பன்மொழிப்புலவர் அப்பாத்துரையிடம்
திரையிசைத் தென்றலில்
நறுஞ்சாந்து கலந்து,
தமிழ்நிலமெங்கும் தூவித் திளைத்தவன்.
சந்தத்தில் பெய்த
செந்தமிழ் மழையால்
சிறுகூடல்பட்டியை,
ஊரறிந்த பெருங்கடலாக்கியவன்.
சங்கத் தமிழின் சாறுபிழிந்து,
திரையிசை மெட்டுகளின்
கோப்பை நிரப்பியவன்.
கறுப்பு வெள்ளைத் திரையில்,
கற்கண்டுச் சொற்களால்
வண்ணங்கள் தீட்டியவன்.
கற்றோர் படித்துக்
களிக்கும் இலக்கியத்தின்
சொற்றொடர்கள் பிரித்தெடுத்து,
கல்லாதார் திண்ணைகளில்
சொக்கட்டான் ஆடியவன்.
ஆத்திகம் நாத்திகம்
இரண்டின் கரைதொட்டு
ஆறாக ஓடிய பெரும்பாவலன்.
எனக்கு,
இலக்கியத்தின் தாக்கோல்
இருக்குமிடம் சொன்னவன் நீ.
எந்தப்புறமும்
சுவர்கள் இல்லாத நூலகம் நீ
பாரதியைக் கம்பனை
இளங்கோவைப்
பதினெட்டுக்குள் பார்த்திடச்
செய்தவன் நீ.
கட்டித் தழுவுதலாற்
கால்சேரவேறுதலால்
எனக்
காளமேகம் வாய்பிறந்த
வரியைப் பிளந்தெடுத்து அந்த
வயதில் கொடுத்தவன் நீ.
சந்தத்தில் சொல்லடுக்கத்
தடுமாறும் போது
சில வேளை
சங்கதச் சொல் சேர்த்துப்
பாடி வைத்தாய்;
நல் வரப்பின் நடுவே
சிறு நெருஞ்சிபோலே.
நல்ல தமிழ்ப் பாட்டிடையே,
கல்லாரிடைகூடச்
செல்லாச் சொல்லும்
சேர்த்து வைத்தாய்;
பன்னாள் தேறல்
பானையில் வீழ்ந்து விட்ட
பாம்பின் விடம் போல.
என் செய்வேன்!
செந்நாப்போதார்
செய்து வைத்தக்
குறளறியுமுன்னே,
உன்னையறிந்தேனே
உளம் மறப்பேனா?
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்