Saturday 15 June 2024

எல்லோர் வீட்டிலும் கிடை போடுங்கள்

 

 

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மேசை மேல் கிடைபோட்டு கிடக்கிறது கிடை எனும்  மேய்ச்சல் சமூக - பண்பாட்டு ஆய்வுக் காலாண்டிதழ். அவ்வப்போது மென்நிழலில் படுத்து அசைவெட்டும் மாட்டைப்போலே அங்குமிங்கும் போகும்போதும் வரும்போதும் அதன் பக்கங்களை மெல்லத் திருப்பிக் கொண்டிருக்கிறேன்.

சுவரில் முதுகுசாய்த்து உட்கார்ந்து கொண்டு கிண்ணத்தில் இருந்து காரச்சேவு எடுத்துக் கொறித்தபடியே படிக்க ஏதுவான நூலல்ல. மேடும் பள்ளமும் என பல நூறு கிலோமீட்டர்கள் பலநூறு ஆடுகள் / மாடுகளோடு நடந்து, வேளாண்மையின் முகாமையான அங்கமாகிய மண்ணை வளமாக்கும் பணியைச் செய்யும் மேச்சல் சமூகம் குறித்தான வாழ்வியலும் இருப்பும், நாளை குறித்தான கேள்விகளோடும் வார்க்கப்பட்டிருக்கும் காலாண்டிதழ்.

இதழ் எனச் சொல்லிக் கொண்டாலும் மிகச் சிறப்பான பொத்தகமாகவே கொடுத்திருக்கிறார்கள். பாராட்டுகள். செறிவான வரலாற்றுச் செய்திகள், புள்ளிவிவரங்கள், செழுமையான வாழ்வியல் கதைகள், கிடை நடுவே கேட்கும் கீதாரியின் குரலொலி போலே உயிர்ப்பான கவிதைகள் போன்றவற்றை ஆவணமாக்க இந்த நூல் அமைப்பே சிறப்பு.

ஒருநாள் தம்பி அலையாத்தி செந்தில், வீட்டு முகவரியை அனுப்பி வைக்குமாறு கேட்டிருந்தார். அனுப்பிய எனக்குக் கிடைத்ததுகிடையின் ஐந்தாம் ஈத்து.

கால்நடைகளற்றத் தீவுக்குள்

புலம்பெயர்ந்த பிறகும்

தேநீர் வாங்கும்போது

என்றாவது கிடைத்துவிடுகின்றன

ஆட்டுக்கால் இனிப்புருண்டைகள்என்று தற்கால, கிடைதுறந்த ஒரு கீதாரியின் நினைவைத் தொடக்கத்திலேயே பிழிந்து ஊற்றுகிறது யாழிசை மணிவண்ணனின் கவிதை. தொடர்கிறது ரொக்கம் எனுஞ் சிறுகதை.

கால்நடைகளோடும் காலத்தோடும் நடந்து நடந்து வலசை சென்று இருத்தலின் நிமித்தம்தேடிச் சேர்ந்தப் பெருஞ் சமூகத்தின் ஒரு துளியாகிய ராமையாக் கோனாருக்கும், நிலைபெற்ற தொடக்கநிலை  உற்பத்திச் சமூகத்தின் இன்னொரு துளியாகிய ரெத்தினத் தேவருக்கும் நடுவே பின்னப்படுகிற போக்கில், பெரும் வாழ்வியலொன்றின் சிறு பகுதியை ரொக்கமாக வடித்திருக்கிறார் அலையாத்தி செந்தில்.

இரு வேறு சமூக மாந்தர்களுக்கிடையே கட்டற்ற மாமன் மச்சான் என்ற இயல்பான உறவு உண்டென்பதை நான் நேரில் பலமுறைக் கண்டதுதான். ஆனால் சீரான எழுத்தோட்டக் காட்சிகாளால், இது போன்றச் சமூகச் சூழலில் வாழாதோரும் உணரும் வண்ணம் அந்த இயல்பை எளிதாக வடித்திருக்கிறார்.

மண்ணுக்கே உரிய நுணுக்கமான ஆனால் இயல்பான சொல்லாடல்கள். எட்டுக்குப் பத்து சாணமிட்டு மெழுகிய வீட்டின் ஒவ்வொரு மூலையையும் உணர்ந்து வைத்திருக்கிற கிழவியைப் போலே மனித மனங்களின் உணர்வுகளை, அவர்களின் அன்பை, உரையாடலை, எதிர்ப்பேச்சை, சண்டைகளை, சினத்தை, குத்தலை, மறந்துவிட இயலாத இளமையை என பலவற்றையும் எழுத்தாக்கியிருக்கிறார். கதை குறித்துத் தனியாக ஒரு பதிவே இடலாம். அத்தனைச் செய்திகள்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் காசாங்காட்டில், மதுக்கூரில் நான் உணர்ந்த பலவற்றை ரொக்கம்மீண்டுமொருமுறை உணர்த்தியது.

இந்த ஆட்டும்பால்ல வெள்ளாங்கியத்தப் போட்டு காய்ச்சிக் குடிங்க ஐயா. ஒங்க வயித்துவலி தீந்துரும்என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னே நான் கேட்ட கீதாரியின் குரல் இன்று எங்கள் ஊரில் ஒலிப்பதில்லை. பலசரக்குக் கடைகளில் எடையம்புளிக்குச் சாமானம் குடும்என்று கேட்டவர்களும் இப்பொழுது வருவதில்லை.  மொட்டைமாடியில் நாங்கள் அண்ணன் தங்கைகள் சேர்ந்து  விளையாடி அடித்து உலைத்த உழுந்து நெத்தும்” “எள்ளு மாறும்எங்களூர் வயக்காட்டில் இப்பொழுது விளைவதில்லை.

இந்த இல்லைகளுக்கான காரணங்கள் கிடையில் இருக்கின்றன. ஒரு ஆய்விதழில் எதற்குக் கதைகளும் கவிதைகளும் என நினைத்துதான் வாசிக்கத் தொடங்கினேன். ரொக்கம் போன்ற ஒரு கதையோ, புல்நுனி, மறிக்கும் மரித்தலுக்கும் நடுவில் போன்ற கவிதைகளோதான் இதழின்  முகாமையான கட்டுரைகளை, புள்ளி விவரங்களை உணர்ந்துகொள்ள வழிசெய்யும் என பிற்பாடு உணர்ந்தேன்.

சிற்றூர் வாழ்வியலே செல்பேசிகளுக்கிடையே சிக்கிக் கொண்டிருக்கிறபோது பெருநகரங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அந்த இளந்தலைமுறையினர் சிலருக்கேனும் செய்திகளுக்கிடையே உள்ள வலிகளை, புள்ளி விவரங்களுக்கு நடுவே இருக்கின்றக் காயங்களை உணரச் செய்ய இதுபோன்ற எழுத்தோவியங்கள் உதவும்.

தற்சார்பு குறித்தும் சமூகம் குறித்தும் பேசுபவர்கள் முகாமையாகக் குறிப்பிடும் ஒன்று இயற்கையோடு இயைந்த வாழ்வு. இயைவதற்கு முன்னே பார்க்கவேண்டும். புள்ளிவிவரங்கள் மீளமைத்துக் கட்டியெழுப்ப உதவும் செங்கற்களே. முன்பு வாழ்ந்த மாந்தர்களின் உணர்வுத் தடங்களில் தான் குழைத்துக் கட்டுவதற்கான சாந்து கிடைக்கும்.

இரண்டின் பெருங்கலவையாக கிடைஇருக்கிறது. தமிழ்நாட்டிற்கே  உரித்தான மாட்டினங்கள், ஆட்டினங்கள், அவற்றின் படங்கள், தற்கால நிலை போன்றச் செய்திகள் மீட்டமைக்க எண்ணுபவர்களுக்கு உதவியாக இருக்கும். ஒரே ஆட்டினம் / மாட்டினம் குறித்தான வேறு வேறு நிலப்பரப்பு மாந்தர்களின் புரிதலும் உரையாடல்களும் சமூக வாழ்வை மேம்படுத்தும்.

கீதாரிகளின் வலசைப் பாதை குறித்த தகவல்கள் வியப்பைத் தருகின்றன. இதனோடு ரொக்கம் சிறுகதையின் உரையாடல்களும் சேர்ந்து நானூறு கிலோமீட்டர்கள் தாண்டிய சொற்பரவலைச் சுட்டுகின்றன. தமிழ்நிலமெங்கும் சொற்களைச் சுமந்து சென்று கிடைபோட்டு மொழி செழிக்கச் செய்த கீதாரிகளின் செய்கை குறித்த ஆய்வும் கிடையில் இடம்பெறலாம்.

குமரிப்பகுதியில் பண்டு ஆட்டுக்கிடை, வாத்துக் கிடை போடும் வழக்கம் இருந்தது. தற்போது வாத்துக்கிடை மட்டுமே. எப்போதேனும் அரிதாக ஆட்டுகிடை.

சிறு வயதில் இன்னைக்கு சாய்ங்காலம் மலமாட்டையெல்லாம் ஊருக்குக் கொண்டாராங்க. சின்னப் பிள்ளைகள வெளியில விடாதீங்க….” என்ற தண்டோரா ஒலி கேட்கும். மாலையில் தாடகை மலையிலிருந்து ஏராளமான மாடுகள் வரிசையாக வீடுகளுக்கு வரும். தெருக்களெங்கும் மாடுகள் மாடுகள்... மாடுகள்.

இராக்கெட்டு பரிசோதனை மையம் அமைக்கப்பட்ட கையோடு மெல்ல மெல்ல தொழு, கல்தொட்டி, புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, பூட்டாங்கயிறுகள், புல்லளி, கொட்டம், வேப்பெண்ணய் குப்பி, எல்லாம் மறைந்துபோயின. நெல்லிக்குளத்து மாட்டு வைத்தியரையும், சமூகரெங்கபுரத்துக் கோனாரையும், வள்ளியூர் காட்டுச் சோளத்தையும் ஊர் மறந்துபோனது.  களம் வளித்த சாணியின் நாற்றம் நுகர்ந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகிறது.

தாடகைமலை அடிவார தாழக்குடிச் சிற்றூரில் இப்பொழுது எல்லா நேரத்திலும் கிடைக்கிறது பாக்கெட் பால்’. அந்தப் பாலை(?) ஊற்றிவிட்டுத் தூக்கியெறியும் நெகிழிப் பைகளாகிப் போனது நம் பாட்டி பாட்டாக்கள் வாழ்ந்தப் பெருவாழ்வு.

தற்சார்பு என்பது தனிமனிதச் செய்கையில்லை. அது ஒரு சமூகச் செய்கை. பலரது பங்களிப்பு. ஒரு இயக்கம். அதைச் செய்ய முடியுமா என்ற ஐய வினாவல்ல நம் தேவை. ஏன் செய்ய வெண்டும் என்ற ஆக்க வினாவே நமது தேவை. அதை நோக்கிய ஒரு நகர்வே கிடை”.

கண்டிப்பாக வாங்கிப் படியுங்கள். குழந்தைகளோடு கதையாடுங்கள். அது உங்கள் மனங்களிலும், கிடைபோட்டு வளமாக்கி உரம் சேர்க்கட்டும்.

இதழ் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்.9677517899.

விலை.100ரூபாய்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்