Monday, 30 December 2024

இதுவரை...

 


இதுவரை;

யாரும் எச்சில் படுத்தியிராத

சொற்கள் தேடியெடுத்து,

உனக்கொரு

கவிதை எழுதுகிறேன்.

 

இதுவரை;

யாழ் நரம்புகள் சிந்தியிராத

இசைத் துணுக்குகள் சேர்த்து,

அதைப்

பாடலாய் இசைக்கிறேன்.

 

ஓசைகளற்ற காற்றில் மிதந்து

உன் காதுகளில்

சொல்லிவிட நினைக்கிறேன்.

 

உதடுகள் உரசும் ஓசை

காது மடல்களைக்

காயப்படுத்திவிடுமோ?

 

ஐயம் எழுந்ததால்

மௌனம் பழகுகிறேன்

என்றேனும் இசைத்துவிடும்

ஆசையைச் சுமந்தபடி.

 

29-12-2024


Thursday, 26 December 2024

எம் டி வாசுதேவன் நாயர் மறைவு

 


இருளின் ஆழ்மனதைத்

தேடியலைந்த கலைஞன்.

தன் மொழியின் மூலத்தை

அறிந்திருந்த கவிஞன்.

 

வாழ்க்கையின் மீது

காமம் கொள்ளாத அவனை

சாக்காடு ஒருபோதும்

காயப்படுத்திவிட முடியாது.

 

26-12-2024


Wednesday, 25 December 2024

பாரம்

 


நெடுந்தொலைவு நடந்த

களைப்பில்

இளைப்பாறுகிறது மனம்.

 

இறக்கி வைக்க

முடியாத ஒன்றை

பாரம் என்று

எப்படிச் சொல்வது?

Tuesday, 26 November 2024

செங்காந்தள்

 


வீழும் விதையிலும்

புதைந்த கிழங்கிலும்

உயிர்த்து முளைத்தெழும்

விந்தை நிகழ்த்திடும்

செங்காந்தள். 


சிராப்பள்ளி ப.மாதேவன்

26-11-2019

வாழி!



செருப்புகுந்து பகைவர்

குலைநடுங்கவைத்த;

நெடுஞ்சேரலாதன்,

இளஞ்சேட்சென்னி,

கடுங்கோன்பாண்டியன்,

இந்த நூற்றாண்டின்

கரிகாலன்

தமிழ்நிலத்தின்

பெருஞ்சுவடுகள்.


குறிஞ்சியும் முல்லையும் மருதமும் நெய்தலும்

மருங்கிடில் விளையும் மற்றுமோர் பாலையும்

உலகம் முழுமையும் உறையும் தமிழரும்

பெருமை கொள்ளும் பெரும் பேரரசே,

வாழி… நீவிர்!  வாழி! வாழி!!

Friday, 15 November 2024

The Discovery Of Muziris - நூல் மதிப்புரை


 

   வரலாற்றுப் புதிர்களை விடுவிப்பதென்பது அறிவுக்கு அறைகூவல் விடுக்கின்ற கடினமான பணி. அதிலும், பண்பட்ட, பெருவாழ்வு வாழ்ந்த ஒரு நாகரிகத்தின் சிறந்த குறியீடாக மதிக்கப்படுகின்ற ஒரு இடத்தை, தவறாக அடையாளம் காணப்பட்டு பல ஆண்டுகளாகச் சரியானது என நம்பப்பட்ட ஓர் இடத்தை, மீள அடையாளப்படுத்தும் முயற்சியும் அது சார்ந்த ஆய்வும் மிகக் கடினமானவை.

 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலக வணிகத்தின் குறிப்பிடத்தக்க நகரமாக, மிகப்பெரும் துறைமுகமாக உலகெங்கும் அறியப்பட்டிருந்த ஒரு பெருநகரத்தை, கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வரலாற்று உலகமும் வணிக உலகமும் மறந்து போன ஒரு நகரத்தின் இருப்பிடத்தை மீட்டெடுக்கும் முயற்சி என்பது மிகப் பெரிய வேலை. அப்படியான ஒரு பெரும்பணியை மேற்கொண்டு அதன் விளை பொருளை The Discovery Of Muziris என்ற ஆங்கில நூலாக வெளியிட்டிருக்கிறார் மருத்துவர் ஆன்டோ ஜார்ஜ்.


Friday, 1 November 2024

நினைந்து நினைந்து..



"அன்னா தெரியில்லா காம்பவுண்ட் செவுரு..  அது அப்பெல்லாம் இவ்ளோ ஒசரம் கெடையாது." தொடர்பே இல்லாமல் பேசினார் அப்பா. ஆனால் முகத்தில் ஏதோ ஒரு மலர்ச்சி.

"உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"காரக்குடிக்குப் போகையில இங்க வண்டி ரெம்ப நேரம் நிக்கும். அந்தச் செவத்துக்கு அந்தப் பக்கம் தான் இந்தியன் காப்பி அவுஸ். ஏறிச் சாடிப் போய் தோசையும் காப்பியும் குடிக்காம காரக்குடிக்குப் போவே மாட்டோம். காலேஜுக்குப் போற வரைக்கும் ருசி நாக்குலேயே நிக்கும்."

மதுரை தொடர்வண்டி நிலையத்தில் நின்று கொண்டிருந்த வண்டியொன்றின் எதிர்புற இருக்கையில் அமர்ந்து அப்பா என்னிடம் இதைச் சொன்னபோது எனக்கு வியப்பு மேலிட்டது. எல்லா சிற்றூர்களிலுமிருந்த பெரும்பாலான அப்பாக்கள் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள் போலும். அவர்கள் வாயால் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள, நம் மனதில் உள்ளவற்றைக் கேட்க நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் காத்திருக்க வேண்டியிருந்தது.

ஆனால் காலம் அதற்குள் எமக்கிடையேயான தொலைவை அதிகரித்திருந்தது. உற்பத்திப் பொருளாதாரமான வேளாண்மையை விட்டுவிட்டு மாத ஊதியத்திற்கு மாறியதன் விளைவு சொந்த மண்ணை, மக்களை இழக்கவேண்டியிருந்தது.

பொங்கல், தீபாவளி போன்ற விழாக்களின் போது கிடைக்கும் குறுகிய கால நெருக்கத்தில் ஊர் குறித்து உறவுகள் குறித்து அரசியல் குறித்து அவருடைய கல்லூரி வாழ்க்கை குறித்து என அப்பாவுடன் நிறைய உரையாடல்கள் நிகழ்ந்திருக்கிறன்றன.

ஆனாலும், பக்கத்து ஊர் சோதிடர் ஒருவர் சொன்னதை நம்பிவிட்ட அவரது தாய்க்கு, அது தவறென்று மெய்ப்பிக்கத் தன் வாழ்க்கையையே பணயம் வைத்து, தன் மூச்சின் இறுதிவரை வாழ்ந்து காட்டிய அவரிடம் கேட்காமல் விட்டுவிட்டவையே பெரும் பகுதி என எண்ணும் போது மனதுக்குள் ஒரு அயற்சி வருவதைத் தவிர்க்க இயலவில்லை.

நல்லவர்கள், எல்லோருக்குமே நல்லவராக இருக்க முடிவதில்லை. கெட்டவர்கள் எப்போதுமே கெட்டவர்களாகவும் இருப்பதில்லை என்ற வாழ்வியல் பாடத்தை, பேசியும் பேசாமலும் உணர்த்திய என் தந்தையின் நினைவுநாள் இன்று.

Sunday, 20 October 2024

கனிந்த நினைவுகள்

 



உள்ளத்தின் அடுக்குகளின்

கதகதப்பில்,

உணர்வுகள் சுரக்கும்

ஈரக்கசிவில்,

நினைவுகள்;

கவிதைகளாய்க் கனிகின்றன.


Monday, 30 September 2024

அழுவதற்கு வெட்கப்படாதீர்கள்


இன்று கடினமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர் பெரும்பாலானோருக்கு, நினைக்கும் போது மன மகிழ்ச்சியைத் தரும் இனிமையான பொழுதுகள் கடந்த காலத்தில் உண்டு.

இன்று வசதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் பலருக்கு மறக்க முடியாத கடினமான பொழுதுகள் கடந்த காலத்தில் உண்டு.

மன மகிழ்ச்சி என்பது நினைவின் அடுக்குப் பாறைகளுக்கிடையே கசியும் நீர். அது கசிந்துருகி கண்களில் திவலையாய்த் திரளும். அன்பின் ஈரம் கன்னக் கதுப்புகளில் படரும்.

அப்படியான பல காட்சிப் படிமங்களை, சொற்கோவைகளைச் சுமந்து நிற்கிறது மெய்யழகன் திரைப்படம்.

எனது கவிதைகளில் ஒன்றிரண்டேனும் உங்களுக்குப் பிடித்திருந்தால், என் எழுத்துகளின் நடுவே நீங்கள் ஒரு நொடிப்பொழுதேனும் கண்மூடி உங்களைத் தேடியிருந்தால், கண்டிப்பாக இந்தத் திரைப்படம் உங்களுக்கு ஒரு காட்சி விருந்து தான். திரைப்படம் குறித்து வேறேதும் கூறாமல் நகர்கிறேன். அது ஒரு வேளை உங்கள் அனுபவத்தை  மாற்றிவிடலாம்.

கண்டிப்பாகத் திரையரங்கிற்குச் சென்று பாருங்கள். அன்பின் உப்பு கன்னக் கதுப்புகளில் படரும் பேரனுபவம் உங்களுக்கு வாய்க்கும். அழுவதற்கு வெட்கப்படாதீர்கள். அது புனைவுகளற்ற அன்பின் வெளிப்பாடு.



Sunday, 15 September 2024

காதல்


பட்டாம்பூச்சியின் காலடித் தடத்தில்
பதிந்து கிடந்த மகரந்தம் சூடி
சூல் தாங்கிக் காய்த்து
கனிந்து பிரிந்து
விதையாய் விழுந்து
விண் முட்ட எழுந்து
மறுபடி பூக்கையில்
மலைகள் அறிந்தன
மலரின் காதலை.

Friday, 30 August 2024

இணை மறைந்த இரவு

 


இணை மறைந்து

ஏற்பட்ட வெற்றிடத்தை

நினைவுகளைக் குழைத்து

நிறைக்கும் முயற்சியில்

இரவுகளைத் தொலைக்கிறது

முதுமை.

Wednesday, 28 August 2024

அலர்

 



பூவின் இதழ்களில்

பட்டாம்பூச்சியின்

காலடித் தடங்கள்.

 

நொடிப்பொழுதுக் களவு.

 

மலையெங்கும்

அலர் தூற்றிப்

பறக்கின்றன

வண்ணத்துப் பூச்சிகள்

 


Tuesday, 27 August 2024

தீத்திரள்


உளுத்துப்போன
கட்டைகளிலிருந்து
துளிர்த்தெழுகிறோம்.

பட்டுப்போனது
பழங்காலம் என
அச்சம் கொள்கிறாய்.

முருங்கைமர நிலைக்கதவம்
முறிந்து வீழ்தல்;
வழுவல,
கால வகையினானே.

27-08-2023

Saturday, 24 August 2024

வாழை


நேற்றைய வண்டிகளின் பேரிரைச்சல் அடங்கிய, சக்கரங்கள் நெரித்துப் புழுதி கிளம்பி  மரங்களின் இலைகளில் படிந்து அதிகாலைப் பனிமூட்டமாய் மிரட்டும் வடபழனி கோடம்பாக்கம் சாலையில் நடந்து கொண்டிருக்கிறேன். மெட்ரோ பணிகளுக்காகக் புலியூர் அரசுப் பள்ளியின் அருகே முறித்து வீழ்த்தப்பட்ட பெரிய அரசமரத்தின் காய்ந்துபோன தடி ஒன்றின் மேலே எழுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் அமர்ந்திருக்கிறார். அருகே சோற்றுவாளி ஒன்றைத் திறந்தபடி  நாற்பதைத் தாண்டிய ஒருவர்; மகனாக இருக்கலாம்.  சாப்பிடுமாறு சைகை செய்துவிட்டு நகர்ந்து போகிறார்.

இருவருமே  ஒப்பந்தப் பணியாளர்களுக்கான ஆரஞ்சு மற்றும் நீல வண்ணங்களில் சீருடை அணிந்திருக்கிறார்கள்.  இந்த பெரியவருக்கு இங்கு என்ன வேலை? பளு தூக்கும்  இயந்திரங்கள் நகர்ந்து வருகிற போது எதிரே வருகிற வாகனங்களுக்கு வழி அமைத்துக் கொடுக்கலாம், எச்சரிக்கை செய்யலாம் இப்படியான பணிகள் இருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அவருக்கு வேலை செய்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வதில் சிக்கலில்லை. 

Friday, 23 August 2024

நினைவுத் திட்டுகள்

 


ஆவணி மாதத்து

வைகறை வானத்தின்

கருப்பு வெள்ளைத்

திட்டுகளாய் நினைவுகள்.

 

வரையப்படாத

கோடுகளுக்கு இடையே

நீலப் பெருவெளி.

 

காகிதத்தில் கவியக்

காத்திருக்கின்றன

சில கவிதைகள்.

 

23-08-2024

Thursday, 22 August 2024

படித்துறை

 


பார்க்கும் போதெல்லாம்
நினைவுகளை மீட்டுத்தரும்
இரட்டைப் படித்துறை,
இப்பொழுது நினைவுகளாய்...

சிதைந்து கிடக்கிறது
தெப்பக் குளம்.

Tuesday, 20 August 2024

பூட்டவிழ்கும் மனப்பெட்டகம்


 

பரண் மேல்

பூட்டவிழ்த்துத்

தானே திறக்கின்றது

ஊர் மறந்த மனிதனின்

மனப்பெட்டகம்.


அதிலிருந்து

விழுந்து நொறுங்கி

காகிதத்தில் வழிந்தோடும்

நினைவுகளின் மொழியாற்றில்,

நம்மை உள்ளிழுக்கும்

காலச்சுழிகள்.


20-08-2024

Monday, 12 August 2024

வெண்சர்க்கரை தீது



 . ==================

' வெண்சர்க்கரை தீது
. (வஞ்சிப்பா)
. ==================
மூடுபனிபோல் தூள்காட்டுமவ்/
வேடுபறியா டுபரிநிறத்துக/
ளோடுயினியா துமருந்திநற்/
கேடடையுமோ ருடலங்கொளீரென/
கோடைதனிலா சையொடுகுளித்/
தாடுமொருகா கமெனப்பெரு/
மேடைதனிலோ சையொடுமுடை/
வாராடையெ னவோர்கவிதை/
பின்ஊர்/
திரும்பிச் செல்கை யிலேகடைத் தெருவில்/
விரும்பி யுண்பார் திருநெல் லைக்களியே/
சிராப்பள்ளி ப.மாதேவன்
13-02-2020
==============
எளிய வடிவம்

Sunday, 11 August 2024

காதல் கவிதை


கள்ளியின் பூக்களையும்
ரோசாவின் முட்களையும்
பாடும்
கவிதைகள் மேல்
காதல் கொள்கிறேன்

Friday, 9 August 2024

காலச் சுனை



ப்பொழுது தான் ஒடித்துத் தோலுரிக்கப்பட்ட வாகைக்குச்சி ஒன்று வீட்டின் பின்புறமிருந்த களத்தின் தென்மேற்கு மூலையில் மண்ணில் வரையப்பட்ட வட்டத்திற்குள் வழவழவென்று வெண்ணிறமாய்க்  கிடக்கிறது. அருகில் இருந்த வேப்பமரத்திலும் பூவரசமரத்திலும் குரங்குகள் போலே தொங்கிக் கொண்டும் அங்குமிங்கும் ஏறி இறங்கி குச்சியை எடுப்பதற்காகப் போக்குக் காட்டிக்கொண்டும் இருந்தார்கள் நண்பர்கள். அந்த வாகைக் குச்சியையும்  காவல் காத்தாக வேண்டும், அவர்களில் யாரையாவது தொட்டுவிடவும் வேண்டும் என்ற முனைப்பில் நான் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருக்கிறேன். பூவரச மரத்தின் ஒல்லியான கொப்பைப் பிடித்ததால் சறுக்கி விழுந்த வேலப்பனை சட்டென்று தொட்டுவிட எத்தனிக்கையில்...

ஊமத்தை


ஊமத்தம்பூவில்
தேனுண்டா
என்பதை
வண்டுகளிடம்
கேட்கவேண்டும்

Tuesday, 6 August 2024

மேற்காகுமோ கிழக்கு



மேற்கின் கிழக்கல்ல

நாங்கள் என

தாய்மொழியில் முழங்கிய

விடுதலையின் குரல்வளையே

உடைக்கப்படுகிறது.


மக்கள் நலம் பேணாது

மரணிப்பவர்கள்

கல்லறையில் பெயர்

பொறியாதிருங்கள்.

மரங்கள்


மனிதர்கள் நிறைந்தப்
பெருநகரங்களின்
கட்டிடக் காடுகளில்,

வண்டிகள் நிறைந்தொழுகும்
ஆறுவழிச் சாலைகளில்,

இளைப்பாறுவதற்கு;

நினைவுகளில் முளைக்கும்
மரங்கள் மட்டுமே
மிச்சமிருக்கின்றன.

Thursday, 1 August 2024

அறிவு

 


பூக்களின் முகவரி,

மணம் என்றது மூக்கு

நிறம் என்றன கண்கள்.


இருளில் என்ன செய்வாய்?

என்றது மூக்கு.

தொலைவை எப்படிக் கடப்பாய்?

என்றன கண்கள்.


சாறெடுத்துக்

குப்பியில் அடைத்துப்

பத்திரப்படுத்து

என்றது மனம்.


வெற்றுக் குடுவையில்

வேதிப்பொருட்கள் சேர்த்து

மல்லிகையைப்

பெற்றுச் சிரித்தது அறிவு.


Monday, 29 July 2024

முள்முனை

 



உச்சி முதல் பாதம் வரை
ஒவ்வொரு அணுவிலும்
நீர் வேட்கை.

ஊனுக்கும் என்புக்கும் நடுவே
ஊசாலாடுகிறது உயிர்.

இருளும் கண்களில்
வெகு தொலைவில்
தெரிகிறது நீர்.

செருப்புகளைத் தொலைத்து விட்டக்
கால்களுக்கு எதிரே
சரேலெனக் கீழிறங்குகிறது
முட்கள் நிறைந்த மலைப் பாதை


Sunday, 28 July 2024

சிரிப்பு


ஞாயிற்றுக்கிழமை காலை 
கறிக்கடை வாசல்
கூண்டுக்குள் உணவுண்ணும்
கோழிகள் சிரிக்கின்றன.

வெளியே,
வாக்கு எந்திரப் பொத்தான்களின்
வரிசையைப் போலே
வண்ண வண்ண உடையணிந்த
மனிதர்கள் .

Friday, 26 July 2024

கதவைத் திற


அடுக்கத்தின் மூன்றாவது
மாடியில்
தென்கிழக்கு மூலைச்
சாரளத்தில்
கொசு வலைக்குப் பின்னே நிலா!

மின்சாரம் இல்லாத போது
மட்டுமல்ல,
மின்கட்டணம் ஏறிவிட்ட போதும்.

கதவைத் திற
காற்று வரட்டும்.

Thursday, 25 July 2024

உரையாடல் தொடங்கவேண்டும்...

 


உரையாடல் தொடங்கவேண்டும்...

திருச்சிராப்பள்ளி ப.மாதேவன் 

நீண்ட நெடிய பேருலகின் வாழ்க்கையில் எல்லா உயிர்களிலுமே பெண்பால் உயிர்கள் முகாமையாகக் கவனிக்கப்பட்டிருக்கின்றன. அதன் அடிப்படையிலேயே அந்தந்த உயிர் சமூகம் வாழ்ந்து வந்திருக்கின்றது. ஒரு தலைமுறையைப் பெற்று வளர்த்தெடுக்கிற வேலை இயல்பிலேயே பெண்களுக்கு வாய்த்திருப்பதனால் எல்லா உயிரினங்களிலும் இருக்கின்ற பெண்பால் உயிர்களுக்கு அதிகமான கவனம் இருந்திருப்பதாகவே கருதவேண்டி இருக்கிறது.

Wednesday, 24 July 2024

தற்செயல்...

 


நேற்று கூரியரில் (courier-க்கு தமிழில் என்ன சொல்வது?) முனைவர் ஏர் மகராசன் அவர்கள் அனுப்பிய உறையொன்று வந்து சேர்ந்தது. முன்பே நண்பர் செந்தில் வரதவேல் அனுப்பிவைத்த “வேளாண் மரபின் தமிழ் அடையாளம்” நூலும் மேசையில் இருக்கின்றது. அதைப் படித்து விட்டேன். எழுதவேண்டும். (கனமான செய்திகளைச் சுமக்கின்ற நூல் அது)

கடந்த இரண்டு மாதங்களாக எழுத இயலவில்லை. கை கொஞ்சம் முரண்டு பிடிக்கின்றது. தொடர்ந்து எழுதுவதும் தட்டச்சு செய்வதும் கடினமாக இருக்கின்றது.

பேசியே எழுத உதவுகின்ற செயலிகள் அத்துணை வசதியாக இல்லை. முயற்சித்தேன். கையால் எழுதுகின்ற போது வந்து விழுகின்ற சொற்கள், செயலியில் பேசுகின்றபோது சரியாக வரவில்லை. மீண்டும் கையால் எழுதுவது / தட்டச்சு செய்வது என்பதே சரியாக இருக்கும் என எண்ணுகின்றேன்.

முனைவர் தென்னன் மெய்ம்மன் அவர்களது “திருமகள் இலக்கணம்” நூலுக்கு மெல்ல எழுதி முடித்துவிட்ட எனது முன்னுரையோடு, அவரது நூலும் வெளிவந்துவிட்டது. அதைத் தனிப்பதிவாக இடுகின்றேன்.

இப்பொழுது சொல்ல வந்தச் செய்தி வேறு. கூரியர் கொண்டு வந்தவர் உறையை என்னிடம் தந்துவிட்டு கையெழுத்தும் வாங்கியபின் “ஐயா, இந்தப் பள்ளியில் தான் நான் படித்தேன்” என ஏர் மகராசன் அவர்களின் முகவரியில் இருந்த “வி நி அரசு மேல் நிலைப்பள்ளி, பெரியகுளம்” என்பதைத் தொட்டுக் காட்டினார். அப்பொழுது அவர் முகம் ஏக்கம் கலந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. ஏறத்தாழ ஐம்பது வயதிருக்கும் அவருக்கு. 

“ஐயா இந்த நூலை அனுப்பியவர் அங்குதான் பணியிலிருக்கிறார். நான் நேரடியாகப் பார்த்ததில்லை. கைப்பேசியில் பேசியிருக்கிறேன். உங்களுக்கு அவரைத் தெரியுமா?” என்றேன்.

“நான் ஊரை விட்டு வந்து நாளாச்சு ஐயா. எனக்கு அவரைத் தெரியாது” என்றவர், “வேறு ஒன்றுமில்லை ஐயா இந்த வி.நி ன்னு போட்டிருக்கே, அது என்னன்னு உங்களுக்குத் தெரியுமா? ஏன்னா நாங்க படிக்கும் போது அப்படிப் பெயர் எதுவும் இல்லை. அதுக்குத்தான் கேட்டேன்” என்றார்.

“தெரியவில்லை ஐயா. நூல் அனுப்பியவரிடம் கேட்டால் தெரியும்”

"நீங்கள் படித்த காலத்திற்குப் பின்பு யாரவது பெரியவர்களின் பெயரை வைத்திருக்கலாம்" என்றான் என் மகன்.

“பரவாயில்லை ஐயா. எனக்கு நேரமாகின்றது. வருகிறேன்” என்றபடி கீழிறங்கிச் சென்றுவிட்டார்.

நரை கூடிய தலை. ஒல்லியான உருவம். அதற்குள்ளே ஏதோ ஒரு காலத்தின் தேடல். உறையைப் பிரிக்கிறேன்.

“நிலத்தில் முளைத்த சொற்கள்”.

இது என்ன பொருத்தம் எனத் தெரியவில்லை. பூரணகாயபரின் தற்செயல் கோட்பாடுதான் நினைவுக்கு வந்தது. உறை கிழித்து நூலைத் திறந்தேன்.

“கருப்பம் கொண்ட

பிள்ளைத் தாய்ச்சியாய்

உயிர்த்தலைச் சுமக்கின்றன

நிலம் கோதிய சொற்கள்” …. அடடா..

இன்னும் ஒருநாள் அவர் அஞ்சல் சுமந்து வருவார். அதற்குள்ளாக நான் வி.நி என்ன என்பதை ஏர் மகராசன் ஐயாவிடமிருந்து தெரிந்து வைத்திருப்பேன். மீண்டும் அவர் வருகின்ற போது சொல்வேன். நரையேறிய அவர் தலையை அந்தச் சொற்கள் கோதும். 

காத்திருக்கிறேன்.



Monday, 22 July 2024

பேரின்பம்

 



ஆறுவழிச் சாலைகளாகக்

கிடப்பதைவிட,

செருப்புகளற்றக் கால்களை

உரசும்

வரப்புகளாக நிற்பதிலே

பேரின்பம் கொள்கின்றேன்.

Sunday, 21 July 2024

நினைவு நாள் 2024


செங்காந்தளும் குறிஞ்சியும்
சேர்த்துக் குழைத்தெடுத்தச்
செம்மாந்த கலைஞன்.
🙏🙏🙏

Friday, 19 July 2024

கற்றவர் தீக்கருத்து

தீயோர் செய்தீச் செயலின் தீதாமே/
ஆய்ந் தறியா மாந்தரிடை, கற்றோர்/
மாய்ந் தொழுகி மனதறிந் தளந்துவிடும்/
காய்த லுற்ற, தீக் கருத்தே./

சிராப்பள்ளி ப.மாதேவன்
19-07-2020

(நிலைமண்டில ஆசிரியப்பா)

Monday, 15 July 2024

கொடை


இறுகிய பாறைகளின்
மடியெங்கும்
விழுந்து தெறித்தத்
திவலைகளின் ஈரம்
ஆடியின் கொடை,
அதியனின் மனம் நனைத்து
அன்பு கசியும் எங்கள்
ஒளவையின் பாடல்கள் போல.

Friday, 28 June 2024

மறப்பது இயல்பே!


 
பிறப்பதும் இறப்பதும் இறந்தவர் நினைவினை
இருப்பவர் மறப்பதும் இயல்பென இருக்கையில்
மறைந்தபின் இருப்பவர் மனதினில் இருந்திட
இருக்கையில் அரியவை நிகழ்த்திடல் சிறப்பே.

(தூங்கிசை அகவல் ஓசை உடைய நிலைமண்டில ஆசிரியப்பா)

Wednesday, 26 June 2024

கலையாத உறக்கம்

 


கழுகுமலையில்
சிலைவடித்த உளிகள்
அம்மி கொத்திக்கொண்டிருக்கின்றன,
அரவை எந்திரம்
இல்லாத வீடுகளில்…

சித்தன்னவாசல் ஓவியமெழுதிச்
செழித்துக்கிடந்தத் தூரிகைகள்
சுண்ணாம்பு பூசிக்கொண்டிருக்கின்றன,
கழுதைகள் உரசும்
கட்டைச் சுவரில்….

நாமோ,
கொலைவாட்களைக்
கோபுரத்தில் ஏற்றிவைத்தோம்.
அவை
நம் மீது விழுந்தே
உயிர் குடிக்கின்றன.

தாயின் மாரில்
வாளிறங்கியபோதும்
தனயன் உறக்கம்
கலைந்திடவில்லை,


என் செய்ய?

 

Monday, 17 June 2024

வாஞ்சிநாதன் மனைவி பொன்னம்மாள்

 

வாஞ்சிநாதன் மனைவி பாத்திரம்கழுவி வயிறு வளர்த்தத் தெரு


கொடியவனைச் சுட்டுவிட்டுத்

தன்னுயிர் மாய்த்த

கட்டியவன் வீரவாஞ்சியானான்.

 

நம்பி வந்த பொன்னம்மாள்

நலங்கெடப் புழுதி வீழ்ந்து

நாற்றிசையும் அலைந்தலைந்து,

எச்சில் பாத்திரம் விளக்கியே

எலும்பிடைச் சிறுத்திருந்த

இடும்பைகூர் வயிற்றின்

பசியடைத்தாள்.

 

ஒட்டியிருந்தப் பருக்கைகளைக்

கழுவிக் களைந்தாரோ?

அன்றி,

ஒருவேளை உணவாகுமென

பழையதில் சேர்த்தாரோ?

 

ஒழியா வயிற்றுக்காய்

அவர் பட்ட பாடெல்லாம்

அழியாதிருக்குதையா,

 

அத்தனையும்

மெய்யாய் இருந்ததனால்!

 

வாஞ்சியின் சிலை அருகே ரெங்கையா முருகன்

================

படம் திரு ரெங்கையா முருகன்

Saturday, 15 June 2024

எல்லோர் வீட்டிலும் கிடை போடுங்கள்

 

 

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மேசை மேல் கிடைபோட்டு கிடக்கிறது கிடை எனும்  மேய்ச்சல் சமூக - பண்பாட்டு ஆய்வுக் காலாண்டிதழ். அவ்வப்போது மென்நிழலில் படுத்து அசைவெட்டும் மாட்டைப்போலே அங்குமிங்கும் போகும்போதும் வரும்போதும் அதன் பக்கங்களை மெல்லத் திருப்பிக் கொண்டிருக்கிறேன்.

சுவரில் முதுகுசாய்த்து உட்கார்ந்து கொண்டு கிண்ணத்தில் இருந்து காரச்சேவு எடுத்துக் கொறித்தபடியே படிக்க ஏதுவான நூலல்ல. மேடும் பள்ளமும் என பல நூறு கிலோமீட்டர்கள் பலநூறு ஆடுகள் / மாடுகளோடு நடந்து, வேளாண்மையின் முகாமையான அங்கமாகிய மண்ணை வளமாக்கும் பணியைச் செய்யும் மேச்சல் சமூகம் குறித்தான வாழ்வியலும் இருப்பும், நாளை குறித்தான கேள்விகளோடும் வார்க்கப்பட்டிருக்கும் காலாண்டிதழ்.

Thursday, 13 June 2024

மரத்துப்போன மரம்

 

விரிந்துகிடக்கும்
நெடுந்திடல்களில்
விளையாட்டுச் சிறுவர்களின்
ஆராவாரம் கேளாமல்
பகலுறங்குகின்றன பறவைகள்.
 
பிஞ்சுக்கைகள் தீண்டாததால்
நெடுமூச்செறிகின்றன
பெருமரங்கள்.

பள்ளிப்பாடமும்
வீட்டுப்பாடமும்
பகுத்தறிய நேரமின்றி
மனனம் செய்தே
மரத்துப்போன மனமொன்று
தாளட்டைகளில் செய்துவைத்த
மரங்களின் கீழே
மஞ்சள் வண்ணத்தில் மின்னுகின்றது;

"வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்"

Sunday, 9 June 2024

தாகம்




பால் வீதிகளை மாற்றிப்
பதியம் போட்டாலும் 
ஒரு நாள்
பார்தொழ முளைத்தெழும் 
செங்காந்தள் .

ஆயுதங்கள் மாறியிருக்கின்றன.
போராட்டம்
அப்படியே இருக்கின்றது.

உலைத்துக் கலைந்திட
தாயகம் எமக்குக்
கனவல்ல,
கோடி உயிர்களின்
ஒற்றைத் தாகம்.

Thursday, 6 June 2024

சிறகுகள்

 


உன்னால்

பறக்க முடியுமா

என்பதை

உன் சிறகுகள் மட்டுமே

அறியும்.

வார்த்து வைக்கப்பட்டிருக்கும் வரலாறு





நாகர்கோயில் தலைமை அஞ்சல் நிலையத்தில் இருக்கும் இந்த அஞ்சல்பெட்டி பழமையானது. திருவாங்கூர் அரசின் காலத்தில் 1729 ல் அஞ்சல் துறை ஆரம்பிக்கப்பட்டது. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அஞ்சல் கொண்டு செல்ல "அஞ்சல் ஓட்டக்காரர்"கள் இருந்தார்கள். அவர்கள், ஒரு கையில் அரசு முத்திரை பதித்த ஈட்டி, மணிகள் கோர்க்கப்பட்ட பட்டையும், மற்றொரு கையில் சிறிய மணியும் கொண்டு ஓடிக்கொண்டே இருப்பார்கள். ஓடும்போது "ஓய்.. ஓய்" என்று கூறிக்கொண்டே ஓடுவார்கள். ஒருநாளைக்கு இருபது முப்பது கிலோமீட்டர் தொலைவு கூட ஓடவேண்டியிருக்கும். ஓடும்போது யாராவது தடுத்தால் ஈட்டியால்

Sunday, 2 June 2024

இளையராசா 2024 பிறந்தநாள்




மூன்றாம் பிறையல்ல
முழுநிலவு நீ.

அறிந்தோர் உன்னுள்
மலைகளுண்டு என்கிறார்கள்.
அறியாதோர்
அவற்றைக் கறை என்கிறார்கள்.

ஆனால்,
எல்லோருக்குமாக
வெட்ட வெளியினில்
கொட்டிக்கிடக்கிறது
வெள்ளொளியாய் 
உன் இசை.
வாழி நீ!

Thursday, 30 May 2024

கனவுக்குள் கனவு



கோடரிக் காம்புகள்

துளிர்க்கும் என்பதெல்லாம்

கனவுக்குள் கனவே.

Monday, 27 May 2024

எத்தனைக் காலம்தான்...



நேற்றிரவு அந்தக் காணொலியைப் பார்த்ததிலிருந்து மன வருத்தமும் உளைச்சலும் ஆட்கொள்ள, களைப்போடு இருக்கின்றேன்.

இன்னும் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் என்ற தஞ்சை இராமையாதாசின் பாடல் உள்ளத்தின் ஓரத்தில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது.

படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான், போவான்; ஐயோ என்று போவான்!  என்று பாரதி ஒருபுறம் புலம்புகிறான்.

அப்படியெதுவும் நிகழாது என்று "முதலெனப்படுவ"தென்ற தொல்காப்பியமும், "தருக்கமும்" பழந்தமிழர் "விண்ணியலும்" சொல்லிச் சென்றுவிட்டனவே பாரதி. நீ அறியாதிருப்பாயா? அவற்றையெல்லாம் அறிந்தவர் தாமே ஏமாற்றுகிறார்.

இல்லையென்று மறுப்பீராயின் அறியாது உளறுகிறார் என்றாவது உரைப்பீர்.

பாவம் பலர். மந்தை மந்தையாய்...

27-05-2024

Sunday, 26 May 2024

சாதியும் காதலும்



“காதல் திருமணங்கள் ஓரளவுக்கு சாதியற்ற சமூகத்தை உருவாக்குகிறது, அங்கேயும் சாதி ஆணவமே” என்ற தோழர் ஒருவரின் பின்னூட்டத்தின் தொடர்பாக எழுதியதே இந்தப் பதிவு.
இன்றைய காலகட்டத்தில், காதலர் இருவரும் ஒரே நிலைமையில் உள்ள பணக்காரர்களாக இருக்கும் போதோ, அல்லது எதுவுமற்ற ஏழைகளாக நகரத்தில் வாழும் போதோ பெரும்பாலும் சாதி செத்துவிடுகிறது. இருவரில் ஒருவர் மட்டும் பணக்காரராய் இருக்கும் போது, சாதி, சமூகத்தின் வழியாகக் குரூரமாக இடை மறிக்கிறது. வலுவாக எதிர்க்க இயலவில்லை என்றால் விலக்கி வைக்கிறது. அதுவும் முடியவில்லை என்றால் சமூகம் விலகிவிடுகிறது. இங்கே "சமூகம்" எனப்படுவது அதே