Tuesday, 21 February 2023

அந்த நாள்

02-02 - 2023.
அந்தக் காலைப்பொழுது எப்பொழுதும் போல் விடியவில்லை. இரவெல்லாம் கொட்டித் தீர்த்த பனியும் மெல்ல வீசிய காற்றும் அதிகாலைப் பொழுதை மிகக் கடுமையானதாக மாற்றியிருந்தன. முந்தைய நாளின் விருந்துணவும் திருமணம் காண குன்றக்குடி முருகன் கோவிலுக்கு ஏறி இறங்கியதன் அயர்ச்சியும் கொடுத்த ஆழ்ந்த உறக்கத்திலிருந்து, முகத்தில் தெளித்த மெல்லிய மழைத்துளிகள் என்னை எழுப்பின. எழும்போது கால் மரத்துப் போனது போல தோன்றியது. எழுந்து நின்று காலை நன்றாக உதறுகிறேன். சரியானது போல் உணர்ந்தேன். மொட்டை மாடியிலிருந்து எழுந்து உள்ளறைக்குள் சென்று படுத்துக் கொண்டேன். குளிரின் தாக்கமாக இருக்கலாம் என்ற எண்ணத்தோடு உறங்கிப் போனேன்..

அன்றைய பகற்பொழுதில் எந்த பிரச்சனையும் தோன்றியிருக்கவில்லை. மகிழ்ச்சியும் இனிப்பும் உள்ளத்தையும் உடலையும் நிறைத்துக் கொண்டிருந்தன. உச்சிவேளை தாண்டியதும் இருசக்கர வாகனத்தில் துணைவியுடன் புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு போகலாம் என்ற எண்ணத்தோடு பொழுது கழிந்து கொண்டிருந்தது. விடாமல் பெய்து கொண்டிருந்த மழை அந்தப் பயணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தது. மழை விடுவதற்காகக் காத்துக் கொண்டிருந்தேன்.

மாலை நேரம் ஆன போது உடம்பெங்கும் நல்ல அசதி படர்வதை உணர்ந்தேன். மழையும் விட்டபாடில்லை. இன்று காலையிலிருந்து உடல் ஏதோ என்னிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறது நான் தான் செவிமடுக்கவில்லை என்று நினைக்கிறேன். மருத்துவரைப் பார்க்கலாமா என்ற எண்ணம் தோன்றத் தொடங்கி இருந்தது.
மருத்துவமனைக்கு 6 கிலோமீட்டர் செல்ல வேண்டி இருந்தது. அண்ணன் மகன் வெளியே சென்றிருந்தான். அவன் வரவுக்காகக் காத்திருந்தேன்.

அதற்கு முன்பாக என் முகவாட்டத்தைக் கவனித்திருந்த மகன் ஒருவர் "சித்தப்பா மருத்துவமனைக்கு போகலாமா?' என்று கேட்டார். இனிமேலும் தள்ளி வைக்க முடியாது என்ற நிலையில் கிளம்பிச் சென்றோம்.

மருத்துவமனையை அடைவதற்குள் கையில் மரமரப்பு தோன்றியிருந்தது. மூளையை ஊடுகதிர்ப் படம் (CT.Scan) எடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொன்னார். படம் எடுத்தோம் முடிவு வருவதற்கு இரண்டு மணி நேரம் ஆகும் என்றனர். சரி, வீடு வரை சென்று, சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வரலாம் என்று வீடு நோக்கி காரில் பயணத்தை தொடங்கினோம்.

சிறிது தொலைவு போயிருப்போம். அப்பொழுது, இனி வாழ்க்கையில் எந்த நாளும் இப்படி வரவே கூடாது என்று எண்ணம் தோன்றுகிற அளவுக்கு ஒரு பேரதிர்ச்சிக்கு என் உடல் ஆட்பட்டது. என் வலது கையும் காலும் என் உடலோடு ஒட்டி இருக்கிறது என்கிற எண்ணம் கூட எனக்கு இல்லை. என்னை நான் பார்த்துக்கொண்டே உள்ளத்துக்குள் வலது கையை உயர்த்துகிறேன். ஆனால் அசைவற்றுக் கிடக்கிறது உடல். வலது காலின் செருப்பை கழட்டிவிட எத்தனிக்கிறேன். நகர மறுக்கிறது கால். அருகில் இருக்கும் உறவினரிடம் என் கையைப் பிடித்து உயர்த்தச் சொல்கிறேன். என் பேச்சு அவருக்குப் புரியவில்லை. வாயிலிருந்து ஓசை மட்டுமே வருகிறது. உணர்ந்து கொண்ட அவர் என் உடைகளை தளர்த்துகிறார். வலது கையை உயர்த்திப்பிடித்து உள்ளங்கையைப் பிசைகிறார். நா குழறுகிறது. தண்ணீர் கேட்கிறேன். ஈரம்பட்ட நா மெல்ல உணர்வுக்குத் திரும்புகிறது.

இருக்கையைப் பிடித்துக் கொண்டு எழுந்தே ஆக வேண்டும் என உள் மனம் ஆணையிடுகிறது. உடலோ ஏற்க மறுக்கிறது. "உடனே மருத்துவமனைக்கு திரும்புங்கள்" என்று நான் சொல்கிறேன். மகன் காரை வேகமாகத் திருப்பி மருத்துவமனை நோக்கிச் செல்கிறார். முன் இருக்கையில் இருந்த தங்கையின் கணவர் பதட்டம் அடைகிறார். யார் யாருடனோ தொலைபேசியில் உரையாடுகிறார். எதுவும் எனக்கு தெளிவாகக் கேட்கவில்லை. அசைவற்றுக் கிடக்கிற இந்த விரல்களால் இனி எழுத முடியாமல் போய்விடுமோ என்கிற அச்சம் தோன்ற எழுந்து விடுகிற முனைப்பிலேயே இருக்கிறேன் நான். ஆம். நான் எழுந்தே ஆகவேண்டும்.

மருத்துவமனையை நெருங்கி விட்டோம். வேகமாகக் கதவைத் திறக்கிறார்கள். வலது கையால் கதவைத் தள்ளுகிறேன், காலை ஊன்றி காரில் இருந்து இறங்கி நடக்கிறேன். ஆம் நான் நடக்கிறேன். சக்கர நாற்காலியில் அமர்ந்து வரும்படி சொல்கிறார்கள். இல்லை நான் நடந்தே வருகிறேன் என்கிறேன். மறுத்துவிட்டு நாற்காலியில் அமர வைத்தே என்னை அழைத்துச் செல்கிறார்கள். உள்ளம் மட்டும் "நீ நடந்தே ஆக வேண்டும்" என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது. "அசைவற்றுக் கிடப்பதற்கு அல்ல இந்த விரல்கள். இவை எழுதிச் சேர்ப்பதற்கானவை" என மூளை செய்தி சொல்லிக் கொண்டே இருக்கிறது.

நள்ளிரவில் மருத்துவமனைப் படுக்கையில் வைத்தும் ஒரு முறை உடல் அதிர்வு கொள்கிறது. அருகில் இருந்த மருத்துவர் "அச்சப்படாதீர்கள் எல்லாம் சரியாகிவிடும்" என்கிறார்.

"ஐயா நான் எழுத்துக்காரன். எழுத முடியாத கைகள் எனக்கு சாபம்."

"பயப்படாதீர்கள் உங்களால் எழுத முடியும். மிகச் சரியான நேரத்தில் நீங்கள் மருத்துவமனைக்கு வந்து விட்டீர்கள்.சின்னச் சின்ன அசைவுக் குழப்பங்கள் தவிர பெரிதாக உங்களுக்கு எதுவும் நிகழ்ந்து விடாது. ஒரு மாத கால ஓய்வில் உங்கள் உடல் முழுதாக உங்கள் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும். எழுதி அனுப்புங்கள் நானும் படித்துக் கொள்கிறேன்" என்றார்.

மீண்டு கொண்டிருக்கிறேன். எழுத வேண்டியவை இன்னும் ஏராளம் இருக்கிறது. அந்த நினைப்பே எனக்கான உரம்.

உடல் பேசும் மொழிக்குக் காது கொடுங்கள். கவனமாக இருங்கள். காலம் உங்களுக்கு கொடுத்து இருக்கிற இந்த ஒரு வாய்ப்பில் செய்ய வேண்டியவை ஏராளம் இருக்கிறது. உங்களுக்காக யாரோ காத்திருக்கிறார்கள் மறந்துவிடாதீர்கள்.

==========================
என்றென்றும் அன்புடன்,
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன் 
18-02-2023
தாழக்குடி.
===========================

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்