Saturday, 11 May 2024

ஆடிக் களிக்கும் தமிழ்



 

ஆடு āṭudal, செ.கு.வி. (v.i.)

 

 

 

1. அசைதல்; to move, to wave, to swing, to shake, to vibrate.

 

2. கூத்தாடுதல் (பிங்.);; to dance, to gesticulate, to play.      "அம்பலத்தாடுவான்" (பெரியபு. கடவுள் வா);.

 

3. விளையாடுதல்; to play.  "அகன்மலையாடி" (மணிமே. 10:55) 

 

4. நீராடுதல்; to bathe, to play in water.

 

5. அசைந்தாடுதல், மென்மெல அசைதல்; to sway. தென்றலில் பூங்கொடி அசைந்தாடுகிறது.

 

6. ஆலையாடுதல், ஆலையிலிட்டு அரைத்தல்; to crush in a machine இன்றுதான் கரும்பு ஆலையாடி முடிந்தது.

 

7. இணலாடுதல்-புணர்தல்; to copulate, as snake do. பாம்பு இனலாடுகிறது.

 

8. ஈயாடுதல்-ஈமொய்த்தல்; to swarm about. இனிப்புள்ள இடத்தில் ஈயாடும்.

 

9. ஈயாடாமை-பொலிவின்மை; to show no emotion. அவன் முகத்தில் ஈயாடவில்லை.

 

10. உண்டாடுதல் - விருந்துண்டு மகிழ்தல்; to revel. உண்டாடும் செல்வரா நாம்?

 

11. உரையாடுதல் - கலந்து பேசுதல்; to converse. அவரொடு நாங்கள் உரையாடினோம்.

 

12. உறவாடுதல் நட்புக் கொள்ளுதல்; to become friendly. பகையாளி குடியை உறவாடிக் கெடு.

 

13. ஊடாடுதல்-இடைப்புகுதல்; to intervene ஐயம் ஊடாடாத நட்பு.

 

14. எண்ணெயாடுதல் - செக்கிலிட்டு அரைத்தல்; to press oil seeds. ஒரு மூட்டை எள்ளை, எண்ணெயாடினர்.

 

15. எடுத்தாடுதல் சொல்லிக் காட்டுதல்; to mention and dwell on - as one's own good actions. பெரிய உதவி செய்துவிட்டவள்போல் அவள் என்னை எடுத்தாடி விட்டாள் (உ.வ.);.

 

16. எதிராடுதல் - எதிர்த்துப் பேசுதல்; to oppose. என்னோடு எதிராட உனக்கென்ன துணிச்சல்?

 

17. ஒப்புக்கு ஆடுதல் - பற்றுள்ளவன் போல் நடித்தல்; to behave as it interested. அவன் ஒப்புக்கு ஆடுகிறான் நம்பாதே.

 

18. ஒளிந்தாடுதல் - நம்பிக்கையூட்டி ஏமாற்றுதல்; to deceive by giving hope. இந்த ஒளிந்தாட்டமெல்லாம் என்னிடம் செல்லாது.

 

19. (அ);. ஒடியாடுதல் - விரைந்து செயற்படல்; to act vigorously. அவரால் முன்னைப் போல ஒடியாட முடியாது. (ஆ);. ஒடியாடுதல் - அலைந்து வேலை செய்தல்; to run hither and thither, work hard. இளமைக் காலத்தில் ஒடியாடிச் சம்பாதித்தார்.

 

20. (அ);. ஒரியாடுதல் - தன்னை எவரும் தொடமுடியாதபடி நீருள் மூழ்கியும் நீந்தியும் நெடுநேரம் விளையாடுதல்; to play in water by diving and swimming so as to make it impossible for others to catch him. ஒரியாடுதலில் அவன் வல்லவன். (ஆ); ஓரியாடுதல் - துணைக்கு எவருமின்றித் தானே வருந்திப் பணியாற்றுதல்; to work all alone without help. அவளொருத்தியே ஒரியாடுகிறாள்; யாராவது துணைக்குப் போகக் கூடாதா?

 

 21. கடலாடுதல் - விழாவின் போது கடலில் நீராடுதல்; to bathe or swim in the seal. இந்திர விழாவின் போது மக்கள் கடலாடுவர்.

 

22. கண்டவனோடாடுதல் கண்டவர்களோடு பழகுதல்; to move with worthless people. கண்டவனோடாடிச் செல்வமெல்லாம் தொலைத்துவிட்டான்.

 

23. கண்ணாமூச்சியாடுதல் ஒளித்து வைத்துப் பேசுதல்; play hide and seek. என் புத்தகம் எங்கே சொல், என்னோடு கண்ணாமூச்சியாட வேண்டாம்.

 

24. (அ); கயிறாடுதல் - கயிற்றின் மேல் நடக்கும் கழைக்கூத்தாடுதல்; to perform on stretched rope. 'ஆரியர் கயிறாடு பறையின்' (குறுந்:7);. (ஆ); கயிறாடுதல் - கயிற்றின் இருமுனைகளையும் இரு கைகளில் பிடித்தவாறு மேல் கீழாக வீசிச் சுழற்றிச் சிறுமியர் குதித்தாடும் விளையாட்டு; to play with skipping ropes. அவள் நன்றாகக் கயிறாடுகிறாள்.

 

25. களித்தாடுதல் - பெருமகிழ்ச்சியடைதல்; to rejoice. பிறந்த நாளன்று மாமா பரிசுப் பொருள்களோடு வரக்கண்டு குழந்தைகள் களித்தாடினர்.

 

26. கழையாடுதல் கழைக்கூத்தாடுதல்; to dance on a pole. அவன் கழையாடலில் வல்லவன்.

 

27. காலாடுதல் செல்வமுடையராதல்; to become rich. "காலாடு - போழ்தில் கழி கிளைஞர் வானத்து மேலாடு மீனின் பலராவர்" (நாலடி..113);

 

28. (அ);. காற்றாடுதல் - காற்று வீசுதல்; to blow. இன்று கொஞ்சமும் காற்றாடவில்லை. (ஆ); காற்றாடுதல் உலர்தல்; to dry in the wind. ஈரத்துணியைக் காற்றாடப் போடு.

 

29 குடித்தாடுதல்;   மது வருந்திச் செல்வம் அழித்தல்; to squander wealth through drinking. அவன் சொத்தெல்லாம் குடித்தாடி விட்டான்.

 

30. குறையாடுதல் - விலை குறைக்குமாறு கெஞ்சிக் கேட்டல்; to ask repeatedly to lower the price. நாளெல்லாம் குறையாடினாலும் விலை குறையாது.

31. கூத்தாடுதல் - மகிழ்ச்சியிற்றிளைத்தல்; to revel in happiness. முதல் வகுப்பில் தேறியதற்காக ஒரேயடியாகக் கூத்தாடுகிறான்.

 

32. கெஞ்சிக் கூத்தாடுதல் - விடாமல் குறையிரந்து கேட்டல்; to beg, to request repeatedly. நீ என்ன தான் கெஞ்சிக் கூத்தாடினாலும் அவன் தரப் போவதில்லை.

 

33. கையாடுதல் - பணம் மோசடி செய்தல்; to swindle money. அவன் ஒரு பெருந்தொகையைக் கையாடி விட்டான்.

 

34. (அ); கொண்டாடுதல் - புகழ்தல்; to praise. கொடுப்பவனை எல்லாரும் கொண்டாடுகின்றனர், (ஆ);. கொண்டாடுதல் - விழாச் செய்தல்; to celebrate a festival. நாங்கள் பிறந்தநாள் கொண்டாடினோம்.

 

35. கோலாடுதல்-அடித்தல்; to beat with a stick. கோலாடினால் குரங்காடும்.

 

36. சதையாடுதல் - அன்பு (பாச); உணர்வு வெளிப்படுதல்; to express feeling of affection, attachment. தன்னை மதிக்காத மகனென்றாலும் அவன் நோய்வாய்ப்பட்டதறிந்து தந்தை கதறுகிறார்; தானாடாவிட்டாலும் தன் சதையாடுகிறது.

 

37. சாமியாடுதல், மருளேறியாடுதல்; to speak and act as if possessed by a spirit. அவன் நேற்றுச் சாமியாடினான். (ஆ);. சாமியாடுதல்-அலைக்கப்படுதல்; to undergo suffering frequently. எனக்கு ஒன்றுந் தெரியாதென்று ஏய்க்கப் பார்க்கிறான்; அவனைச் சாமியாட வைக்கிறேனா இல்லையா பார்.

 

38. சீறாடுதல் - பிணங்கிக் கொள்ளுதல்; to get angry and quarrel. அவன் சீறாடிக் கொண்டு தாய்வீட்டுக்குப் போய்விட்டாள்.

 

39. சும்மா ஆடுதல், காரணமின்றிப் பேசுதல் அல்லது செயற்படுதல்; to speak or act without reason. கண்டவன் பேச்செல்லாம் கேட்டு இப்படிச் சும்மா ஆடாதே.

 

40. சூறையாடுதல் கொள்ளையடித்தல்; to rob, to plunder. திருடர் புகுந்து அவன் கடையைச் சூறையாடி விட்டனர்.

 

41. சொல்லாடுதல் - பேச்சுக் கொடுத்தல்; to converse.. அவனோடு சொல்லாடிப்பார்

 

42. சோற்றுக்கு ஆடுதல் - சோற்றுக்காகச் சொன்னபடி செய்தல்; to do anything just to eke out a living. அவன் சோற்றுக்கு ஆடுகிறவன்.

 

43. சோற்றுக்குத் திண்டாடுதல் - வறுமையில் வாடுதல்; to starve and suffer from poverty. அவன் சோற்றுக்குத் திண்டாடுகிறான்.

 

44. தலை கால் தெரியாமல் ஆடுதல் - செருக்குடன் நடத்தல்; to with remarkable skill. அந்த வேலையை அவனிடம் கொடுங்கள்; புகுந்து விளையாடிவிடுவான்.

 

45. பூத்தாடுதல் - அழகால் பொலிதல்; to shine with beauty. தாமரை பூத்தாடுகிறது.

 

46. பேயாடுதல் - தனக்குத் தானே வருந்துமாறு செய்தல்; to make one feel sorry for his own faults. எனக்கொன்றும் தெரியாதென்று நினைத்திருக்கிறான். நான் அனைத்தையும் வெளிப்படுத்தினால் அவன் பேயாடுகிறானா இல்லையா என்று பார்.

 

47. பொடியாடுதல் - புழுதி படிதல்; to be covered with dust.      "பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ" (சிலப்.19,40);.

 

48. (அ);. போராடுதல் - தொடர்ந்து சண்டையிடுதல், இடைவிடாமல் முயலுதல்; to struggle continuously to work hard restlessly to achieve the objective. எத்தனை காலம்தான் போராடுவது? போராடாமல் நலம் விளையுமா? (ஆ); போராடுதல் - மல்லுக்கு நிற்றல். தொடர்ந்து வம்புச் சண்டைக்கு நிற்றல்;  to argue unnecessarily. உன்னோடு போராட என்னால் முடியாது.

 

49. மஞ்சாடுதல் - வெண் மேகம் தவழ்தல்; white cloud seen above the hills or mountain. மலைமேல் மஞ்சாடுகிறது.

 

50. மல்லாடுதல் - விடாப்பிடிச் சண்டையிடுதல்; to quarrel wantonly. அவளோடு மல்லாட யாரால் முடியும்?

51. மாலாடுதல் - கயிற்றைப் பிடித்துத் தொங்கியவாறு ஊசலாடுதல்; to swing by gripping the rope with one hand. வேடன் மலைத் தேனழிக்க மாலாடுகிறான். (ஆ);. மாலாடுதல் - வட்டக் காட்சியில் விளையாட்டு வீரர் கயிற்றூசல் கம்புகளை மாறிப் பற்றிப் பாய்ந்தாடுதல்; to perform on aerial trapeze. கோமாளிகூட வட்டக் காட்சியில் வேடிக்கையாக மாலாடிக் கீழே விழுகிறான்.

 

52. மன்றாடுதல் - கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுதல்; to make a humble request. தன்னை மன்னிக்குமாறு மன்றாடினான்.

 

53. மாறாடுதல் - மாறான கருத்தைக் கூறுதல்; to speak opposing a doctrine. அவன் சார்பாக இருப்பான் என்று நினைத்தோம். ஆனால் அவனே மாறாடுகிறான்.

 

54. மூச்சாடுதல் - உயிரிருத்தல்; to breathe gently to show presence of life; அவன் இறக்கவில்லை, இன்னும் மூச்சாடுகிறது.

 

55. வழக்காடுதல் - வழக்குத் தொடுத்தல்; to file a case. உன் மீது வழக்காடப் போகிறேன்.

 

56. வளையாடுதல் மங்கலமாதல்; to become auspicious. வளையாடுங்கையால் உணவுண்ன வேண்டும்.

 

57. வளைந்தாடுதல்- இசைந்து செல்லுதல், ஒத்துப் போதல்; to consent, acquise. உன் விருப்பத்துக்கு என்னால் வளைந்தாட முடியாது.

 

58. வாயாடுதல் -தொடர்ந்து பேசித் தீர்த்தல்; to go on speaking to one's own satisfaction. என்னதானிருந்தாலும் இப்படி வாயாடக் கூடாது.

 

59. வாலாடுதல் - பலரிருப்பவும் வேண்டு மென்றே தான் முந்திச் செய்தல்; to carry out a work not wanted by. தலையாடுமுன்னே வாலாடுகிறது பார்த்தாயா?

 

60. வீம்புக்கு ஆடுதல் - தன் இயலாமையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் செயற்படுதல்; to do a work concealing one's inability. அந்தப் பயல் வீம்புக்கு ஆடுகிறான்; அந்த வேலை அவனால் முடியாது.

 

61. வேடங்கட்டியாடுதல் - திறமையாகப் பொய்த்து நடித்தல்; to act with talent. நீ என்னதான் வேடங்கட்டியாடினாலும் இங்கு ஒன்றும் நடக்காது.

 

62. வேண்டுமென்றே ஆடுதல் வம்புக்கிழுத்தல்; to indulge in a quarrel wantonly. நான் சும்மாயிருந்தாலும் அவன் வேண்டுமென்றே ஆடுகிறான்.

 

63. விலையாடுதல் - விலை பேசுதல் (நெல்லை.);; to bargain

 

64. களையாடுதல் பிஞ்சு பிடித்தல்; forming of young fruit. பலாமரம் களையாடியிருக்கிறது (நெல்லை.);.

 

65. நாடாடுதல் -பலவிடங்களில் திரிதல்; to wander. அவன் ஒரு நாடாடி (உ.வ.);.

 

66. உடனாடுதல் - இணை பிரியாது தோழமை கொள்ளுதல்; to become close friend, அவன் இவனுக்கு உடனாடி (உ.வ.);.

 

67. புகுந்து விளையாடுதல் - திறங்காட்டி ஆடுதல்; to play

 

68 தலைமேல் வைத்துக் கொண்டாடுதல் - அளவுக்கு மீறிப் போற்றுதல்; to praise excessively. தொடக்கத்தில் அவரே என் தலைவர் என்று தலைமேல் வைத்துக் கொண்டாடினான்.

 

69. தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுதல் - கட்டுக்கடங்காத பற்றால் அடிமையாதல்; to shower love in excess and become a slave to it. திருமணமான புதிதில் அவளைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு ஆடினான்.

 

70 தலையாடுதல் தலைநடுங்குதல்; shake of head because of old age. அந்த மூதாட்டிக்குத் தலையாடுகிறது.

 

71. தலைவிரித்தாடுதல் - மிக்குப் பரவி மேலோங்கி நிற்றல்; to dominate by wide spreading. எங்கும் வறுமை தலைவிரித்தாடுகிறது.

 

72. திக்குமுக்காடுதல் திணறுதல்; to be choked strangled. என்ன செய்வதென்றறியாமல் திக்குமுக்காடினான்.

 

73. திண்டாடுதல் எய்தப்பெறாது வருந்துதல்; to lament over not acquiring. செலவுக்குக் காசு இல்லாமால் திண்டாடினான்.

 

74. திருமுழக்காடுதல் - தெய்வத் திருமேனியை முழுக்காட்டுதல்; to ceremoniously immerse an idol in water. இறைவன் திருமுழுக்காடுங் காட்சி அடியார்க்கு இன்பந்தரும்.

 

75. நகையாடுதல் எள்ளி நகைத்தல்; to laugh derisively. அவன் கோலத்தைக் கண்டு அனைவரும் நகையாடினர்.

 

76. (அ);. நடமாடுதல் - அங்குமிங்கும் நடத்தல்; to walk about.  அவர் நோய்வாய்ப்பட்டதிலிருந்து சரியாக நடமாடுவதில்லை. (ஆ);. நடம் ஆடுதல் - நடனம் ஆடுதல்; to dance. இறைவன் நடம் ஆடும் கோயில் தில்லையம்பலம்.

 

77. (அ);. நாடகமாடுதல் - நடித்தல்; to act as in a play. நன்றாக நாடகமாடுகிறாள் இவள். (ஆ);. நாடகமாடுதல் - நடித்து ஏமாற்றுதல்; to cheat by acting cleverly. இப்படி நாடகமாடியே என் செல்வமெல்லாம் கரைத்து விட்டார்கள்.

 

78. நாவாடுதல் - பேச்சுக்குப் பேச்சு எதிர்த்துப் பேசுதல்; to retallate. இப்படி நாவாடினால் எந்த மாமியார் தான் பொறுத்துக் கொள்வாள்?

 

79. நிழலாடுதல் - குறிப்பாகத் தோன்றுதல்; to appeal like a shadow. வெற்றி பெறுவேன் என்பதற்கான அறிகுறிகள் நிழலாடுகின்றன.

 

80. நின்றாடுதல் - நிலை பெயராமல் சுழலுதல்; to rotate firmly, fixed to a spot. பம்பரம் நின்றாடுகிறது.

 

81. நீராடுதல் - நீர் நிலையிலிறங்கிக் குளித்தல்; to bathe in stagnant or running water.   அவர் ஆற்றில் நீராடினார், (ஆ);. நீராடுதல் - வாலாமை நீங்கக் குளித்தல்; to bathe after menstruation or child birth. மகவீன்ற அவள் இன்று நீராடினாள். (இ);. நீராடுதல் - முழுக்க வியர்த்தல்; to perspire, to sweat. வெயிலில் இரைக்க இரைக்க ஓடி வந்ததால் அவர் உடம்பு நீராடிப் போயிற்று.

 

82. நீறாடுதல் - இடித்துப் பொடிபடச் செய்தல்; a pulverize.      "இருநிலக் கரம்பைப் படுநீ றாடி" (பெரும்பாண்.93);.

 

83 (அ);. நெளிந்தாடுதல் - ஒசிந்தாடுதல்; to dance twisting the waist. பாம்பைப் போல் அழகாக நெளிந்தாடுகிறாள்.

 

84 (அ);. பகடையாடுதல் - சூதாடுதல்; to gamble. தருமன் பகடையாடி நாடிழந்தான். (ஆ); பகடையாடுதல் - எளிதில் பணம் திரட்டுதல்; to earn by easy means. இதென்ன பகடையாடிக் கிடைத்த சொத்தா?

 

85. (அ); படமாடுதல் - உருவப்படம் அல்லது உருவச்சிலை இருத்தல்; presence of idol or photo. "படமாடுங்கோயில் பரமற் கொன்றீயில்" (திருமந்);. (ஆ);. படம் ஆடுதல் -திரையிடப்படுதல்; to screen a film. அந்தக்கொட்டகையில் என்ன படம் ஆடுகிறது?

 

86. படமெடுத்தாடுதல் - சீறிப் பேசுதல்; to speak with fury. அவன் ஏன் இப்படிப் படமெடுத்தாடுகிறான்?

 

87. பணம் ஆடுதல் செல்வம் மிக்கிருத்தல்; to have plenty of money. அவனிடம் பணம் ஆடுகிறது.

 

88. பணம் கட்டி ஆடுதல் பணத்தைப் பந்தயமாக வைத்து ஆடுதல்; to lay money as bet. சீட்டாடுவோர் பணம் கட்டி ஆடுவது தவறு.

 

89. பணம் விளையாடுதல் - பணம் செலவழித்து நினைத்ததை முடித்தல்; to achieve things desired by bribing. அவன் வென்றதன் காரணம் பணம் விளையாடியதுதான்.

 

90. பந்தாடுதல் - செம்மையாக உதைத்தல்; to give a severe kick. அந்தத் திருடன் கிடைத்திருந்தால் எல்லோரும் அவனைப் பந்தாடிவிட்டிருப்பார்கள்.

 

91. பம்பரமாடுதல் - ஓய்வின்றி அலைந்து வேலை செய்தல்; to work hard without taking rest. ஒரே நேரத்தில் அத்தனை வேலை கொடுத்தால் என்ன செய்வது? என்னால் பம்பரமாட முடியாது.

92. பாய்ந்தாடுதல் - அஞ்சத்தக்க விரைவுடன் விளையாடுதல்; to play with such speed as to frighten the opponents. சடுகுடு விளையாட்டில் அவன் பாய்ந்தாடினால் எதிரணி தோற்பது உறுதி.

 

 

 

 தரவு: செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

 

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்