Thursday, 25 January 2024
மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல் 2024
Sunday, 21 January 2024
தாழக்குடி பெருமாள் கோயில் குடமுழுக்கு 21-01-2024
கடவுள் வணக்கம்
பெருமாள்
பொங்கலினம் தாம்கொடுத்தும் பூக்களைச் சேர்ந்தணிந்தும்
சங்கடங்கள் போக்கிடுவர் சற்றுமின்றி - பங்கந்தீர்
ஊர்நடுவே தோன்றிசிறு வூனமின்றிக் காத்தருளும்
பேர்பெற்ற நம்பெருமாள் பேண்.
தாழைக்குடிக்கு வாய்த்த பெருமாளென்று நம்
சுவாமிக்கு ஓர் பெயர் வழங்கி வருகின்றது. பண்டைக்காலத்தில் இரவி விண்ணவர்
எம்பெருமான் கோயிலின் மருங்கில் ஆதியூர் இருந்தது. வயல் நடுவில் காணும்
அக்கோயிலில் இருந்த திருமாலை ஊர் நடுவில் பிரதிட்டை செய்தனர்.
நம்பியார்க்குள்ள நீட்டு
உயர்திரு காளியாம்பிள்ளை அவர்கள் தந்த பிரமாணப்பகாப்பு நீட்டு
தாழைக்குடி உள் பற்று வகையில் பெரும்பற்று மேல்வாரம் புள்ளிக்கு நீட்டு கொடுக்கையில் நயினார் ஆற்றங்கரை இரவி நாராயண விண்ணவர் எம்பெருமானார். புள்ளி மிச்சவாரம் அஞ்சாலிக்கு நிலம் அரைக்காணிக்கு அஞ்சாலி தீருவ படிக்குள்ள பணத்தினு சிட்டியும் பொடிவு பெரும்பற்று மேல்வார பேர் இனப்படிக்கு நிலம் அரைக் காணிக்கு நாலாந்தரத்துக்குள்ள பொடிவு பதிச்சு மிச்சவாரமும் எடுத்து யாபிச்சும் கொண்டு ஆசந்திரதாரவே சந்ததிப்பிறவேசமே கையாண்டு குள்ளுமாறும் செயிக, இது கி.பி.1746 ஆடி மாசம் பொடிவு. கள்ளபிரான் சிவன் பட்டற்கு எழுதிவீடு என்னெ திருவுள்ளமாய தெ மாறிப்பிடிச்சு
(ஒப்பு)
தாழைக்குடிச் சரிதத்தில் புலவர் ஆர்.பத்மநாபபிள்ளை (1944)
==========================
நன்னாள் வேட்டல்
மருதமாய் நிலம்கிடக்க
பெருக்காறு மேற்கிலோட
சருக்கத்தின் நடுவே
இருந்த பிரான்..
பின்னொருநாள்
திருவாசல் மேட்டில்
பெருவாசல் கொண்டே
அருகனாய் அமர்ந்த
அண்ணல்.
வடகலையுமின்றித்
தென்கலையுமின்றி
எம்கலையாய்,
எரிந்தொளிரும் தன்மையினால்
இரவியுமாய்,
விரிந்தெங்குஞ் சென்றமையால்
விண்ணுவுமாய்,
தாழக்குடி உறைந்த
தண்ணருள் மன்னவன்
இரவி விண்ணவன் எம்பிரான்,
இருந்தச் சிறுகோயில்
திருத்திப் பெரிதாய் எடுக்கத்
திருவுளம்கொண்ட மக்கள்
ஊர்கூடித் தேரிழுக்க உறுதிகொண்டு
சேர்த்தப் பெரும்பொருளும்,
மேன்மைமிகு தாழக்குடி
பிறந்துயர்ந்தப் பெருமக்கள்
சென்னை நகர்மேவுமுயர்
மேகநாதன் பெருங்கொடையும்,
பெங்களூரு வாழுமுயர்
பரசுபிள்ளை அருங்கொடையும்,
சேர்ந்துயர்த்த ஊர்நடுவே
சேரர்குலப் பெருமானாம்
குலசேகரன் பெயர்தாங்கி
எழுந்ததையா அருங்கோயில்.
மேல்செல்லா நின்ற கொல்லம்
ஓராயிரத் தொருநூற்று
தொண்ணூற்று ஒன்பதில்
கதிரவன் வடக்கேகும்
தைத்திங்கள் ஓரேழில்
கோட்டாற்றின் நீர்நிறைத்தக்
குடமுழுக்கின் நற்காலை,
வாளால் அறுத்துச் சுடினும்,
மருத்துவன் பால் மாளாத காதல்,
நோயாளன் போல்,
காரானை காரானைக்
கலைவதுபோல்
பேராளன் பெருமாளைக்
குலசேகரன் தமிழ்ப்பாடி
ஏராண்மை மீண்டுயர
தாராளமாய் வேண்டுவமே!
Saturday, 20 January 2024
தமிழ்த்தேசியத்தின் வேர்கள் கவி கா.மு.செரீப்
அட்டைக்கத்திகளைக் கொண்டாடித் தீர்க்கும் நாம் போர்க்கள வாள்முனைகளைத் தொட்டுக்கூடப் பார்ப்பதில்லை. வெற்றுப் புலம்பல்களை வீர வசனங்களாய் உள்வாங்கிய நம் செவிகள் கலகக் குரல்களுக்குச் செவிசாய்ப்பதில்லை. புனையப்பட்ட மீசை துடிக்க புரட்சி பேசியவர்களை நாயகர்களாய் வளர்த்துவிட்ட நாம் புரட்சியின் வெந்தணலில் வாழ்க்கையை எரித்தவர்களை எண்ணிக்கூடப் பார்ப்பதில்லை. நம்முடைய இந்தக் குணமே வரலாற்றின் பக்கங்களிலிருந்து நமக்காக வாழ்ந்தவர்களைப் பிறர் துடைத்தெறியத் துணைபோகின்றது,
நம்முன் கடைவிரிக்கப் பட்டிருக்கும் வரலாறுகளைவிட மறைக்கப்பட்டவையே பெரும்பகுதி என்பதாகவே கருதவேண்டியிருக்கிறது. அதன்பொருட்டே உண்மை வரலாறு அறிந்தவர்கள், செய்திகளிலிருந்து அதைச் சேகரிக்கத் தெரிந்தவர்கள், காலத்தின் செப்பேடுகளாய் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் தங்கள் மனதிலிருக்கும் உண்மைகளையெல்லாம் கேட்பவர்க்கு உரைக்கவேண்டிய வேளை இது.
Tuesday, 16 January 2024
தீக்குறளை சென்றோதோம் - ஆண்டாள்
"வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமா(று) எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்."
குறளை kuṟaḷai, பெ.(n.) 1. கோட்சொல்; calumny, aspersion, backbiting.
"பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல்லென" (மணிமே.30:68);.
2. வறுமை; poverty, adversity.
"குறளை யுணட்பளவு தோன்றும்" (திரிகடு.37);.
3.நிந்தனை; sarcastic expressions, censure, reproach.
4. குள்ளம்; dwarfishness.
[குறு → குறள் → குறளை.] - செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி
குறளை = கோள்
கோள், அதிலும் தீக்கோள் சொல்லமாட்டோம் என்று பொருள் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.
ஓது-தல்ōdudal, 5.செ.குன்றாவி. (v.t.) 1. படித்தல்; to read, {} audibly in order to commit to memory.
"ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்தும்" (குறள்.834);.
2. சொல் லுதல்; to speak, say, declare.
"ஓதரிய சுகர் போல" (தாயு.ஆகார.32);.
3. வேதமோதுதல்; to recite the {} with the appropriate intonation.
4. மந்திரம், வழிபாடு முதலியன செய்தல்; to utter mantras, repeat prayers.
5. கமுக்கமாகக் கூறுதல்; to persuade clande- stinely, to breathe out; to whisper, as communicating information.
அவன் காதில் அடிக்கடி ஓதுகிறான்.
6. பாடுதல்; to sing.
"ஓதி ... ... ... ... களிச்சுரும் பரற்றும்" (சிறபாண்.22);.
ம. ஓதுக; க., பட. ஓது; கோத. ஓத். துட. வீத்; குட. ஓத்; து. ஓதுனி;தெ. சதுவு.
[ஊது → ஓது → ஓதல்.] - செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி
"அங்க என்ன ஓதிக்கிட்டு கெடக்க."
"வயல்ல இருந்து அவன் வந்த ஒடனே எல்லாத்தையும் ஓதிக்கிட்டுதான் மறு சோலி பாப்பா இவ"
ஆண்டாளும் தெக்கத்திக்காரி தானே....
“நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்”