண்களுக்குப் புலப்படாதவாறு அவளுடைய வயிறு சற்றே மேடிட்டிருக்கிறது. அந்தப்பெண்ணின் அழகிய வயிற்றின்மீது வளர்ந்திருக்கும் மென்மையான மயிரின் ஒழுங்கானத் தோற்றம்போல், சீறியாழில் நரம்புகள் இழுத்துக்கட்டப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட உவமைகளைப் பெண்ணுடல் அறிந்த ஒரு பெண்ணாக முடத்தாமக்கண்ணியாரால் வெளிப்படுத்த முடிந்திருக்கிறது.
‘எய்யா இளஞ்சூல் ‘ என்பதானது, ஒரு பெண் கர்ப்பமுற்ற ஆரம்பகட்டத்தில், அவள் கருவுற்றிருக்கிறாள் என்பதே பார்ப்பவர் கண்களுக்குப் புலப்படாதவகையில் வயிறு சற்றே மேடிட்டிருக்கும். இதனைச் சொல்லும்போது, “ தாயோ, கணவனோ மட்டுமே அறிந்துகொள்ளும் அளவில் மெல்லிய மேடு தெரியும்” என்று மகாதேவன் விளக்கமளிப்பது அத்தனை சிறப்பு. ‘தாயறியாச் சூலா?” என்று ஒரு பழமொழிகூட நம்மிடம் உண்டு. ஒரு பெண் சூலுற்றபிறகு, அவளது வயிற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட மாற்றங்களை மற்றவர்கள் அறியாதபோதும், தாயும்,, கணவனும் அறிந்தே இருப்பார்கள் என்பது மகாதேவனின் அவதானிப்பு. இப்படிப்பட்ட அவரது அவதானிப்புகளை ஆங்காங்கே காணமுடிகிறது.
ஆனாலும் பாருங்கள், சூப்பர் ஸ்டார் ரஜினி, அவரது மனைவி மீனாவின் வயிறு வளைகாப்பு நடத்தும் அளவிற்குப் பெரிதாக வளர்ந்திருந்தாலும், கருவுறவில்லை என்பதை அறியாத அளவிற்கு அப்பாவி ‘எஜமானனாக’ இருந்திருக்கிறார் ! இலக்கியத்திற்கும், வெகுஜன மலிவான நாலாந்தர சினிமாவுக்கும் உள்ள வேறுபாடு, முடத்தாமக்கண்ணியாரின் இந்த வரிகளாலும், அவற்றிற்கு மகாதேவன் அளிக்கும் விளக்கத்தாலும் உணரப்படுகிறது. அதனால்தான், “ தாயோ, கணவனோ மட்டுமே அறிந்துகொள்ளும் அளவில் மெல்லிய மேடு தெரியும்” என்று மகாதேவன் எழுதும் உரை என்னை அத்தனை ஈர்த்தது.
“ நீர்ப்பெயர்ச் சுழியின்நிறைந்த கொப்பூழ்”
சீராக நீரோடும் ஆற்றில், ஒழுங்கான வட்டவடிவில் நகர்ந்துசெல்லும் நீர்ச்சுழி தோன்றும். அந்த நீர்ச்சுழி வடிவில் அழகியத் தோற்றமுடன் பாடினியின் கொப்புழ் இருந்ததாக முடத்தாமக்கண்ணியார் கூறுகிறார்.
“மயிர்குறை கருவி மாண்கடை அன்ன
பூங்குழை ஊசற்பொறைசால் காதின்”
பாடினியின் காது, மயிர்வெட்டப் பயன்படுத்தப்படும் கருவியின் விரல் நுழைக்கும் பகுதிபோல அளவாகவும், அழகாகவும் இருந்ததாம். என்னே ஒர்
அருமையான
உவமை. இன்று நாம் பயன்படுத்தும் கத்தரிக்கோல், அன்று ‘மயிர்குறை கருவி’ என்று அழைக்கப்பட்டிருக்கிறது.இப்படி, முடத்தாமக்கண்ணியாரின் உவமைகள் சிறப்புடையதாக இருக்கின்றன என்றால், அவற்றிற்கு மகாதேவன் அளிக்கும் விளக்க உரை மேலும் சிறப்பு சேர்க்கின்றது.
உரையை, கதை சொல்வது போலத்தான் சொல்லிச் செல்கிறார், மாதேவன். இந்த உரைநூலின் வடிவமைப்பே முற்றிலும் புதுமையாக உள்ளது. பெரும்பாலும் இரண்டிரண்டு வரிகளாக எடுத்துக்கொண்டு, அவற்றிற்கான உரையை எழுதுகிறார்.
இந்த உரைநூலில் நான்குவிதமான நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கதைபோலச்சொல்லப்படும் உரைக்கு ஒருநிறம் (கருப்பு). பாடல்வரிகளுக்குத் தனிநிறம் (ஊதா). பாடல் வரிகளுக்குக்கீழ், வரிகளில் வரும் சொற்களுக்கான பொருளுரை சிவப்புவண்ணத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இவைதவிர பச்சை நிறத்தில் ஆங்காங்கே, உரையாசிரியருக்குப் பிடித்தமானவற்றிற்கு சிறப்புக் குறிப்புகளும் உள்ளன.
அச்சிட்டு வெளியிட்டிருக்கும் பவாணந்தம் வெளியீட்டகத்தையும் பாராட்டவேண்டும்.
இதுபோன்ற உரை எழுதும் முறை உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டியது மட்டுமல்ல, பின்பற்றவும் செய்யலாம். காரணம் , சங்க இலக்கியம் என்றாலே கற்றறிந்தவர்களைக்கூட சோர்வடையச்செய்வதாகப் பலரும் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட உரை எழுதும் முறை வாசிப்பதற்கான ஆர்வத்தையும் ஏற்படுத்திவிடும் என்று முழுமையாக நம்பலாம். சங்க இலக்கியம் வாசிக்க விரும்புபவர்களுக்கும், குறிப்பாக மாணவர்களுக்கும் மகாதேவனின் ‘பொருநராற்றுப்படை- கதையுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
அறிவியலும், தொழில்நுட்பமும் பயின்று, தொழில்நுட்பத்துறையை வாழ்வியலாகக் கொண்டிருக்கும் மகாதேவனுக்குத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டதோடு, மரபுப்பாடல்களைப் புரிந்துகொள்வதும், மரபுக் கவிதைகள் இயற்றும் வல்லமையும் பெற்றிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. இந்நூலின் ஆரம்பத்தில், ‘ பொருநராற்றுப்படை சிறப்புப் பாயிரம்’ என்னும் தலைப்பில், நிலைமண்டில ஆசிரியப்பாவில் 45 வரிகளில், பொருநராற்றுப்படையின் போக்கை மிகவும் எளிமையாகச் சொல்லியிருப்பது அவரது மரபுக்கவிதை இயற்றலுக்கு சான்றுபகர்கிறது. மகாதேவன், வாசகர்களுக்குப் பயனளிக்கும் விதத்தில், மற்ற சங்க இலக்கியங்களுக்கும் இதுபோல உரை எழுதவேண்டும் என்னும் எனது வேண்டுகோளையும் முன்வைக்கிறேன்.
நூல் அச்சாக்கமும் குறிப்பிட்டு சொல்லும்விதத்தில் சிறப்பாக உள்ளது. இங்குக் குறிப்பிடவேண்டிய மற்றொரு பெயர், ‘மறைமலை வேலனார். உரைநூல் முழுவதும், கருத்துகளை உள்வாங்கி செறித்து, அவற்றிற்கேற்ப காட்சிகளை ஓவியமாகத்தீட்டி, நம்மை மகிழ்விக்கிறார். இந்நூல் உறுதியாக சிறார்களையும்கூட ஈர்க்கும் என்பதோடு, எளிதில் பொருநராற்றுப்படையைப் புரிந்துகொள்ளவும் துணை செய்யும் என்று நம்பலாம். ‘
உலகத் தமிழ்க்கழகத்தின் துணைத்தலைவர்’ சி.அறிவுறுவோன் மிகச்சிறப்பானதொரு அணிந்துரையும் வழங்கியுள்ளார்.
நூல் விபரம்:
பவானந்தம் வெளியீட்டகம், திருச்சி. தொடர்பு எண்: 94428 01889
ஆசிரியர் தொடர்புக்கு: pa.mathevan @ gmail.com
பக்கம்: 160
விலைi: 220
நன்றி
சு.இராமசுப்பிரமணியன்
10- 08 - 2022
தோவாளை
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்