உலகக் கட்டிடக்கலை வல்லுநர்கள் பலர் வியக்கும் வண்ணம், வெகுசிறப்பான தொழில் நுட்பத்தின் சான்றாக உயர்ந்து நிற்கிறது தஞ்சைப் பெருவுடையார் கோவில் கோபுரம்.
தஞ்சைக் கோவிலுக்குத் தலபுராணங்கள் எதுவும் புனையப்படவில்லை என்றாலும்,
'கோயிலில் உள்ள பெரிய நந்தி வளர்கிறது!'
'ஒரே இரவில் பெரிய கோயிலைப் பூதம் கட்டியது!'
'இரவு நேரத்தில் பெரிய கோயில் நந்தி எழுந்து மேய்வதற்குச் செல்லும்!'
'கோபுர நிழல் கீழே விழுவதில்லை!'
போன்ற வதந்திகளுக்கு மட்டும் குறைவில்லை.
'ஒரே இரவில் பெரிய கோயிலைப் பூதம் கட்டியது!' என்பதை சிந்துவெளி காலத்திலிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறோம். நாடோடிச் சமூகங்கள் நாகரிகச் சமூகங்களைச் சந்திக்கிற இடங்களில் "ஒரே இரவில் கடலில் மிதக்கும் பெரிய மாளிகைகளைக் கட்டிவிடுவார்கள், ஒரே இரவில் அவற்றை அழித்தும் விடுவார்கள்" என்பன போன்ற; இயல்பைப் புரிந்துகொள்ள இயலாத, வளர்ச்சியில் பெரும் கால இடைவெளி அளவிற்குப் பின் தங்கியிருக்கிற மாந்தர்களின் சொல்லாடல்களை உலகம் கேட்டுக்கொண்டே வளர்ந்திருக்கிறது.
இவற்றின் ஊடே சில உண்மைகள் புதைந்து, மறைந்து கிடக்கின்றன.
இயல்பில் நிழல் விழாமல் கட்டவேண்டும் என்றால் கீழ் மண்டபம் மிகப்பெரும் சவுக்கமாக இருத்தல் வேண்டும். எனில் மண்டபத்தின் அருகில் இருந்து கோபுரத்தைப் பார்க்க இயலாது. இப்பொழுது இருக்கும் அமைப்பில் நிழல் தரையில் விழும் என்பதை சிறுபிள்ளைகள் கூட எளிதில் அறிந்து கொள்வார்கள். படத்தில் தஞ்சைக் கோபுரத்தின் நிழல் தெளிவாகத் தரையில் விழுவது தெரிகிறது. அப்படியென்றால் "நிழல் விழாது" என்ற கூற்றின் பின்னே இருக்கும் செய்தி என்ன?
நிழலுக்கும் தஞ்சைக் கோபுரத்திற்கும் ஏதோ தொடர்பிருக்கிறது. அதன்பொருட்டு சரியாகச் சொல்லப்பட்ட செய்தி கால மாற்றத்தில் மெல்ல மெல்ல "நிழல் விழாது" என்று மாற்றமடைந்திருக்கலாம்.
பெருவுடையார் கோவிலின் மேற்குப்புற திருச்சுற்றுமாளிகையின் உட்புறத்தில் உள்ள சிறு பிள்ளையார் முகப்பில் கீழ்க்கண்ட கல் வெட்டு உள்ளது.
“ஸ்வாதிஸ்தி ஸ்ரீ உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர் ஆலயத்துப் பிள்ளையார் கணபதியார்க்கு வாழைப்பழம் அமுது செய்தருள உடையார் பண்டாரத்துப் பொலிசையூட்டுக்கு வைத்தருளின காசும் இக்காசு பொலிசையூட்டுக்கு கொண்ட அங்காடிகளும் கல்லில் வெட்டியது. ஆலயத்துப் பிள்ளையார் கணபதியார்க்கு அமுது செய்தருள நிசதம் வாழைப்பழம் நூற்றைம்பதாக ஒராட்டைக்கு வந்த வாழைப்பழம் ஐம்பத்து நாலாயிரத்துக்கு காசு ஒன்றுக்கு வாழைப்பழம் ஆயிரத்திருநூறாக வந்த காசு நாற்பத்து ஐஞ்சுக்கு காசு ஒன்றுக்கு ஆட்டை வட்டம் அரைகாற் காசு பொலிசையூட்டாக செல்லவைத்த காசு முன்னூற்று அறுபது"...
நாளொன்றுக்கு 150 வாழைப்பழம் வீதம் ஓராட்டைக்கு (ஆண்டுக்கு) 54000 பழங்களுக்கு.. என கல்வெட்டு கூறுகிறது. 54000 / 150 = 360. அதாவது ஆண்டுக்கு 360 நாட்கள் என்ற கணக்கீடு இருந்ததைக் கல்வெட்டிலிருந்து அறியலாம்.
இந்த நாள் கணக்கை "நிழல் கணித"த்தின் வழியாகத் தமிழர்கள் கணக்கிட்டு வந்தார்கள் அதற்கான பெரிய அமைப்பாக, நிழலைக் கொண்டு நாளெண்ணி ஆண்டறியும் பெருங்கருவியாக இந்தக் கோபுரம் பயன்பட்டிருக்கலாம். அதன்பொருட்டே நிழலும் கோபுரத்தைத் தொடர்ந்திருக்கலாம்.
தஞ்சைக் கோவிலில் பிற்காலத்தையக் கட்டுமானங்கள் பல உண்டு. அப்படியான ஒரு மண்டபக் கட்டுமானமே முருகன் கோவிலுக்கு முன்பிருந்த இராசராசன் காலத்தைய நிழல் குறியீடுகளை மறைத்துக் கட்டப்பட்டிருக்கிறது என்கிறார் அறிஞர் தென்னன்மெய்மன். மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் என்ற அமைப்பு இது குறித்தான பரந்த ஆய்வை மேற்கொண்டு வருகிறது.
மிகச் சிறந்த கணக்கீடுகளின் மூலமாக இருந்த தஞ்சைக் கோபுரம், நிழல் கீழே விழாது என்ற வலுவற்ற ஒரு சொற்றொடரில் மூழ்கியது திட்டமிடப்பட்டதா? அல்லது எதேச்சையானதா?
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்