நாகர்கோயில் தலைமை அஞ்சல் நிலையத்தில் இருக்கும் இந்த அஞ்சல்பெட்டி பழமையானது. திருவாங்கூர் அரசின் காலத்தில் 1729 ல் அஞ்சல் துறை ஆரம்பிக்கப்பட்டது. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அஞ்சல் கொண்டு செல்ல "அஞ்சல் ஓட்டக்காரர்"கள் இருந்தார்கள். அவர்கள், ஒரு கையில் அரசு முத்திரை பதித்த ஈட்டி, மணிகள் கோர்க்கப்பட்ட பட்டையும், மற்றொரு கையில் சிறிய மணியும் கொண்டு ஓடிக்கொண்டே இருப்பார்கள். ஓடும்போது "ஓய்.. ஓய்" என்று கூறிக்கொண்டே ஓடுவார்கள். ஒருநாளைக்கு இருபது முப்பது கிலோமீட்டர் தொலைவு கூட ஓடவேண்டியிருக்கும். ஓடும்போது யாராவது தடுத்தால் ஈட்டியால் தாக்குவார். அப்போது யாரேனும் ஈட்டிகுத்தி இறந்துபோனால் சட்டப்படி அது குற்றமாகாது.
இப்படி, தொடர் ஓட்டம் மூலமாக நாகர்கோவிலுக்கும் திருவனந்தபுரத்திற்கும் தொடக்க காலங்களில் அஞ்சல் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. பிற்காலங்களில் மாட்டுவண்டி பயன்படுத்தப்பட்டது. அப்போது இதுபோன்ற பெட்டிகள் சில இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. இவை சிறப்பான முறையில் வார்ப்பிரும்பால் செய்யபட்டன.
மணிமேடைச் சந்திப்பில் அஞ்சலகம் முன்பாக ஒன்று இருந்ததை எண்பதுகளில் பார்த்திருக்கிறேன். எத்தனையோ கடிதங்களைச் உள்ளே வாங்கி நின்ற வரலாறு இதற்கு உண்டு. அம்மா தன் பிள்ளைக்கு எழுதிய அன்பைச் சுமந்த கடிதம், பணம் அனுப்பி இருக்கிறேன் நன்றாகப் படி என்று அப்பா எழுதிய கடிதம், காதல் சுமந்த கடிதங்கள்.. என ஏராளமான உணர்வுகளை, மழையில் நனையாமல், வெயிலில் உலராமல், வேறு யாரும் எடுத்துவிடாமல் பாதுகாத்துச் சுமந்து நின்ற வரலாறு உண்டு இதற்கு. அவை எதுவுமே பார்க்கும் போது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. இந்தப் பெட்டியும் கூட அவற்றை மறந்து போயிருக்கும்.
ஆனால், குமரிமக்களின் வாழ்க்கையில் மறந்துவிட முடியாத, இந்தப் பெட்டியால் மறக்க முடியாத ஒரு வரலாறு அதன் மேல் வார்க்கப்பட்டிருக்கிறது.
ஆதித் தமிழ்நிலத்தில் தமிழ் மறுக்கப்பட்ட காலத்தின் வரலாறுதான் அது. அந்தப் பெட்டியை உற்றுப் பாருங்கள். அதில் தமிழில் வார்ப்பெழுத்து எதுவும் இல்லை. ஆங்கிலமும் மலையாளமும் சுமந்துகொண்டு, தாய்மொழி மறுக்கப்பட்ட குமரிமண்ணின் வரலாற்றைச் சுமந்து நிற்கிறது அது.
எம் நிலத்தில் எமது மொழி மறுக்கப்பட்ட காலத்தின் வடுவாக.
சிராப்பள்ளி ப.மாதேவன்
06-06-2020
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்