Thursday, 6 July 2023

மாமன்னன்

 

 "இது ஒடுக்கப்பட்டவர்களுக்காக எடுக்கப்பட்ட படமல்ல. ஒடுக்குமுறைகளை சந்திக்காதவர்களுக்கன படம். இன்னும் சொல்லப்போனால் பார்ப்பனியத்தால் சூத்திரன் என அழைக்கப்பட்டு, தன் வரலாறு, பண்பாடு மறந்துபோய், பட்ட வலிகளையும் மறந்துபோய், ஆண்டவர்களாய், அடிமை செய்தவர்களாய் எண்ணிக்கொண்டு இருப்பவர்களுக்கான படம். நம்பூதிரி ஆட்சியாளர்களுக்கு முன்னால் முலை திறந்து காட்டி நின்ற, ஆதிக்க சாதி உட்பட அத்தனை  சாதி தாய்மார்களையும் வரலாறு மறக்கவில்லை. இப்படி தமிழ்நிலம் முழுவதிலும் தாய்களின் வலி மறந்துபோன பிள்ளைகளுக்காகவும் எடுக்கப்பட்ட படம்."

 "நமக்கு முதுமை வந்து இயலாமல் போய்விட்ட காலத்தில், வயது வந்த மகன் கழிவறைக்குப் பதில் வரவேற்பறையில் சிறுநீர் கழித்து விட்டால்... நமக்கு எப்படியிருக்கும்?


 விளக்க முடியுமா?

 அதற்கு நம் எதிர்வினை என்னவாக இருக்கும்?

 இதை ஒரு கற்பனையாக எண்ணிப் பார்ப்பதே மிகக் கடினமாக இருக்கிறது. இதுவே அந்தச் சிறுநீர் நம் முகத்தில் கழிக்கப்பட்டால்?"

 2018 ல் மாரிசெல்வராசுவின் "பரியேறும் பெருமாள்" படத்தைப் பார்த்துவிட்டு எழுதிய இந்த வரிகள், 2023ல் கூட மத்தியப்பிரதேசத்தின் காகிதங்களை நனைக்கின்றன.

 ஆனால், ‘மாமன்னன்’???

 படம் வெளியாகும் முன்   "தன்நேர்மையோடு சிந்தித்துப் பேசும் இந்தப் படைப்பாளியை வியப்போடு பார்க்கிறேன். தமிழ்த் திரையுலகின் ஆகச் சிறந்த வணிக நோக்கும், திறமையும், அதற்கான பெருவாய்ப்பும், அதைச் செயல்படுத்தும் திறனும் கொண்ட நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றும் போதும், சமரசமின்றி இந்த நேர்மையை ஒரு படைப்பாளியாக மாரி நிறைவேற்றியிருப்பார் என எண்ணுகிறேன். வணிகத்தைத் தாண்டி படத்தில் ஊற்றெடுக்கும் உண்மையின் விகிதம் தான் மாமன்னனா? மன்னனா? என்பதைத் தீர்மானிக்கும்." என எழுதிருந்தேன்.

 இன்றுதான் பார்த்தேன். பாதிப் படத்தைக் குறித்து என்ன சொல்வது? மன்னன் தான்.

 பல காட்சிகள் மிக நீளமாக, சலிப்பை ஏற்படுத்துகின்றன. வலிந்து திணிக்கப்பெறும் சில கோணங்கள், காட்சிகள்,  தொடர்பற்றுத் தெரிகின்றன. இடைவேளைக்குப் பிறகு முழுமையாக வணிகத்தில் சிக்கிக் கொள்கிறது படம்.

 ஆனாலும், ஆளுங்கட்சியின் பெயர், அதிலிருந்து பிரிந்து பிறந்த கட்சியின் பெயர், தலைவர்கள் மற்றும் பலரது நடவடிக்கைக் காட்சிகள்; இத்தனை ஆண்டுகால ஆட்சி சமூக நீதிக்காக எதையுமே செய்துவிடவில்லை என்பதை மாரி தன் திரைப்படத்தில் துணிந்து சொல்லியிருப்பது வியப்பளிக்கிறது. காரணத்தை நீங்களே அறிந்திருப்பீர்கள்.

 சினிமாத்தனங்களின்றி, சமரசமின்றிப் பேசவேண்டிய பொறுப்பும் வாய்ப்பும் இருக்கிறது மாரிக்கு.  .இந்தப் படத்தில் தனது இயல்பானத் திரை ஆக்கத்திலிருந்து பல இடங்களில் விலகி விலகி நடக்கிறார் மாரி செல்வராசு. அதன் காரணம் தெரியவில்லை. போகட்டும். அவரிடமிருந்து இன்னுமொரு சிறந்த படைப்பிற்காகக் காத்திருக்கலாம்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்